வி. கே. பஞ்சமூர்த்தி பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தார். இவரின் ஆரம்ப குரு பேரனார் மூளாய் ஆறுமுகம்பிள்ளை, இணுவில் கந்தசாமிப்பிள்ளை, தந்தை அமரர் கோதண்டபாணி. அதன் பின் தமிழகம் சென்று ஆண்டார்கோயில் ஏ. வி. செல்வரத்தினம்பிள்ளை, அமரர் குளிக்கரை பிச்சையப்பாபிள்ளை ஆகியோரிடம் இவர்களிடம் குருவாசம் பெற்று நாதஸ்வரக் கலையை முறையாகப் பயின்று நாடு திரும்பினார்.
இவரின் தமையனார் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தி. இவர்கள் இருவரும் 33 ஆண்டுகள் இரட்டையர்களாக நாதசுவரம் வாசித்தவர்கள். இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று பாராட்டும், புகழும் பெற்றவர்கள் ஆவர்.
மார்ச் 23, 1989 இவர்கள் இருவரும் நாதஸ்வர இசைத்துறையில் பிரவேசித்த வெள்ளிவிழாவை கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதி அரங்கில் விழாவாக நடத்தியது.
இவர்கள் பல்லாண்டுகளாக பல சைவ ஆலயங்கள், திருமணச் சடங்குகள் என இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்து பெரும் விருதுகள், பாராட்டுகள், கௌரவங்கள் என புகழ் பெற்றார்கள்.
வி. கே. கானமூர்த்திசிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 10, 2008 இல் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.ஒருமுறை சென்னையில் இவர்களது இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவ்வழியால் சென்ற எம்.எஸ்.சுப்புலஷ்மி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களது கச்சேரிக்குக் சென்று முழுமையாக ரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தனர்.( எம்.எஸ்.சுப்புலஷ்மிபற்றிய எனது முகநூல பதிவை ஒரு முறை பாருங்கள் )
மேலும் என். கே. பத்மநாதன் பற்றி பார்ப்போமாகில் 1931 - ஜூலை 15, 2003, அளவெட்டிமண்ணில் பிறந்தவர் ,
தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை முதலானோருக்கும், ஈழத்தில் எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை, பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை முதலான வித்துவான்களுக்கும் தாளக் காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.
தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நாதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமிப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் வி. தெட்சணாமூர்த்தியும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதசுவரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் அம்பல் இராமச்சந்திரனுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.
தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு இசைக் குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.
பத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரனும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களாக ஆஸ்தான வித்துவானாக இருந்திருக்கிறார்.
நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது
இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது
இக்கருவி
ஆச்சா மரத்தில் செய்யப்படும். இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழைமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்ததினாலான் கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது
பொதுவாக இலங்கையில் வாழ்ந்த நாகர்களின் வாத்தியம் இது .
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது
இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து காயப்போட்டு ஒரு வருடம் ஆனதும் நெல் வேகவைக்கும் போது கூட வேக வைத்து, நீராகாரத்தில் ஊறவைத்து மிருதுவாக்கி சுதிக்கு ஏற்ப அதை வெட்டி சீவாளி தயாரிக்கிப்படுகிறது. இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடுஇணைக்கப்பட்டிருக்கும்.
நாதஸ்வரம் ஒரு இசைக்கருவி . இதில் இசை உருவாதற்கு சீவாளி, நாதஸ்வரக் குழலில் அமைந்திருக்கும் துளைகள் காரணமாகின்றன. சீவாளியில் அமைந்திருக்கும் மெல்லிய இடைவெளியில் வாயிலிருந்து காற்று அனுப்பப்படுகிறது. இதனால் சீவாளியினால் அடிப்படை சுரம் உருவாக்கப்படுகிறது. நாதஸ்வரக் குழலில் இருக்கும் துறைகளைப் பயன்படுத்தி, நாதஸ்வர குழலினுள் இருக்கும் காற்றின் அளவு மாற்றியமைக்கப்படுகிறது. இதன் விளைவாக காற்று பலவித சுர, நாத வேறுபாடுகளைக் கொண்ட இசையாக மாறுகிறது.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
நாதஸ்வரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.இதன் மேல்பகுதி 'உளவு' அல்லது 'உடல்' என்றும்,கீழ்ப்பகுதி'அணைசு' அல்லது 'அணசு' என்றும் அழைக்கப்படும். நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளைஅமைத்திருப்பர். இதற்கு 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர். இதில் எட்டாவதாக அமைக்கப்பட்டிருக்கிற துளைக்கு 'பிரம்மசுரம்' என்று பெயர். நாகசுரத்தில் செலுத்தப்படும் கூடுதலான காற்று இதன் வழியாகத்தான் வெளியேறும்.
