அறிஞர் சித்திலெப்பை

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். அரேபிய மண்ணிலிருந்து வணிக நோக்கில் இலங்கைக்குப் பொருள் தேடிவந்த முல்க் ரஹ்மதுல்லா பார்பரீன் என்பவர் முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது பரம்பரையைச் சேர்ந்தவரே சித்திலெப்பை.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
முல்க் ரஹ்மதுல்லாவின் புதல்வரான முகம்மது லெப்பையும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடத்தியவராவார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்த இவர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த ஆண் மகவு தான் முகம்மது லெப்பை சித்தி லெப்பை ஆவார்.
1833ம் ஆண்டில் இந்நாட்டின் முதல் முஸ்லிம் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இன்னாருக்கு மூன்றாவது குழந்தையாக 1838 ஜூன் 11ல் கண்டியில் பிறந்தவர் முகம்மது காசிம் சித்திலெப்பை.
கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்த இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதிதிறமையாக விளங்கிய இவர் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.
கல்வியை முன்னிருத்தி சமுதாயத்தை மேம்படச்செய்யும் முயற்சிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டார். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி "முஸ்லிம் நேசன்" என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாகத் தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் போன்றவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிடத் தீர்மானித்து இருந்தார்.
சமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அகமது கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். இசுலாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது.
ஆகவே அவர் தமது சட்டத் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த தகுதியையும் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகத் தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.
சித்திலெப்பையின் சமகால சகாவான எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவரின் சமூகப் பணிகளுக்கு உறுதுணை புரிந்தார்.
1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இதற்கு முதன் முதலாக ஒறாபி பாஷா அவர்கள் நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கி இதன் வளர்ச்சிக்கு வித்திட்டார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக ”அல்-மதரசதுல் கைரியா” என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு சாஹிரா கல்லூரியாக மலர்ந்தது.
‘முஸ்லிம் நேசனை ‘ வெளியிட்டதன் மூலம் முதல் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குப் பாத்திரமான இவர் ‘அசன்பே சரித்திரம்’ எனும் நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ஈழத்தின் முதல் தமிழ் நாவலாசிரியர் என்ற பெருமையையும் அடைந்தார்.
முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான எம். சி. சித்திலெப்பை அவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் இசுலாமியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார்.
முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர் (Muhammad Cassim Siddi Lebbe) (ஆணி மாதம் 11, 1838 - மாசி 5, 1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவராவார். அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். இவர் 1885 இல் எழுதிய அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்
1505 முதல் போர்த்துக்கேய, ஓல்லாந்த, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளால் இந்நாட்டு முஸ்லிம்கள் சகல வழிகளிலும் பின்னடைவுக்கு உள்ளாகினர். 1800 களாகும் போது இச்சமூகத்தினர் கல்வியிலும் பெரிதும் வீழ்ச்சியடைந்திருந்தனர். ஆங்கிலக் கல்வி கற்றால் மதமாற்றத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில் ஆங்கில மொழியில் முஸ்லிம்கள் கல்வி கற்கக் கூடாது என இந்நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் தடை விதித்திருந்தனர்.
என்றாலும் சித்தி லெப்பை சமய நெறிகளுக்கு ஏற்ப ஆங்கில மொழியில் கற்றுத் தேர்ந்தார். அதன் ஊடாக சட்டத்தரணியானார். அதற்கேற்கப 1862 முதல் 1878 வரையான காலப்பகுதியில் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் என்றபடி மாத்திரமல்லாமல் கண்டி மாநகர நீதிமன்றத்தில் அடிக்கடி நீதிபதியாகவும் கடமையாற்றினார். கண்டி மாநாகர சபையில் 8 வருடங்கள் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
இக்காலப் பகுதியில் முஸ்லிம் உலகின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த ஜமாலுத்தீன் ஆப்கானி, சேர் செய்யத் அஹ்மத் கான் போன்றோரின் கருத்துக்களால் கவரப்பட்ட சித்தி லெப்பை, இந்நாட்டு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள சமூக, கல்வித் துறை வீழ்ச்சி கண்டு பெரிதும் கவலையடைந்தார். குறிப்பாக சமய சூழலில் ஆங்கில கல்வியை வழங்கி சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள், குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் நிலவும் சீர்கேடுகளை நீக்குவதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம் என அவர் நம்பினார். இதற்கென பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கருதினார்.
