அப்பலோ சுந்தா
என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சுந்தா சுந்தரலிங்கம் (வீரசிங்கம் சுந்தரலிங்கம்,) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும், வானொலி நாடக நடிகரும் ஆவார். இவர் பின்னர் பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோ விண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதினால் 'அப்பலோ' சுந்தா என்று அழைக்கப்பட்டவர்.
இலங்கை நாட்டின் அரசியல் சூழலினால் புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.
ஒளிப்படக் கலையிலும் தேர்ச்சி மிக்கவர்.
இலங்கை வானொலியில் வீ. சுந்தரலிங்கம் என்ற பெயரில் செய்திகள், நேர்முக வர்ணனை என்பனவற்றோடு பஞ்சபாணம், விவேகச்சக்கரம் முதலான போட்டி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியில் சுந்தா சுந்தரலிங்கம் என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தவர்
சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சாவகச்சேரியில் கோவில் குடியிருப்பு என்ற சிற்றூரில் நவம்பர் 5, 1930இல் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். 1951 ஏப்ரலில் கொழும்பு நகரில் இலங்கை கணக்காய்வாளர் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் பின்னர் இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
இவர் தீவிரமாகஇலக்கிய படைப்புக்களிலோ அன்றி பொது இலக்கிய வகையினில் ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை 1999 இல் மன ஓசை என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவரது மனைவி பராசக்தி சுந்தரலிங்கம் ஒரு இலக்கிய விமரிசகர்.
சுந்தா அவர்கள் ,வெறுமனே ஒலிபரப்பாளனாக மாத்திரம் தனது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஒளிப்படக்கலை, மேடைநாடகம், மேடைநிர்வாகம், மொழிபெயர்ப்பு, விளம்பரக்கலை முதலான துறைகளிலும் அகலக்கால் பதித்து மிளிர்ந்தவர்.
மிகுந்த நகைச்சுவையுணர்வுகொண்ட சுந்தா, இலங்கை வானொலியில் மூத்த கலைஞர்.
எந்தவிதமான சிபாரிசுகளுமின்றி, சுயதிறமையால் சிறந்த குரல் வளத்தினால் அங்கு அறிவிப்பாளனாக பிரவேசித்து பயிற்சிபெற்று நேயர்களையும் நிர்வாகத்தையும் கவர்ந்தார்.
தொலைக்காட்சியே இல்லாத ஒரு காலகட்டத்தில், பல தசாப்தங்களாக அரூபமாய் நேயர்களுடன் உறவாடியவர்.
வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தவரின் சேவையை இலங்கைப்பாராளுமன்றமும் எதிர்பார்த்தது. அங்கே அவர் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். இந்தத்துறையிலும் அவருக்கு நல்ல தேர்ச்சியிருந்தமையாற்தான், அமெரிக்கா அப்பல்லோ விண்கலத்தில் முதல்தடவையாக மனிதனை சந்திர மண்டலத்தில் கால்பதிக்க அனுப்பியபோது வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவுக்கே சுந்தாவின் சேவை தேவைப்பட்டது. ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வொய்ஸ் ஒ.ஃப் அமெரிக்காவின் நேர்முகவர்ணனையை ‘இயர்போன்’ மூலம் செவிமடுத்து அதனை உடனுக்குடன் மொழிபெயர்த்து தமிழ் நேயர்களுக்கு வழங்கியவர்.
விண்வெளி யாத்திரையென்பது உலகத்தின் மகத்தான சாதனை. அச்சாதனை புரிபவர்களின் நடவடிக்கைகளை, பயணத்தை விண்கலத்தில் இயங்கும் நுட்பமான கருவிகளை இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தும் விஞ்ஞானச்சொற்களை மணிப்பிரவாள தமிழ் நடையில் நேயர்களுக்கு நேர்முகவர்ணனையாக சொல்வது என்பது ஒலிபரப்புக்கலையில் சாதனைதான்.
இச்சாதனையையும் செம்மையாக நிறைவேற்றி வெற்றிகண்டவர் இந்த அமைதியான மனிதர். செவிமடுத்த ஆயிரக்கணக்கான நேயர்கள் எழுதிய வாழ்த்துக்கடிதங்கள் இலங்கை வானொலிக்கலையகத்தில் வந்து குவிந்தன. இவ்வாறு இலங்கை அரசையும் வானொலி நிர்வாகத்தையும் வானொலிச்சேவை வரலாற்றையும் வியக்கவைத்தவர் ‘சுந்தா’ சுந்தரலிங்கம்.
அதனால் தான் , ‘அப்பல்லோ சுந்தா’ எனவும் அழைக்கப்பட்டவர்.
இச்செய்தியை அறிந்த அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லின்டன் பி. ஜோன்ஸன், தமது கைப்பட வாழ்த்துக்கடிதம் எழுதி சுந்தாவுக்கு அனுப்பினார் என்பது ஒரு வானொலிக்கலைஞனுக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது எனலாம்.
. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது.
பாமன் கடை லேனில் இவர் வசித்த வீட்டுடன் பக்கத்திலே மவுனகுரு வும் சந்திர லேகாவும் வசித்தனர் .இவர்களும் தங்கள் அனுபவங்களை இங்கே தந்தால் இன்னும் இக்கட்டுரை சிறப்பாக இருக்கும் .
. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி சுந்தா வீட்டில் நடக்கும்..
சுந்தாவின் மனைவி பராசக்தி அக்கா அலுப்பு சலிப்பின்றி கலை, இலக்கியவாதிகளை உபசரித்துக்கொண்டேயிருப்பார்.
காலங்களின் கொடுமை ,இனக்கலவரம் அவரை அவுஸ்திரேலியா வரை தள்ளியது .
இவரின் நண்பர்கள்
லண்டன் B. B. C. தமிழோசையில் பணியாற்றிய சங்கரமூர்த்தி, மகாதேவன், சம்பத்குமார், ஆனந்தி, மைத்ரேயி, விமல் சொக்கநாதன், மணிவண்ணன், தாசீஸியஸ், இலங்கையில் மானிப்பாய் எம்.பி. வி. தருமலிங்கம், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி, கவிஞர் முருகையன், சோமகாந்தன், தமிழ்நாட்டில் இந்து பத்திரிகை ஆர். நடராஜன், பூர்ணம் விஸ்வநாதன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா, பாலுமகேந்திரா, மாலன், வாஸந்தி, வெ.ராஜாமணி போன்றவர்களே .தடக்கி விழுந்தால் கூட சுந்தாவுக்கு நண்பர்களே அதிகம் .
இவரை அப்பலோ சுந்தா என்று அழைக்கும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் அதிகம் என்று இவர் குறிப்பிடுவார் .
அக்டோபர் 29, 2001 இல் மறைந்தபொழுது உலகமே ஸ்தம்பித்தது
இவரைப் பற்றி நிறைய எழுதலாம் .முகநூல் நண்பர்களின் வேண்டுகோளுக்கின ங்க சுருக்கித் தந்துள்ளேன்.
நன்றி
Manikkavasagar Vaitialingam



கருத்துகள்
கருத்துரையிடுக