நாகஸ்வரத்தில் காற்றை உட்செலுத்தி ஊதுவதற்கு உதவுவது 'சீவாளி' (ஜீவஒலி). காவிரிக் கரையில் விளையும் கொருக்கன் புல்லைப் பலவழிகளில் பதனிட்டு சீவாளியைச் செய்வர்.
கோயில் பூசைகளிலும்,திருவிழாக்களிலும் நாகஸ்வர இசை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக தவிலில் 'அலாரிப்பு' வாசிக்கப்படும். இது 'கண்ட நடையில்' அமைந்த சொற்கோவையாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில் 'கம்பீரநாட்டை'யும் அதன்பின் 'மல்லாரி' ராகமும் வாசிக்கப்படும்.இந்த மல்லாரியை வாசித்தவுடனேயே வெகு தூரத்திலிருப்போரும் கூட திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றதென்பதை அறிந்து கொள்வர்.இத்தகைய மல்லாரி பல வகைப்படும். தேர்த்திருவிழாவின் பொழுது 'தேர் மல்லாரி'யும்,சுவாமி புறப்படும் பொழுது அலங்கார மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு வரும்வரையிலும் 'பெரிய மல்லாரி'யும் வாசிக்கப்படும்
.கடவுள் யாகசாலைக்கு வந்ததும் தவிலும்,தாளமும் இன்றி நாகசுரத்தில் காப்பி,கானடா,கேதாரகெளளை போன்ற ராகங்கள் வாசிக்கப்படும்.
யாகசாலையிலிருந்து கோபுரவாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்பொழுது 'திரிபுடை தாளத்து மல்லாரி' வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும்,அந்தந்தத் தெய்வங்களுக்குரிய 'சின்ன மல்லாரி' வாசிக்கப்படும்.அதன்பின்பு காம்போதி,சங்கராபரணம்,
பைரவி,சக்கரவாகம் போன்ற ராகங்களில் ராக ஆலாபனை நடைபெறும். இந்த ராக ஆலாபனை கிழக்கு வீதியிலும்,மேற்கு வீதியில் பாதி வரையும் நடக்கும். அதன் பிறகு ரத்தி மேளமும்,ஆறுகாலத்தில் பல்லவியும் வாசிக்கப்படும்.இவ்வாறு கீழ் வீதியின் நடுப்பகுதி வரையிலும் பல்லவி,
சுரப்பிரஸ்தாரம்,ராகமாலிகை என்று வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலை அடைந்ததும் பதம்,தேவாரம் முதலிய பாடல்கள் வாசிக்கப்படும். தற்காலத்தில் இந்தப் பழைய மரபில் சில மாற்றங்கள் உள்ளன. மல்லாரி முடிந்த பின்பு 'வர்ணம்' என்ற இசை வகையும்,பின்பு சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும் பொழுது கீர்த்தனை,பதம்,ஜாவளி,தில்லானா,காவடிச் சிந்து போன்ற இசை வகைகளையும் வாசித்து மகிழ்கின்றனர்
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்குள்ளே நுழையும் பொழுது சுவாமிக்கு 'கண்ணேறு' கழிக்கப்படும். அப்பொழுது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள்.இதற்குத்
'தட்டுச்சுற்று' என்று பெயர்.பின்பு பதம் அல்லது திருப்புகழ் வாசிப்பர்.பின்பு சுவாமி மூலஸ்தானத்திற்குச் செல்லும் பொழுது 'எச்சரிக்கை' என்னும் இசை வகை வாசிக்கப்படும்.இதற்குப் 'படியேற்றம்' என்று பெயர்.திருக்கோயிலின் பூசைக்கு நீர் கொண்டு வரும்போது 'மேகராகக் குறிஞ்சி' ராகமும், குடமுழுக்கின் பொழுது 'தீர்த்த மல்லாரி' யும் வாசிக்கப்படும்.மடப்பள்ளியிலிருந்து இறைவனுக்குத் தளிகை எடுத்து வரும்போது 'தளிகை மல்லாரி' வாசிக்கப்படும்.இறைவனின் திருக்கல்யாணம் நடக்கும் பொழுது 'நாட்டைக் குறிஞ்சி'யோ 'கல்யாண வசந்த'மோ வாசிக்கப்படும்.பெரிய கோடி வாயிலிலிருந்து தேரடி வரையில் கலைஞர்கள் வாசிப்பது "மிச்ரமல்லாரி".
ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாகப் பொழுது புலருமுன் நான்கு மணி தொடங்கி
பூபாளம்,பௌனி,மலையமாருதம் வாசிக்க வேண்டும்.உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும்.அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.
நாட்டை ராக ஆலாபனையைத் தொடர்ந்தே இறைவனின் புறப்பாடு நடைபெறும்.சில திருக்கோயில்களில் இந்த இந்த இடங்களில் இன்ன இன்ன ராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக