மார்கழி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு டிசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.
குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
சூரியமுறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
சூரிய உதயத்தை வைத்தே சாதகங்களும் கணிக்கப்படுகிறது
பண்டைய அரபுக்களிடத்தில் சந்திர மாதங்களைக் குறிக்க ஒரு நாட்காட்டியும் சூரிய மாதங்களைக் குறிக்க மற்றம் ஒரு நாட்காட்டியும் இருந்தன. இசுலாத்தில் நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்ற சமய வழிபாடுகளுக்காக சந்திர மாதங்களே கணக்கிற் கொள்ளப்படுகின்றன. ஆயினும் இதிற் கருதப்படும் சந்திர மாதங்களைக் கொண்ட நாட்காட்டி முறை இசுலாத்துக்கு முன்னரே அரபியரிடம் இருந்த வழக்கமாகும். இச்சந்திர மாதங்களாவன:
முஹர்ரம்
ஸபர்
றபீஉல் அவ்வல்
றபீஉல் ஆகிர்
ஜுமாதுல் ஊலா
ஜுமாதுல் உக்றா
றஜபு
ஷஃபான்
றமளான்
ஷவ்வால்
துல்கஃதா
துல்ஹிஜ்ஜா என பன்னிரண்டு ஆகும்
இந்துக் காலக் கணிப்பு முறையான சந்திர மானத்தின் அடிப்படையில் சந்திர மாதம் என்பது ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்கின்ற காலமாகும். ஒரு மாதத்திற்கு வளர்பிறையான சுக்கிலபட்ச 15 நாட்களையும், தேய்பிறையான கிருஷ்ண பட்ச 15 நாட்களையும் சேர்த்து 30 நாட்களாக கணக்கிடப்படுகிறது.
பூர்ணிமாந்தா என்றும் அமாந்தா என்றும் சந்திர மாதம் வட இந்தியாவில் அழைக்கப்பெறுகிறது.
சந்திர மாதங்கள்
சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
தை
மாசி
பங்குனி எனப் பன்னிரண்டு ஆகும்
இலங்கை வாழ் சிங்கள பௌத்தரிடையே சந்திர மாதங்களைக் கணிக்கும் முறையே பண்டைக் காலந் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆயினும் பண்டைய முறைக்கும் தற்கால முறைக்குமிடையே வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அம்மாதங்களாவன:
துருத்து (දුරුතු)
நவம் (නවම්)
மெதின் (මෙදින්)
பக் (බක්)
வெசக் (වෙසක්)
பொசொன் (පොසොන්)
எசல (එසල)
நிக்கினி (නිකිණි)
பினர (බිනර)
வப் (වප්)
இல் (ඉල්)
உந்துவப் (උඳුවප්) எனப் பன்னிரண்டு ஆகும்
மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.
பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொது நலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு சொல்கிறது
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கத்தை ஏற்படுத்தப்பட்டது.
மார்கழியில் சுபநிகழ்ச்சிகள் நடத்தாதால், சிலர் இம்மாதத்தை பீடை மாதம் என்கின்றனர். இது தவறாகும். பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லியிருப்பதில் இருந்தே நாம் இம்மாதத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவதற்குரிய உன்னத மாதமாகும். நமது ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக நோன்பிருந்து இறைவனை அடைய வேண்டிய மாதம் இது. எனவேதான் இம்மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.
மார்கழி அதிகாலையில் திருவெம்பாவை பாடினால் நமது ஆத்மா சுத்தமடைகிறது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் சிக்கியுள்ளது நமது ஆத்மா. இதனால் இருளில் கிடந்து உழல்கிறது. திருவெம்பாவை பாடுவதால், இறைவனின் திருவருளைப் பெற்று ஆத்மா பரிசுத்தம் அடைகிறது. ஆத்மசுத்தம் என்றால் மன சுத்தம். மனம் சுத்தமானால் வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. நீராட வா என்று அழைப்பது வெறுமனே குளத்தில் போய் குளிப்பதை மட்டும் குறிப்பதல்ல. மனதிலுள்ள மாசுகளைக் கழுவுவதையே நீராட்டம் என்ற வார்த்தையால் குறிக்கிறார் மாணிக்கவாசகர்.
