வாருங்கள் கும்பா அபிசேகம் சேர்ந்து செய்வோம்

ஏன் என்றால் ...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கோயில்கள் நமது சொத்து. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதற்காக உருவாக்கப்பட்டதே கும்பாபிஷேக கிரியைகள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என அவ்வையார் கூறியதன் காரணம், அவ்வூரில் தெய்வ அருள் இருக்க வேண்டும் என்பதால் தான். ஏழையோ, பணக்காரனோ இருவருக்குமே ஏதேதோ கோரிக்கைகள் உள்ளன. அதில் மற்றவர்களிடம் வெளிப்படுத்தக்கூடியவை சில இருக்கலாம். அந்தரங்க கோரிக்கைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்ல இயலும். அவ்வகையில் கோயில் வழிபாடு மனித வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.
சிலந்தி, யானை போன்ற பூச்சி, மிருக இனங்கள் கூட இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதாக அறிகிறோம். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க கோயில்களில் கருவறையில் உள்ள தெய்வத் திருவுருவங்கள் இறைவனுடைய உண்மையான திருமேனி (உடல்)களாகவே கருதப்படுகின்றன. இறைவன் தனக்கென ஒரு நாமமும்(பெயர்) வடிவமும் இல்லாதவன். என்றாலும் உருவமில்லாத ஒரு பொருளை நம் உள்ளத்தில் நிலைநிறுத்தி வழிபாடு செய்ய முடியாது. அதனால் உருவ வழிபாடு மிகவும் முக்கியமாகிறது. கல்லாலும், மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்ட உருவங்களில் இறைவனின் வடிவம் செதுக்கிய நாளைப்போலவே சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்படும் கிரியைகளே கும்பாபிஷேக விழாவாகும்.
திருவுருவ ஸ்தாபனம்: கருவறைகளில் கடவுள் திருமேனிகளை ஸ்தாபிக்கும் முறைகள் நான்கு விதங்களில் அமைந்துள்ளன. அவையாவன
1. ஆவர்த்தம் 2. அநாவர்த்தம் 3. புனராவர்த்தம் 4.அந்தரிதம் என்பனவாகும்.
கும்பாபிஷேக வகைகள்
1.ஆவர்த்தம் என்பது புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கு புதிதாக திருவுருவத்தை ஸ்தாபிப்பதாகும்.
2.அநாவர்த்தம் என்பது வெள்ளம், மழை, பூகம்பம் போன்றவற்றால் சேதமடைந்த கோயில்களை புதுப்பித்து மறு பிரதிஷ்டை செய்வதாகும்.
3.புனராவர்த்தம் என்பது காலத்தால் சிதிலமடைந்த திருக்கோயில்களை புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்வதாகும்.
4.அந்தரிதம் என்பது திருடர்களாலும், தீயவர்களாலும் புனிதம் இழந்த கோயில்களை மீண்டும் புதுப்பித்து புனிதப்படுத்துவதாகும்.
மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால், நமக்கு பிரச்னை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு, அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணம். மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பது’ என்று பொருள். அந்த மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படும் இந்த தெய்வப் பிரதிஷ்டை எப்படி நடத்தப்படுகிறது? இதன் உள்ளர்த்தங்கள் என்ன?
கும்பாபிஷேகத்திற்கான விதிகளை, வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர், தான் எழுதிய வாமதேவ பத்ததியில், சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக எழுதி இருக்கிறார். அதைப்படித்து அறிந்து கொண்டால், குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம்.
குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு, மகாகணபதியைப் பிரார்த்திக்க வேண்டும்.
விக்னேஸ்வர பூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க, மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை.
புண்யாக வாசனம்: வருணபகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம். புண்யாகம் என்றால் புனிதம், வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்றும் பொருள்.
பஞ்சகவ்ய பூஜை: அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப் பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க்கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர்.
கணபதி ஹோமம்: பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகாகணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகாகணபதி ஹோமம்.
நவகிரஹ ஹோமம்: கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல்.
மகாசங்கல்பம்: எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகிறது. அப்படி, ‘இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும்’ என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது.
தனபூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த தன பூஜையைப் பார்ப்பதால், வீட்டில் தனம் சேரும்.
கோபூஜை: சகல தெய்வங்களும் உறையும் கோமாதா என்று போற்றப்படுகிற பசுவை அலங்கரித்து இந்த பூஜையைச் செய்வதால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.
ஆலயக்கதவுகள் திறப்பு: புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவினை நல்ல முகூர்த்த வேளையில்தான் திறக்க வேண்டும். கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்த பிறகு, மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்கிட, பக்தர்கள் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கோயில் கதவுகள் திறக்கப்பட வேண்டும். முதலில் கோயிலுக்குள் கன்றுடன் பசுவும், மங்களப் பொருட்களும், தீபங்களை ஏந்திய பெண்களும், அர்ச்சகர்கள், வேதவிற்பன்னர்கள், பக்தர்கள் ஆகியோரும் பிரவேசித்து, பிராகாரத்தில் வலம் வந்து, கருவறையை அடைந்து நமஸ்கரிப்பர்.
வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவது முறையாகும்.
ரட்சோக்ண ஹோமம்: ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல். அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்கும் பொருட்டு கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகள், தேங்காயில் _ ருத்ரன் இவர்களை ஆவாகனம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து, ஹோமம் முடிந்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வரவேண்டும்.
பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளை பூஜித்து ப்ரீதி செய்த பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.
ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.
சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாகனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம். அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.
சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.
மிருத்சங்கிரணம்: யாக சாலையில் முளைப் பயிர் இடுவதற்காக பூமிதேவியை பூஜித்து, அனுமதி பெற்று மண் எடுத்து முளை பயிரிடுதல் என்கிற அங்குரார்ப்பணம் நடத்துவது முறை.
மிருத் என்றால் மண்; சங்கிரணம் _ எடுத்தல்; அங்குரம் என்பது முளைக்கின்ற விதை; அர்ப்பணம் என்றால் போடுவது என்று பொருள். யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு, முளைப்பயிரை இட்டு, இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்று பயிர்கள் வளர்வதைக் கொண்டு அறிந்து கொள்ளப்படுகிறது.
ஆசார்ய ரட்சாபந்தனம்: கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுகின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள் இந்த சுபவைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் காப்பினைக் கட்டிக் கொள்ளுதல் அவசியம். இதை மந்திர வேலி என்றும் சொல்லலாம்.
பூதசுத்தி: இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும். இதைச் சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலையே பூதசுத்தி என்பர்.
ஸ்தான சுத்திக்கு இடத் தூய்மை என்றும்; பூஜா திரவிய சுத்திக்கு பொருட் தூய்மை என்றும்; மந்திர சுத்தி என்பதற்கு எச்சில் வருகின்ற வாய் சொல்லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப் படுத்துதல் என்றும்; கலசத் தூய்மை என்றும் பலவித சுத்திகள் உண்டு.
கும்ப அலங்காரம்: மூலஸ்தான விக்ரஹத்தில் உறைந்துள்ள இறை சக்தியை வேள்விச் சாலையில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, கலசங்கள் மந்திரார்த்தமாக வர்ணனை செய்யப்பட்டபிறகு இறைவனுடைய உருவம் போல பாவனை செய்யப்படுகிறது. அதாவது கலசத்தின்மேல் சுற்றப்படும் துணி சதை ஆகவும், வாசனை நீர் உதிரமாகவும், தர்ப்பையால் செய்யப்படும் கூர்ச்சம் எலும்பாகவும், நூல் சுற்றியிருத்தல் நரம்பாகவும் சொல்லப்படும். மந்திரம் உயிர்போலவும் பாவிக்கப்பட்டு வாசனை மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அழகூட்டப்படுவதற்கு கும்ப அலங்காரம் என்று பெயர். அடுத்ததாக கலாகர்ஷணம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பதினாறு கலைகள் இறைவனுடைய திருமேனியில் இருப்பதால், வேள்விச் சாலையில் எழுந்தருளச் செய்யும்போது, மீண்டும் அந்தக் கலைகள் வடிவைக் கலசத்தில் வர்ணிப்பதற்குக் கலா ஆகர்ஷணம் செய்யப்படுகிறது.
மூலஸ்தானத்திலிருந்து இறைவனின் திருவடிவம் வேள்விச் சாலைக்குச் சென்று இடையூறுகள் இல்லாமல் நல்லவிதமாகத் திரும்ப, தெய்வங்களையும், நவகிரஹ தேவதைகளையும் எண்ணி யாத்திரை தானம் செய்து, யாகசாலைக்குள் கலசங்களைக் கொண்டு சென்று ஆகம விதியின்படி வைத்து தீப ஆராதனை செய்வர். இந்நிகழ்விற்கு யாகசாலைப் பிரவேசம் என்று பெயர்.
யாக பூஜைகள்: ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலைப் பகுதிகளான மேடைகள், தூண்கள், கயிற்றுக் கட்டுகள், மேற்கட்டிகள், அலங்காரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உபதேவதையின் வடிவினைக் குறிக்கிறது. அதோடு அஷ்டமங்களங்கள் எனப்படுகிற கொடி, கண்ணாடி, சக்தி, கதை, தண்டம், ஸ்வஸ்திகம், ஸ்ரீவத்ஸம், தீபம் ஆகியவற்றைப் பலகையில் வரைந்து வைப்பது வழக்கம். யாக சாலையில் அமைக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கேற்ப, தோரண பூஜை, பஞ்ச ஆசனபூஜை, பஞ்சம ஆவர்ண பூஜை ஆகியன நடத்தப்பட்டு, ஹோம குண்டத்தில் அதற்கான மூல மந்திரம் கூறி, ஹோமப் பொருட்களை இட்டு யாகம் நடத்தி பூரண ஆகுதி செய்து வாழ்த்துரைகள் சொல்லுவர். இந்த யாக வேள்விகள், திட்டமிட்டபடி ஆறு காலம், நான்கு, இரண்டு காலங்கள் என்று நடத்தலாம். யாகம் நடத்துகின்ற உபகரணங்களுக்கு, ஸ்ருக் ஸ்ருவம் என்று பெயர். யாகம் நடத்தும் காலங்களில், வேதபாராயணம், தேவாரம் திருமுறை தெய்வத் திருக்கதைகள் நடத்தப்படுவது மரபு.
ஆசார்ய விசேஷ சந்தி: காலங்கள் இரண்டும் (இரவு பகல்) ஒன்று சேர்வதையே சந்தி என்கிறோம். இந்த வேளைகளில் காப்பிட்டுக் கொண்டவர்கள் அக்காலத்திற்குரிய தர்ப்பணங்கள், ஜபங்கள் செய்து தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகளின் அருளாசியைப் பெறுவர். இந்த நிகழ்ச்சிக்கு விசேஷ சந்தி என்று பெயர்.
தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்: கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என்பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகம் காசுகளைப் போட்டு, எண்வகை மருந்துக் கலவையான அஷ்டபந்தனம் என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இடுதல்.
யந்திரத்தை வைத்து மருந்து சாற்றியபிறகு அஷ்டா தசக்ரியை எனப்படுகிற பதினெட்டு வகைக் கிரியைகளுக்கு தெய்வ உருக்கள் உட்படுத்தப்படுவதுண்டு.
முக்கியமாக கண்திறப்பு என்கிறநேத்ரோன்மீலனம் நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார். அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர். இந்த நேரத்தில் சிலைகளுக்கு கைப்பகுதியில் மஞ்சள் கயிற்றைச் சாற்றுவர்.
உயிர்ப்பித்தல்: யாகங்கள் நடத்தப்பட்ட இடத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளைப் பட்டுக் கயிறு, தர்ப்பைகளின் வழியாக மூலஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல் (நாடி சந்தானம்) என்பர். அதுசமயம் ஒரு கலசத்தையும், நெய் நிரப்பிய ஹோமக்கரண்டியையும் யாகசாலையிலிருந்து மூலமூர்த்தி இருப்பிடம்வரை மூன்று முறை எடுத்துச் சென்று வருவார்கள்.
மகாகும்பாபிஷேகம்: கலச பூஜை செய்து முடிந்ததும், பூரண ஆகுதி(யாக நிறைவு) செய்யப்பட்டு, கலசங்கள் புறப்படுவதற்கான யாத்திரை, தானம் என்ற ப்ரீதி பூஜை செய்தபின், யாக பூஜைகள் செய்த பட்டர்கள், சிவாச்சாரியார்கள் மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்க ஆலயத்தில் வலம் வந்து விமானம் என்று அழைக்கப்படும் கருவறை கோபுரத்தில் ஏறி, முறையான தெய்வ பீஜ மந்திரங்களால் கோபுர கலசத்திற்கு அர்ச்சனை செய்து பூஜை நடத்தியபிறகு கலச நீரை கோபுரக் கலசத்தின் மீது மூல மந்திரங்கள் கூறியபடி அபிஷேகம் செய்வர். பின்னர் கலசத்திற்கு தர்ப்பை, கொடி, வஸ்திரம், மாலை சாற்றித் திலகமிட்டு தேங்காய், பழம், தாம்பூலம், நிவேதனம் செய்து ஆரத்தி செய்வார்கள். புனிதக் கலசநீர் ஊற்றுவதைக் கண்களால் காண்பவர்களுக்கும் பன்னிரண்டு ஆண்டுகள் தலயாத்திரை, ஆலய தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவதாக ஆகம சாஸ்திரம் தெரிவிக்கிறது.
மகா அபிஷேகம் _ முதல் திருநீராட்டல்: மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், கருவறையிலுள்ள தெய்வச் சிலைக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட உபகலசங்களாகிய வர்த்தனி கலசங்களிலுள்ள புனித நீரை ஊற்றுவர். அதன் பிறகு முதல் திருநீராட்டல் என்னும் மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
அதற்குப்பிறகு சுவாமிக்கு 41நாட்கள் மண்டல பூஜை நடத்துவர்
கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் இறை சக்திகளை ஆவாகனம் செய்து, குறிப்பிட்ட யாகத்தின் மூலம் மந்திர உச்சாரணம் செய்து, கும்பத்திற்குள் வரவழைக்கப்பட்ட சக்தியை, கடவுள் சிலைகள் மற்றும் கோபுர கலசங்களில் நிலையாக இருக்கும்படி அபிஷேகம் செய்து பூஜைகள் நிறைவேற்றப்படும்.
கும்பம் என்பது கடவுளின் உடலாகவும், அதில் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தம் ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே உள்ள தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்தின் கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது.
பாலாலயம்
கும்பம் ஒன்றை கோவிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் சொல்லப்பட்டு, தெய்வ சக்தி கும்பத்திற்கு மாற்றப்படும். பின்னர், அந்த சக்தி வேறொரு இடத்தில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட உருவத்திற்கு மாற்றப்பட்டு, கும்பாபிஷேகம் முடியும் வரை அதற்கு பூஜைகள் செய்யப்படும்.
ஆவாகனம்
கும்பத்தில் உள்ள நீருக்குள், தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வது ‘ஆவாகனம்’ எனப்படும். கும்பத்தை கோவிலில் உள்ள தெய்வ சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் உள்ள தெய்வ சக்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
கும்பம்
யாக சாலையில் வைக்கப்படும் வெள்ளி அல்லது செம்பு குடத்தாலான கும்பம், இறைவனின் வடிவமாகவே கருதப்படும். மந்திரம், கிரியை, தியானம், ஹோமம் மற்றும் பக்தர்களின் நல்ல எண்ணங்களுடனும் எங்கும் உள்ள இறை சக்தி கும்பத்திற்குள் வரவழைக்கப்படும். கும்பாபிஷேகம் நடக்கும்போது, ஒரு கால பூஜைக்கு 64 கிரியைகள் வரை முன்னர் செய்யப்பட்டன. ஆனால் தற்போது கால அவகாசம் கருதி, முக்கியமான 13 அல்லது 12 கிரியைகள் மட்டும் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப் படுகிறது.
ஆசாரிய வர்ணம்
கும்பாபிஷேகத்தின் பொருட்டு கிடைக்கும் பொருட்களுக்கு பூஜை செய்யப்படுவது தன பூஜை ஆகும். அவ்வாறு கிடைக்கும் பணம் அல்லது பொருளின் ஒரு பகுதி கட்டிட வேலைக்கும், ஒரு பகுதி நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்துக்கும், மூன்றாவது பாகம் ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆச்சாரியரை வணங்கி, மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி தர கேட்டுக்கொள்வது ‘ஆசாரிய வர்ணம்’ ஆகும்.
அனுக்ஞை
கோவில் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைக்க தகுதியான ஒருவரை தேர்ந் தெடுப்பதை ‘அனுக்ஞை’ என்கிறார்கள். விநாயகர் சன்னிதி முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கும்பாபிஷேகத்தை நடத்தித் தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டுவது ‘அனுக்ஞை’ ஆகும்.
பிரவேச பலி
கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்கள் மற்றும் தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி வழி அனுப்புவது பிரவேச பலி ஆகும். கோவில் திருவிழா சமயங்களிலும் இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.
வாஸ்து சாந்தி
வாஸ்து புருஷனால் கும்பாபிஷேக கிரியைகளுக்கு எவ்விதமான தடங்களும் நேராதவாறு, 53 விதமான தேவதைகளுக்கு பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்வது ‘வாஸ்து சாந்தி’ ஆகும்.
ரக்ஷா பந்தன்
‘காப்பு கட்டுதல்’ என்று இதற்கு பொருள். பூஜை செய்பவர்கள் சர்ப்ப தேவதைகளுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சமயத்தில், குடும்பத்தில் எதிர்பாராமல் ஏதாவது தீட்டு ஏற்படும் பட்சத்தில், காப்பு அவிழ்க்கப்படும் வரை அந்தத் தீட்டு அவர்களை பாதிக்காது என்பது ஐதீகம்.
கட ஸ்தாபனம்
‘கலசம் அமைத்தல்’ என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட கலசம் என்ற கும்பங்கள் பயன்படுத்தப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. கும்பத்தின் மேற்புறம் நூல் சுற்றி, ஆற்று நீர் நிரப்பி, மேல் பகுதியில் மாவிலை செருகி, தேங்காய் வைக்கப்படும். எந்த தெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறதோ அந்த தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம் கருதப்படும்.
அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் எனச் சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே ‘அஷ்ட பந்தனம்’ என பெயர்.
மிருத்சங்கிரஹணம்
இதற்கு மண் எடுத்தல் என பொருள்
கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக அங்குரார்ப்பணம் செய்யப் படும். அதாவது நவதானியங்கள் முளைவிட்டு வளர வைக்கப்படும். அதற்காக சுத்தமான மண் எடுக்கப்பட்டு முளைப்பாலிகைகளில் வைத்து, அதற்குள் நவதானியங்களை இட்டு வைப்பார்கள். இவ்வாறு தானியங்களை வளர வைப்பது ‘மிருத்சங்கிரஹணம்’ ஆகும்.
மந்திரங்களை தரலாம் .மன ம் சுத்தமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தர முடியும் .
கும்பாபிஷேகத்திற்கான விதிகளை வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர் சிவபெருமான் முருகனுக்குக் கூறும் விதமாக விவரித்து எழுதி இருக்கிறார்.
அதனால் வழி வந்தோர் அதையே பின்பற்றுகிறார்கள்
முதலில் ஆகம சாஸ்திரப்படியும், சிற்ப சாஸ்திரப்படியும் முறையாகக் கல்லினால் வடிவமைத்த தெய்வத் திருவுருவங்களை தானிய வாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி முறைப்படி ஒரு மண்டலம்(48 நாட்கள்) பூஜை செய்து, அவற்றைத் தெய்வ சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள். கல்லினாலும், மண்ணாலும், உலோகத்தாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்குச் சக்தியை கொடுப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி முறைகளில் ஆவாகனம், யாகசாலையில் மந்திரம், கடஸ்தாபனம் ஆகிய மூன்று வழிமுறைகள் மிக முக்கியமானவை.
சொல்லப்படும் மந்திரங்கள். மந்திரம் என்பதற்கு சொல்பவனைக் காப்பது என்று பொருள். அவற்றைச் சரியான உச்சரிப்புடன், மிகுந்த பக்தியுடன் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த மந்திரங்களைச் சொல்லி இறைசக்தியைத் தருவித்து ஒருங்கிணையச் செய்து ஒன்றாகக் குவியச் செய்து இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலை பெறச் செய்தால் தான் அது இறைவனின் உறைவிடமாக மாறும்.
இல்லையேல் மாறுபட்ட நிலைகளை தோற்றுவித்து விடும் .
தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட கலச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளைப் பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும். ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.
மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இறைவனை வணங்குவோருக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்குவார்கள் என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினால் இறைவனின் அருளைப் பூரணமாக பெறலாம்.
கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
மக்கள் தெரிந்து கொள்வதற்காக சுருக்கமாகத் தருகிறேன்
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) - செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
* சங்கல்பம் - இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
* பாத்திர பூஜை - இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
* கணபதி பூஜை - செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
* வருண பூஜை - அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
* பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து செய்யப்படும் கிரியை.
* வாஸ்து சாந்தி - தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
* பிரவேச பலி - எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல் (துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) - அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்திலிருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். (ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் கிரியை)
* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) - எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) - கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
* கும்பலங்காரம் - கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
* கலசாக்ர்ஷ்ணம் - (சக்தி அழைத்தல்) விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு மந்திரபூர்வமாக அழைத்தல்.
* யாகசாலை பிரவேசம் - கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
* சூரிய, சோம பூஜை - யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
* மண்டல பூஜை - அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
* பிம்ப சுத்தி - விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
* நாடி சந்தானம் - யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக் கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல், (இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
* விசேஷ சாந்தி - முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம் தருவது.
* பூத சுத்தி - இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
* ஸ்பர்ஸ ஆஹூதி - முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
* அஷ்டபந்தனம் - எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால் மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து சாத்துதல் என்பர்.
* பூர்ணாஹூதி - யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
* கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) - யாகசாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்து பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
* மஹாபிஷேகம் - கும்பாபிஷேகம் முடிநத பிறகு மூல விக்ரகத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
* மண்டலாபிஷேகம் - பிறந்த குழந்தையாக பாலரூபியாக விக்ரகத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழுமையான ஆற்றலை அடையச் செய்வது.
குண்டங்களின் எண்ணிக்கை: ஏக குண்டம் - ஒரு குண்டம் அமைத்தல். பஞ்சாக்னி - ஐந்து குண்டம் அமைத்தல். நவாக்னி - ஒன்பது குண்டம் அமைத்தல். உத்தம பட்சம் - 33 குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
கும்பம்: யோகஜம் என்ற சிவாகமம், கும்பமாகிய குடம் மாமிசமாகும். குடத்திலுள்ள தண்ணீர் ரத்தமாகும். கும்பத்தினுள் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும், கும்பத்தில் உள்ள தர்ப்பபையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும். குடத்தின் மேலே நெருக்கமாகச் சுற்றப்படும் நூல்களே நரம்புகளாகும். கும்பத்தைச் சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரம் தோல் ஆகும். குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது. தேங்காயின் மேலே விரிந்துள்ள தர்ப்பபையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை (குடுமி) ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் சுவாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று கூறுகிறது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’
என்பது திருமூலர் அருட்பாடல்
அவர் உடலே கோயில் என்றார்.
-
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை *க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்* என்கிறது ஆகமச் சொற்றொடர்.
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும்,
முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிருத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும்,
மார்பு மகாமண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய்
எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
-
கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம்,
பிரணமய கோசம்,
மனோமய கோசம்,
விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய 5 உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
-
தூல சரீரம்,
சூட்சும சரீரம்,
குண சரீரம்,
அஞ்சுக சரீரம்,
காரண சரீரம் போல 5 சபைகள் உள்ளன.
-
உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
கருவறை சிரமெனப்பட்டது.
அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி,
இடச்செவி சண்டிகேசுவரர்,
புருவமத்தி லிங்கம்,
மூக்கு ஸ்தபந மண்டபம்,
வாய் ஸ்தபந மண்டப வாசல்,
கழுத்து நந்தி
தலையின் உச்சி விமானம்
என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
-
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல்
தோல்,
இரத்தம்,
நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும்
செங்கல்,
காரை,
கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது.
-
முக்கிய அங்கம் :
பொதுவாக கோவில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அங்கங்கள் இருக்க வேண்டும்.
அவை ஸ்தலம், தீர்த்தம்,விருட்சம். ஸ்தலம் என்றால் மூலவர். மூலவர் இருக்கும் இடத்தை ஸ்தலம் என்பார்கள். அடுத்ததாக கோவிலில் இருக்கக்கூடிய குளம் தீர்த்தம் எனப்படும்.
-
விருட்சம் எனப்படுவது ஒவ்வொரு கோவிலுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சமே தாங்கி நிற்கின்றன. ஸ்தல விருட்சமாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் இருக்கும். கும்பாபிஷேகத்தின் போது அந்த ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்து வந்தே கும்பாபிஷேகம் யாகம் செய்வார்கள்.
இணுவில் பிள்ளையார் கோவிலில் ஒரு கொன்றை மரம் இருந்தது .அதனை சதாசிவக் குருக்கள் வழிபட்ட பின்னரே பூசையை ஆரம்பிப்பார் .இப்போது அந்த மரத்தைக் காண வில்லை
இணுவில் கந்தசுவாமி கோவிலில் நொச்சி மரமும் .மற்றைய கோவில்களில் விளாத்தி மரம் .அரச மாறன் புன்னை மரம் அப்பை மரம் வேம்பு என்று தல விருட்சங்கள் இருக்கின்றன ..
மேலும் மருதமரம் உள்ள ஆலயங்கள் நிறைய உண்டு .புளியமரம் கூட தல விருட்சமாக இன்றும் இருக்கின்றன
பொதுவாக கோவிலின் அமைப்பு மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது பாதம் மேல்நோக்கி இருக்கும். அது போலவே கோபுரம் உயர்ந்திருக்கும். கொடி மரம் மனிதனி முதுகுத் தண்டுக்கு ஒப்பானது. வாயிலில் இருக்ககூடிய துவார பாலகர் நம் தோள்களைக் குறிக்கிறது.
அதைத் தாண்டி இருக்கக்கூடிய மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மனிதனின் உடல் போன்றது. கருவறை தான் தலை.
கருவறையில் மூலவர் வீற்றிருப்பார். எட்டு எட்டாக அறுபத்து நான்கு சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். கருவறையின் பின் சுவர் முதல் மையம் வரையில் பத்து பாகங்களாக பிரித்திருப்பர். பத்தாம் பாகத்தில் சிவன், ஒன்பதாம் இடத்தில் பிரம்மா, எட்டாம் இடத்தில் விஷ்ணு, ஏழாம் இடத்தில் முருகன், ஆறாம் இடத்தில் லட்சுமி அல்லது சரஸ்வதி, ஐந்தாம் இடத்தில் பிற பெண் தெய்வங்கள்,நான்காவது இடத்தில் விநாயகர்,மூன்றாவது இடத்தில் பைரவர்,இரண்டாவது இடத்தில் துர்க்கை ஆகிய சிலைகள் அல்லது உருவங்கள் இருக்கும்.
கருவரையில் இருக்கும் கீழ் பகுதியை அதிட்டானம் என்று சொல்வார்கள். இதில் அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கும், அடுத்தபடியாக கர்ப்பக கிரகத்தை தாங்கி நிற்கும் சுவற்றை பிட்டி என்பார்கள். இதில் இருக்கக்கூடிய வாயில் தேவ கோட்டம் எனப்படும். இந்த வாயிலில் தட்சன்,துர்க்கை,நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இடம்பெற்றிருக்கும்.
கருவரையின் கூரை பிரஸ்தனம்.அங்கே யாளி உட்பட பூதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கக்கூடிய மூலவரின் வாகனம் பிரஸ்தனத்தில் இடம்பெற்றிருக்கும்.
-
இந்த பிரஸ்தனத்திற்கு மேல் உள்ள பகுதியை க்ரீவம் என்பார்கள். இது பெரும்பாலும் சதுர வடிவில் இருக்கும். அதற்கு மேல் தான் கும்பம் அல்லது கலசம் இருக்கும்.
பஞ்ச பூதங்களின் சக்தி, கடவுள் அருள்,வானியல் கதிர்வீச்சு ஆகியவை எல்லாம் சேர்ந்து மிகுந்திருக்கும் இடத்தில் தான் கருவறை கட்ட தேர்ந்தெடுக்கப்படும்.
கருவறை அமையும் பகுதி சதுரம்,வட்டம் மற்றும் முக்கோணம் ஆகிய மூன்ற வித அமைப்புகளுடையதாய் இருக்கும். சதுர அமைப்பு தேவ உலகத்தையும், வட்டம் இறந்தவர்களையும், முக்கோணம் மண்ணுலகத்தையும் குறிக்கிறது.
பெரும்பாலான கருவறை இருட்டாகவே இருக்கும். அன்னையின் வயிற்றில் குழந்தை இருட்டறையில் இருப்பதை நியாபகப்படுத்துகிறது.யோகிகள் இருட்டளையிலேயே தியானம் பழகுகிறார்கள்.பஞ்ச பூதங்களும் ஆதிக்கம் செலுத்த முடியாத இடம் இருளாகவே இருக்கும்.
