சந்தனசாமி ஜோசப்?







யார் இவர் ?மலையகத்து செம்மல் தெளிவத்தை ஜோசெப் தான் அவர் .


 பெப்ரவரி 16, 1934இல்பிறந்த  ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.


தெளிவத்தை ஜோசப் இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல்ல இற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவர் ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டார்


காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.


தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றார்



காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)

நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)

பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)

மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் ( மூன்றாவது மனிதன் வெளியீடு)

குடை நிழல் (புதினம், 2010)


போன்றன இவரின் நூல்கள் ஆகும் 





இந்தியா தொழிலாளர்களை அடிமைகளாக தென் ஆபிரிக்கா, டான்சானியா, உகண்டா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த காலம். காலனித்துவ ஆட்சிகாலம் இலங்கையிலும் நிலவிய அந்த காலகட்டத்தில் 1824 ஆம் ஆண்டு கண்டிய பிரதேசத்தில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் கூலித் தொழிலாளர்கள், பயிற் செய்கை காலத்திற்கு மட்டும் தங்கியிருந்து தொழில் புரிவதும் பின் இந்தியாவுக்கு திரும்பி செல்வதுமாக இருந்திருந்தனர். 1839க்கு பிற்பட்ட காலத்தில் தேயிலை பயிர் செய்கையினால் நிரந்தர தொழிலாளர்கள் இலங்கைக்கு தேவைப்பட்டனர். அப்பொழுது பெரிய கங்காணிகளால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் குழுமம்; மலை பிரதேசங்களில் குடியேற்றப்பட்டு பெருந்தோட்ட பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் இன்றுவரை தங்களை பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபடுத்தியும் வருகிறார்கள். இலங்கையில் இவ்வாறானதொரு இரு நூற்றாண்டு வரலாற்றை கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள் என அழைக்கப்படுகின்ற இம் மக்கள் பல போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொண்டு “மலையகம்” என்ற தனித்துவ அடையாளத்துடன் தேசியம் என்று பேசுமளவுக்கு வளர்ச்சி கட்டத்தினை எய்தியிருக்கிறார்கள்.


இன்று மலையகம் என்ற தனிக்குழுமம் “தேசியம்” என்ற கொள்ளைகளுடனான உரிமைக்கோரலை முன்னெடுக்கிறது என்றால் வெறுமனே மலையக வரலாற்றில் தடம் பதித்த அரசியல் தலைமைகளினால் மட்டுமல்ல. இவ்வாறானதொரு அணிவகுப்புக்கு அடிநாதமாக எழுத்தாளர்களும் இருந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை.


இலக்கியம் என்பது காலத்தை காட்டும் கண்ணாடியாக அமைய வேண்டும் என்பார்கள். குறித்த காலச்சூழலை, அச்சுழல்சார் வாழ்வியல் அம்சங்களை புதிய தலைமுறையினருக்கு எடுத்துகாட்டுகின்ற இலக்கியம் என்கிற காண்ணாடியினை ஆக்குபவர்களாகவும் அல்லது கண்ணாடியாகவும் பிரதிபலிப்பவர்களாக எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் இருந்தும் வருகிறார்கள். அதற்கு ஈழத்து இலக்கியமும் அதில் ஒரு பகுதியாக இருக்கின்ற மலையக இலக்கியமும் விதிவிலக்காக அமைந்துவிடவில்லை.


மலையகத்தை சார்ந்த எழுத்தாளர்கள் மலையக வாழ்க்கைச் சூழலில் நிகழும் அவலங்களை மறைத்து வைத்திருக்கும் மூடுதிரையினை கிழித்தெறிந்துவிட்டு பிரச்சினைகளை வெளிக்கொணரவில்லையென்றால் இன்று இவ்வாறானதொரு தனித்துவ அடையாளம் என்பது மலையக சமூகத்தினைப் பொறுத்தவரை கேள்விக்குறியானதாகவே அமைந்திருக்கும்.


மலையகத்தில் சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களாகவும் (கோ.நடேசையர், சி.விவேலுப்பிள்;ளை இர.சிவலிங்கம் போன்றவர்கள்) இருந்து கொண்டு தங்களது விழிப்புணர்வு பிரசாரங்களையும், கொள்கைகளையும் தொழிலாளர்களின் துன்பியல் வாழ்வினையும் வெளிக் கொணர்ந்தனர். சில எழுத்தாளர்கள் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளினூடாக பங்களிப்பு செலுத்தாது எழுத்துத்துறையில் மாத்திரம் மலையக பிரச்சினைகளை வெளியுலகுக்கு முன்வைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். அதில் என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றோரை குறிப்பிடலாம். 



ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியம் எனும்போது அதனை வளர்த்தெடுத்தவர்களாக எத்தனையோ பேர் எம்மத்தியில் இருந்தாலும் “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்ற மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்பற்றி நிறைய எழுதலாம் 


சிறுகதை நாவல் பற்றி  ‘நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தினாற் தோன்றிய மத்திய தர வர்க்கத்தின் இலக்கிய குரலே புனைகதை’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது நூலில் விளக்கியுள்ளார்.



 புனைக்கதை எழுத்தாளர்களுள், மலையக இலக்கியம் பற்றிய அலகினை புரட்டும்போது தவிர்க்க முடியாத பக்கமாய் இருப்பவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்.



 ஈழத்து இலக்கிய சிறுகதை, நாவல் வரலாற்றில் மலையக புனைக்கதை எழுத்தாளர்கள் அங்கமாக கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம் வடக்கு, கிழக்கு இலக்கியத்தினை மாத்திரம் ஈழத்து இலக்கியமாக சிலர் கருதியமையே. இந்த கூற்றினை பிற்காலத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை போன்றவர்களும் ஏற்றுக் கொண்டு ஈழத்து இலக்கியத்தில் மலையக இலக்கியத்தினையும் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதும்; இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடியதே.



மலையக எழுத்தளார்களானவர்கள் மூன்று வகைப்படுத்தினால் 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

.1 மலையகத்தில் தோட்ட தொழிலாளியின் பிள்ளையாக பிறந்து வாழ்வோடு வாழ்வாக மலையக வாழ்வியலை உணர்ந்து எழுதுபவர்கள் ஒரு வகையினர்.


2மலையகம் என்ற எண்ணக்கருவை கேட்டறிந்து விளங்கி துன்ப துயரங்களை தெரிந்து (ஆய்வு செய்து) அதன்மூலம் மலையகம் பற்றிய இலக்கியம் படைக்கும் பிறபிராந்திய எழுத்தாளர் இன்னொரு வகையினர். இவர்களால் மலையகம் பற்றிய இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் அதில் எந்த அளவிற்கு மலையக மக்களின் வாழ்வு உயிரோட்டம் பெறுகிறது என்பது ஆராயப்பட வேண்டியவையே. ஆனாலும் மலையக இலக்கியம் எனும் ஆய்வில் மலையகம் பற்றிய பிறபிராந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வும் அவசியமாகிறது.


3மற்ற  வகையினர் அதிகார வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் (உயர் தொழில் புரிபவர்கள்) மலையக சூழலில் வாழ நிர்பந்திக்கும்போது அவர்களோடு வாழ்ந்த அனுபவங்களின் உணர்வுகளில் எழுத முனைபவர்கள். இவர்களது இலக்கிய படைப்பானது மேலதிகாரிகளின் சார்பாக, நிர்வாகம் சார்பாக எழுதும்  இலக்கியமாக அமையலாம்.




மலையக மக்களின்பால் நின்று அவர்களின் துன்ப துயரங்களை பற்றி எழுதுவதென்பது சற்றுக் கடினமானதாகவே இருக்கும். அதேநேரத்தில் எதிர்ப்புகளும் அதிகமாகவே மேற்கிளம்பும். இதனை எதையுமே பொருட்படுத்தாது விதிவிலக்காக எழுத்துப் பணியை மேற்கொண்டவரே தெளிவத்தை ஜோசப் அவர்கள். அந்தவகையில்; மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது



இவரது தீவிர எழுத்துப்பணிக்கு இவர் மலையகத்தில் வாழ்ந்த விதமும் மூலக்காரணமாக அமைந்திருக்கலாம். 1920 களில் மலையகக் கல்வி பற்றி சர்ச்சைகள் வெகுவாக மேற்கிளம்பத் தொடங்கின. 


பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்ததன் காரணமாக தோட்ட நிர்வாகிகள் பாடசாலைகளை அமைத்து அதனை அரசுக்கு அறிவிக்க வேண்டுமென மேலும் வலியுறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்கும் ஆசிரியக்குழுக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

அப்படி ஒருவராக வந்தவரே ஜோசப் அவர்களின் தந்தை சந்தனசாமிபிள்ளை அவர்கள். அவர் ஆசிரியர் தொழிலினை மேற்கொண்டிருந்தாலும் அவர் வசிப்பதற்கு தோட்ட தொழிலாளர்கள் வாழும் லயத்தில் ஒரு தொங்கல்இடம் வழங்கப்பட்டது .




தொழிலாளர்கள் அனுபவிக்கும் அதே லய வாழ்க்கை, பெற்றோருடன் சேர்த்து எட்டு பேர் அந்த இரண்டு அறைகளில்; வாழ்ந்த அனுபவம் இவரை இவ்வாறான எழுத்து பணிக்கு தூண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 




தெளிவத்தை ஜோசப் அவர்களின் குடும்பச்சூழலானது, பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப் அவர்கள். 


ஞானப்பிரகாசம் (மூத்தவர்), சந்தனசாமி, சேவியர், பாக்கியசாமி (பரிபூரணன் – எழுத்தாளர்) ஆகிய நான்கு சகோதரர்களும், அருமைசெல்வி (வடகரை – கும்பகோணம்) என்ற சகோதரியும் இவரது உடன் பிறப்புகளாவர். 


28.08.1968 இல் கொழும்பு கிரேண்பாஸ் என்ற இடத்தில் வாழ்ந்த மரியசூசை லெக்ரான் என்பவருக்கும் திரேசம்மாள் என்பவருக்கும் பிறந்த பிலோமினா ரூபௌ

 என்பவரை வாழ்க்கைத் துiணாய் இணைத்துக் கொண்டு திரேசா (திரேசா – புஷ்பராஜ்), 


தோமஸ் ரமேஸ் (தோமஸ் ரமேஸ் – ஹிமாலி), 


திமொதி ரவீந்திரன் (திமொதி ரவீந்திரன் – அரூஸியா), 


தெக்ளா சியாமளா (தெக்ளா சியாமளா – டேவிட்) 


ஆகியோருக்கு பொறுப்புள்ள தந்தையாகவும், ஆர்த்தி, ரந்தீரா, ரொஸாரா, அம்றா, சித்ரா, அதீப், சில்வியா ஆகியோருக்கு அன்பு தாத்தாவாகவும் இருந்து வருக்கின்றார்.





பேசும்படம் என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு.


 ‘எஸ்.ஜோசப் – ஊவா கட்டவளை, ஆலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப்பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தையில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப்பணிக்கு இழுத்துச் சென்றது.



1960 ஆம் ஆண்டில் தமிழ்வாணனின் கல்கண்டு என்ற இதழுக்கு “பால்காரப் பையன்” என்ற கதை எழுதியனுப்பியிருந்தார். இதுவே இவரது இலக்கிய வரலாற்றில் முதல் சிறுகதையாகும். அனால் அது கடைசிவரையும் பிரசுரிக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து ஜி.உமாபதி அவர்கள் நடாத்திய உமா என்ற மாத இதழுக்கு, அவ்விதழின்; அட்டைப்படத்துக்கான கதையினை எழுதியிருந்தார். பாதையில் கிடந்த வாழைப்பழத்தோலில் வழுக்கி விழும் வாலிபனையும் அதைப் பார்த்துக் குறும்பாகச் சிரிக்கும் இரண்டு இளம் பெண்களையும் சுட்டி நிற்கும் அந்த கதையின் பெயர் “வாழைப்பழத் தோல்” இதுவே பிரசுரமான அவரது முதல் கதை. இதற்கு பிறகு ‘மாயை’ ‘அழகு’ ஆகிய கதைகளை மோகன் அவர்கள் நடத்திய கதம்பம் என்ற இதழ் பிரசுரித்திருந்தது.







ஜோசப் அவர்கள் தெளிவத்தை தோட்டத்து வாத்தியார் அதோடு பகுதி நேர எழுதுவினைஞராக தோட்டத்து காரியாலய கிளாக்கர் தொழில் புரிய ஆரம்பித்த காலத்தில் வீரகேசரியில் பிரசுமான தோட்ட மஞ்சரி எனும் பகுதிக்கு ‘பெயரோ பெயர்’ என்ற கட்டுரையினை எழுதியிருந்தார்.


 பாடசாலை வரவு இடாப்பில் மாணவர்களின் பெயர்களை கொச்சைப்படுத்தும், சீரழிக்கும் முறைகேடான சம்பவங்களுக்கு எதிரான கட்டுரையது. தோட்ட மஞ்சரியில் பிரசுரமானது தெளிவத்தை ஜோசப் என்ற பெயருடன். அன்றிலிருந்து தெளிவத்தை ஜோசப் ஆனார்.



50களின் கடைசியில் தொடங்கி 1963 களிலேயே இலக்கியத்துறையில் தடம் பதித்து பலராலும் அறியப்பட்டவரானார். 1963 ஆம் ஆண்டில் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியில் இவரது சிறுகதையான ‘பாட்டி சொன்ன கதை’ முதலிடத்தை பெற்றுக் கொண்டது.