சம்பாதித்த பணமெல்லாம் வீணாய் போகிறதே...’ என கவலைப்படுபவர்கள், அது நிலைத்திருக்க திருப்பாவை பாடுங்கள். ஆண்டாளின் வளர்ப்புத்தந்தையான பெரியாழ்வார், நந்தவனத்தில் ஒருநாள் துளசிச் செடிக்கு அருகில் பூமிதேவியின் அம்சமாக குழந்தை வடிவில் ஆண்டாளை கண்டெடுத்தார். வாரிஎடுத்து, மார்போடு அணைத்து கொண்டு மகிழ்ந்தார் பெரியாழ்வார். கோதை’ என்று பெயரிட்டார். உலகம் நிறைக்கும் புகழுடன் திருமகள் போல வளர்த்தார். ஸ்ரீவில்லிபுத்துõரை கண்ணன் வளர்ந்த ஆயர்பாடியாகவும், அங்குள்ள வடபெருங்கோயிலை கண்ணன் வளர்ந்த நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள வடபத்ரசாயி பெருமாளை கண்ணனாகவும் எண்ணி பாவைநோன்பு நோற்றாள். அவர்கள் பாடுவது போல முப்பது பாடல் பாடினாள். இதனைப் பாடுவோர் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்’ என்கிறாள். திருப்பாவை பாடுவோர், நிலைத்த செல்வம் பெறலாம்.
மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்' என்கிறோம். ஆகையால் இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வாழ, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கை.
அறிவியலின்படி, மார்கழி மாதத்தில் தான் ஒசன் படலம் பூமிக்கு அருகாமையில் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ளது. ஒஸோனை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நல்லதென்ற காரணத்தாலேயே பெண்களை காலையில் கோலம் போடவும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் எனலாம்.
மார்கழியின் பெருமையை ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார். மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், "போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்' - என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மாதங்களில் நான் மார்கழி மாதம் என்று கீதையில் கண்ணன் கூறுகிறான்.
விஷ்ணு புராணம்பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை பற்றி கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடை
பெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்யாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்று பாகவதம் கூறுகிறது. இதனைப் பின்பற்றியே ஆண்டாளும் காத்யாயனி நோன்பிருந்து கண்ணனை கணவனாக அடைந்தாள். இந்நோன்பே பாவை நோன்பாகவும் கூறப்படுகிறது. இதனையே சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
இப்பெருமை பெற்ற மாதத்தை ஏன் சூன்ய மாதமென்று கூறுகிறோம்? சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை (இறைவனைச் சரணடைதல்) கடைப்பிடிக்க வேண்டும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆண்டாள் தான் மட்டும் இல்லாமல் எல்லா தோழிகளையும் அழைத்து கூட்டு வழிபாடாக பாவை நோன்பை நோற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக் கொள்வதற்கு உரிய மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றால் இறைவழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் வீடுகளில் நடைபெறுவதில்லை.
இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் நீ வந்து என்னை ஆட்கொள்...' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், முப்பது நாள் கடுமையான நோன்பிருந்து, எண்ணிய படியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள்.
எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் கூடாரை வல்லி வைபவம் மார்கழி 27 ஆம் நாள் கொண்டாடப்படும். ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும் இம் மாதத்தில் வருகின்றன. அனுமன் அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. மகாபாரத யுத்தம் நடந்ததும் கீதை பிறந்ததும் இம்மாதத்தில்தான்.
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு குருவார பூஜை எனப் பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
ஒரு நாள் உமாதேவி ஈஸ்வரனிடம், இவ்வுலக மக்கள் பிறப்பு இறப்பின்றி முக்தி பெற என்ன வழி எனக் கேட்டாள். மார்கழி மாத அஷ்டமி தினத்தில் சிவாலய பிரதட்சணம் செய்தால் அப்பலன் பெறலாம் என்று கூறினார் என்கிறது ஸ்கந்தபுராணம். பாவங்கள் விலகி முக்தி தரும் பிரதட்சணம் இது. கன்னியர் இந்நோன்
பிருந்து காத்யாயினி தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால், தம்பதியர் ஒற்றுமை கூடும் இல்லறம் நல்லறமாக இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு. அதில் மார்கழி கேசவன் என்பது பெயர். கேசவன் என்பதற்கு, கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர். கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்றும் பொருள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மார்கழியில் ஒன்பது நாள்கள் விழா நடைபெறும். அந்த நாள்களில் அம்மன் சித்திரை வீதியில் உலாவருவாள். திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நடந்ததும் நடராஜர் மாசி வீதியில் வலம் வருவார். அஷ்டமியன்று அம்மன், சுவாமி இருவரும் ரிஷப வாகனத்தில் கோட்டை வீதியில் உலா வருவார்கள்.
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு, நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.
இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.
இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. மேகத்தின் அதிபதி இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும் உயிர்கள் வாழும் எனவே பண்டைய நாள்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. முன்னோர்களுக்கு பூஜை, காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.
மார்கழி முழுதும் அதிகாலை நீராடி இறைவன் நாமாவை ஒரு முறை ஜபித்தாலே கோடிமுறை ஜபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை பெறுவர். கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். மணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்
சிறிது விளக்கமாக கூறுவோமாகில் ..
நம் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. ஒரு சாதாரண மனிதனிடம் எண்பது சதவிகிதம் ஆக்ஸிஜனும், இருபது சதவிகிதம் கரியமில வாயுவும் உள்ளது. நம் தவறான பழக்க வழக்கங்களால் இந்நிலை மாறி கார்பன்-டை-ஆக்சைடு கூடும்போது நம் உடல் நிலை பாதிக்கப்படுகிறது.
இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன்படலம் வழியாக நமக்கு ஆரோக்கியம் தரும் ஈரக்காற்று வீசுவதால் அந்த பனியில் நனைந்து கொண்டு அதிகாலையில் பெண்கள் கோலம் போடுவதும்; ஆண்கள் கடவுளர்களின் திவ்ய நாமத்தை கூறிக்கொண்டு வீதிவீதியாக நடந்து செல்லும்போது அந்த நல்ல சுவாசம் நம் உள்ளே சென்று உடல் அழுக்கோடு, உள்ள அழுக்கும் வெளியேறுகிறது.
அறிவார்ந்த, விஞ்ஞான நுணுக்கம் தெரிந்திருந்த நம் முன்னோர்கள் இதை நம் தேக ஆரோக்கியத்திற்காக வழிவகுத்துக் கொடுத்ததுடன் சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிப்பாதுகாக்க ஒரு ராஜபாட்டையை போட்டுள்ளனர். நம் கண்ணுக்குத் தெரியாத பலவிதமான ஜீவராசிகள் மழை மற்றும் பனிக்காலங்களில் இறை தேடி தவிக்கும். அதனால் அதன் பசியைப் போக்க அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.
பசுவின் சாணத்தில் மகாலட்சுமி உறைந்துள்ளாள் எனவும் பிள்ளையார் இருப்பதாகவும் கூறி பயமுறுத்தி வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் உண்மை என்னவெனில் பசுமாட்டின் சாணத்தில் கண்ணுக்குத் தெரியாத, கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் அற்புதமான கிரிமிநாசினி இருப்பதால்; அதனை விடியற்காலையில் நம் வீட்டைச்சுற்றியும், வாசலிலும் சாணி தெளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
இந்த மாதத்தில் பரங்கி மற்றும் பூசணிப் பூக்கள் பூக்கும் ஆதலால் அந்த பூக்களை பறித்து பசுஞ்சாணத்தை பிள்ளையார் போல் குவித்து நடுக்கோலத்தில் வைத்து அதில் இந்த பூவினை சொருகி வைப்பார்கள். இதில் ஒரு முக்கியமான செய்தி ஒளிந்துகொண்டுள்ளது; என்னவெனில் இன்று இருப்பதைப்போல் அப்போது கல்யாண வெப்சைட் மற்றும் தரகர்கள் கிடையாது. பஜனைப்பாடல்களை பாடிக்கொண்டு வரும் பெரியவர்கள்; எந்த வீட்டின் வாசலில் கோலத்தின் மீது மலர்ந்த பரங்கிப்பூ வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்களோ; அந்த வீட்டில் திருமணத்திற்கு பெண் இருக்கிறார் எனத் தெரிந்து கொண்டு; அந்த வீட்டுப் பெண்ணை தன் வீட்டிலுள்ள மணமாகாத வாலிபர்களுக்கு பின்னர் சென்று பார்த்து பேசி மணமுடிப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் மார்கழி சென்று "தை பிறந்தால் வழிபிறக்கும்" என்ற பழமொழி பிறந்ததோ என கருதத் தோன்றுகிறது.அல்லவா ?
மார்கழி மாதத்தில் பனியில் நனைந்துகொண்டு குனிந்து நிமிர்ந்து கோலம் போடும்போது ஒரு யோகாசனம் செய்வதைப்போல் சுவாசம் சீராவதுடன், நுணுக்கமான புள்ளிகளை வைத்து பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் கோலம் போடும்போது நம் கண், மூளை ஆகியவை ஒருநிலைப்படுவதோடு ஒரு விதமான உந்துசக்தி பெருகுகிறது. நம் பாதுகாப்புடன் அழகுக்கு அழகும் சேர்கிறது.
ஆகையால்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக