வாரியார் சுவாமிகள்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.2021 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்
அதனால் இந்தப் பதிவு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில்
1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர்
. கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும், "வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்
உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் "வயலூர் எம்பெருமான்…" என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .
ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?" என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.
வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.
இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.
வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.
வாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப "துணைவன்", "திருவருள்", "தெய்வம்", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.
ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.
அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! "அம்மை" யில் வரும் "ஐ" இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், "ஐ" க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார்.
இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,
"தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என்று கண்ணதாசன் கேட்டார்,
அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.
வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் "கிருபானந்த "லாரி" வருகிறது" என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. "வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!" என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.
வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.
த னக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்" என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.
ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, "சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?" என்று கேட்டார்.
அதற்கு வாரியார், "இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே." என்று கூற "அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?" என்று கேட்டனர்.
இதனைக் கேட்ட வாரியார், "முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை" என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார்
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், "மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே" என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.
பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை "சொல்லின் செல்வர்" என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.
போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.
வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.
இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்
சுவாமிகள் 1936 ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
.
1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் இலண்டன் பயணமானார். 1993 நவம்பர் 7 இல் இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார்.
1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே "சரவண பொய்கை குளம்" என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது "திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்" ஆகியிருக்கிறது.
காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.
சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிறு வப்பட்டுள்ளது.


கருத்துகள்