 பாட்டி சொன்ன கதை பழங்கதை என்று புறந்தள்ளிவிடமுடியாது. இன்றைய சூழலிலும் இந்த பாட்டியின் கதை பலருக்கு அவசியமாகத்தான் இருக்கிறது. அதேபோல 1963 இல் மலைமுரசு நடத்திய சிறுகதை போட்டியில் ‘நாமிருக்கும்நாடே’ என்ற சிறுகதையும் முதலிடம் பெற்றது. 1964 இல் வீரகேசரி நடாத்திய சிறுகதை போட்டியிலும் இவரது ‘பழம் விழுந்தது’ என்ற சிறுகதை முதலிடத்தை பெற்றுக் கொண்டதும் இன்னும் பிரபலமடைய தொடங்கினார். 

இதன் பின்னர் இலக்கிய உலகில் இவர் பெயர் பரவ தொடங்கியது. அந்தவகையில் பார்க்கின்றபோது தெளிவத்தை ஜோசப் என்பவரை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை வீரகேசரியையே சாரும். 





இதன் பின் 1965 இல் வீரகேசரி சிறுகதை போட்டியை நடத்த திட்டமிட்டதுமே இம்முறையும் “தெளிவத்தை ஜோசப் எழுதுகிறாரா என்ற கேள்விகள் கூட எழுந்தது. அதனால் இவரை   போட்டியில் கலந்து கொள்ள விடாமல்  நடுவர் குழுவில் அப்போது அதற்கு பொறுப்பாக இருந்த வீரகேசரியின் துணையாசிரியர் திரு.கார்மேகம் அவர்கள் இணைத்து விட்டார்” 


அவரது தினகரன் நேர்காணல் ஒன்றில் இதனை தெளிவத்தை ஜோசெப்  தெரிவித்திருந்தார். 


 வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயலாளராகவும் இருந்த திரு. எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் தெளிவத்தை ஜோசப் அவர்களை மட்டுமல்லாது மலையகத்தில் எழுத்தார்வம் மிக்க பலரையும் இது போல ஊக்குவித்திருக்கிறார், இலக்கிய உலகிற்கு அறிய செய்திருக்கிறார் என்பதும் மறக்கப்படக்கூடாது.



வீரகேசரி நடாத்திய மூன்றாம் நான்காம் மலையக சிறுகதை போட்டிகளில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சகோதரரான பாக்கியசாமி என்கிற பரிபூரணன் இருபோட்டிகளிலும் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. வீரகேசரி நடத்திய நான்கு சிறுகதை போட்டிகளிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற சிறுகதைகளை தொகுத்து கதைக்கனிகள் என்ற நூலினை கார்மேகம் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்.


இவரது சிறுகதையான படிப்….பூ என்ற கதையினையும் 1962 இல் வீரகேசரியே பிரசுரித்திருந்தது. 2009 வரை எழுதிய (கடந்த 2 வருடங்களாக இவரால் சிறுகதை எழுதப்பட வில்லை) அவரது 66 சிறுகதைகளில் 16 சிறுகதைகளை பிரசுரித்து அவரது இலக்கிய வாழ்வுக்கு வீரகேசரி பெரிதும் உறுதுiணாக அமைந்திருக்கிறது. வீரகேசரி மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களும் இதேபோல தங்களது பங்களிப்பினை வழங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.


தினகரன், தினக்குரல், செய்தி, சிந்தாமணி, ஜோதி, ஆகிய பத்திரிகைகளும், கலைமகள் மலைப்பொறி, மலைமுரசு, தேனருவி, மல்லிகை, கதம்பம், ஓலை, அஞ்சலி, தமிழமுது, மாணிக்கம், சௌமியம், மூன்றாவது மனிதன், முகில் போன்ற சஞ்சிகைகளும் இவரது சிறுகதைகளை பிரசுரித்த பெருமை பெறும் அதேவேளை சிறந்த பங்களிப்பினையும் நல்கியுள்ளது.


66 சிறுகதைகள் எழுப்பட்டிருந்தாலும் இதுவரையில் 11 சிறுகதையடங்கிய நாமிருக்கும் நாடே என்ற ஒரேயொரு சிறுகதை தொகுப்பு மாத்திரமே வெளிவந்துள்ளது. நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை தொகுப்பு வைகறை வெளியீட்டினால் 1979 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை முன்நின்று வெளிக்கொண்டு வந்ததில் மு.நித்தியானந்தன் அவர்களின் பங்கு அளப்பறியது. 



இந்த சிறுகதை தொகுப்பு 1979 ஆண்டில் அரச சாகித்திய விருது பெற்றிருந்தது. மலையகத்தில் முதன்முதலாக அரச சாகித்திய விருது பெற்றவர் தெளிவத்தை ஜோசப் என்பதும் சொல்லப்படவேண்டியதே. இந்த சந்தர்ப்பத்திலும் இவ்விருதினை நீங்கள் நிராகரிக்க வேண்டும் என தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிற து.




இன்று 

இலக்கிய உலகில் அடுக்கடுக்காக எத்தனையோ படைப்புகளை வெளிவருகின்றன 


 தங்களது இலக்கிய இருப்பினை தக்கவைத்து கொள்வதற்குபலர் மிகவும்  சிரமப்படுகிறார்கள் .


 ஆனால்  ஒரேயொரு சிறுகதை தொகுப்பினை மாத்திரம் வெளியிட்ட இவருக்கு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என பேசப்படுகிறது, கௌரவம் அளிக்கப்படுகிறது என்றால் நாமிருக்கும் நாடே என்ற நூல் வாசகரிடையே சென்றடைந்த விதமும் அதனால் ஏற்பட்ட மனக்கிளர்வுமே காரணமாக அமையும். 



படைப்புக்களின் எண்ணிக்கையில் மாத்திரம் ஒருவரின் ஆளுமை தங்கியிருக்கவில்லை என்பதை


 இவர் மூலம் அறியக் கூடியதாகவே உள்ளது.



இலக்கிய உலகில் அரை நூற்றாண்டை கடந்திருக்கும் இவர் 1972க்கு பிறகு 1984 வரை ஒரு சதாப்தத்துக்கும் மேலாக எழுதவில்லை என்பதும் அனைவராலும் அறியப்பட வேண்டும். 


ஏன் ?எழுத்தாளர்கள் பேனை பிடிப்பதற்கு பயந்த காலமும் அதுவாகவே இருக்கிறது. 


இவர் 1963 களில் எழுதத் தொடங்கி 1970களில் கொழும்பிற்கு புலம்பெயர காரணமாகவிருந்ததும் இவரது இலக்கிய படைப்புகளுக்கு வந்த எதிர்ப்புகளும், உயிர் அச்சுறுத்தல்களும், விமர்சனங்களுமே. அவ்வாறானதொரு வலைபிடிக்குள் மாட்டிக் கொள்ளாது தொடர்ச்சியாக எழுதியிருந்தாலும் 1972 க்கு பிற்பட்ட காலம் இவரை எழுத்துத்துறையிலிருந்து சற்றே நிறுத்தித்தான் வைத்திருந்துள்ளது. மீண்டும் 1984இல் எழுத ஆரம்பித்தவர் தடைகள் பல கடந்து சாதனை பல படைத்து இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது பெருமளவிற்கு தனது எழுத்துப் பணியினை செய்து வருகின்றவர்.


வீரகேசரி பத்திரிகையில் வெளியான இவரது முதல் சிறுகதையான ‘படிப்…பூ’ மலையக மக்களிடம் நிலவிய பாடசாலை கல்வி பற்றிய அலட்சிய போக்கினை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருந்தது.





அதற்கு பிறகு ‘யாழ்ப்பாண விரோதக்காரன்” என்று விமர்சிக்கப்பட்ட ‘சோதனை’ என்ற கதையும் பாடசாலை கல்வி பற்றியதாகவே அமைந்திருக்கிறது. இருந்தாலும் இது வருட கடைசியில் மாணவர்களை வகுப்பேற்றுவதற்கு ‘இன்ஸ்பெக்டர்’ வருகிற நாளில் வாத்தியார்கள் போடும் போலி நாடகங்களை அம்பலப்படுத்தியது. அப்பொழுது வாத்தியார்களாக யாழ்ப்பாணத்தவர்கள் இருந்ததால் இவர் யாழ்ப்பாணத்துக்கு எதிராக எழுதுகிறார் என்று கதைகள் கூறப்பட்டுள்ளன. அந்த கதை யாழ்ப்பாண வாத்தியார்களுக்கு எதிராகவே எழுதப்பட்டதல்ல,



இது பற்றி  சொல்லும் பொழுது 


. “நான் யாழ்ப்பாணத்தவர்களில் நன்மதிப்பையே கொண்டிருந்தேன். ‘பதுளைக்கு படிக்க வந்த பிறகு எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தவர்களே. திருவாளர்கள் பொன்னம்பலம், சின்னய்யா, முருகேசு, தோமஸ் ஆகியவர்களை என்னால் மறந்துவிட முடியாது. அவர்கள் கற்றுத்தந்த தமிழ்தான் என்னை உயிர்ப்பித்திருக்கிறது” என்று நன்றியுடன் நினைவு கூருகின்றார்.தெளிவத்தை ஜோசெப் .



‘அது’ ஒரு குரங்கு பற்றிய கதையாகவும், நாய்குட்டி பற்றிய கதையாக உயிரும், லில்லி மாடு ஒன்றின் கதையாகவும் அமைந்திருந்தது. சிறுகதைகளில் “அது”, “உயிர்”, “லில்லி” போன்றவை பற்றி 

விமர்சிக்கும்பொ ளுது அவனவன் செத்து மடிகிறான் தெளிவத்தை என்ன என்றால் விலங்குகளை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்ற விமர்சனமும் வரத்தான் செய்தது. 


சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த இலக்கிய வாசகனால் மட்டுமே பார்க்கின்ற அனைத்தையும் இலக்கியமாக கொள்ளமுடியும். அந்தவகையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் சிறந்த எழுத்தாளர் என்பதை இந்த கதைகளினூடாக நிரூபித்திருக்கிறார்.


இவர் இந்த கதைகளினூடாக மழுங்கிப் போன மனித விழுமியங்களையும் சொல்வதற்கு தவறவில்லை. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த இவரது இலக்கியம் ஒட்டுமொத்தமாக அனைத்து பெரும்பான்மை மக்களையும் ஒருசேர தவறானவர்களாக கூறிவிட முடியாது என்பதையும் ‘உயிர்’ என்ற கதையில் பெரும்பான்மை இனத்தவருக்கும், சிறுபான்மை இனத்தவருக்கும் இடையில் ஏற்பட வேண்டிய, சிலரிடம் இருக்கின்ற ஒருமைப்பாட்டையும் தெளிவாகவே விளக்கியுள்ளார். உயிர் என்ற கதை மட்டுமல்லாது ‘சுவர்’ என்ற சிறுகதையும் இனத்துவ ஒருமைப்பாட்டினை எடுத்துக்கூறுவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு இடிந்துபோன சுவருக்குள் இனத்துவ ஒருமைப்பாட்டை விளக்குவதென்பது அவரது இலக்கிய படைப்பின் உறுதி தன்மைக்கு சான்று பகர்கின்றது.


‘உயிர்ப்பு’ என்ற சிறுகதை ஒருவருக்கு ஏற்படும் பல்வலி பற்றிய கதை. வாசிப்பவர்களை பல்வலிக்குள் இப்படி ஒரு தத்துவமா என்று வியக்க வைக்கிறது. ‘தீட்டு ரொட்டி’ என்ற கதை சாதி என்ற போர்வையில் இளசுகளின் உள்ளங்களை புண்படுத்தும் அவலத்தினை சித்திரிக்கிறது. ‘மண்ணைத்தின்று’ என்ற கதையில் மலையக பெண்கள் வறுமை காரணமாக பசிக் கொடுமையின் காரணமாக விலைப்போகும் அவலம் மிக நாசூக்காக சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவரது ஒவ்வொரு படைப்பாக்கமும் ஒவ்வொரு பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.



இவரது சிறுகதை தலைப்புகளே சற்று சிந்திக்கத் தூண்டுவதாகவும், வித்தியாசமானதாகவுமே அமைந்திருக்கிறது. பால்காரப்பையன், மாயை, அழகு, படிப்….பூ, பாட்டி சொன்ன கதை, இது 12 ஆவது, விடுதலை, ஊன்றுகோல், அழகு தெரிந்தது, போலித்திருப்தி, நாமிருக்கும் நாடே, கம்பளித்துண்டு, நா, காட்டுப்பூ, வாழ்வு வந்தால், வஞ்சம் கரைந்தது, சீர்த்திருத்தம், அது, பாவ சங்கீர்த்தனம், தீட்டு ரொட்டி, பழம் விழுந்தது, கூனல், ஊரான் பிள்ளை, புல், புரியவில்லை, மனிதர்கள் நல்லவர்கள், சோதனை, லில்லி, கடைசிவேளை, பீலி மேலே போகிறது, பிராயச்;சித்தம், சிலுவை, மீன்கள், கணக்கு, வரவுக்கொரு பற்று, கத்தியின்றி ரத்தமின்றி, வேறு வழியில்லை, எக்ஸீமா, ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்க போகிறார்கள், போலிகள், மண்ணைத்தின்று, பயணம், ஒரு புதிய உயிர், நினைவுகள், அவரும் நானும், பார்வை, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், பந்து, பொட்டு, உயிர், அம்மா, வேலிகள், செத்துப் போகும் தெய்வங்கள், இன்னுமொரு, பஸ்ஸிலிருந்து, நாடகம், உயிர்ப்பு, நரகம், இங்கேயும் ஒரு இயேசு, சுவர், மழலை, இருப்பியல், இறுமாப்பு, சாம்பல், மந்திரக்கோல், தோல்வி ஆகியவைகளை அவையாகும்.


இவரது ‘காதலினால் அல்ல’ என்ற நாவல் மலையக தோட்ட புறத்திலிருந்து கொழும்பு போன்ற நகர்புறம் நோக்கி வருகின்ற இளைஞர்கள் கொழும்பின் நாகரீக செயற்பாடுகளுக்குள் சிக்கி சீரழிந்து போவதைக் காட்டுகிறது. 1967இல் எழுதப்பட்டது 



 1972 இல் எழுதப்பட்டு 1974 இல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை,

மலையக தோட்டபுறங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பேரினவாத சக்திகளினால் இம்மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட விதத்தினையும், அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடாவடித்தனங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும், ஊழல்களையும், சற்று வழிப்புணர்வுடன், முன்னேற துடிக்கும் இளைஞர் யுவதிகள் மீதான போட்டி, பொறாமை என்பவறை;றையும் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்டுத்துவதாகவே இவரது ‘காலங்கள் சாவதில்லை’ என்ற நாவல் அமைந்திருக்கிறது. சிலரால் செய்யப்படுகிற தியாகங்களினால் தான் மலையக சமூகம் விடிவை நோக்கி செல்கிறது என்ற உண்மையினை கதையின் கதாநாயகன் ஆறுமுகம் மூலமாக பிரதிபலிக்கிறார். இவன் சார் சூழல் வெற்றிக்காக தன் மனைவியின் கற்பு முதற்கொண்டு அனைத்தையும் இழந்து நின்ற ஆறுமுகம் வெற்றி அடைவதாகவே செல்கிறது இந்த காலங்கள் சாவதில்லை என்கிற நாவல்.





‘குடை நிழல்’ என்ற நாவல் தங்களது இருப்பிடங்களை விட்டு கொழும்புக்கு வந்து வாழ்கின்ற மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு வாடகை வீடு தேடுவதில் உள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டது. யுத்த காலத்தில் அப்பாவி தமிழர்களை பெரும்பான்மைவாதிகள் படுத்துகிற பாடுகளையும், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளையும் எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது. இது அரசியல் மாற்றம் குறித்து சற்று சிந்திக்க வைக்கிறது. இந்த நாவல் அரசியல் பேசுகிறது என்று ஓரிரு புதின பத்திரிகைகள்; பிரசுரிக்க மறுத்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2010ம் ஆண்டு கொடகே பதிப்பகம் ‘குடைநிழல்’ நாவலை நூலுருவில் தந்திருக்கின்றது.


‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்’ என்ற நாவல் 1983 இனக்கலவரத்தினை கருவாகக் கொண்டது. இந்த நாவலும் சிறுபான்மையினத்துக்கெதிராக திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட, கலவரம் பற்றிய பதிகையாக அமைந்துள்ளது. கொழும்பின் 1983 இனக்கலவரக்கொடுமைகளைப் பதிவு செய்கின்ற முதல் நாவல் இதுவாகும். இந்த நாவல் கதை என்பதைவிட ஒரு நிஜ சம்பவத்தின் பதிவு என்பதே மிக முக்கியமாகும்.



‘ஞாயிறு வந்தது’ என்ற குறு நாவல் 1966 ஆம் ஆண்டில் கி.வா.ஜெகந்நாதன் நடத்திய கலைமகளில் வெளிவந்தது. தினகரன் ஆசிரியராக சிவகுருநாதன் கடமையாற்றிய 1969களில் தினகரன் மனம் வெளுக்க என்ற குறு நாவலை பிரசுரித்திருந்தது. இதுவே தினகரனில் பிரசுரிக்கப்பட்ட இவரது முதல் படைப்பாகும். ஆனால் காலப்போக்கில் ஆரம்பத்தில் தனக்கு வீரகேசரி கொடுத்த அதேயளவு முக்கியத்துவத்தினை பின்னாளில் தினகரன் வழங்கியிருந்ததாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் நன்றி பகர்கிறார்.


அப்பொழுது 1966 ஆம் ஆண்டில் பாலாயி என்ற குறு நாவல் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர்களில் ஒருவரான கே.வி.எஸ்.வாஸ் அவர்களுடைய புதல்வரான மோகன் நடத்திய கதம்பத்தின் தீபாவளி சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப்பட்டது. இவர் எழுதிய மூன்று குறுநாவல்களையும் தொகுத்து நூலாக 1997 ஜுலையில் துரைவி பதிப்பகம் வெளியிட்டது. துரைவி பதிப்பகத்தின் உரிமையாளர் துரை விஸ்வநாதன் அவர்கள் இருந்த காலத்தில் மலையகத்தில் உள்ள பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு நூல் வடிவம் பெற்றுக் கொடுத்தவர். தற்பொழுது அவரது மகன் துரைவி.ராஜ் பிரசாத் அவர்களும் அதனை தொடர்கிறார் என்பதும் முக்கியமானது.




துரை விஸ்வநாதன் அவர்கள் இருந்த காலத்தில் அவரது துரைவி பதிப்பகத்துடன் இணைந்து துரைவி – தினகரன் பரிசு சிறுகதைகள், மலையக சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள், போன்ற நூல்களினது தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்துள்ளார். வீரகேசரியின் துணை ஆசிரியர் கார்மேகம் அவர்களுடன் இணைந்து கதைக்கனிகள் என்ற நூலையும் தொகுத்துள்ள அதேவேளை சுந்திர இலங்கையின் 50 சிறுகதைகள் என்ற சிறுகதைகள் தொகுப்பினை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர் என்பதோடு இந்த சிறுகதைத் தொகுப்பில் 50 சிறுகதைகளுள் இவரது ‘பொட்டு’ என்ற கதை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.


மலையக சிறுகதை வரலாறு எனும் நூல் மலையக, மலையகம் பற்றி எழுதிய எழுபத்தாறு எழுத்தாளர்கள் படைப்புக்கள் பற்றிய ஆய்வாகும். இவ்வாய்வு மலையக இலக்கியத்தினை உயிரோட்டமிக்கதாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதோடு ஏனைய இலக்கியங்களோடு மலையக இலக்கியத்தை சீர்தூக்கி பார்க்கச்செய்யும் உன்னத செயற்பாட்டுக்கான அடித்தளமே ஆகும் 




சிறுகதை, நாவல், ஆய்வு என்பதோடு மட்டும் நின்றுவிடாது இலக்கியத்தில் மற்றுமொரு அங்கமான திரைக்கதை வசனம், வானொலி நாடகங்களிலும் தனது பங்களிப்பினை செலுத்தியுத்தியுள்ளார். இலங்கையின் புகழ் பெற்ற புதிய காற்று என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் இவரே. ரூபவாஹினியில் ஒளிபரப்பிய பொகவந்தலாவை ராஜபாண்டியன் நடித்த ‘காணிக்கை’ என்ற நாடகத் தொடர் இவரது ‘புரியவில்லை’ என்ற சிறுகதையாகும். அதை படமாக்க விரும்பியபோது அதற்கு திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். இவர் திரைக்கதை வசனம் எழுதிய ‘ஏன் இந்த உறவு’ என்ற திரைப்படம் காமினி பொன்சேக்கா அவர்கள் நடிக்கவிருந்து படபூஜையுடன் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



1965 இல் ஈழக்குமார் தொகுத்து கவிதை நிலையம் வெளியிட்ட ‘குறிஞ்சிப்பூ’ என்ற கவித்தொகுப்பு நூலில் “இன்று நீ சுடுவதேனோ” என்ற கவிதையும், வீரகேசரியில் ‘கருணை இழந்தோம் நாம்’ என்ற கவிதையினையும் ‘ஜோரு’ என்ற புனைபெயரில் எழுதியிருந்தார். அதற்கு பின் பாலாயி என்ற குறுநாவல் தொகுதியின் சமர்ப்பணத்துக்காக தனது தாய் தந்தையரைப்பற்றிய கவிதையொன்றினை எழுதியிருந்தார். இவை மூன்றுமே இவரது கவிதை படைப்புகளாகும்.





இவர் பிளோமினா என்ற பெயரில் இலக்கிய கட்டுரைகளும், திரேசா – சியாமளா என்ற பெயரில் தினகரனுக்கான இலக்கிய குறிப்புகளையும், ரவீந்திரன் – ரமேஸ், தினகரனுக்கான வாரம் ஒரு சிறுகதை விருந்து என்ற ஆக்கங்களும், ஜோரு என்ற பெயரில் கவிதைகளும், ஜேயார் என்ற புனைப்பெயரில் தினகரனுக்கான இலக்கிய தகவல்கள் போன்றனவும் எழுதியுள்ளார்.





சுவர் என்ற சிறுகதை 1998 இல் நீதி, அரசியலமைப்பு விவகார, இன உறவு அலுவல்கள் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு நடாத்திய சிறுகதை போட்டியில் முதலிடத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவர் தமிழ்க் கதைஞர் வட்டம் நடத்திய 2009க்கான சிறுகதை போட்டியில் இறுமாப்பு என்ற சிறுகதை சிறப்பு இடம் பெற்றது.


டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை என்ற சஞ்சிகையில் முகப்பு அட்டையில் ஒவ்வொரு இலக்கியவாதிகளின் படங்களையும் பிரசுரித்து அவர்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது இலக்கியவாதிகள் மத்தியில் மிகப்பெரும் கௌரவத்தினையும், நன்மதிப்பையும் பெறுகிறது. அந்தவகையில் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு 1973 ஏப்பில் மல்லிகை இதழிலேயே அந்த கௌரவத்தை அளித்துள்ளது. அதேபோல் ஞானம் சஞ்சிகையும், 23 அங்கம் அடங்கிய நேர்காணலை தொடர்ச்சியாக இரு வருடங்களாக பிரசுரித்ததுடன் பவளவிழா சிறப்பு மலரையும் வெளியிட்டு கௌரவித்திருந்தது.


ஞானம் பத்திரிகை இதுவரை மூன்றுபேருக்குமட்டுமே பவளவிழா மலரை வெளியிட்டுள்ளது. அவர்களில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை அடுத்ததாக தெளிவத்தை ஜோசப் அவர்கள் என்பதும் அறியப்பட வேண்டும்.


1979 நாமிருக்கும் நாடே சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசு அரச சாகித்திய விருதினையும், 1991 இல் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு இலக்கிய செம்மல் விருதினையும், 1995 இல் இலங்கை, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும், 2000 ஆம் ஆண்டில் தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய கௌரவ விருதினை சிலுமின பத்திரிகையும், மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 இல் அரச சாகித்திய விருதினையும், அதே ஆண்டில் இந்நூலுக்காக சம்பந்தன் விருதினையும், 2003 இல் அட்டன் புதிய பண்பாடு அமைப்பு மலையக சிறுகதை வரலாறுக்காக என்.எஸ்.எம்.இராமையா நினைவுப் பரிசினையும், பேராதனை பல்கலைக் கழகம் 2007 இல் இலக்கிய விருதினையும், 2008 இல்   எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் 2009 இல் மேல் மாகாண கலை,கலாசார அமைச்சு தமிழ் சாகித்திய விருதினையும் 2009 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மத்திய மாகாண சபை தமிழ் சாகித்திய விழாவில் சாதனையாளர் விருதினையும், 2009 இல் அட்டன் ஆன்;மீகக் கலை வட்டம் பாரதி விருதினையும் (மக்கள் எழுத்து வேந்தன்), 2010 இல் பதுளை நிவ்பேர்க் குறிஞ்சிப் பேரவை எழுத்து வேந்தன் என்ற விருதினையும் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள்..



சிறந்த விமர்சகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்ற இவரிடம் பலரும் முன்னுரைகளை தங்களது நூலுக்காக பெற்றிருக்கின்றர். இதுவரையில் 35 நூல்களுக்கு முன்னுரை வழங்கியுள்ளார்.



பல எழுத்தாளர்களும் தங்களது நூல் வெளியிட்டுக்கு தலைவராகவும், கருத்துரை, சிறப்புரையாற்றுமாறும் வரவழைத்து கௌரவப்படுத்தியிருப்பதையும் மறந்துவிட முடியாது. 1960களில் இருந்து இன்றுவரை பலதரப்பட்ட சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்ற மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் இருந்து பலரையும் ஊக்குவிப்பதோடு வழிகாட்டியும் இவர் இருந்து வருகிறார்.


தெளிவத்தை ஜோசப் அவர்கள் இந்தளவிற்கு மேன்மையுற அவரது குடும்பம் பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறது. இலக்கிய சூழலுக்கேற்ற மனைவி, பிள்;ளைகள் என எல்லாமே அவர் மனம்போலவே அமைந்திருக்கிறது.



இலங்கை மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்கிற அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களை இவரது படைப்புகள் எடுத்துக் கூறின.


தெளிவத்தை ஜோசெப் அவரின் பார்வையில் 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



மலையகம் நான் பிறந்த மண். பிறந்த மண் என்ற உணா்வு எல்லோருக்கும் இருக்கும்.  எனது அப்பாவை கத்தோலிக்க முறைப்படி ‘ஆஞா’ என்றே அழைப்போம். ஆஞா என்றால் தமிழ் அகராதி ‘அப்பா’ என்று அா்த்தம் கூறுகிறது.  அப்பா திருச்சியிலிருந்து உத்தியோகத்துக்காக மலையகத்துக்கு வந்து சோ்ந்தவர். அங்கே தோட்டத்து ஆசிரியா் வேலையை பொறுப்பேற்று இரண்டு மூன்று மாதங்களின் பின் மீண்டும் இந்தியா சென்று அம்மாவைத் திருமணம் செய்து திரும்பி வந்திருக்கிறார். எமது குடும்பத்தின் மூத்த பிள்ளை எனது அண்ணா ஞானப்பிரகாசம். இரண்டாவது பிள்ளை ஜோசப் என்கிற நான். பிறகு எங்கள் குடும்பத்தில் ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும். ஊவாக் கட்டவளை என்ற தேயிலைத்தோட்டம் பதுளையிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் இருக்கின்றது. அந்த தோட்டத்திலே தான்  அப்பா ஆசிரியா் வேலைக்காக வந்திருந்தார்.


திருச்சி ரயில் நிலையத்தில் ஆசிரியர் வேலைக்கு விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நேரம் தோட்டத்தில் ஆசிரியருக்கென்று ஒரு வீடு கிடைக்கும் என்று சொல்லப்பட்டதாம். ஆனாலும் எனது தந்தை வேலைக்கு வந்தபோது அவருக்கு வீடு இருக்கவில்லை. ஆகவே அவா் ஆங்கிலேய தோட்ட உரிமையாளரிடம்  தான் எங்கே தங்குவதென்று கேட்டிருக்கின்றார். அப்போது அந்த தோட்ட உரிமையாளா் பாடசாலைக்கு அருகில் ஒரு வெற்று நிலத்தைக் காட்டி இந்த இடத்தில் ஒரு அழகான வீடு கட்டித்தருகின்றேன். தற்சமயம் நான் காட்டும் இடத்தில் இருங்கள் என்று பாடசாலைக்கு பக்கத்தில் இருக்கும் தொழிலாளா்களுக்கான அந்த குடியிருப்பு லயத்தில் முதல் இரண்டு அறைகளையும் எங்கள் தந்தைக்கு கொடுத்தார். தற்சமயம் இதிலே இருங்கள். நாங்கள் இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் திருமணம் செய்து வரும் சமயம் உங்களுக்கு வீடு கட்டித்தருவோம் என்றும் கூறியுள்ளார்.


அந்தக் காலத்தில் தோட்டத்து ஆசிரியா் என்பவா் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவதில்லை. அந்தப் பிள்ளைகளை ஒரு சிறிய மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பார். அதற்காகத்தான் ஆங்கிலேயர்கள் ஆசிரியா்களை நியமித்திருந்தார்கள். ஆனால் எங்களுடைய தந்தையைப் பொறுத்தவரையில் அவர் அதற்கு நேர்மாறாக இருந்தார். அதாவது படிக்க வரும் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டும் என்று அவா் செயற்பட்டார். நானும் எனது அண்ணாவும் அவரிடம் தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.


எனது தந்தை தனியாக ஒரு வீட்டில் இல்லாமல் தொழிலாளா்கள் வசிக்கும் அந்த லயத்தின் முதல் இரண்டு அறைகளில் இருந்ததால் அந்த லயத்துத் தொழிலாளா்களுடைய  பிள்ளைகளுடன் பழகவும், விளையாடவும்  எனக்குச் சந்தா்ப்பம் கிடைத்து. அதனால் அவா்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. இவா்களுக்குத்தான் தோட்ட லயத்தில் இடம் கொடுத்துவிட்டோமே. இனி எதற்கு அவா்களுக்கு தனியாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஆங்கிலேய தோட்ட முதலாளி தனது செலவைக் குறைத்துக்கொண்டுவிட்டார்.


தந்தையிடம் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பிறகு ஆறாம் வகுப்பு படிப்பதற்கு அங்கே வகுப்பு இல்லை. இடைநிலை கல்வி கற்பதற்கு மலையக நகரங்களுக்குச் செல்லவேண்டும். ஆனால் நகரப்பகுதிக்கு போவதற்கு பஸ் வசதிகள் இல்லை. ஆகவே என்னையும் அண்ணாவையும் கும்பகோணத்தில் அம்மாவின் உறவினா்களிடம் படிப்பதற்காக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.


ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் எப்படி சம்பந்தப்பட்ட மக்களை கலந்து கொள்ளாமல் தலைவா்களாக முடிவெடுத்து இந்தியாவிற்கு அனுப்பினார்களோ அதே போல எங்கள் அம்மாவும் ஆஞாவும் எங்களைக் கேட்காமலேயே இந்தியாவில் கொண்டு போய் விட்டுட்டு வந்தார்கள்.


நாங்கள் இந்தியாவில் கும்பகோணம் லிட்டில் ப்ளவர் ஹை ஸ்கூல் என்றும் பாடசாலையில் படித்தோம். கும்பகோணத்தைப் பற்றி பின்னர் நான் விரிவாக எழுதியிருக்கின்றேன்.  மௌனி, குபாரா போன்ற இலக்கியவாதிகள்  உலவிய  வீதிகள் நிறைந்த ஊர் அது. அந்த சின்ன வயதில் எனக்கு அதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.


இலங்கை அரசாங்கம் தன்னுடைய போக்குவரத்து சேவைகளை விஸ்தரித்தது. கட்டவளை வரை பஸ் ஓடியது. இப்போது பஸ்ஸில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாம் என்ற நிலைமை வந்ததும் எங்களை இந்தியாவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். இங்கு நான் சென்.பீட்டர்ஸ் கல்லூரி, பதுளையில் கல்வி கற்றேன். அந்தப்பாடசாலை கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் ஒரு பாடசாலை. அந்த பாடசாலையில்தான் நான் மறுபடியும் 4ம் வகுப்பில் சேர்ந்தேன். 4ம் வகுப்பை மூன்று தடவைகள் படித்திருக்கிறேன். அப்பாவிடம் 5 ம் வகுப்பு வரை படித்துவிட்டு இந்தியாவுக்கு போனால் அங்கே 4ம் வகுப்பில் சோ்த்தார்கள். பிறகு அங்கு 6ம் வகுப்பு படித்துவிட்டு இங்கு திரும்பி வந்ததும் இங்கேயும் 4ம் வகுப்பில் தான் சோ்த்தார்கள். இரண்டு வருடங்கள் 4ம் வகுப்பு படித்து இரட்டை வகுப்பேற்றம் எல்லாம் எடுத்து பின்னா் அதே பாடசாலையில் தான் நான் SSC  எழுதினேன். SSC என்பது Senior school certificate. அந்த நாளைய உயா்கல்வி சான்றிதழ் அது. 8ம் வகுப்பு படித்து முடித்த பின்னா் JSC என்ற சான்றிதழ் கொடுப்பார்கள். அதாவது Junior school ceritificate. அந்த Junior school ceritificate இருந்தால் தோட்டங்களில் உத்தியோகங்களில் சேரலாம். எனது அண்ணா அந்த JSC உடன் படிப்பை இடை நிறுத்திவிட்டார். அண்ணாவை தோட்டத்து ஆபிஸில் வேலை பழக இடம் கொடுத்தார் தோட்டத்துரை. அவர் கிளார்க் வேலை பழகிக்கொண்டிருந்தார்.


நான் இரண்டு வருடம் SSC படித்துக்கொண்டிருந்தேன். அதற்கான அரச பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த நேரத்தில், எங்களுடைய பாடசாலை அதிபா், Brother Casion  சொன்னார் “ஜோசப் நீ Result வரும்வரை வீட்டில் இருக்காதே. தினமும் பாடசாலை வா” என்றார். அதற்கு நான் ஏன் என்று கேட்டேன். அப்போது “பாடசாலை ஆபிஸில் கொஞ்சம் வேலைகள் இருக்கின்றன, அதனால் நீ வந்து அந்த வேலைகளை செய்து தா. உனக்கு சம்பளம் தர என்னால் முடியாது. வேண்டுமானால் Pocket Money தருவேன்” என்று சொன்னார். அதை  நான் ஒரு கௌரவமாக கருதினேன்.





அண்ணா வேலை பழகி முடிந்ததும் தெளிவத்தை தோட்டத்தில் வேலை கிடைக்க அங்கே சென்றுவிட்டார். புதிய இடத்தில அவருக்கு தனி பங்களா, அலுவலகத்தில் உத்தியோகம், கிளார்க் வேலை. தெளிவத்தை என்பது ஒரு பெரிய எஸ்டேட். எங்களுடைய  கட்டவளைத் தோட்டத்தைவிட  நான்கு மடங்கு பெரியது. தெளிவத்தையில் வேலை செய்வது பெரிய கௌரவமாக கருதப்பட்டது. அங்கு எங்கள் அண்ணா போன பிறகு “அண்ணா தனியாகத் தானே இருக்கின்றார். நீ அவருடன் போய் இரு” என்று அம்மா கூற நான் அண்ணாவுக்கு துணையாகவும் அவருக்கு சமையல் செய்வதற்குமாக தெளிவத்தைக்கு வந்து சோ்ந்தேன். தெளிவத்தை என்னுடைய பெயரில் இடம்பிடித்தது இப்படித்தான்.


எழுத்து என்பது எங்களுடைய வாழ்விலிருந்தே வருகின்றது. எங்களுடைய வாழ்வு, எங்களுடைய மண், இன்னொன்று எழுத்தாளனுடைய கவனம்.. இவைதானே தீர்மானிக்கின்றன. என்னைச் சுற்றியிருக்கும் நான்கு அல்லது ஐந்து போ் கதைத்துக்கொண்டிருந்தாலும் யார் யார் என்னென்ன கதைக்கின்றார்கள் என்பதை எனது காதுகள் உள்வாங்கிக்கொண்டிருக்கும். அந்த அவதானிப்பு எனது சிறுவயதிலிருந்தே இருந்திருக்கின்றது என்று இப்பொழுது யோசிக்கின்றேன். 


நான் ஊவாகட்டவளையில் இருந்தபோது எமது தந்தை வெறும் தோட்டத்து ஆசிரியா். தோட்டத்து ஆசிரியா் என்றால் தோட்டத்தில் ஒன்றுமே இல்லாதவர் என்று அர்த்தம். மேல்நிலைத் தோட்டத்து உத்தியோகத்தர்களுடனும் இணைக்கப்படாமல் அடிநிலை தொழிலாளர்களுடனும் சேர்க்கப்படாது ஒரு ரெண்டும் கெட்டான் நிலை அவர்களுடையது. எங்கள் ஆஞாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு பதுளையில் ஆசிரியா் சங்க கூட்டம் இருக்கின்றது நான் வெளியே போய் வருகின்றேன் என்று கிளம்பிவிடுவார். போய் திரும்பி வரும்போது வீரகேசரி, பேசும்படம் என்று ஏதாவது புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அந்தப் புத்தகங்களை எல்லாம் நான் விடாமல் வாசித்திருக்கிறேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை வாசிப்பேன். என்னுடைய அம்மா பொறுமையிழந்து “அடேய் சாப்பிடவா என்ன புத்தகத்துடனேயே அமா்ந்திருக்கின்றாய்” என்று ஏசுவார்.



இப்போதும் நான் என்னுடைய எழுத்தை எனது வாசிப்பின் பலமாகத் தான் கருதுகின்றேன். அக்காலத்தில்தான் ‘பால்கார பையன்’ என்கிற முதல் கதையையும் எழுதி கல்கண்டுவுக்கும் அனுப்பினேன். அது வெளிவரவில்லை.


தெளிவத்தைக்கு வந்தபின்னர் என்னுடைய அண்ணாவுக்கு காலையில் தேநீர் கொடுத்து அனுப்பிவிட்டு மதிய சாப்பாட்டை அவருடைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதற்குப்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதுகள் இருண்டு கிடக்கும். “சோம்பல் உற்றிருக்கும் ஒரு மனிதனின் மனம் என்பது சாத்தானின் வசிப்பிடம்” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கின்றது. என்னுடைய இந்த வாசிப்பும் எழுத வேண்டும் என்ற ஆா்வமும் என்னுடைய மனதை சோம்பல் நிலையிலிருந்து மீட்டு எடுத்திருக்கிறது. வாசிப்பு என்பது எனக்கு கிடைத்த வரம். சோம்பேறியாக இருக்காமல் வாசிப்பிலும் எழுதுவதிலும் எனது பொழுதுகளைப் பயனுள்ளதாக்கிக் கொண்டேன்.



மலையத்திலே அந்த மக்களுடன் மக்களாக நான் வாழ்ந்திருக்கின்றேன் அவற்றையெல்லாம்தான் எழுதியுமிருக்கிறேன். எங்களுடைய ஆஞா ரொம்ப கண்டிப்பானவா். என்னையெல்லாம் பிரம்பெடுத்து அடிக்க தொடங்கினார் என்றால் அப்படி அடி விழும். தடுக்க வரும் அம்மாவும் அடி வாக்கியிருக்கின்றார். அவா் தண்டனை எப்படி கொடுப்பார் என்றால் லயத்துக்கு வெளியில் எங்களை முழங்காலில் அமா்ந்திருக்க வைத்துவிட்டு கையில் அம்மி குளவியை கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போய் விடுவார். குத்தும் மண்ணில் வெறும் முழங்காலுடன் கையில் குளவியை வைத்திக்கொண்டு  அமர்ந்திருப்போம்.       


அதே நேரத்தில் அவர் மிகவும் அன்பானவர். அப்படி கண்டித்து வளர்த்ததால்தான், இன்றைய எனது தள்ளா த வயதிலும் நான் ஒரு  சாய்வு நாற்காலியில் படுத்திருக்காமல் அமர்ந்திருந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன் அதற்கான தைரியத்தை அப்பாவின் வளா்ப்பு எனக்கு கொடுத்திருக்கின்றது. என்னை ஒரு எழுத்தாளனாக இயக்கியதும் என்னுடைய ஆஞா தான் என்று நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கின்றேன். ‘சுந்தர ராமசாமியின்’ புளியமரத்தின் கதை நாவல் வாசித்தபோதும், ‘ஜெயமோகனின்’ டார்த்தீனியம் குறுநாவல் வாசித்தபோதும் என்னுடைய ஆஞாவை அப்படைப்புகளில் கண்டிருக்கின்றேன்.


ஒரு கலைஞனை அல்லது ஒரு இலக்கியவாதியை உருவாக்குவதற்கான வித்தையை அறிந்திருக்கின்றார் என்னுடைய ஆஞா அறிந்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் உபதேசம் செய்வதில்லை. ஒரு மனிதன் இப்படித் தான் வாழ வேண்டும் என அவருடைய வாழ்க்கையினூடாக எனக்கு வாழ்ந்து காட்டியவர்.




தெளிவத்தையில் ஒரு ஆசிரியா் வேலை நிரப்பபட வேண்டி இருந்தது. 1956இல் பண்டாரநாயக்கா ஆட்சிக்குப் பிறகு இலங்கையில் இருக்கும் Temporary Permit ஆட்களை அனுப்பி விட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள் அல்லவா.. இலங்கையில் இருப்பவா்களுக்கே உத்தியோகம் இல்லாதபோது ஏன் அவா்களை இங்கு கொண்டு வந்து தற்காலிக பிரஜைகளாக வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர்களை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். தெளிவத்தையில் இருந்த ஒரு பாடசாலை ஆசிரியருக்கும்  அரசாங்கத்திடமிருந்து நோட்டிஸ்  அனுப்பப்பட்டுவிட்டது. Send him immediately என்று. அவரை அனுப்பியாச்சு. திடீரென ஒரு ஆசிரியரை அனுப்பிவிட்டதால் அந்த பாடசாலைக்கு ஆசிரியா் வேலைக்கு என்ன செய்வதென்று தெரியாமல்  துரை இப்போது தடுமாறுகின்றார்.


அதற்கிடையில் என்னுடைய அண்ணனுடைய நண்பர்கள் எல்லோரும் எனக்கும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.  இப்படி ஒரு வேலை நிரப்பப்படாமல் இருப்பதால் அவா்கள் “ஜோ உங்களிடம் SSC சான்றிதழ் இருக்கின்றதா” என்று கேட்டார்கள். அதைக் கொண்டு வரச்சொல்லி அந்தத் தோட்டத்திலே அந்த ஆசிரியர் வேலைக்கு என்னை சேர்த்துவிட்டார்கள். எங்கள் ஆஞா பார்த்த அதே வேலை.


தெளிவத்தையிலிருந்துதான் நான் கதை எழுதத் தொடங்கினேன்





தெளிவத்தையில் ஆசிரியர் வேலை கிடைத்த பிறகு எனக்கு மாதத்துக்கு நிரந்தரமான சம்பளம் வருமல்லவா.. ஏதோ ஒரு சம்பளம் வரும். நான் உடனடியாக பதுளைக்குப் போய் மீனாம்பிகா, கே அன்ட் கே போன்ற புத்தகக் கடைகளில் பத்திரிகைகளுக்கு ஓடர் கொடுத்தேன். ஆனந்தவிகடன் அனுப்புங்கள், குமுதம் அனுப்புங்கள், கலைமகள்  அனுப்புங்கள் என்று புதிதாக வந்த இதழ்கள் எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தன. இப்படி இந்த இதழ்களை வாசித்து வாசித்து எனக்கு எழுதுவதற்கான உந்துதல் வந்தது. ஆனாலும் ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் கதை படித்துக் கதை எழுத வந்தவர்கள் என்னும் கைலாசபதியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையானவை எனது படைப்புக்கள்.



அப்போது தான் வீரகேசரி மலையகப்பகுதி எழுத்தாளர்களுக்காக தோட்ட மஞ்சரி எனும் ஒரு பகுதியைத் தொடங்கியிருந்தது. அதில் மலையகம் சம்பந்தமான எது வேண்டுமானால் எழுதலாம். ஆனால் சிறுகதைகள் எழுத முடியாது. ஏனென்றால் ஒரு பக்கமோ ஒன்றரை பக்கமோ தான் வீரகேசரி அந்த தோட்ட மஞ்சரிக்கு கொடுத்திருந்தது. அப்படி இருந்தும் நான் சின்னதாக ஒரு கதை எழுதியிருந்தேன். ‘படிப்பு’ என்ற பெயரில். அது தான் என்னுடைய முதல் படைப்பு என்று சொல்வேன். தோட்டத்திலுள்ள மக்களின் கல்வியறிவு எந்தளவில் இருக்கின்றது என்பதைப்பற்றிய கதை. ‘படிப்பு’ என்று போடாமல் ‘படிப்பூ’ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன்.


நான் எழுதிய முதல் கதையே மலையகத்தின் கல்வி சம்பந்தமான கதையாக அமைந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சிதான்.


அறுபதுகளின் ஆரம்பத்தில், வீரகேசரி மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி நடாத்தியது. அந்தப் போட்டிக்கு நான் ஆறு கதைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் ஒன்றுதான் முதல் பரிசு பெற்ற எனது “பாட்டி சொன்ன கதை” வீரகேசரி போன்றதொரு முக்கியமான பத்திரிகையில் முதல் பரிசு பெற்றிருந்தால் எனக்கு ஒரு கவனம் கிடைத்தது. 


“பாட்டி சொன்ன கதை” 1963இல் பிரசுரமாகியிருந்தது. என்றாலும் இன்று வரையும் பேசப்படும் கதையாக அமைந்துவிட்டது. இந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர் இதழ்களில் பலமுறை மீள் பிரசுரம் பெற்ற கதை அது.



இளம் வயதில் கெட்டுப்போன தனது மகளின் கதையை அவளுடைய மகளான பேத்திக்கு பாட்டி சொல்கின்றாள். தன்னுடைய கதையைத்தான் பாட்டி சொல்கின்றாள் என்பது அவளுக்கு தெரியவரும் போதுதான் அவளுக்கு விழிப்புணர்வு வருகின்றது. பாட்டி சொன்ன மாதிரி, என்னுடைய அம்மா கெட்ட மாதிரி நானும் கெட்டிருப்பேனா என்று விழிப்புணா்வு பெறுகின்றாள். இதுவே பாட்டி சொன்ன கதையின் கரு.


இதை “சின்னப் பிள்ளைகளுக்கு சொல்லும் கதையா இது” என்றெல்லாம் கேட்டார்கள். ‘வேண்டாத பொண்டாட்டி  கை பட்டால் குற்றம் என்பது’ போல் ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, சின்னப்பிள்ளைகளுக்கு சொல்லும் கதையா இது என்று கேட்டார்கள். அதற்கு நான் பதிலும் சொல்லியிருக்கின்றேன். கதையைப் பற்றி பேசுபவர்களுக்கே இவ்வளவு தெரியும் என்றால் கதையை எழுதவந்த எனக்கு எவ்வளவு தெரியும். பேத்தியைப்பற்றிய கதை வரும் போது சிறுசுகள் எல்லாம் நித்திரையாகிவிட்டன என்றும் பேத்தி மாத்திரமே விழித்திருந்தாள்



என்றும் எழுதியுள்ளேன். அதையும் வாசித்துப் பாருங்கள் என்று அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். இப்போது 50 அல்லது 60 வருடங்களுக்கு பிறகு கூட அந்தக் கதையைப் பற்றி பேசுகின்றார்கள், எழுதுகிறார்கள் என்றால் அது என்னுடைய எழுத்தின் வலிமை.






மலையகத்தை, குறிப்பாக தொழிலாளர்களை வழி நடத்துபவா்களாகமலையகத்துத்  தலைவர்கள் சிலர் இருக்கின்றார்கள்தானே. தொழிற்சங்க தலைவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.


 நான் போகத் தேவையில்லை. என்னுடைய செருப்பை அங்கே வைத்தால் அதற்கும் ஓட்டுப் போட்டுவிட்டு போவர்கள் என்று பேசுகின்ற தலைமைகள் எங்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். 


இவர்கள் என்றைக்குமே இந்த மக்களுக்கு இது உங்கள் நாடு என்று உணரச்செய்யவில்லை. நீங்கள் இங்கே வந்து உழைத்து காடாக இருந்த இந்த நாட்டை உயிர்ப்பலி கொடுத்து பல தியாகங்கள் செய்து செழிப்பாக உருவாக்கியிருக்கின்றீர்கள், இது தான் உங்கள் நாடு என்று சொல்லிவைக்கவில்லை.


நான் கதைகளில் அதை உணர்த்தியிருக்கிறேன். என்னுடைய கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மண்ணின் ஜீவன்களாக இருப்பார்களே தவிர இந்த மண் உங்கள் மண் என்று சொல்லும் உபதேசிகளாக இருக்க மாட்டார்கள். அந்த மையக்கருவைக் கண்டுபிடிக்க வேண்டும். தெளிவத்தை என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.


1963ல் மலைமுரசு என்ற கண்டியிலிருந்து வெளிவந்த பத்திரிகையில் நான் ஒரு கதை எழுதியிருக்கின்றேன். அந்த கதையின் தலைப்பு ‘நாம் இருக்கும் நாடு’ நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிவோம். இது நமக்கே உரிமையாம் என்பது அறிவோம். அக்கதையில் ஒரு வயதானவர் தள்ளாத வயதில் மரக்கறி சந்தைக்குப் போய் கோவா இலை மற்றும் ஏனைய இலைகளை பொறுக்கி சுமக்க முடியாமல் சுமந்து பன்றி வளர்க்கும் ஒரு முதலாளியிடம் கொடுத்து விட்டு அவர் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படித்தான் நான் அந்தக் கதையை தொடங்கிறேன்.


அன்றொருநாள் இவன் இளைஞனாக இருந்தவேளை நண்பன் ஒருவன் கூறுவான். ‘இந்த இடத்தில் ஒரு நிலம் இருக்கு. வாங்கிப்போடு. தங்கத்தை விதைத்தா தங்கமாக விளையும் இது. கொட்டைப் பாக்கை வைத்து தட்டுவதற்கு ஒரு பொட்டுக் கல் கூட இல்லாத மண் இது. வாங்கிப் போடுப்பா இலகுவாக இருக்கும்.’ என்று. அதற்கு இவன் என்ன பதில் சொல்கின்றான் என்று பாருங்கள். ‘இந்த சிங்களவன் நாட்டில் நான் நிலம் வாங்குவனா. நான் இந்தியாவில் கடல் போன்ற அந்தப் பூமியில் நிலம் வாங்கக் காசு அனுப்பிக்கொண்டிருக்கின்றேன்’ என்கிறான். இவன் அனுப்பின காசு அங்கே போய் சோ்ந்ததா, அவன் நிலம் வாங்கினானா.. என்றால் இல்லை. இப்போது ஒன்றும் இல்லாமல் இறக்கின்ற காலத்தில் இலை பொறுக்கி முதலாளியிடம் கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றான். நாம் இருக்கின்ற நாடு


நம்முடையது என்ற உணர்வு அவனுக்கு இருந்திருந்தால் அப்பவே அந்த நிலத்தை வாங்கியிருப்பான்தானே. அதில் ஒரு குடிசை கட்டியிருப்பான்தானே. அதெல்லாம் என்னுடைய கதைகள் எழுப்புகின்ற நுண்ணிய கேள்விகள் சிந்தனைகள்.  ஆனால் அதை ஒருவரும் பார்க்கமாட்டார்கள். தெளிவத்தை என்ன சொல்கின்றார். இந்தியாவுக்கு காசு அனுப்பி ஒருவன் வீணாகப் போய் விட்டான் என்று சொல்கின்றாரா என்று கேட்பார்கள். ஒரு மரம் இருக்கின்றது. பல பேருக்கு அது மரம் என்று தெரியும். சில பேருக்கு அந்த மரத்திலேயும் அந்த இலைகளுக்கு நடுவில் ஒளிந்து இருக்கும் காய்கள் தெரியும். இன்னும் சில பேருக்கு அந்த காய்கள் பழுத்திருப்பது தெரியும். இன்னும் சில கெட்டிக்காரர்களுக்கு அந்த பழத்துக்குள் விதை இருப்பது தெரியும். ஆனால் அந்த விதைக்குள் இன்னொரு மரம் இருக்கின்றது என்பது யாருக்கு தெரிகிறதோ அவன் தான் உண்மையான விமர்சகனாக இருக்கமுடியும்.,



‘கத்தியின்றி இரத்தமின்றி’ சிறுகதையில் மலையாக தமிழர்கள் காந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் புகைப்படத்தை வீட்டில் வைத்திருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த தலைவர்களின் புகைப்படத்தை வைக்க மறுக்கிறார்கள்


கதையின்படி அந்தத் தோட்டத்தில் ஒரு டொக்டர் இருக்கின்றார். அந்த வைத்தியர் இங்கே இருக்கும் இந்தியத் தமிழர்கள் எல்லோரையும் விரட்டிவிட வேண்டும் என்று நினைக்கின்றார். துட்டகைமுனு சொன்னது சரிதான். இவர்கள் எல்லோரும் போனால்தான் எங்களுக்கு கால் நீட்டி படுக்க இடம் கிடைக்கும் என்கின்ற பேரினவாதி. அவரின் செயல்களும் பேச்சுக்களும் அவ்வாறே இருக்கும். அவர் ஒரு பாய்த் தொப்பியை தலையில் அணிந்தவாறு தடியை வீசிக்கொண்டு நடந்து போகையில் தோட்டத்தில் உள்ள நாய்கள் அவரை விரட்டிக்கொண்டு செல்லும். அப்போது அவர் தோட்டக்காட்டு நாய் என்னை விரட்டுகின்றாயா என்று சொல்லிவிட்டுத்தான் போவார். நாயைக்கூட தோட்டக்காட்டு நாய் என்று நினைக்கும்போது அங்குள்ள மனிதர்களையும் தோட்டக்காட்டான்கள்  என்று தான் நினைப்பார். அவர் போய்க்கொண்டு இருக்கும்போது தோட்டத்துக்கு தலைவர் என்று ஒருவர் இருப்பார்தானே. அவரைப் பார்த்துக் கேட்கிறார். “என்ன தலைவர் இன்றைக்கு லீவா..  வேலைக்கு போகவில்லையா?” என்றவர், காந்தியின் படத்தைக்காட்டி “என்ன தலைவர்.. மாலையெல்லாம் போடுகின்றீர்கள். யார் இவர்?” என்று கேட்கின்றார். அப்போது தலைவர் “இவரைத் தெரியவில்லையா உங்களுக்கு? ஒருவன் தனது நாட்டை நேசிக்கின்றான் என்றால் மற்றவர்களுடைய நாட்டை  வெறுக்கின்றான் என்று அர்த்தமில்லை என்று சொன்ன மகாத்மா காந்தி இவர். இவரைத் தெரியாதா உங்களுக்கு?” என்று சொல்கிறார்.




இவரைத் தெரியும் தெரியும். நீங்கள் காந்திக்கும், நேருவுக்கும், சுபாஸ் சந்திரபோசுக்கும்தான் மாலை போடுவீர்கள் என்கிறார்.


இந்த நாட்டிலிருந்து  எங்களை அடித்து விரட்டுவோம் என்று சொல்கின்ற பண்டாரநாயக்காவுக்கும் சேனநாயக்காவுக்கும் நாங்கள் மாலை போடவேண்டுமா? அந்த உணர்வு எப்படி எங்களுக்கு வரும் என்பதுதான் கத்தியின்றி இரத்தமின்றி கதை. அதே நேரத்தில் எவ்வளவு தான் கத்தியின்றி இரத்தமின்றி என்று அகிம்சை பேசினாலும் தோட்டத்து மக்களுக்கு விரோதமாக செயற்படும் கணக்காளரையோ அல்லது பெரிய கண்காணியையோ தலைவர் வெட்டுகின்றார். அந்தக் கத்தியில் வழியும் இரத்தம் கூட அவனை ஒரு மாதிரி பார்க்கின்றது. இதுதான் கதை.


சோதனை கதையில் ஒரு யாழ்ப்பாணத்து ஆசிரியர் தோட்டத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி்க்கொடுக்கின்றார். அவருடைய குறிக்கோள் என்னவென்றால் இப்போது 50 ஆக இருக்கும் இந்த பிள்ளைகளை 100 ஆக்கிக் கொண்டால்  100 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் போதாது இன்னொரு உதவியாளரை போடுங்கள் என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வீட்டில் சும்மா இருக்கும் தனது மனைவியையும் கூப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கின்றார். அதன் நோக்கம் மனைவியையும் கூட்டிக்கொண்டு வந்து பதவியில் அமர்த்துவதே தவிர கூடுதலான பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்பதல்ல. ஒரு சமுதாயத்தின் கல்விக் கண்களை சின்ன வயதிலேயே குத்திவிடும் ஒரு பெருங் கைங்கரியத்தை இவர்கள் செய்கின்றார்கள் என்பதை அக்கதையின் ஊடகச் சொன்னேன். இதைத் தான் கைலாசபதி தூக்கிப் பிடித்துக் கொண்டார். யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு வில்லன் என்றார்.

 ‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்’ என்று ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரையை சிவத்தம்பி எழுதினார் . அதில் மலையக மக்கள் இந்த யாழ்ப்பாணத்தானைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதற்கு தெளிவத்தை ஜோசப்பின் இந்த வரிகளை நான் உங்களுக்கு சமர்ப்பணிக்கிறேன் என்று கதையில் வருகின்ற சில வரிகளையும்  குறிப்பிட்டிருக்கின்றார்.


ஆரம்பத்தில் மு.நித்தியானந்தன், கைலாசபதி ஆகியோர் கதைகளை



 நிராகரித்தது மட்டுமல்ல.. இவர் ஏன் எழுதுகிறார் என்று கேட்டார்கள் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் லெனின் மதிவாணன், இன்னுமொரு புதிய எழுத்தாளர், அவருடைய பெயர் எனக்கு நினைவில்லை. அவர்கள் ‘தெளிவத்தை ஜோசப்பும் கைலாசபதியும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார்கள். அதில் ‘தெளிவத்தை ஜோசப், கைலாசபதி தன்னுடைய கதைகளைப் பற்றி பேசவில்லை என்று சொல்கின்றார். அதை ஒதுக்கி வைப்பதற்கான காரணம் இவருடைய கதைகளில் பாலியல் இருந்தது தான்” என்று குறிப்பிடுகிறார்கள். என்னுடைய படைப்புக்களை எவர் ஆராய்ந்து இருக்கின்றார்கள். எந்தக் கதையில் பாலியல் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் என்ன எஸ்.பொ வா..? இல்லையே. இவர்கள் அப்படி அர்த்தம் கற்பிக்க முயன்றவர்கள். முயல்பவர்கள்.


பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜெயசீலன் ஜீவநதியில் எழுதிய கட்டுரையில் “தெளிவத்தை ஜோசப் ஒரு முற்போக்கான எழுத்தாளர். ஆனால் இந்த மாக்ஸிச கோட்பாடுகளை தன்னுடைய பாத்திரங்கள் மூலமாக வெளிக்கொண்டுவரும் தன்மை அவரிடம் இல்லாததால்தான் இவர்கள் அவரை கவனத்தில் எடுக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார். அதுதான் உண்மை. அதனால்தான் ஏசினார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் மரியாதையாக இருக்க விரும்புகிறவன். எழுத வந்த இடத்தில் ஏன் இவர்களிடம் ஏச்சு வாங்க வேண்டும் என்ற காரணத்தாலேயே ஒரு பத்து வருடங்கள் பேனாவை கீழே வைத்துவிட்டேன்.



மு.நித்தியானந்தன் பின்னர் நாமிருக்கும் நாடே என்றஎனது முதலாவது சிறுகதை தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டார் 




எழுபதுகளின் பிற்கூறுகளில் அது நிகழ்ந்தது. அதை ஒரு மனந்திருந்தலாகவே நான் கருதினேன். மார்க்சிய முற்போக்கு அணியினரின் பிரச்சாரகராகவும் குறிப்பாக பேராசிரியர் கைலாசபதியின் வலதுகரமாகவும் திகழ்ந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் என்னைத் தேடி கொழும்பில் நான் உத்தியோகம் பார்த்த அலுவலகம் வந்தார். வைகறை என்ற பதிப்பகத்தை நண்பர்கள் சிலருடன் இணைந்து தொடங்கி இருப்பதாகவும் முதல் நூலாக என்னுடைய சிறுகதைத் தொகுதியைப் போடவே விரும்புவதாகவும் என்னுடைய ஒப்புதல் கேட்கவே வந்ததாகவும் கூறினார். 1979 டிசம்பரில் ‘நாமிருக்கும் நாடே‘ வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட முதல் மலையகத் தொகுதி என்னும் பெருமையுடன் யாழ் ரிம்மர் மண்டபத்தில் அதே 1979 டிசம்பரில் வெளியீட்டு விழாவும் நடந்தது.


எழுதத் தொடங்கி ஒரு கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த எனது முதல் நூல் அது. எனக்கு, மலையகத்துக்கு ஓர் அரச சாகித்திய விருதிகைப் பெற்றுக்கொடுத்த முதல் நூல் அது. 60களில் கதைகள் எழுதப்போய் நான் சுமந்த அத்தனை சிலுவைகளையும் அதற்குக் கூடுதலான சிலுவைகளையும் என்னுடைய நூலை வெளியிடப்போய் 80களில் சுமந்தவர் நித்தியானந்தன்.




முற்போக்குப் பெரியவர்களால் அடக்கி ஒடுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்ட என்னை, ‘தெளிவத்தைக்கு ஈடாக எழுதக்கூடியவர்களாக இலங்கையில் இரண்டு மூன்று பெயர்களையே குறிப்பிட முடியும்’ என்ற முன்னுரையுடன் அலங்காரமாகத் தூக்கி நிறுத்தியவர் நித்தி.


கண்டன விமர்சனங்களுக்கான எதிர் விமர்சனப் பதில்களின் மூலம் அவர்களை வாய் மூடச்செய்தவர் அவர். விமர்சனங்களுக்குப் பயப்படாமல் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பலத்தை இந்த நூல் வெளியீட்டின் மூலம் எனக்குத் தந்தவர் அவர். 83களுக்குப் பின்னான நாட்களில் அவர் இலங்கையிலிருந்தே காணாமலாக்கப்பட்டதற்கான வேர்கள் இதிலிருந்தும் வளர்ந்தவைகள்தான்.  




தொழிற்சங்கத்துடன் அல்லது கட்சிகளுடன்  இணைந்து செயற்படாதது.. அல்லது அவற்றை எழுத்துக்களில் விமர்சித்தது.. இவைதான்  நான்  நிராகரிக்கப்பட்டதற்கான காரணமா..?





அப்படியும் இருக்கலாம். ஆனால் முக்கியமான காரணம் அவர்களுடைய முற்போக்கு அணியில் நான் ஓடிப்போய் இணைந்துகொள்ளாததுதான். அமைப்பு ரீதியான இயக்கங்களை தெளிவத்தை கிண்டல் செய்வார் என்று கைலாசபதி சொல்லியிருக்கின்றார். பிறகு எழுத வந்த எழுத்தாளர்களுக்கு ஆதர்சனமான எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்று சொல்லிவிட்டு ஆனால் மக்களுடைய போராட்டங்கள் அவருடைய கதைகளில் இருக்காது என்றும்  சொல்கின்றார்.


இதுவரை யாழ்ப்பாணம் வராத தெளிவத்தை எப்படி யாழ்ப்பாணத்து ஆசிரியரைப் பற்றியும் யாழ்ப்பாணத்து பெண்ணைப் பற்றியும் எழுதுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


மலையக தோட்டங்களுக்கு வந்த யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் நான் எழுதினேன். இவர்கள் என்னை யாழ்ப்பாணத்து விரோதியாகக் காட்ட, முத்திரை குத்த முயன்றார்கள்.

இரண்டு கதாபாத்திரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு என்னை யாழ்பபாணத்துக்கு எதிரானவனாகச் சொன்னால் அந்தக் கூற்றில் ஏதோ சூதுள்ளது என்று சொல்லியிருக்கின்றேன். காரணம் அதுவல்ல. வேறு ஏதோ இருக்கின்றது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இவனை அடக்கி வைக்க வேண்டும் என்பதே குறி.


நான் தொழிற்சங்கங்களில் இயங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. முற்போக்கு அணியில் இருந்திருக்க வேண்டும். அப்போது இப்படி விமர்சித்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை எந்த அணியிலும் இருந்து கொண்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் என்னைச் சட்டம் போட்டு மாட்டுவதை நான் விரும்பவில்லை.


இப்படியான காரணங்களால் இவர்களிடம் கூடுதலாக ஏச்சு வாங்கிய ஒருவன் நான். அதை  வசைபாடல் என்றுதான் சொல்லுவேன்.  ‘லில்லி’ என்று  ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு மாட்டைப் பற்றிய கதை. ‘அது’ என்று ஒரு கதை எழுதியிருந்தேன். ஒரு குரங்கைப் பற்றிய கதை. சுந்தர ராமசாமியின் கிடாரிக்கு ஈடானது என்று பேசப்பட்டது. இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை அந்த ‘அது’. கலைமகளில் வந்தது. இங்கே மனிதர்கள் சாகின்றார்கள், இவர் மாட்டைப் பற்றியும் குரங்கைப்பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார் என்று விமர்சனம் வைத்தார்கள்.






ஒரு விமர்சகன் எழுத்தாளனை நெறிப்படுத்தவேண்டும். வேறு வேறு காரணங்களுக்காக அவனை வசைபாடி வசைபாடி அவனை முடக்கிவிடக் கூடாது. எழுதவரும் அனைவருமே சமூகத்திற்குத் தேவையானவர்கள் என்றார் மு.தளையசிங்கம். அவரும் இவர்களால் மறுக்கப்பட்டவரே.



இன்று திரும்பிப் பார்க்கும்போது ஒரு தாசாப்தம் எழுதாமல் விட்டுவிட்டேன்




எழுதாத அந்தக் காலத்தில் நான் கூடுதலான ஒரு வாசகனாக இருந்தேன். அப்போது தெரிவு செய்து வாசிக்கப்பழகிக்கொண்டேன். நாடகங்கள் பார்த்தேன்.


பாலேந்திராவின் நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள் அதன் பின் எழுதியவைதான். அதற்கு முந்தைய காலத்தில் சிறுகதை எழுதாதவர்கள் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறுகிய சிந்தனையுடன் நான் இருந்திருக்கின்றேன். மு. நித்தியானந்தன் “நாமிருக்கும் நாடே” தொகுதியைப் பதிப்பித்து வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தியபின் இந்த விமர்சகர்களுக்கு பதில் சொல்கின்ற ஒரு தைரியம் எனக்கு வந்தது.  புதுமைப்பித்தன் சொன்னார் “உங்களுடைய விமர்சனங்களால் உங்களை நீங்கள் அளந்து கொள்கிறீர்கள்” என்று. அவர்கள் நீதிபதிகளும் இல்லை. நான் குற்றவாளியும் இல்லை என்னும் சிந்தனையெல்லாம் எனக்குள் அந்த 10 வருட இடைவெளியில் ஏற்பட்டவைதான்.



