துடக்கு என்பது பிறப்பு அல்லது இறப்பு நடந்தால் அதனையொட்டி சில தினங்கள் அனுட்டிக்கப்படுகின்ற ஒரு விடயம்.இதனை சைவ சமயத்தின் ரீதியாக ஆசௌசம் என கூறுவார்கள். சௌசம் என்றால் சுத்தம் எனப்படும்.ஆசௌசம் என்றால் சுத்தியற்ற நிலை எனப்படும் .
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இத்துடக்கு, அவ்வீட்டினைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின் ஆண்வழிப் பரம்பரையில் (பெண்கள் அல்ல; அவர்களின் இரத்தம் மனுஷ இரத்தம் அல்ல!) சகோதரங்கள், பெரியப்பன், சித்தப்பன், பேரன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று எல்லோருடைய ஆண் பிள்ளைகள், மனைவிகள், அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் என்று எல்லோரையும் பாதிக்கும் என்பது மரபு
“ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூச மாமே”
-திருமந்திரம்
“ஆசூச மில்லை அருநிய மத்தருக்
ஆசூச மில்லை அரனைஅர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போரக்
காசூச மில்லை அருமறை யோர்க்கே”
துடக்கு என்பது பின்வரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் காக்கப்படுகின்றது:
ஒருவர் இறந்தால்:குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அது ஒரு ‘துடக்கு’ சம்பவமாக ஒரு மாத காலத்திற்கு பேணப்படுகின்றது. அவர் உடலை அன்றே கொண்டு சென்று எரித்துவிட்டு வந்தாலும் துடக்கில் மாற்றமில்லை.அதுவும் அவரவர் சாதியைப் பொறுத்து அந்தத் தூய்மையின்மையின் காலமும் மாறுபடும்.
‘உயர் சாதி இரத்தம்’ உள்ளவருக்கு தூய்மை 14 நாளிலேயே வந்துவிடும். ஏனையோர் பாவங்கள் 21 நாள், 30 நாள் என்று காத்திருக்க வேண்டும். அந்த நாள் முடிவில் ஐயரை அழைத்து, மந்திரம் சொல்லி ‘துடக்கு கழித்தல்’ கிரியைச் செய்தால் மாத்திரமே இவர்கள் எல்லோரும் வழக்கமான நிலைக்குத் திரும்ப முடியும், இடையில் இன்னொரு துடக்கு சம்பவம் நிகழாதிருந்தால்!
ஒரு சிலர் துடக்குக் கழிந்தபின்னரும், இறந்தவர் மேலுள்ள பெரும் பாசப் பெருக்கினால் மிகுதி உள்ள ஒரு வருட காலத்திற்கு ‘துக்கம்’ அனுஷ்டித்து, ஓரளவு இரண்டாம் படிநிலைத் துடக்கும் காப்பர்.
சில சமயத்தவர், இறந்தவர் உடலையே தங்கள் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றார்களே! அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா? நம்மர்வர் ஒரு செத்தவீட்டிற்குப் போய்விட்டுக் கோவிலுக்குப் போவதென்றால், முதலில் ஏழு கிணறுகளில் குளித்து சுத்தமாக்கிவிட்டுத்தான் போகவேண்டுமாம். என்ன கொடுமை ஐயா, இறந்தவரை இவ்வளவுக்குக் கேவலப்படுத்துகிறார்களே!நியாயமாகப் பார்த்தால், இறந்தவர்மேல் உண்மையிலே பாசம் இருக்குமேயானால், அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால், இறந்தவர் விரும்பிய ‘சொர்க்கம்’ அவர் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் கொண்டவர்களாக இருந்தால் இறந்தவர் உடலைக் கடவுள் சன்னதியில் கொண்டு சென்று உங்கள் கிரியைகளைச் செய்யவேண்டும். அத்தோடு, தினமும் கோவில் சென்று, இறந்தவரை இடையில் எங்கும் நிற்பாட்டாது நேரே ‘அங்கு’ கொண்டுபோகுமாறு அவர்கள் வணங்கும் கடவுளிடம் விண்ணப்பம் செய்தல்வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாய் இருக்கவேண்டும் அல்லவா?
துடக்கு இல்லாத எத்தனை பேரை மிகவும் நாற்றமடிக்கும் அழுக்கு உடையுடன் பொது நிகழ்வுகளில் சந்திக்கின்றோம்! இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, ‘அசுத்தம்’, ‘கிருமி’ என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள்.
அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர்? நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை நோக்கி அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
‘அப்போது சொன்னார்கள்’, ‘காலம், காலமாய்க் கடைப்பிடித்தார்கள்’ என்பதற்காக, தேவையற்ற, பிழையான, அர்த்தமற்ற ஒரு விடயம் தற்போதைய சூழலில் இன்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஓர் அற்ப அறிவு உள்ள சிறுவர்களுக்கே தெளிவாகப் புரியும்!