கருவறையில் உள்ள விக்கிரகத்திற்கு திபாராதனை காட்டப்படும்போது மனம் முழுவதும் அவரிடமே குவிக்கப்படவேண்டும்.வேறு இடங்களில் மனம் செல்லக்கூடாது.
ஆராத்தி காட்டும் அய்யரின் இ ன் முகம்கூட தெரியக்கூடாது.
ஒருமுறை விக்கிரகத்தை கண்ணால் கண்டபிறகு அப்படியே மனதில் அவரை தியானிக்க வேண்டும்.
இறைவனை மனதில் எழுந்தருளச்செய்ய வேண்டும்.
இறைவன் நமக்குள்ளேதான் காட்சி தருகிறார்.
அதைபுரிந்து கொள்ளுங்கள்
கண்களை திறந்தபடி கருவறையை உற்று நோக்குங்கள் .சற்று கண்களை மூடுங்கள் அந்தக் கருவறை இறைவன் உங்கள் மூடிய கண்களுக்குள் தெரிவதை அனுபவ வாயிலாக உணருங்கள் .
கோவில் கருவறை யிலும் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டேயிருக்கும். இவை அறையில் நிரம்பியிருக்கும் ஆற்றலை வெளியே உந்தித்தள்ள வைத்திடும். இதே போல கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இப்போதைய ஆரய்ச்சியாளர்கள் கணித்துச் சொல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கோவில்களின் மூலவர் சிலைகள் கருங்கல்லில் தான் செதுக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம், பிற உலோகங்களை விட கருங்கல்லில் பல மடங்கு ஆற்றல் இருக்கும். அதை விட கல்லுக்கு எந்த ஆற்றலையும் தன் வசம் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. அதே போல கருங்கல்லில் பஞ்ச பூத ஆற்றல்களும் அடங்கியிருக்கிறது. இந்த திறன் வேறு எந்த உலோகத்திலும் இல்லை.
அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும் தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை.
* ஒருவன் உடலும், மனமும் தூய்மையாக இல்லாமல், கோவிலுக்கு செல்வதும், வழிபடுவதும் பயனற்றவை.
* உடலும், மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு, பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.
* புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும், தூய்மையும் தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றி செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
* ‘நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு ஒரு திருத் தலத்திற்கு சென்றால், அந்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று நினைக்கும் அளவிற்கு கீழான நிலைக்கு இந்த கலியுகத்தில் மக்கள் வந்து விட்டார்கள்.
* தூய்மையற்ற உள்ளத்துடன் கோவிலுக்கு செல்லும் ஒருவன், ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான். கோவிலுக்கு புறப்பட்டபோது இருந்ததை விட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.
திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும், மகான்களாலும் நிரம்பி இருப்பவை.
* மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோவில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள் தான்.
* 100 கோவில்கள் இருந்தாலும் அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்வீகம் மறைந்து விடும்.
* திருத்தலங்களில் வாழ்வது மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களை சுலபமாக நீக்கி கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது.
* மனதை தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.
* ஏழை-எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன் தான் உண்மையாக கடவுளை வழிபடுகிறான். விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
நல்லவர்கள் பலர் கோவிலுக்கு வரும்போது கோவிலில் புனிதம் பெருகுகிறது.இதனால் அங்கு ஆன்மீக சூழல் உருவாகிறது.அதே நேரம் கோவிலுக்கு தீயவர்கள் அதிகம் வந்தால் கோவிலின் புனிதம் கெடுகிறது.அங்கிருக்கும் ஆற்றல் அழிந்துபோகிறது.
இது போலத்தான் தொண்டும் ..எனவே தொண்டர்களும் பக்திமிக்கவர்களாகவும் அமைதியாகப் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும்
பிரம்மத்திலிருந்தே உலகம் தோன்றியது,பிரம்மத்திலேயே நிலைபெற்றுள்ளது,பிரம்மத்திலேயே மீண்டும் ஒடுங்குகிறது.
பிரம்மத்தை அறிவது பிரம்மஞானம்.
பிரம்மஞானமே முக்தி.
மனித வாழ்க்கையின் லட்சியம் பிரம்மத்தை அடைவது.
Manikkavasagar Vaitialingam
பதிவு தொடரும்

கருத்துகள்