நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் 47 வகையான நீர்நிலைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அவை:
1.அகழி: கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
2. அருவி: மலை முகட்டில் தேங்கியநீர் குத்திட்டு விழுதல்.
3. ஆறு: பெருகி ஓடும் நதி.
4. இலஞ்சி: பலவற்றுக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
5.ஆழிக்கிணறு: கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
6. உறைகிணறு: மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
7. ஊருணி: மக்கள் பருகும் நீர்நிலை.
8.ஊற்று: பூமிக்கு அடியிலிருந்து நீர் ஊறுவது.
9. ஏரி: பாச நீர்த்தேக்கம்.
10.ஓடை: அடியிலிருந்த ஊற்று எடுக்கும் நீர்/ எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11.கட்டுக் கிணறு: சரளை நிலத்தில் வெட்டி, கல் செங்கல் இவற்றால் சுவர் கட்டிய கிணறு.
12. கடல்: சமுத்திரம்
13.கண்மாய் (கம்வாய் - கம்மாய்): பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14.கலிங்கு: ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்காமல் பலகைகளால் / கற்களால் அடைத்துத் திறக்கக்கூடிய அமைப்பு.
15. கால்: நீரோடும் வழி
16.கால்வாய்: ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீரூட்டும் வழி.
17. குட்டம்: பெருங்குட்டை
18. குட்டை: சிறிய குட்டம்
19.குண்டம்: சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை.
20.குண்டு: குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21.குமிழி: நிலத்தில் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடைகிணறு.
22. குமிழி ஊற்று: அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று.
23.குளம்: ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர்நிலை.
24.கூவம்: ஓர் ஒழுங்கில் அமையாத கிணறு.
25.கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26. வாளி: ஆற்றுநீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச்செல்லுமாறு அமைந்த நீர்நிலை.
27. கேணி: அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
28.சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை.
29.சுனை: மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர்நிலை.
30.சேங்கை: பாசிக்கொடி மண்டிய குளம்.
31. தடம்: அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
32.தளிக்குளம்: கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர்நிலை.
33. தாங்கல்: தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஏரி.
34. திருக்குளம்: கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இதற்குப் புட்(ஷ்)கரணி எனப் பெயர்.
35.தொடுகிணறு: ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்.
36.தெப்பக்குளம்: ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
37. நடைகேணி: இறங்கிச் செல்லுமாறு படிக்கட்டு அமைந்த பெருங்கிணறு.
38.நீராவி(ழி): மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் சொல்வர்.
39.பிள்ளைக் கிணறு: குளம் ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.
40.பொங்கு கிணறு: ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
41.பொய்கை: தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை.
42.மடு: ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43.மடை: ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44.மதகு: பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.
45. மறுகால்: அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம்: வட்டக் குளம்.
47.வாய்க்கால்: ஏரி முதலிய நீர் நிலைகள்.
"நீரின்றி அமையாது உலகு', "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றெல்லாம் முன்னோரால் போற்றப்பட்ட "தண்ணீர்' திரவத் தங்கமாய்த் திகழ்கிறது. நீர் நிலைகளைக் காப்பதன் மூலமே பார் மக்களைக் காக்க முடியும்!
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதைத் தடுக்க குட்டையாக உருவாக்கினர். அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர். நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது. இவை பொதுவாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன. இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன
குளங்கள் முதன்முதலில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை. விவசாயத்திற்குக் குறைந்த அளவிலும், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது. குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது.
பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காகச் சற்று வளைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் அமைந்திருக்கும். கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படும்.
இப்படி பெரிதாக இருப்பது மடு எனப்படும்
கருத்துகள்
கருத்துரையிடுக