நான் இந்த விமர்சனங்களால் அடிபட்டதால்தான் என்னால் இன்றும் நிலைத்து நிற்க முடிகின்றது. என்னுடைய எழுத்தின் ஆளுமையால் தான் இவர்களுக்கு அடங்கிப் போக முடியவில்லை என்பது எனது நம்பிக்கை. “எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆளத்தெரிந்தவனாக இருக்க வேண்டும்” இப்போதைய நம் தலைமுறையினர் எந்த ஒரு எழுத்தாளருடைய தனிப்படைப்பை பற்றியும் பேசுவது இல்லை. விமர்சன ரீதியாக ஆராய்வதில்லை



ஈழத்தில் ஒரு காத்திரமான விமர்சனமுறை இல்லை. ஒரு எழுத்தாளன் நெறி கொள்ளும் அளவுக்கு யாரும் விமர்சனம் செய்வதில்லை. நூல் அறிமுகங்களே கூடுதலாகவும் கூடுமானவர்களாலும் செய்யப்படுகின்றன. படைப்பாளிகளை விடவும் விமர்சகர்களே கூடுதல் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது இலங்கை. இந்தியாவில் தமிழ் இலக்கியம் என்றதும் மனதில் எழும் பெயர்கள் புதுமைப்பித்தன், கு.பே.ரா, மௌனி என்று தொடங்கும். ஆனால் இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பிதான். இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்மந்தன் என்றோ டானியல், கணேசலிங்கன், அரசரத்தினம் என்றோ வருவதில்லை.


படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது முன்னோடி விமர்சகர்கள் முன்வரவில்லை. தங்களுக்கான உச்ச இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார்களே தவிர ஒரு விமர்சனப் பரம்பரையை உருவாக்க முயலவில்லை என்பதே உண்மை. ஆனால் படைப்பாளிகள் முன்பைவிடவும் தீவிரமாக உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 




எழுத ஆரம்பித்த போது நானாகத்தான் எழுதினேன். “தானே பாதையும் வெட்டி பயணமும் செய்த தெளிவத்தை சாதனையாளரே” என்று மு.நித்தியானந்தன் சொல்லியிருக்கின்றார். நாங்களெல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களாக இலக்கியம் படித்தவர்களாக எழுந்துவந்த பிறகு எங்களுடைய முன்னோடிகளைப் பேண வேண்டும் என்று  நடேச ஐயர், மீனாட்சி அம்மாள், கே.கணேஷ், சி.வி.வேலுப்பிள்ளை, கிருஷ்ணசாமி போன்றவர்களைத் தேடித் தேடி எடுத்தோம். மலையக இலக்கியம் 1960 க்கு பின்னர்தான் எழுச்சி பெற்றது என்றாலும், அதற்கான பாதை 1930 களிளேயே போடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாதையிலேதான் இந்த எழுச்சி நடந்தது என்கிற மயக்கம் யாருக்கும் தேவையில்லை என்று இன்றைக்கும் நான் சொல்வேன்.



 நான் அசோக மித்திரன் கதைகளை அப்போது வாசித்தது கிடையாது. பின்னர் ஓரளவு வாசித்த பின்பும் அசோகமித்திரன் நல்ல ஒரு எழுத்தாளன் என்ற நினைப்பில் மாற்றமில்லை. He is a great writer. ஆனால் நான் இரசித்து படித்தவர் என்று சொன்னால் அது இந்திரா பார்த்தசாரதிதான். அவருடைய  தந்திரபூமி, அதனுடைய எழுத்து நடை அதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இந்திரா பார்த்தசாரதியினுடைய நாவல் “தந்திரபூமி” தீபத்தில் தொடராக வந்த  என்.எஸ்.எம்.ராமையா என்னிடம் கேட்டார் “ஜோ தந்திரபூமி வாசிக்கின்றீர்களா?” என்று. அதற்கு நான் “பார்த்தசாரதிகளை எல்லாம் நான் வாசிப்பதில்லை” என்று சொன்னேன். இந்திரா பார்த்தசாரதி என்றால் நா.பார்த்தசாரதி தான் ‘இந்திரா’ என்று முன்னால் போட்டுக்கொண்டு எழுதுகின்றார் என்று அப்போது நினைத்திருந்தேன்.





பார்த்தசாரதி நல்ல பத்திரிகையாளர், ஒரு இலக்கிய செயற்பாட்டாளர் என்று ஒத்துக்கொண்டாலும் அவர் ஒரு படைப்பாளி என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.  அவர் அகிலனின் பாணிதான். அகிலன் கல்கி, உண்டாக்கிய பரம்பரை. அப்போது என் எஸ் எம் சொன்னார் “சீச்சீ பார்த்தசாரதி இல்லை. இந்திரா பார்த்தசாரதி. வாசிக்க வேண்டியவர். நீங்க கட்டாயம் வாசியுங்கள்” என்று. அந்த மாதிரி எழுத்தாளர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் அப்படி நிறைய செய்திருக்கின்றேன். நான் வழிகாட்டுகின்றேன் என்று சொல்லாமலேயே மற்றைய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்திருக்கின்றேன். அதன் பிறகு ஆரம்பத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கினால் எனக்கு இந்திரா பார்த்தசாரதி மீது ஒரு லயிப்பு வந்தது.


நான் ஆரம்பத்தில் கதை எழுதும் போது கொஞ்சம் கூடுதலாக வாசித்த எழுத்தாளர் என்றால் ஜெயகாந்தனை சொல்லலாம். உங்கள் எழுத்தில் நான் ஜெயகாந்தனை காண்கின்றேன் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள் . ‘அழகு தெரிந்தது’ என்றொரு கதை எழுதியிருந்தேன். அந்தக் கதை வந்த அடுத்த வாரம் எனக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம் எழுதியது செந்தூரன். அக்கடிதத்தில் “கதையை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து கடைசி பந்தி வரும் வரை உங்களை அறைய வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அந்தக் கடைசி பந்தி இருக்கின்றதே! இன்றைக்கும் அந்தக் கதையை வாசித்தால் அந்தக் கடைசி பந்தியை வாசிக்கும் போது எனக்குகுரல் அடைக்கும்.  அந்தக் கடைசி பந்தியை வாசிக்கும் போது எங்களிடமும் ஒரு ஜெயகாந்தன் இருக்கின்றான் என்கிற எண்ணம் எனக்கு வந்தது” என்று எழுதியிருந்தார். மற்றைய கடிதம் சாரல்நாடான் எழுதியது. “ஜோ உங்களுடைய அழகு தெரிந்தது கதையை வாசித்தேன். கதையின் முழு சாராம்சத்தையும் கடைசி வரியில் அல்லது கடைசி பந்தியில் வைப்பது “ஓ.ஹென்றியின்” பாணி என்று அவர் எழுதினார். நான் ஓ.ஹென்றி எல்லாம் நான் வாசித்தது கிடையாது.



 நான் என்னுடைய படைப்பின் உரையாடல்களுக்காக சொற்களைத் தேடுவதில்லை. என்னுடைய பாத்திரம் எதுவோ அது எப்படிப் கதைத்திருக்கும் என்பது மட்டும்தான் என்னுடைய கவனம்.



கைலாசபதி கூட ஓரிடத்தில் சொல்லியிருக்கின்றார் தெளிவத்தையின் கதையில் வரும் பாத்திரங்கள் அந்தக் காட்சியின் ஊடாக மேல் எழும்புகின்றன. மலையகம் என்பதை தனியாக வர்ணிக்காமல் அந்தப் பாத்திரத்தின் ஊடாக வர்ணிப்பவர் தெளிவத்தை என்றும் சொல்லியிருக்கின்றார். அதேபோல நெல்லை கா பேரன் ஒரு நாள் ஹட்டன் போய் வந்தாராம். ‘இது தான் என்னுடைய முதல் மலையக பயணம். ஆனாலும் ஏற்கனவே வந்து போன ஒரு உணர்வு எனக்கு இருந்தது. அந்த உணர்வு தெளிவத்தையின் கதைகளால் எனக்கு வந்தது என்பதை பிறகு உணர்ந்தேன்” என்று குறிபிட்டிருக்கிறார்.


அமரர் கே.டானியலும் ‘பிரதேசங்களைப் படம் பிடித்துக்காட்டுவதில் இவர் வெற்றிபெற்றுள்ளார். நான் இதுவரை வாசித்த மலைப் பிரதேசங்களைக் களமாகக்கொண்ட படைப்புக்களில் காணமுடியாத மலையடிவாரங்களை தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் தரிசிக்கின்ற அனுபவம் அருமையானது’ என்று குறித்துள்ளார்.



என்னைப் பொறுத்தவரை அந்நியமாக்கப்பட்டு அநாமதேயர்களாக விடப்பட்ட இந்த மக்களையும் உயிர்த்தியாகம் செய்து அவர்கள் உருவாக்கிய இந்த மண்ணையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும் . வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களே எனது படைப்புக்கள் என்பேன்.









என்னைச் சுற்றி வாழ்ந்த இந்த மலையக மக்களைப் பற்றிய கதைகள் நிறைய இருந்தன. அவர்களின் ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு  வாழ்க்கையும், அவர்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் கதைகள் தான். வாழ்வியல். அதனால் என்னுடைய எழுத்தை அதற்கான ஒரு அரங்கமாக அல்லது ஒரு மேடையாக நான் ஆக்கிக்கொண்டேன். பேராசிரியர் சிவத்தம்பியின் குறிப்பு இவ்விடத்திற்குப் பொருந்தும் என நினைக்கிறேன். ‘தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையக மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைப்பட்டதாகவே இருக்கும். உண்மையில் அவருடைய மிக முக்கியமான சாதனை சராசரி மலையகத் தமிழன் ஒருவரின் உளப்பாங்கையும் கண்ணோட்டத்தையும் சித்தரிப்பதாகும். இதனால் இவருடைய எழுத்துக்களில் அகநிலை எதார்த்தமும் புறநிலை பார்வைத்தெளிவும் காணப்படுகின்றன’






. நான் திட்டமிட்டு எனது படைப்புக்களை ஆக்குவதில்லை. என்னை பொருத்தவரையில் எங்களுக்கு தெரிந்த மக்கள், எங்களுக்கு தெரிந்த வாழ்வு அதையே இன்னும் எழுதி முடிக்கவில்லை. எனக்குமுதுமை  வயது என்றவுடன் ஒரு பயம் வருகின்றது. மரணத்துக்கான பயம் அல்ல. இந்த மக்களைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பயம்.



மலையகத்திற்கு தனித்துவமான நாட்டார் வழக்கும் பண்பாடும் உண்டு






 நாட்டார் பாடல்கள் என்னும் மண்ணிலிருந்துதான் இந்த மலைய இலக்கியம் என்னும் பயிர் முளைத்து வளர்ந்து வந்தருக்கின்றது. இந்த மலையக நாட்டார் பாடல்களைத் தேடிச் சேகரித்த பெருமை சி.வி.வேலுப்பிள்ளைக்கானது. எனது கதை மாந்தர்களை உயிர்ப்பிக்க நாட்டார் பாடல்களின் துணை எனக்கு வேண்டியிருக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். என்றாலும் இடத்துக்கு ஏற்றாற்போல குறுநாவலான பாலாயி போன்ற சில படைப்புக்களில் இப்பாடல்கள் இடம்பெற்றும் உள்ளன. 





 நான் 1960 களில் எழுதிய கதைகளைப்பற்றி இப்பொழுது பேசுகின்றவர்கள் 1960களில் மலையகம் எப்படி இருந்தது, மலையக தோட்டத்தின் நிர்வாகம் எப்படி இருந்தது, மலையகத் தோட்டம் எவ்வாறு இருந்தது, இவர்கள் எப்படி கொழுந்தை அருந்தும் பானமாக்கினார்கள் என்று படிக்கின்றபோது தெளிவத்தை ஜோசப் அந்தப் பிரதேசத்தின் அடையாளமான, அதன் முக்கியமான எழுத்தாளர் என்று என்னைச் சொல்லுகின்றார்கள்.


ஆனாலும் முற்போக்குவாதிகளினுடைய கோட்பாட்டு ரீதியிலான கருத்துக்கள் என்னுடைய கதைகளில் இல்லை என்பதனால்தான் எனக்கு பிரச்சினை வந்தது. போர்வாளை விட கூர்மையானது எழுத்து என்று சொல்லிக்கொள்கின்றோம். அந்த ஆதி நாளில் இருந்து இன்று வரைக்கும் எழுத்தாளர்கள் மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் என்பவற்றை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.



இருந்தும் எந்தப் பிரச்சினையாவது தீர்ந்திருக்கின்றதா இன்றைய மனிதர்களுக்கு? இல்லை தானே. என்னுடைய ‘காலங்கள் சாவதில்லை’ நாவலை முற்போக்கு எழுத்தாளர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்கள். கூடுதலான விமர்சனத்துக்கு உள்ளான நாவல் என்பதால்தான் மறுபதிப்பு போட்டிருக்கின்றார் குமரன். அந்த நாவலைப் பற்றி பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் அமரர் கா.அருணாசலம் தெளிவத்தை பிரச்சினைகளைச் சொல்கின்றார், ஆனால் அதற்கான தீ்ர்வைச் சொல்கின்றார் இல்லை என்று முற்போக்காளர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், காலம் காலமாக பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் சொன்னவர்கள் எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.







இப்போது கூட ஒருவர் ‘பிரச்சினைகள் மாத்திரம் தான் பேசப்பட்டிருக்கின்றது  தீர்வு எதுவும் இல்லையே என்று என்னிடம் கேட்டார். அப்போது நான் அவருக்குச் சொன்னேன். முதலாவது பிரச்சினை என்னவென்று தெரிய வேண்டும். மலையகத்தின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாதவர்கள் போய் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதால் தான்  இந்த மக்களுக்கு விடிவில்லை. விடிவுக்கான தீர்வை தேடுவதற்கு முதலில் பிரச்சினை என்னவென்று தெரிய வேண்டும். முதலில் இந்த மக்களுடைய பிரச்சினை என்ன, அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.