1882 டிசம்பர் 21 ஆம் திகதி 'முஸ்லிம் நேசன்' என்ற பெயரில் பத்திரிகையொன்றை இவர் ஆரம்பித்தார். இப்பத்திரிகையின் முதலாவது வெளியீட்டின் ஆசிரியர் தலைப்பில் இப்பத்திரிகையை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் அதன் பெயரின் நோக்கம் குறித்தும் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
'தமிழ் பாஷையை மாத்திரம் தெரிந்தவர்கள் அரபுக் கிதாபுகளில் இருந்து அறிய வேண்டிய அறிவுகளையும் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் உள்ள கல்விகளையும் விஷேசமான புதினங்களையும் படித்தவர்களும் படியாதவர்களும் முதியவர்களும் இளையவர்களும் மற்றவர்களும் தங்கள், தங்கள் வேலை முயற்சிகளோடு வாசித்தறிந்து கொள்ளும்படி ஓர் பத்திரிகையை வாரம் தோறும் பிரசுரம் செய்ய விரும்பி இப்பத்திரிகைக்கு முஸ்லிம் நேசன் என பெயரிட்டோம்'.
'நாம் இப்பத்திரிகையை பிரசுரம் செய்வது ஊரில் நடக்கும் புதினங்களை மட்டும் வெளிப்படுத்துவதற்கல்ல. மார்க்க விசயங்களையும் எடுத்துப் பேசி தர்க்கித்து திருத்தமடைவதற்கே'.
'வியாபாரம், கல்வி, சமயம், அரசியல், வழக்கு முதலியவைகளும் உலகத்தில் நிகழும் புதின சம்பவங்களுமே இப்பத்திரிகையில் பெரும்பாலும் பேசப்படும். முஸ்லிம்கள் சீர்திருத்தமும் நாகரிகம் அடைய வேண்டும் என்ற ஊக்கம் கொண்டே இப்பத்திரிகையை நடாத்துகின்றோம். இப்பத்திரிகையை நாம் பிரசுரம் செய்த பிரதான நோக்கம் கல்வி இன்பத்தை ஊக்குவிப்பதேயாகும்'.
இன்றைய நவீன யுகத்தில் அபார சக்தி மிக்க துறையாக விளங்குகின்ற ஊடகத்துறையின் பலத்தை 1870 களிலேயே சித்தி லெப்பை அறிந்திருந்திருக்கின்றார் என்பதற்கு முஸ்லிம் நேசனும் அப்பத்திரிகையின் ஆசிரியராக அவர் கடமையாற்றிய ஆறு வருடங்களும் நல்ல எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன.
இப்பத்திரிகையானது முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு பல்வேறு கோணங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகளை தாங்கி வந்ததோடு அக்காலப் பகுதியில் முஸ்லிம்களின் தேவைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பிரதிபலிக்கவும் தவறவில்லை.
அதேநேரம், தமிழ் இலக்க வளர்ச்சிக்கும் அவர் இப்பத்திரிகை ஊடாகப் பங்களித்தார். குறிப்பாக இக்காலப் பகுதியில் புத்தகங்களை எழுதும் நூலாசிரியர்கள் தம் மொழிநடையை மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் இலகுநடையில் எழுத வேண்டும் என்றும் காலத்திற்கு காலம் ஏற்பட்டு வருகின்ற மொழி வளர்ச்சியை நூலாசிரியர்கள் கருத்தில் கொண்டு பிற மொழிப் பதங்களைத் தவிர்த்து இலகு மொழியில் நடையில் எழுதுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அடிக்கடி வலியுறுத்தினார்.
இப்பத்திரிகை வெளியான காலப்பகுதியில் தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கிய வடிவங்களும் அறிமுகமாகிக் கொண்டிருந்தன. அவற்றையும் இவர் தமது பத்திரிகையில் அறிமுகப்படுத்தினார்.
இப்பத்திரிகைக்கு இலங்கையில் மாத்திரமல்லாமல் தென்னிந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு போன்ற நாடுகளிலும் வாசகர்கள் இருந்தனர். மேலும் இலங்கையின் முதலாவது நாவலாகக் கருதப்படும் 'அசன் பே சரித்திரம்', ஆன்மீக மேம்பாட்டுக்கான ஞானதீபம் சஞ்சிகை, அஸ்ராருல் ஆலம், சுறாதுஷ் ஸலாத் (தொழுகை விளக்கம்), துருக்கி மற்றும் கிரேக்க யுத்த வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பனவும் இவரது படைப்புக்களேயாகும்.
கல்வி, சமூக, கலாசார மேம்பாட்டுக்காக ஊடகத் துறையின் ஊடாக உழைத்துவந்த சித்தி லெப்பை, முஸ்லிம்களுக்கு கல்வி ஊட்டவென கொழும்பு, கம்பளை, குருநாகல் உள்ளிட்ட சாஹிராக் கல்லூரிகளையும் கண்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியையும் ஆரம்பித்தார்.
இலங்கையினதும் குறிப்பாக முஸ்லிம்களதும் மறுமலர்ச்சிக்காக பரந்தடிப்படையில் உழைத்த இவர் தமது அறுபதாவது வயதில் அதாவது 1898.02.05 இல் காலமானார். அன்னாரது ஜனாஸா கண்டி, மகியாவ காட்டுப்பள்ளி வளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நல்லடக்கத்தில் நாட்டின் பல பகுதியிலிருந்தும் முஸ்லிம்களும் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் கண்டியில் கடமையிலிருந்த பிரித்தானிய ஏகாதிபத்திய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
ஆகவே நாட்டினதும், குறிப்பாக முஸ்லிம்களினதும் சமூக, கல்வி மறுமலர்ச்சிக்காக சித்தி லெப்பை ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் அன்றைய அரசாங்கம் இவரை தேசிய வீரராக அறிவித்ததோடு நினைவு முத்திரையும் வெளியிட்டு கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
“சீதன முறை ஒழிக்கப்பட வேண்டும். பணம் படைத்தவர்க்ளுக்கு வட்டிக்கு கொடுப்பது போன்ற சூது நிரம்பிய கொடுக்கல் வாங்கல்களிலிருந்து நமது சமூகம் மீட்டுப் பாதுகாப்பட வேண்டும். ஓர் இனமாக நாம் எழுந்து நிற்பதற்கு சமூகத்தைப் பீடித்திருக்கும் இத்தகைய தளைகளிலிருந்து மீள வேண்டும். அத்தகைய முற்போக்கு சிந்தனைகளுடன் சுதந்திரத்திற்காக மேலெழ முடியுமாக இருக்கும். சமூகம் முழுதும் பெரும்பான்மையானவர்களிடத்தில் பீடித்திருக்கும் அறிவற்ற தனம் போன்றவற்றிருந்து விடுபடுவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு ஒரு சமுதாயமாக முன்னோக்கி வர முடியும். அதற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.” இது 1862 இல் முஸ்லிம் நேசனில் கூறியவை.
1815 இல் மலையக உடன்படிக்கையின் பின் ஆங்கிலேயர்கள் குறுகிய காலத்தில் முழு இலங்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இதன் விளைவாக 1818 இல் சுதந்திரத்துக்கான முதலாவது ஆயுதப் கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியானது மலையகத்திலே இருந்த தேசாபிமானிகள் மத்தியில், சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் குழுக்களும் இருந்ததாக இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சிரேஷ்ட கல்வியியலாலரான தென்னகோன் விமலானந்தவின் ஆய்வினூடாக சிங்கள தேசாபிமானிகளோடு தமிழ், முஸ்லிம் தேசாபிமானிகளும் இணைந்து சுதந்திரத்துக்கென போராடினார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
1848 எழுச்சியின் பின்யாரும் ஆயுத ரீதியில் முயற்சிக்கவில்லை. 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் இரண்டாவது அத்தியாயம் துவங்குகின்றது. அது ஓர் இயக்கம் மூலமாக பரிணமிக்கிறது. 1818, 1848 களின் ஆயுத எழுச்சிகளின் பின்னரான காலத்தில் மீண்டும் எழுச்சி பெறுவது கலாசாரம் மற்றும் சமூக எழுச்சிகள் வழியாகவே ஆகும். உலகிலே காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமேரிக்கா உள்ளிட்ட எல்லா பிரதேசங்களிலும் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்த அந்த நாடுகளில் சுதேச மக்கள் தமது நாடுகளில் காலநித்துவ ஆட்சியாளர்கள் அந்த சுதேச மக்களின் கலாசாரம், மொழி, மதம் மற்றும் உரிமைகளை சிதைத்தமையால் வந்த விழிப்புனர்வினாலே ஆகும்.இலங்கையில் தமிழ் வளர்சிக்கு ம் .இஸ்லாம் மதத் தெளிவுக்கும் நீண்ட பெரிய பங்காற்றியவர் அறிஞர் சித்திலெப்பை ஆவார் .

கருத்துகள்