திரு சபா ஆனந்தர்

^^^^^^^^^^^^^^^^^^
இணுவில் ஊரில் ஞானிகளும் அருளாளர்களும் தம் பாதச் சுவடுகளைப் பதித்து இதனைப் புண்ணிய பூமி ஆக்கியுள்ளனர். செம்மண் செறிந்த இவ்வூர் விவசாயத்துக்கு மிகவும் ஏற்றது. அதனால் முன்னாளில் விவசாயத்தைத் தமது வாழ்க்கைத் தொழிலாகப் பலர் கொண்டிருந்தனர். இணுவில் கிழக்கில் வாழ்ந்த கதிர்காமர் சபாபதி என்ற வேளாண் மரபினர் விவசாயத்துடன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியப் பணியும் ஆற்றினார்.
இவரைச் சபாபதிச் சட்டம்பியார் என்று எல்லோரும் பொதுவாய் அழைத்ததுண்டு.
இணுவில் சிவகாமி அம்பாளைக் குலதெய்வமாகக் கொண்ட இப்பெரியார் காலை மாலைகளில் கடவுள் வழிபாட்டை முக்கிய பணியாய்க் கொண்டவர். இவர் அன்னை சிவகாமியிடம் அளவற்ற அன்பு பூண்டவர். அவ்வாறே இணுவில் நொச்சியம்பதி முருகனிடம் நீங்காத பக்தியுடையவர் இவரின் இல்லக்கிழத்தி பத்தாவுக்கேற்ற பதிவிரதை. இல்லற வாழ்வை இனிதாய்க் கழித்த சபாபதி பொன்னம்மா குடும்பத்தினர் தெய்வத் திருவருளால் பெற்ற பிள்ளைகள் நால்வர். அவர்களுள் நான்காவது மகனின் பெயர் ஆனந்தர். 06.10.1910 அன்று ஆனந்தர் பிறந்தபோது இணுவில் ஒரு அறிஞனை பெற்றது
ஆண் பிள்ளையான ஆனந்தரை, நவரத்தினம் என்று அன்புடன் அனைவரும் அழைத்தனர். செல்லப் பிள்ளையாய் வளர்ந்த ஆனந்தர் தந்தையாரிடம் தமிழ் அரிச்சுவடியையும் தமக்கு அண்மையில் இருந்த பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வியின் பொருட்டு யாழ். இந்துக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார்.
கட்டைவண்டிக் காலத்தில் சாதாரண விவசாய குடும்பத்திற் பிறந்த ஆனந்தர் போதிய வாகன வசதி இல்லாததால் யாழ் இந்துக்கல்லுாரிக்கு நடந்து சென்றே கல்வி கற்றார். கல்லூரி நேரம் தவிர்ந்த வேளைகளில் தோட்ட வேலைகளுக்குத் தந்தையாருக்கு தமது உதவியதுடன் ஆலய வழிபாட்டிலும் கவனம் செலுத்தினார். இளம் வயதில் கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட வழக்கத்தால் முதுமை எய்திய காலத்திலும் ஆலயம் தொழுவதை அவர் விடவில்லை. தாம் தொழும் ஆலயங்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் அங்கு சென்று வழிபட்ட பின்னரே மனநிறைவு கொள்வார். நல்லைக்கந்தனின் மகோற்சவ காலத்திலே விடியற்காலையில் நாள்தோறும் சென்று, அக் கோயிலின் வெளி வீதியை பிரதிட்டை செய்வது அவரின் வழக்கம். பின்னாளில் உத்தியோக இடமாற்றங்களாலும் முதுமையாலும் அதனைச் செய்ய அவரால் இயலாமல் போயிற்று. ஆயினும் ஆலயம் தொழுவதை இயன்றவரை செய்து கொண்டே இருந்தார்.
திரு சபா. ஆனந்தர் யாழ் இந்துக்கல்லுாரியில் தொடர்ந்து தனது ஆங்கிலக் கல்வியை கேம்பிறிச் சீனியர் வகுப்புவரை கற்று, 1930ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் சித்தியெய்தினார். இத்தகைமையைக் கொண்டு இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் 14.03.1932 அன்று ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அங்கு ஆசிரியாராய் இருந்தபோது கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிற் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கு (1932-1934) பயிற்சி பெற்ற பொழுது ‘குருகவி வே. மகாலிங்கசிவம் போன்ற கல்விமான்களின் தொடர்பு கிடைக்கப் பெற்றார்
ஆசிரிய கலாசாலை படிப்பை முடித்துவிட்டு
மீண்டும் இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராய் சேர்ந்து குறுகிய காலம் கடமை ஆற்றினார். 31.10.1934 அன்று அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டார். பின்பு சைவ வித்யாவிருத்திச் சங்க முகாமையில் இயங்கிய அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயத்திலும் ( 14.05.193520.09.1936) திருநெல்வேலி செங்குந்த துவிபாஷா பாடசாலையிலும் (செங்குந்தா இந்துக் கல்லுாரி 01.10.1936-20.01.1942) ஆசிரியப் பணி ஆற்றினார்.
இயல்பாகத் தமிழ்ப் புலமையும் மதிநுட்பமும் வாய்ந்த திரு. சபா ஆனந்தர் ஓய்வு நேரத்தை வினே கழிக்காது தக்காரிடம் சென்று பாடம் கேட்கும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டதால் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பால பண்டித, பண்டித பரீட்சைகளில் தேறி 1941 ஆம் ஆண்டில் தமிழ்ப் பண்டிதரானார். இப் பரீட்சைகளுக்குப் பாட ஆயத்தம் செய்த காலத்தில் சமய இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அற நுால்களையும் தவத்திரு வடிவேல் சுவாமிகளிடம் கேட்டுத் தெளிந்ததாக நன்றிப் பெருக்குடன் திரு. ஆனந்தர் கூறுவார்.
கொஞ்சும் அழகு குடியிருக்க, கண்டோர் நெஞ்சம் களிப்புற வாழ்ந்த சபா. ஆனந்தர் திருமணப்பருவம் எய்திய வேளையில் இணுவில் தெற்கில் வசித்த திரு, திருமதி செல்லையா ஆனந்தியார் தம் பதியினாரின் தலை மகள் அன்னம்மா அவர்களை அறிஞர்களும், பெரியோர்களும், ஆசிகூறி 25.10.1941 அன்று மணம் முடித்து வைத்தனர்.
திருமண வாழ்விற் புகுந்த பின்னரும் "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு' என்ற வள்ளுவர் வாசகம் ஆனந்தர் அவர்களின் அடிமனத்தை ஊக்குவித்தது. அதனால் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய புலமைப் பரிசிலையும் பெற்று அப் பல்கலைக்கழகத்தில்தமிழ்வழி பற்றிய ஆய்வினைச் செய்து B.O.L. பட்டம்பெற்றார்
இணுவிலைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய புலமைப்பரிசிலைப் பெற்ற முதல் பட்டதாரி என்ற பெருமையும் இவருக்குண்டு. இவர் சென்னையில் பயின்ற காலத்தில், புகழ்பூத்த தமிழ் ப் பேராசிரியர்களான S. வையாபுரிப் பிள்ளை, R. P.சேதுப்பிள்ளை. V. வெங்கடராசு ரெட்டியார் போன்ற கல்விமான்களிடம் கற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கீழைத்தேச மொழியில் கலைமாணிப் பட்டம் பெற்றதால் தமிழ், ஆங்கிலக் கல்வி அறிவுடன் வடமொழி அறிவும் இவர் பெற்றுக் கொண்டார்.
புலமைப் பரிசில் கல்வியை முடித்து பின்னர் ஈழம் திரும்பிய ஆனந்தர், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். அக்கல்லுாரியில் (01.02.1945-31.10.1951) தமிழ், சமயம், புவியியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பித்து நற்பெயர் ஈட்டியதால் கல்வித் திணைக்களம் அவருக்கு விசேட பதவி அளித்து 01.11.1948 முதல் சம்பள உயர்வும் வழங்கியது. திரு ஆனந்தர் அவர்களின் புலமை யாழ்குடா நாட்டில் மட்டுமன்றி ஈழத்தின் பிற மாவட்டங்களுக்கும் தெரிய வந்தது. அதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அவருக்கு அழைப்புக்கள் வரத்தொடங்கின. இலக்கிய விழாக்கள், சமய விழாக்கள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகமேடைகள் என்றிவை போன்ற பல நிகழ்ச்சிகளில் ஆனந்தர் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார். சிறு வாக்கியங்களை மெதுவாகத் தொடுத்து கட்டுரை எழுதுவதிலும் இரட்டுற மொழிந்து உரையாற்றுவதிலும் ஆனந்தர் மிகவும் வல்லவர். அவரது பேச்சை எவ்வளவு நேரமும் சலிப்பின்றிக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அதனால் இலங்கை வானொலியும் அவரைப் பயன்படுத்தத் தவறியதில்லை.
கல்வி உலகில் புகழ்பூத்த மலராய்த் திகழ்ந்த ஆனந்தரின் சேவை வெளிமாவட்டத்துக்கும் தேவைப்பட்டதால் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுாரியில் அதிபராக இவர் நியமனம் பெற்றார்
இவர் 1950 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக B.Aபடிப்பை இலங்கையில் இருந்தே பெற்றுக் கொண்டார்
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுாரியில் அதிபராய் இருந்து நற்பணி ஆற்றிய காலப்பகுதி(01.11.1951-31.12.1963) இவருக்கு உயர்ந்த பெருமையைத் தேடிக் கொடுத்தது. பின்னர் இவரது சேவைகள் புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்திலும்(01.01.1964-30.06.1966) இடம் பெற்று அதிபர்ப் பதவியில் நற்பெயர் ஈட்டினார். திரு.சபா. ஆனந்தர் 06.10.1970 அன்று கல்விப்பணியில் நயினாதீவு மகாவித்தியாலய அதிபராக ஓய்வு பெற்றபோது அறிஞர் உலகம் அவரது நீண்டகாலக் கல்விச் சேவையைப் புகழ்ந்து பாராட்டியது.
கல்வி உலகிலும், அறிஞர் குழாத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெருமதிப்பீட்டிய திரு. சபா. ஆனந்தர் பிறந்தகத்திலும் வேட்டகத்திலும் தம்மாலான பங்களிப்பை ஈர்ந்து குடும்ப உயர்வுக்காகப் பெருமுயற்சி செய்துள்ளார். அத்துடன் கோயில் தொண்டுகள் அறப்பணிகளிலும் முன்னின்று உதவியுள்ளார்.மேலும் 'உழவார் உலகத்து ஆணி என்ற பொய்யா மொழியை நினைத்து உழைத்த பெருமையும் இவருக்குண்டு. மாடு,மனை, மக்கள், சுற்றம், யாவும் நிறைவுறப்பெற்று வாழ்ந்த சபா ஆனந்தர் யுவ ஆண்டு மாசி மூன்றாம் நாள் வியாழன் இரவு 2 மணியளவில் அபரபக்கத்துவாதசியும் பூராடநட்சத்திரமும் பொருந்தி வந்த புண்ணியப்பொழுதில் (16.02.1996-2a.m) இயற்கை எய்தியமை அறிஞர் உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்.
பண்டிதர் சபா ஆனந்தர் அவர்களின் வாழ்க்கைச் சிறப்பை நினைக்குமிடத்து
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்து
தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே' என்ற புறப்பாடல் வரிகளை மீளச்சிந்தித்தல் சாலப் பொருந்தும்.
சபா பால கெங்காதரன், ரகுபதி பால பாலஸ்ரீ தரன், பூபதி பால வடிவேற்கரன், கார்த்திகைக்குமரன், பாலமுரளிதரன் பாண்டவர்போல ஐவருடன் ஆனந்தகெளரி, ஆனந்தரமணி இரு செல்வப் புத்திரிகளோடு எழுவரும்பெற்று எழுந்து நின்றவர்
இதில் ஆச்சரியப்பட வைத்த விடயம் என்ன வெனில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ம் எவ்வாறு சானா சண்முகநாதன் அவர்களால் வளர்ந்ததோ அவர் வீட்டில் சானாவுக்கு அவர் சொல்வதை தமிழில் எழுதிக் கொடுத்தவர் சூர்யா குமாரி .இந்த சூர்யகுமாரியை சானா வீட்டில் காதலித்து திருமணம் செய்தவர் பூபதி பால வடிவேர்கரன்
மேலும் சானாவின் மகள் சுமதியை காதலித்து திருமணம் செய்தவர் இரகுபதி பா லவடிவேர்கரன்
சரிதை நீள்வதனால் அடக்கத்துடன் நிறைவு செய்கிறேன்

கருத்துகள்