எழுத்தின் மூலமாக சமுதாயத்தை திருத்துதல் என்பதெல்லாம் மந்திரத்தால் செய்யும் வேலை இல்லை. நான்கு கதைகளை எழுதிவிட்டு நாளைக்கு சரியாகிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம். குறிப்பாக அந்தந்த மக்களுக்கு அவர்களுடைய பிரச்சினை தெரியத்தொடங்கினால் அதிலிருந்து வெளியேற சிந்திப்பார்கள். பாரதிதாசன் சொல்கின்றார். “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்ற அறிவுமிலார்” என்று. முதலாவது அந்த அறிவு வர வேண்டும். எங்களுக்கு குடிப்பதற்கு கஞ்சி இல்லை என்பதற்குரிய காரணம் என்னவென்று அறியும் அறிவு முதலில் வேண்டும். என்னுடைய படைப்புகள் அதைத் தான் செய்கின்றன. குறிப்பாக இலக்கியம் அதைத் தான் செய்யும் என்று நான் நினைக்கின்றேன்.









திலகர் இறுதியாக வெளியிட்ட “மலைகளைப் பேசவிடுங்கள்” புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். “எழுத்தும் இலக்கிய மொழியும் எதிர்த்துத் தாக்கும் போர்க்கருவி போன்றது. அதன் கூர்மையும் வேகமும் அதன் பேசு பொருளை மையமாகக் கொண்டவை. அவை இன்றும், நாளையும், நாளை மறுதினமும் என்ற எதிர்காலத்தைச் சேர்ந்தவை. அரசும் அதன் அதிகாரங்களும் அரசின் தந்துவங்களும் நெறிமுறைகளும் நேற்றை சார்ந்தவை; பழையவை” என்று ரஷ்ய கவிஞர் ‘ஜோசப் பிராஸ்கி’ சொல்லியிருக்கின்றார். இந்தக் கவிதையுடன் நான் என்னுடைய முன்னுரையை முடிக்கின்றேன் என்று எழுத்தியிருந்தேன். எழுத்தும் அதனுடைய மொழியும் கூர்மையானவை பலம் வாய்ந்தவை. இன்றைக்கானவை, நாளைக்கானவை, நாளை மறுதினத்துக்கானவை.


எழுத்துக்களுக்கு ஊடாக தீர்வு கேட்பவர்கள்,  அன்றைய மாக்ஸிச எழுத்தாளர்களில் இருந்து இன்றைய வரைக்கும் எந்தத் தீர்வை மக்களுக்குத் தேடிக் கொடுத்திருக்கின்றார்கள். அப்படி என்றால் ஏன் நாங்கள் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இன்றைக்கும் எழுதிக்கொண்டிருக்கிறோம்..



படைப்பின் வழியாக நான் நிலை நிறுத்த நினைப்பது ‘அறம்’ அப்படி என்று ஒன்று இருக்கின்றது என்பதைத்தான். “அறம் இதென்றும் மறம் இதென்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். மனித நேய உணர்வுடன் ஆதிக்க உணர்வுகளை அழிக்க முயலவேண்டும். மனித வாழ்வின் அறம் தேடும் முயல்வினை படைப்பின் வழியே தொடர்கிறேன்





 மனித வாழ்வு என்பது அந்த யதார்த்தத்தின் மேல் வீடு கட்டி கூரை போட்டு இருக்கின்ற வாழ்க்கை முறை. அதை நாம் பதிந்து வைக்கின்றபோது அந்த வாழ்க்கையை  மற்றவர்களுக்கு எவ்வளவு அழகாக சொல்கின்றோம் என்பதில் தான் தனித்தன்மை இருக்கின்றது. இப்படி யதார்த்தக் கதைகள் சில எடுபடாமல் போவதற்கான முக்கிய காரணம்  வறட்டுத்தனமான எழுத்து.


பெரும்பாலான இன்றைய படைப்புக்கள் உடனடி துதிபாடுதல்கள் மூலம் முன்னிறுத்தப்படுபவை. அவை எல்லாம் வெறும் சலசலப்புக்களாக மட்டுமே இருக்கும். எவ்வளவு நாட்கள் அதைப் பற்றி பேசுவார்கள் என்பதெல்லாம் தெரியாது. சி.சு.செல்லப்பாவின் வாடி வாசலை இன்றும் பேசுகின்றோம். புதுமைப்பித்தன் அந்தக்காலத்தில் எழுதியவற்றை இன்றும் பேசுகின்றோம். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் அதற்கான மதிப்பு இப்போதும் இருக்கின்றது. அவை எல்லாம் யதார்த்தவாத கதைகள் தானே. போதாமை எங்கிருக்கிறது என்பது புரிகிறதுதானே




மலையக தேசியம் என்கிற குரல்கள் அண்மையில்தான் எழுந்து வருகின்றன. இருப்பினும் அதற்கு முன்னைய படைப்புகளில் இருந்து அந்த தேசியத்துக்கான குரலை அவர்கள் தேடி எடுத்துக் கொள்கின்றார்கள். என்னுடையை படைப்புகளும் அப்படி பங்களித்துள்ளன என்றே நினைக்கின்றேன். ‘நாம் இருக்கும் நாடு நமதென்பதறிவோம்’ என்று சொல்வதிலேயே இந்த தேசியம் வருகின்றது. ஆனால் இந்த தேசியத்துக்காக நான் அந்தக் கதையை அறுபதுகளில் எழுதவில்லை. அது தான் இலக்கியம். இந்த வீட்டு திட்டங்கள் எல்லாம் வந்த நேரம் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலகர் மேடையில் பேசும்போது “ஒவ்வொருவருக்கும் தனியாக வீடு வேண்டும் என்ற உணர்வு எனக்கு வந்தது தெளிவத்தையின் மீன்கள் சிறுகதையை நான் வாசித்த பிறகு தான்” என்று கூறியுள்ளார். அதே ‘மீன்கள்’ சிறுகதையை ஜெயமோகன் தமிழில் வெளிவந்த நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இதையெல்லாம் எதிர்பார்த்து நான் அந்தக் கதையை எழுதவில்லை. “இந்த மலையக தேசியம், அவர்களுக்கான தனி வீடு அப்படி என்ற உணர்வு எல்லாம் இந்த இலக்கியத்தினூடாகத் தான் அரசியல்வாதிகளுக்கு வந்து சேர்கின்றதே தவிர தொழிற்சங்கத்தினூடாக அல்ல” என்றும் திலகர் குறிப்பிடுகிறார்


அதை மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதவில்லை. ஒரு அறைக்குள் ஒரு கணவனும் மனைவியும் நான்கு பிள்ளைகளை வைத்துக் கொண்டு தாம்பத்திய உறவு கொண்டு அடுத்த பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் கொடுமை அந்தக் கதையில் வருகின்றது.  இலக்கியம் நேற்றைக்கானது, இன்றைக்கானது, நாளைக்குமானது என்று அந்த ரஷ்ய கவிஞன் சொன்னது உண்மை தானே. இன்றைக்கு என்று வரும்போது அது தேசிய உருவாக்கத்திலும் பங்கு வகிக்கிறது.







மலையகத் தமிழ் இலக்கியம் என்று தனியாகப் பேசப்படும் அளவுக்கு இந்த உழைக்கும் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியம் முதன்மை பெற்றிருக்கின்றது. பேராசிரியர் சிவத்தம்பி சொல்கிறார். ‘ஈழத்து இலக்கியம் என்று சொன்னால் வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை முஸ்லீம்களின் இலக்கியமும், மலையகம் சார்ந்த எழுத்துக்களும் வரும்’ என்று. மலையக சிறுகதை வரலாறு என்ற நூலுக்கு சம்பந்தன் விருது கிடைத்தது. சாகித்திய மண்டல விருதை விடவும்  சம்பந்தன் விருதுதான் பெரிதாகப்படுவதாக நான் சொல்லியிருக்கின்றேன். ஏனென்றால் என்னை எப்படி ஒரு சாரார் யாழ்ப்பாணத்துக்கு எதிரானவன்  என்று முத்திரை குத்த முயற்சித்தார்களோ அதே யாழ்ப்பாணத்திலிருந்து தெளிவத்தைக்கு வந்த விருது இது. நான் யாழ்ப்பாணத்திற்கு எதிரானவன் இல்லை என்பதை நிரூபிப்பதுபோல் வந்த விருது இது.


மலையக சிறுகதை வரலாறை நான் எழுதத் தொடங்கிய சமயம் செங்கை ஆழியான் என்னிடம் கேட்டார். மலையக சிறுகதை வரலாறு என்று எழுதுவது பிரதேசவாதம் அல்லவா என்று . அதற்கு நான் சொன்னேன் புவியியல் ரீதியாக இது பிரதேசமாக இருக்கலாம். ஆனால் ஒரு உழைக்கும் மக்களின் படைப்புக்கள் பற்றிய வரலாறையே இது சொல்ல வருகின்றது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் யாழ்ப்பாணச் சிறுகதை வரலாறு என்று எழுத வேண்டும்.



அதே போல் திருகோணமலை, மட்டக்களப்பில் இருப்பவர்கள் கிழக்கு இலங்கை சிறுகதை வரலாறு ஒன்று எழுத வேண்டும்.  கொழும்பை சுற்றி வாழ்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களுடைய சிறுகதை வரலாற்றை எழுத வேண்டும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் ஈழத்து சிறுகதை வரலாறாக முழுமை பெறும். இதில் பிரதேச வாதம் எதுவும் இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். இது நூலாக வெளிவந்த பிறகு இதற்கு சம்பந்தன் விருது கொடுக்க வேண்டும் என்று தெரிவு செய்தவரும் அவரேதான்.





ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறுகளில் நிறையச் சந்தர்ப்பங்களில் மற்ற மற்றப் பிரதேச இலக்கியங்கள் விடுபட்டுப் போவதுபற்றி நான் சில சமயங்களில் கோபமாகச் சொல்வதுண்டு. சிவத்தம்பி அவர்கள் ஓரிடத்தில் சொல்லியிருக்கின்றார். தெளிவத்தையின் கோபம் நியாயமானதுதான். ஏனென்றால் நாங்கள் ஈழத்து இலக்கியம் என்று தலைப்பிட்டுவிட்டு யாழ்ப்பாணத்து இலக்கியத்தை மட்டும் தான் பேசியிருக்கின்றோம் என்று. உங்கள் கேள்விக்குரிய காரணமும் சிவத்தம்பியினுடைய பதிலும் ஒன்றாகவே இருக்கின்றது.


ஈழத்து இலக்கியம் என்று பேசப்படும்போது எல்லா இலக்கியங்களைப்பற்றியும் பேசினால் அந்தப் பெயர் ஒரு பிரச்சனையே இல்லை.


மலையகத்தில் இருப்பவர்கள் ஆயுத போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பொதுவாக சிலரால் சொல்லபட்டாலும், அந்த போரில் இறந்தவர்கள் மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறி வசித்தவர்கள் என்று பத்திநாதன் தமிழகத்தில் ஈழ அகதிகள் என்ற ஈழ அகதிகளைப் பற்றிய வரலாற்று நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.


குடைநிழல் நாவலில் நானும் எழுதியிருக்கின்றேன்.. அமிர்தலிங்கமாக இருந்தாலும் சரி, ஆனந்தசங்கரியாக இருந்தாலும் சரி.. தொண்டைமானாக இருந்தாலும் சரி, செல்லச்சாமியாக இருந்தாலும் சரி துப்பாக்கிகளோடு வரும் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் இவர்கள் எல்லோரும் புலிகள் தான். அவர்களுக்கு இந்த பிரதேச வித்தியாசம் எல்லாம் தெரியாது, யார் சண்டைக்கு போனார்கள் என்பதெல்லாம் தெரியாது. தமிழில் கதைக்கின்றானா? அது போதும். அரசுக்கு எதிராக கிளம்பியவர்கள் தமிழர்களாக இருந்தது தான் எங்களுக்குள்ள பிரச்சினை




1983  நாவல்  என்னுடைய அனுபவத்தின் மூலமாகத்தான்  வருகின்றது. அந்நேரத்தில் நான் என்னுடைய அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னுடைய மனைவி வீட்டில். மட்டக்குளி மிகவும் மோசமாக தாக்கப்பட்ட இடம். வீட்டில் என்னுடைய மனைவி இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்த நாவலில் இருக்கின்றது. என் அலுவலகத்திலிருந்து நான் வெளியே ஓடி வருவது. அருகில் இருந்த தியேட்டரில் அடைக்கலம் புகுந்தது. பிறகு அவர்கள் கொண்டுவந்து என்னை வீட்டில் விட்டது எல்லாம் ஓரளவுக்கு நிஜம்.

மு. தளையசிங்கம் ஓரிடத்தில் கூறுகிறார். ‘எழுத்தாளன் என்று எப்போது ஒருவன் பேனாவைத் தூக்கிக்கொண்டு கிளம்புகிறானோ அவன் சமூகத்துக்குத் தேவையானவன்’ என்று.



நிறைய இலக்கிய பத்திகள் செய்திருக்கின்றேன். கலைமுகம், ஞானம், மல்லிகை போன்ற இதழ்களிலும், வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் இலக்கிய பகுதிகளில் பத்திகள் எழுதியிருக்கின்றேன். நூல் அறிமுகங்கள், இலக்கியத்துக்காக பாடுபட்டவர்களின் வரலாறுகள், குறிப்புகள் போன்றவை. இதை நான் தொடர்ந்து செய்வதன் ஊடாக என்னுடைய வாசிப்பை மீளமைத்துக் கொள்கின்றேன்.


என்று கூறி முடித்தார் 











கருத்துகள்