ஆசௌசம் அல்லது துடக்கு தீட்டு ஆசௌசம் என்பது விதிவிலக்கு காலமாகும். இவை பற்றிய விபரங்கள் ஏறத்தாழ (700)எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் உள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடாத்தப்படுகின்றன. இதேபோல தமிழ் நாட்டில் கூடுதலாக வழக்கில் உள்ளது மற்றும் பலதேசங்களிலும், பறசார்த்தப்படுகின்றன, சோமசம்பு சிவாச்சாரியார் செய்த சோமசம்பு பத்ததி ஆகும். இப்போது எமக்கு இலங்கை நாட்டு சமயக்கிரியைகள் மற்றும் வழமைகளுக்கும் நமது இந்தியா நாட்டு வழமைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் ஏன் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இலங்கை சிவபூமி என்பதால் அகோரசிவ பத்ததி நடை முறையில் உள்ளது.
சோமசம்பு பத்ததி இந்தியாவில் கைக் கொள்ளப்படுகிறது .
சைவத்தின் இருபத்தெட்டு(28)ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால் மேற்சொன்ன தொகுப்பு நூல்களான பத்ததிகள் மிகவும் பயனுள்ள கைநூல்கள் ஆகின்றன. ஆசௌசம் பற்றிய விபரங்கள் மட்டுமே உள்ளதாக ஆசௌச தீபிகை என்ற தமிழ் நூல் ஒன்றும் உள்ளது.
ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது சந்தோஷத்தைக் கொண்டாடும் காலமாகும்.
எமது வழமையில் ‘செத்த வீடு கொண்டாடுதல்’ என்று சொல்லும் மரபும் கவனிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் இவ்விதமான மன அதிர்வுகளிலிருந்து தமது வழமை நிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையே ஆசௌச காலம் ஆகும். இது மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும் இத்தனை நாட்கள் என்று உணர்த்தி இதன் பின்னர் அவர்கள் தமது வழமைக்குத்திரும்ப வேண்டிய கடப்பாட்டையும் காட்டி நிற்கின்றது.
பிறப்பு என்றால் அந்த புதிய சீவனுக்கு உரிய வரவேற்பை அளிக்கவும், தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக்கொள்ளவும் (Bonding), பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாகவும் ஒன்றாகவும் கழிக்கவும் இந்த ஆசௌச காலம் வழி செய்கின்றது.
இவ்விதமான மன எழுச்சியும் தாக்கமும் இறுக்கமான பாசப்பிணைப்புள்ள எமது பாரம்பரிய குடும்பங்களில் நெருங்கிய உறவுமுறைகளை நேரடியாகப் பாதிக்கின்றது. அதிலும் பெண்ணானவள் சிறு வயதிலேயே திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்து அவனின் உறவுகளையே தன்னுறவுகளாகக்கொண்டு வாழும் மரபில் அவளுக்குத் தன் பிறந்த வீட்டு நிகழ்வுகளைவிட புகுந்த வீட்டு நிகழ்வுகளே தன் சொந்த நிகழ்வுகளாக மனதைத் தாக்குகின்றன. அதானால்தான் திருமணமான பெண்களுக்கு அவர்களது பிறந்த வீட்டு சன்ன மரண ஆசௌசங்களின் துடக்கு அல்லது பாதிப்பு இல்லை என்று எமது பாரம்பரியத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது திருமணமான பெண்ணுக்கு அவளின் கணவனுடைய ஆசௌசமே அவளுடைய ஆசௌசம். அவளுக்கு என்று புறம்பாக ஆசௌசம் இல்லை.
ஆணுக்கு தந்தை ஊடாக உள்ள ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறை வரை ஆசௌசம் உள்ளது.
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க தந்தை வழி சமுதாயத்தின் மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது. குடும்பங்களில் உள்ள நெருக்கமான பாசப்பிணைப்பால் அங்கு நிகழும் பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளால் அதிக மன எழுச்சிக்கு உள்ளாவது இவர்களே. வெறுமனே சனன மரண நிகழ்வுகள் மட்டுமல்லாது இக்குடும்பங்களில் எந்த நல்லது கெட்டது நிகழ்ந்தாலும் அதில் பங்கு பற்றி தோள் கொடுத்து உதவும் கடப்பாடும் இந்த உறவுகளுக்கு உள்ளது.
ஆசௌசம் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பொறுப்பும், கடப்பாடும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே பெண்களுக்கு அவர்களின் பிறந்த வீட்டு ஆசௌசங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
இந்த ஆசௌச காலமும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது அந்தந்த நிகழ்வுகளின் மனத்தாக்கங்களுக்கு ஏற்ப கால வரையைறகளைக் கொண்டுள்ளது. அதிலும் ஒரே நிகழ்வுக்கு எல்லாக் குடும்பங்களிலும் ஆசௌசம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
உதாரணமாக பிராமணர்களுக்கு மரண ஆசௌசம் பத்து நாட்களாகும்.
“தசமராத்ரீ ஜாதம் ந்தோஹன் தசராத்ரீ ரதுஹந்தீ”
என்று வேதம் சொல்லுகின்றது. இது அவரவர் ஆத்மீக நிலை மற்றும் ஆத்மீக அறிவைப் பொறுத்து வேறுபடுகின்றது. ஆத்மீகத்தை முழுநேரத் தொழிலாகக்கொண்ட பிராமணர்கள் இறப்பையும், பிறப்பையும் வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளாகப் புரிந்து கொள்ளுதலினாலும், அவற்றின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்திருப்பதினாலும் அவர்களுக்கு இவற்றால் ஏற்படும் மன எழுச்சிகள் குறைவு. எனவே அவர்களுக்கு துடக்கு காலமும் குறைவு. இதுவே சாதாரண குடிமகனுக்கு முப்பது நாட்களாக உள்ளது.
கொஞ்சம் விஞ்ஞான உலகில் நாம் வாழுகின்றோம் .எதையும் சிந்திக்கும் மனப் பக்குவம் எல்லோருக்கும் உண்டு .
உங்களின் மனதுக்குப் பட்டத்தை நீங்கள் செய்ய உரித்துடையவர்கள் .
காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் இவற்றை அனுசரிக்கவும் முடியும். உதாரணமாக மனைவியின் உறவுகளுடன் சேர்ந்து வாழும் கணவனுக்கு அந்த உறவுகளின் இறப்பு மற்றும் பிறப்புகளில் அதிக பிணைப்பும், மன ஈடுபாடும் உள்ளன. இங்கு அவனுக்கு அவர்களின் ஆசௌசத்தில் பங்கு உண்டு. இவ்வாறே தனது பெற்றோருடன் ஒன்றாக வாழும் மனைவிக்கு அவளின் பிறந்த வீட்டு உறவுகளின் சுக துக்கங்களின் பாதிப்பு நிறையவே உண்டு.
ஆகவே அவளுக்கு பிறந்த வீட்டு ஆசௌசத்திலும் பங்கு உண்டு. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் உறவுகளே தெரியாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்றவர்களுக்கு அவர்களின் குடும்ப உறவுகளின் சுக துக்கங்கள் பெரும் மனப்பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை. இந்நிலையில் ஏழு தலைமுறைத் துடக்கு என்பது இங்கு அர்த்தமற்றதொன்றாகி விடுகின்றது.
பிராமணனாகப் பிறந்தும் வேத அத்தியயனமோ, சமயக் கல்வியோ இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் பிராமணருக்கு பிறப்பு, இறப்பு பற்றிய தத்துவங்களும், தாற்பரியமும் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்நிலையில் அவர்களுக்கு குறுகிய காலத்தில் துக்கம் கொண்டாடுதலை முடிக்கும்போது, இழப்பு மனநிலைத் துயரத்தைக் கொட்டி முடிக்க சந்தர்ப்பம் இல்லாமையால் அவர்கள் நாட்பட்ட இழப்பு துக்க நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இது அவர்களின் கல்வி, தொழில், மற்றும் வாழ்க்கை சார்ந்த வினைத்திறனைப் பாதிக்கின்றது. இவர்கள் தமது வாழ்க்கையில் வழமை நிலைக்குத் திரும்புதலில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றார்கள்.
அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் ‘தீண்டத்தகாமை’, ‘தூய்மை இன்மை’ என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தகூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
துடக்கு காலத்தில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்துவதோ தவிர்க்கப்படுகின்றது.
குழந்தை பிறந்தால்:
%%%%%%%%%%
குடும்பத்தில் ஒருவர், என்னமாதிரித்தான் சுத்தமான சுகாதார சூழலில், பெரும் வைத்திய சாலையில் ஒரு குழந்தையைப் பிரசவித்தாலும், இந்நிகழ்வும் ஒரு செத்த வீட்டை ஒத்த துடக்குப் போலவே காத்திடுவார். என்றாலும், சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பதால் துடக்கு கழிந்தவுடன் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர்
பெண் மாதவிடாய் வந்தால்:
%%%%%%%%%%%%%%%
பெண் பருவம் எய்தால், அல்லது வழக்கமான மாதவிடாய் வந்தால் அந்த நாட்கள் எல்லாம் அப்பெண்ணுக்கு துடக்குத்தான். அப்பெண்ணை ஒருபுறத்தில் உட்காரவிட்டு, வேறு பக்கங்களுக்குச் சென்று ‘அழைஞ்சு’ துடக்கை மற்றவர்களுக்கும் பரவாமல் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் என்னமாதிரியான நவீன யுக்திகளை உபயோகித்துச் சுத்தமானவர்களாய் இருந்தாலும், அது துடக்கு, துடக்குதான்.மேலை நாடுகளில், இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடப்பது என்பது அவரின் வீட்டிலேயே தெரிய வராது. அப்படி என்றால், அவர்கள் எல்லோருமே, எப்போதுமே துடக்கு உள்ளவர்கள் என்று ஆகிவிடுமா?
தாம்பத்திய உறவினால்:
%%%%%%%%%%%%%%%%%
தாம்பத்திய உறவினால் பெரும் துடக்கு உண்டாகுவதாகச் சொல்லி விரத காலத்திலும், கடவுளை வணங்குவதன் முன்னும் இப்படியான ‘அசுத்த’ வேலைகள் செய்வது கூடவே கூடாதாம். இது, இவர்கள் வணங்கும் அந்தக் கடவுளின் அபார சிருஷ்டிதனைக் கொச்சைப் படுத்தும் இந்தச் சாதாரண மானிடரின் கட்டுப்பாடு. ஆனால், கடவுள்மாரின் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெரும் திருவிளயாடல்களை மட்டும் கதை, கதைகளாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், பஜனைகள் பாடியும், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆடியும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.ஆனால், ஒழுங்கான தாம்பத்தியம் இவர்களுக்கு ஒரு துடக்கு சமாசரமாம்.
சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள் அல்லது துடக்கு கூறப்படுகின்றன. இவற்றை பஞ்ச ஆசௌசம் என்பர்.
1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு; இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு; இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு; ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் அவளுக்கு மட்டும் ஏற்படும் துடக்கு இது.
இதன்போது ஐந்தாம் நாள் தலை முழுகி பால் அல்லது பஞ்ச கவ்வியம் உண்ண இந்த துடக்கு விலகும். பெரும்பாடு போன்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு தீட்டாக கருதப்படுவதில்லை
(. ஆதாரம்- பராசர ஸ்மிருதி. நன்றாகவே அவதானி க்க._)
4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு; இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு. இது ஸ்நானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் போகும். எல்லாருக்கும் உரியது
5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு; இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்களுடன் இணங்குவதால் ஏற்படும் தோஷம்.
இது பிறப்பால் மட்டும் வருவது இல்லை, குணத்தாலும், பண்பாலும், வாழ்க்கை நெறியாலும் வருவது. இதனாலேயே
சம்பந்தர் பல குடிப்பிறந்த சிவ தொண்டர்களுடன் ஒன்றாக உண்டு குடித்து உறங்கி யாத்திரை செய்து வந்தார்.
வீர சைவ மரபில் உள்ளவர்களுக்கு மட்டும் இவ்விதமான ஆசௌசங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
A தாய்க்கும் தந்தைக்கும் ஆண்குழந்தை பிறந்தால் 30 நாட்களும்
பெண்குழந்தை பிறந்தால் 40 நாட்களும் துடக்கு உண்டு.
பிராமணர்களுக்கு இது (10)பத்து நாட்கள்.
B . ஆண் குழந்தை பிறந்தால் தந்தை வழி ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறைக்கு துடக்கு உண்டு. இவர்களையே உறவுகளில் துடக்குகாரர் என்று கூறும் வழமை யாழ்ப்பாணத்தில் உள்ளது.இந்தியாவிலும் உள்ளது.
.C பெண் குழந்தை பிறந்தால் குழந்தையின் ஆண் சகோதரர்களுக்கும், தந்தைக்கும், தந்தையின் சகோதரர்களுக்கும், தந்தை வழிப்பாட்டனுக்கும், அப்பாட்டனின் உடன் பிறந்தோருக்கும் 40 நாள் துடக்கு உண்டு.
D . நிறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்தாலும் இறந்து பிறந்தாலும் இவ்வாறே பிறப்புத் துடக்கு உறவுகளுக்கு உண்டு. ஆனால் இதற்கு மரணத்துடக்கு இல்லை.
E . ஏழாம் எட்டாம் ஒன்பதாம் மாதங்களில் இவ்வாறு பிறந்து இறந்தாலோ அல்லது இறந்து பிறந்தாலோ தாய்க்கும், தந்தைக்கும் முன் சொன்னவாறே பூரண துடக்கு உண்டு. முன் சொன்ன மற்ற உறவுகளுக்கு கேள்விப்பட்டதில் இருந்து துடக்கு. இது அவர்கள் தலை முழுகியவுடன் கழியும்.
F கர்ப்பத்தில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கருச்சிதைவு நடந்தால் எத்தனையாவது மாதத்தில் கரு கலைந்ததோ அத்தனை நாட்களுக்கு தாய்க்கு மாத்திரம் துடக்கு உண்டு.
உதாரணமாக நான்காம் மாதம் கருச்சிதைவானால் பிராமணப் பெண்ணுக்கு நான்கு நாட்கள் துடக்கு. ஏனையோருக்கு இதன் மூன்று மடங்கு அதாவது 12 நாட்கள் துடக்கு.
G . ஒரு குழந்தையின் பிறப்பு பற்றிய விபரத்தை அதன் துடக்கு கழிந்த காலத்தின் பின் கேள்விப்பட்டால் கேள்விப்பட்டதில் இருந்து ஏற்படும் துடக்கு தந்தைக்கு மட்டுமே.
இது தலை முழுகுவதால் விலகும்.
இங்கு நடை முறைகளைத் தருகின்றேன்
ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும்.
மேலும் சில நடைமுறைசில் இருந்த விதிகளை யும் தருகின்றேன்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
ச ந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
ச ந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
மேலும் இந்திய முறைக்கும் யாழ்ப்பாண முறைக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அவற்றை
இங்கு பார்ப்போம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
சி ராத்தத்தின் நடுவில் (சி ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் சி ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
வரித்தபின் போக்தா (சி ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை
கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
பி ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு
பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.
பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.
பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.
ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.
மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்
மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.
பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.
பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.
அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.
பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.
பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.
மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.
6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.
அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.
மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.
சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்
கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.
கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.
இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.
மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.
இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.
தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
இதை விடுத்து இனி மரணம் பற்றி யோசிப்போம்
இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்தபின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் மிகவும் முக்கியமாகின்றது. முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக இது பற்றிய விபரங்களை (நாம் அறிந்தவற்றை) இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.
ஒருவர் நோய்வாய்ப் பட்டு, அல்லது (முதிர்ச்சி) வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலையில்); அந்த ஆன்மா இறைவனையே எண்ணும் படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்து நின்று பஐனைகள் (தோத்திரங்கள்) பாடுவார்கள். அனுபவம் மிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் "ஜீவன் போகப் போகுது" உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்று கூறுவர்.
அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால் பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் "பஞ்சாட்சர மந்திரம் -சிவாயநம" ஓதுவார்கள். இவற்றை நாம் செய்யும் போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் ஜீவன் (ஆன்மா) பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் எனபது ஐதீகம்.
ஆனால் நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால் ஆன்மா பிரியும் தறுவாயிலும்கூட அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து; அந்த ஆன்மாவை நின்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் பெரும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது எம் குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.
சைவ மதத்தைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக செய்யப் பெறும் கிரியைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இறுதிக் கிரியைகள்: இந்து மகன் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தண பொட்டும் வைத்து தெற்குத் திசை நோக்கி தலைப் பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்து விளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல் வைக்கப்பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்கு மேலே வெள்ளை கட்டுவார்கள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப் பெறுகின்றது. அதாவது இறந்தவரின் உடல் இருக்கும் இடத்தில் ஆவியானது வெள்ளை கட்டப்பெற்ற வெள்ளைத் துணியில் தொங்கிக் கொண்டு நிற்கும் என்பது ஐதீகம்.
அதனாலேயே இறந்தவரின் உடலை தோயவாக்கும் போதும் வெள்ளைத் துணி கட்டிய இடத்தில் வைத்தே தோய வார்க்கிறார்கள். அதன் பின்பும் இறுதிக் கிரியைகள் நடக்கும் போதும் வெள்ளை கட்டிய இடத்திலேயே தலைப் பக்கம் தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்கிறார்கள். குளிப்பாட்டும் போதும், கிரியைகள் நிகழும் போதும் இறந்தவரின் ஆத்மா அந்த வெள்ளை துணிகளில் தொங்கியவாறு இருக்கும் என்பது நமது மூதாதையினர் கூறிய விளக்கமாகும். இறந்தவரின் ஆவி இறந்த நாளில் இருந்து 15 நாட்கள் வரை அவ்வீட்டை சுற்றிக் கொண்டு நிற்கும் என்பதும் ஆன்றோர் வாக்கு. அதனாலேயே 3ம் நாள், 8ம் நாள், 15ம் நாள் படையல் என இறந்தவர் விரும்பி உண்ணும் உணவும், உணவுப் பண்டங்களும் படைத்து இறந்தரின் ஆவியை மகிழ்விக்கின்றார்கள்.
இக் கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை) தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் "சமாதியும்" இருத்துவார்கள்.
அனேகமாக வெளிநாடுகளில் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக் கிரியைகள் செய்து; மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகம விதிகளுக்கு அமைய இடம் பெறுகின்றன.
