பிராயச்சித்தம் என்பது இந்து தர்மத்தின்படி பாவத்திற்கு செய்யப்பட வேண்டிய பரிகாரமாகும். மிகப்பெரிய பாவமாக கருதப்படும் கொலைப் பாவமானது பிரம்மஹத்தி தோசம் என்று அழைக்கப்படுகிறது

அத்தகைய பாவத்திற்கும் சிவபெருமானை சரண்புகுவதால் பிராயச்சித்தம் ஏற்படுமென இந்து நூல்கள் கூறுகின்றன.
ஒருவர் அரக்கரையோ, தேவரையோ, மனிதரையோ கொல்லும் பொழுது அவருக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றுவதாக இந்து சமய புராணங்களும், நூல்களும் தெரிவிக்கின்றன. பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை அடைகின்றன. அவ்வாறன்றி எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது
சிவபெருமானை வணங்குவதால் பாவங்களில் பெரும் பாவமான பிரம்மஹத்தி தோசமும் அகலும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. இதற்காக இந்திரன், கால பைரவர், ராமர் ஆகியோரின் பிரம்மஹத்தி தோசங்கள் நீங்கிய புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன.
அதாவது
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சிவபெருமான் படைப்பு தொழிலுக்காக பிரம்மாவினையும், காக்கும் தொழிலுக்காக திருமாலையும், அழிக்கும் தொழிலுக்காக ருத்திரனையும் படைத்தார். அதனையறியாமல் பிரம்மாவும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். அதனையறிந்த சிவபெருமான் இலிங்கோத்பவ மூர்த்தியாக மாறி தனது அடிமுடியைக் காணுமாறும், அதில் வெற்றிபெறுபவர்களே பெரியவர் என்றும் கூறினார்.
ஆதிசிவ னின் அடிமுடியை காணுதல் இயலாதென உணர்ந்த திருமால் சிவபெருமானிடம் சஞ்சமடைந்தார். ஆனால் பிரம்மா சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவுடன் இணைந்து பொய்யுரத்தமையால் சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கொய்ய உத்தரவிட்டார். அவ்வாறு பிரம்மாவின் தலையை கொய்தமையால் கொலைப்பாவம் பைரவரை பற்றியது. பைரவர் சிவபெருமானை வாராணாசியில் வழிபட்டு அப்பாவத்திலிருந்து விடுபட்டார்.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
இராமர் - இராவணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தேசம் ஏற்பட்டது
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான அபரம் என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் அபர காரியம் என்பது இறந்து போன சடலத்துக்கு சடங்கு செய்வது என்பதினால் அசுபமான காரியம் என்பதாகக் கருதுகிறார்கள். அதையே சாஸ்திரமும் கூறுகிறது. இறந்தவர்களுக்கு பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மா என்பது தஹனம் முதல் பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் கர்மாக்கள் ஆகும். ஆனால் அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று செய்யப்படும் கிரேக்கியம் என்பது குடும்பத்தினரின் துயரத்தை நீக்கிக் கொள்ள செய்யப்படும் சுபஸ்வீகாரம் ஆகும். அதாவது அபர காரியம் என்பது சுப காரியத்துடன் முடிவடைகிறது. அதன் பின் மரணம் அடைந்தவரது ஜீவன் பிதுர்லோகத்தில் தெய்வமாகி விட்ட அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினரிடமும் போய் சேர்கிறது என்பது ஐதீகம்.
ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் பன்னிரண்டு நாள் காரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள். அங்கு சமைக்க மாட்டார்கள் என்பார்கள். முதல் பத்து நாட்களும் உறவினர்கள் வீடுகளில் இருந்துதான் சாப்பாடு வரும். இதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணம் கிடையாது என்றாலும் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளதற்கு ஒரு அடிப்படை காரணம் இருந்துள்ளது.
அக் காலங்களில் முதல் நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களும் நதிக்கரையில் சென்று கல் ஊன்றிய இடங்களில் காரியங்களை செய்ய வேண்டி வரும். ஆகவே அந்த காரியம் முடிக்கப்பட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும். அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள். சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூடிவிட்டு சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது. ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அது மனிதாபிமான அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த சடங்கே தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு ஒரே ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணம் மட்டுமே உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னி தேவருக்கு நைவித்தியமாக கொடுத்தப் பின்னரே வீடுகளில் சாப்பிடுவார்கள். அதாவது அக்னிதேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும். இன்றும் சில வீட்டில் இதைக் கடைபிடிக்கிறார்கள். பண்டை காலத்தில் வீடுகளில் தற்காலத்தைப் போல மின் அடுப்புக்களும், எரிவாயு (காஸ்) அடுப்புக்களும் இல்லாத நிலையில் விறகுகளைப் போட்டு நெருப்பு பற்ற வைத்து சமையல் செய்து வந்தார்கள். ஆகவே இறந்தவரது வீடுகளில் அந்த ஜீவன் வீட்டைவிட்டு வெளியேறும்வரை, மயானத்தில் விறகுகளை வைத்து இறந்தவராது உடலை தகனம் செய்ததைப் போல, வீட்டில் விறகு எரிக்கக் கூடாது, அடுத்த பன்னிரண்டு நாட்கள் கர்மாக்களை முடிக்கும்வரை, வேறு எந்த தெய்வீக பூஜையையும் செய்யக் கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாஸ்திர ரீதியில் இந்த நியமத்தை வைத்துள்ளார்கள்.
தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதியில் சென்று கரைக்கும் சடங்கு ஆகும். மின்சார அடுப்பில் உடலை தகனம் செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் சஞ்சயனத்தை இரண்டாம் நாள் அன்று செய்வார்கள்.
சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன் ஆசமனம் பண்ணிய பின் தர்ப்பைப் புல்லை மோதிரம் போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை புரோகிதர்கள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அந்தக் கல்லின் முன்னால் தினமும் சில சடங்குகளை செய்வார்கள். அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும். இது நித்ய விதி எனப்படுகிறது. தினமும் ஒரு இளநீர் காயும் அவற்றோடு வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் தர்ப்பணத்தால் ஜீவாத்மாவின் தாகம் அடங்கும். ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் போட வேண்டும். முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும் என்றாலும் அரிசியில் சமைத்த சாதத்தையே போடுவது நல்லது.
முதல் நாளில் மூன்று எனத் தொடங்கி, அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை அதிகரித்துக் கொண்டே போய் 10-ஆம் நாளில் 12 முறை திலோதகம் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதை ஏகோத்தர வ்ருத்தி என்பார்கள்.
அதை போலவேதான் நவ சிராத்தம் எனும் சடங்கையும் 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்வார்கள் (1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்).
இந்த காரியங்கள் அனைத்தும் கர்த்தாக்களால் செய்யப்படுகின்றன என்பதினால் ஏதாவது காரணத்தினால் காரியங்களை அடுத்த நாளே துவக்க முடியாமல் போய்விட்டால் அவை அனைத்தையும் 3,5,7, அல்லது 9 தாவது நாளில் துவக்கி அதற்கு முன் விட்டுப் போன அத்தனை நாட்களின் கர்மாக்களையும் சேர்த்து ஒரே நாளில் செய்து முடிப்பார்கள்.
ஸ்தாபனம் செய்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் தர்பை மூலம் எள்ளு கலந்த தண்ணீரை ஊற்றியும், அங்கேயே சமைத்த வெள்ளை சாதத்தையும் (அதை பிண்டம் என்பார்கள்) போட்டு அந்தக் கல்லையே உயிருடனான ஜீவாத்மாவாக கருதி அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள். அவைகளை வாஸோதகம், திலோதகம், பிண்டம் போடுதல் என்பார்கள். பிண்டம் போடுவதை இறந்தவரது மகள்கள் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அப்படி மகள் இல்லை என்றால் வீட்டில் உள்ள மருமகள் செய்ய வேண்டும். அதற்கான பிண்டத்தை தயாரிக்க அவள் அந்தக் கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கு அடுப்பு மூட்டி சாதம் வைக்க வேண்டும். சாதம் வெந்ததும், பிண்டத்தைப் பிடித்துப் போட வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் அவள் ஈரப் புடவையுடனேயே செய்ய வேண்டும் என்பது நியமம். அது ஏன்?
இதற்கும் ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணம் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும். கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை சாஸ்திரங்களில் ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.
பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க கால தாமதம் ஏற்படும். அந்த நேரத்தில் இன்னும் துணி காயவில்லையே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டு மனமும் காரியத்தில் நிறைவாக ஈடுபடாமல் உடைகள் மீது கவனத்தை வைத்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை நனைக்காமல் மாற்றிக் கொள்வது கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை உடுத்திக் கொண்டு தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது. உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது. கர்மாக்களை செய்யும்போது மனக்கட்டுப்பாடு தேவை.
ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப்புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்திலேயே இவற்றை எல்லாம் எத்தனை ஆழமாக சிந்தித்து விதியாக வைத்துள்ளார்கள் என்பதைக் காணும்போது வியப்பாகவே உள்ளது.
பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது.
பத்து நாட்கள் தினமும் காலையில் பெண் பிண்டம் செய்து தர, கர்மாவை செய்பவர் வாஸோதகம், திலோதகம் விட்டு இறந்தவர் ஆத்மாவை திருப்தி செய்ய வேண்டும். ஒருவர் எந்த வயதான நிலையில் இறந்தாலும், நூறு வயதே கூட ஆனாலும், அந்த பிரேத சரீரம், இறந்தவர் இளம் வயதில் எப்படி காணப்பட்டாரோ அந்த தோற்றத்தில் சூஷ்ம உருவில் மாறி விடும் என்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது .
முதலில் குடும்பத்தின் இளையவர்தான் பிண்டம் போடத் துவங்க வேண்டும். அவரைத் தொடர்ந்து எத்தனை சகோதரர்கள் இருந்தார்களோ அத்தனை சகோதரர்களும் விட வேண்டும்.முதல் நாள் 3 தடவை. இரண்டாம் நாள் 4 தடவை; 3ம் நாள் 5 தடவை; 4ம் நாள் 6 தடவை, 5ம் நாள் 7 முறை, 6 ஆம் நாள் 8 முறை, 7ஆம் நாள் 9 முறை, 8 ஆம் நாள் 10 முறை, 9ஆம் நாள் 11 முறை மற்றும் 10ஆம் நாள் 12 முறை திலோதகம் மற்றும் வாஸோதகம் செய்வார்கள்.
இப்படியாக தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா மானசீகமாக உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கும் ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் உள்ள அவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது. இவை அனைத்தும் கண்களுக்கு தெரிவதில்லை, ஆனால் மானசீகமாக உணர வேண்டியவை ஆகும்.
சரீரத்தை விட்டு வெளியேறிய ஆத்மாவானது தகனத்துக்குப் பின்னர் அடுத்த ஒன்பது நாட்களும் ஆத்ம சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக ஒன்பது நாட்களும் எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து , பிண்டத்தையும் போட்டு சடங்கு செய்யும்போது அந்த சடங்குகளில் கூறப்படும் மந்திர ஒலிகளினால் அந்த ஆத்மா பிரேத உடலைப் பெறுகிறது
ஜீவனுக்கு சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இல்லையா ?
பூமியி ல் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஜீவ அணுக்கள் உண்டு. காற்றில் உள்ள அதன் ஜீவ அணுக்கள் நம்மை உரசிக் கொண்டு செல்லும்போது அந்த உணர்வை காற்று என்று உணர முடியும். ஏன் என்றால் அந்த ஜீவ அணுவின் தன்மை அது. அதைப் போலத்தான் ஒலி , வாசனை, ஒளி, பார்வை என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஜீவ அணு உள்ளது. அதன் மூலமே நம்மால் அவற்றின் தன்மைகளை உணர முடிகிறது. இப்படியாக உள்ள நிலையில் பிரேத ஆத்மாவாக உள்ள ஜீவன் பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் எப்படி குடிக்க முடியும் என்ற கேள்வி எழத் தேவையே இல்லை. மனித உடலுக்குள் உடல் சார்ந்த (Physical) உணவு புகுந்து சென்று வயிற்றில் அமர்ந்ததும்தான் பசி அடங்கும், தண்ணீர் தாகத்தை அடக்கும். ஆனால் பிரேத உடலுக்கு பசியை அடக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் உடல் சார்ந்த பொருள் தேவை இல்லை. அவற்றால் உடல் சார்ந்த பொருளை உண்ணவோ குடிக்கவோ முடியாது. ஆனால் அதே சமயத்தில் அந்த உடல் சார்ந்த பொருட்களான பிண்டம் மற்றும் எள்ளும் தண்ணீரும் வெளிப்படுத்தும், நமது கண்களுக்கு தெரியாத ஜீவ அணுக்களை அவை ஸ்வாசித்து அவற்றை தன்னுள் கிரகித்துக் கொள்ளும் நிலையில் பிரேத உடலின் உணர்வுகள் அமைந்து உள்ளன. மனித உடலுக்கு உடல் சார்ந்த பொருள் தேவை என்பதை போல பிரேத உடலுக்கு உடல் சார்ந்த பொருட்களின் ஜீவ அணுக்களின் ஸ்பரிசம் மட்டுமே தேவை என்பதினால்தான் ஜீவன்களினால் தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும்.
இந்த சடங்குகளுக்கு எள்ளையும், தர்பைப் புல்லையும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்? வேறு தான்யங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்
எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். எள்ளிலும் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டு வகை உண்டு. எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே என்றாலும் சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் அது பிதுர் தேவர்களை அதிக சந்தோஷப்படுத்தும் என்பார்கள். கருப்பு எள் வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். அதனால்தான் எள்ளை தண்ணீருடன் கலந்து சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால் வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஆத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது
\
தொடரும்Manikkavasagar Vaitialingam
Ist möglicherweise ein Bild von Himmel, Dämmerung und Text

கருத்துகள்