இறந்தவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி (பள்ளிவாசலில் வைக்கப் பெற்றிருக்கும்) பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மையவாடிக்கு (இஸ்லாமியர்-இடுகாடு) எடுத்துச் செல்வார்கள் அத்துடன் பூதவுடல் உயிர் பிரிந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்று விடும். அது அவர்களின் சமய கலாச்சாரமாகும்.
சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமய கிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம்தீபம் ஏற்றிய பின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறி எல்லாச் சந்தற்பங்களிலும் சமய கிரியைகள் செய்கின்றனர்.
ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் பிரிவதாக கூறப்பெறுகின்றது. இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால்; இறந்த உடன் பூதவுடலைச் சுத்தம் செய்து (குளிப்பாட்டி), விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒரு பகுதியில் தெற்குப் பக்கம் தலை இருக்கும்படியாக கட்டிலில் படுக்க வைத்து தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூர தேசத்தில் இருந்து வரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரிய மருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள். சில சந்தற்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிற்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது அல்லது உப்பை சீலைத்துணியில் கட்டி நெஞ்சில் வைத்தும், ஒரு சாக்கில் நெல்லை கட்டி கட்டிலுக்கு கீழே வைப்பார்கள். வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரே செய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தற்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் தெரியாது செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம்.
அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்தனை செய்யக் கூடியவர்களாக ஆண் பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினாலும் அவர்கள் விவாகம் செய்து கணவனுடன் இருப்பதாலும் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர்.
கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றது அபரக்கிரியை. இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.
சுபகிரியைகள் செய்யப் பெறும் போது ஆராத்தி, தீபங்கள் வலதுபக்கமாக உயர்த்தி செய்யப் பெறுகின்றன. ஆனால் அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப் பெறுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது (குருமார் இடதுபக்கத் தோழில் அணிவர்). ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அனேகமாக சுபகிரியையின் போது கும்பத்திற்கு வைக்கப் பெறும் மாவிலைகள் 5-7-9 ஆகவும் அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும்.
ஆன்ம ஈடேற்றத்திற்காக; சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன.
மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்; சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள். விளக்கமாக கூறுவதாயின் மரணச்சடங்கு முதல் பாஷாணபூசை வரையுள்ள பூசைகளை அபரக்கிரியைகள் என்றும், சபிண்டீகரணம, சிரார்த்தம் முதலியன சுபகிரியைகள் என்றும் அழைக்கப் பெறும். ஆனால் சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்ற வீட்டுக் கிரியைகளை சிலர் சைவக் குருமார் மூலம் செய்விக்கின்றனர். சைவக் குருமார் “சூத்திரராக” இருப்பதனால் சூத்திரர் ஒருவரின் இறப்பினால் அல்லது பிறப்பினால் உண்டான ”ஆசூசம்” என்னும் துடக்கு நீங்காது என பல சமூகங்களில் கருத்து நிலவுகின்றது. அதனால் அவர்கள் வீட்டுத் கிருத்தியங்களை (அந்தியேட்டி, துடக்குக் கழிவு போன்றவற்றை) பிராமண குருமார் மூலம் செய்விக்கின்றனர்.
இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும்.
மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை "ஆசூசம்" எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள்.
மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) பந்தல் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள்.
வெளிநாடுகளில் அதற்கென அமைக்கப் பெற்ற மண்டபங்களில் நடைபெறுவதால், அவ்விடத்தை மஞ்சள் தண்ணீர் தெளித்து புனிதமாக்கிய பின் கிரியைகள் செய்யத் தொடங்குவார்கள், பூதவுடல் மலர்சாலையைச் சேர்ந்தவர்களால் சுத்தன் செய்யப்பெற்று, அலங்கரிக்கப் பெற்றிருக்கும் அதனால், இங்கு குளிப்பாட்டுதல், அபிழ்ஷேகம் செய்தல் போன்றன செய்யப் பெறுவதில்லை, பதிலாக பஞ்சகவ்விய நீரினைச் தெளித்து பூதவுடலை புனிதப் படுத்துவார்கள்.
சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கடமை செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம் நோன்பு இருத்தல் அவசியம்.
கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப் பெறும். வீட்டின் தென் புறத்தில் தெற்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். சில ஊர்களில் கிரியை செய்யும் சைவக் குருவே அபிஷேகத்தை நடத்துவார்.
அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு அணியப் பெற்று பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் பொடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுத்முறை இடித்த பின்பு, திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்குன் ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம்.
பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பேறாக கருதுகின்றனர். சுமங்கலியாக இறப்பது என்பது வயோதிபமடைந்து, கணவருக்கு முதல் இயற்கை மரணம் எய்துதலைக் குறிக்கும். சுமங்கலியாகவே பூவோடும், பொட்டோடும் இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் இறைவன் கொடுத்த வரம் எனக் கூறுகின்றனர். கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து நடப்பவர்களுக்கு இப் பேறு சுலபமாக கிடைத்து விடுகின்றது என நம்புகின்றனர்.
கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டமாக தானம் வழங்கள் நடைபெறு, அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமான தாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார். அன்று முதல் அந்தப் பெண் நல்ல காரியங்களை முன்நின்று செய்வதற்கு அருகதை அற்றவள் என ஒதுக்கப் பெற்று விடுவாள்.
ஆதி காலத்தில் கணவனை இழந்த மனைவியை கணவரின் சிதையில் வைத்து உயிரோடு எரித்து விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சில பெண்கள் தானாகவே முன் வந்து உடன்கட்டை ஏறுவார்கள் பலர் ஊர்மக்களின் வற்புறுத்தலில் அதனைச் செய்துள்ளனர். இந்நிலை தற்போது மாற்றம் அடைந்து அப்பெண் இளமையானவளாயின் மறுமணம் செய்தும் வைக்கின்றனர்.
சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள். வெளி நாடுகளில் அதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் பந்தத்திற்குப் பதிலாக ஊதுபத்தியைப் பிடித்து இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திப்பார்கள்.
அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வைப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மரடித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகித பாபர் கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள்.
மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம்.
சிதையில் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறும், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரமாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசி இடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார்.
அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடல் நெருப்பில் எரியும்போது முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள்.
அதன் பின்; முன்போல மண்பாலைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு; கும்ப நீரினால் சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் செல்வது வழக்கம்.
அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு தொடராது என்ற நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அதில் ஒரு பெரியவர் தலைமை தாங்கி இக் கிரியையில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.
கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல்தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயல் உறவீனர்கள் பட்டினிச்சாப்பாடு கொடுப்பது வழக்கம்.
வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவையும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி, போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை செய்கின்றனர்.
காடாற்றுதல் (காடாத்து): இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப் பெறுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார். காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக் இருக்கும் சுடுகாட்டை ஆற்றுதல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்,)
காடு ஆற்றச் செல்வதற்கு நவதானியம், கடகம், குடம், அரப்பு, எண்ணெய், பழங்கள், தீன்பண்டம் முதலியவற்றை முற்றத்தில் வைப்பார்கள், பெண்கள் அதனை மூன்றுமுறை சுற்றி மாரடித்து அழுவார்கள். அதன் பின் கடமை செய்தவர், பெரியவர், இன்னும் உதவி செய்ய மூன்றுபேர் எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கே நெருப்புடன் இருக்கும் விறகுக் கொள்ளிகளை ஒதுக்கிய பின் குடத்தில் நீர் கொண்டுவந்து சிதை இருந்த இடத்தின் கால்மாட்டில் ஆரம்பித்து தலைமாடு வரை ஊற்றி பூர்த்து தணலாக இருக்கும் நெருப்பை அணைப்பார்கள். அப்போது பார்த்தால் பூதவுடல் படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும்.
பின் சிதை இருந்த தலைப்பகுதில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களையும் வைப்பார்கள். மண்கலசம் ஒன்றில் பால் ஊற்றி அதை தலைப்பகுதியிலும் வைப்பார்கள்.
கடமைகள் செய்தவர்; பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து (பூதவுடல் தகனம் செய்த இடத்தில் உடலின் எழும்புகள் எரிந்த இடம் பால் போல் வெள்ளைச் சாம்பராக தெரியும்) மேற்கே பார்த்து நிற்றுகொண்டு; கால் பகுதியில் இருந்து தலை நோக்கி புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தனம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறுப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைக்கவும்.
பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் (தவற விடாது) எல்லாவற்றையும் எடுத்து (முடியுமானவரை கடமை செய்தவரே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து; நெற்பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி படைப்பார்கள். அதன் பின்னர்; அரளி பூ மரத்தண்டை வெட்டி அந்த இடத்தில் அளைத்து நட்டுவிடுவர்கள். முன்னர் கலசத்தில் எடுத்த (முக்கிய எலும்புப் பகுதி (அசதியையும்), ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றையும் எடுத்து கடமை செய்தவர் வடக்கு முகமாக பார்க்க நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக கடலில் (நீர் நிலையில்) போட்டுக் கரைத்து விடுவார்கள். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். இதற்கென குறிக்கப் பெற்ற விதிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லோரும் செய்வதையே பின்பற்றிச் செய்கிறார்கள்.
எட்டுக்கிரியை. இதை பற்றி எந்த வித சாஸ்திரங்களும் இல்லை என்று அறிய முடிகின்றது. இருப்பினும் இது காலகாலமாக வழக்கத்தில் இருந்தே வருகின்றது. தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் உணவினை படைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் வகைகளை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும். பூதவுடல் தகனம் செய்யப் பெற்ற மூன்றாம் நாள் அல்லது உயிர் பிரிந்த எட்டாம்நாள் அல்லது இரண்டு தினங்களும் அவியலாக எல்லா வகை உணவுகளையும் சமைத்து மாலைநேரம் (மங்கல் பொழுதில்) படைத்து, பின் உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்.
அந்தியேட்டி. இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். இந்தக் கிரியை இரண்டு விதமாகச் செய்யப் பெறுகின்றது. அந்தியேட்டி கிரியை, வீட்டுக் கிரியை என்பன. அந்தியேட்டி (இது சாதாரண சைவர்கள்) பூதவுடலுக்கு பதிலாக தர்ப்பையினால் (புத்தணி) சரீரம் போல செய்து அதற்கு இறுதிக் கிரியையின் போது பூதவுடலுக்கு செய்யப் பெற்ற எல்லாப் கிரியைகளும் செய்யப் பெற்று தகனம் செய்து அதன் அஸ்தி (தற்பையின் அஸ்தி) பெறப்படுகின்றது. இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பத்தியொரு பிண்டங்கள் இடப்படும். இவற்றுள் தலைப் பகுதியில் வைக்கும் பிண்டம் பெரிதாக இருக்கும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச் சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும்.
நம் முன்னோர்கள் இப்பூசையை வசதி கருதியும், புனித ஸ்தலம் எனக் கருதியும் அனேகமாக எல்லோருமே கீரிமலையில் செய்வது வழக்கம். கீரிமலையில் இதற்கென பிரத்தியேக இடவசதியும், குருமாரும், புனிதமான சமுத்திரமும் இருப்பதனால் அங்கு சென்று செய்தனர். தற்பை சுட்ட அஸ்தியையும் (பாசாணத்தையும்), பிதுருகளுக்கு சமர்ப்பித்த பிண்டத்தையும், கும்பத்தையும் புனிதமான சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தல் புனிதம் நிறைந்ததென என கருதுகின்றனர். இக்கிரியைகளை சைவக்குருமாரே செய்வது வழக்கம்.
வசதி படைத்தோர்; தங்கள் வீடுகளிலோ, அல்லது ஊர் ஆலய வளாகத்திலோ மண்டபம் அமைத்து கிரியைகள் செய்தபின்; பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அல்லது தேர் போன்று ஒரு வாகனம் அமைத்து அதில் வைத்து மேளம் தாளம் முழங்க எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் கடற்கரைக்கு எடுத்துச் சென்று கடமை செய்தவர் இடையளவு தண்ணீரில் நின்ற வண்ணம் வடக்குப் பக்கம் பார்த்து நின்று முதலில் பிண்டத்தை தெற்கு பக்கமாகவும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்வார்கள். அந்தியேட்டி கிரியைக்கு கடற்கரையே உகந்த இடமாகக் கருதப் பெறுகின்றது.
பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை சப்பி, நெருப்பு, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கடமை செய்தவர் வீட்டினுள் நுளையும் போது ஆராத்தியும் எடுப்பார்கள்.
வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம். வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் செய்வதே ஒழுங்குமுறை.
இக்கிரியை பொதுவாக பிராமணக் குருமார் மூலம் செய்யப் பெறுகின்றது. சில இடங்களில் சைவக்குருமாரே இதனையும் செய்கின்றனர், காரணம் பிதிர்த்தற்பணம்; இறுதிக்கிரியைகள் செய்தவருக்கே உரியன எனக் காரணம் கூறப்படுகின்றது. இறந்தவருக்காக வழங்கப் பெறும் தர்ப்பணம் (உடை, குடை, செருப்பு, தானம் முதலியன) இறந்தவருக்காக கிரியைகள் செய்த தமக்கே வழங்கப் பெறவேண்டும் என்பது சைவக் குருமாரின் வாதமாகும்.
வீட்டுக்கிரியையின் போது இரண்டு பிராமணக்குருமார்கள் வருவார்கள். அதில் சிரேஷ்ட குரு கிரியைகளைச் செய்வார், மற்றயகுரு ஏகதிட்டம் என்றழைக்கப்பெறும் கிரியைகளைச் செய்து தானங்களைப் பெற்று முதலிலேயே சென்றுவிடுவார். அவர்செல்லும் போது வீட்டைத் திரும்பிப் பார்க்ககூடாது. அத்துடன் அவர் செல்லும் போது அவரின் பின்னால் சாணம் கரைத்த தண்ணீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குவார்கள். காரணம் அவர் அங்கே பிதிராக தோற்றமளிக்கின்றார்.
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக