ஈழத்தின் பிரபல நாடக ஆசிரியரும், நாடக கலைஞரும், புகழ்பூத்த எழுத்தாளருமான கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை தனது 86 ஆவது வயதில் யாழில் காலமானது பற்றி அறிந்திருப்பீர்கள் .
ஒருவன் மரணித்து விடடால் அவனின் வரலாறை மறந்து விடும் சமூகம் தமிழ் சமூகமா ?என்ற கேள்வி என் மனதில் எழுகிறது .
1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்-22 ஆம் திகதி யாழ். அராலியில் பிறந்த ந. சுந்தரம்பிள்ளை யாழ்ப்பாணம் நீராவியடி கடையிற் சுவாமி வீதியை நீண்டகால வசிப்பிடமாக கொண்டிருந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான நடராஜா- பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற மங்கயற்கரசியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற மணிவண்ணனின்(ஆசிரியர்) பாசமிகு தந்தையாரும் ஆவார்.
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ந. சுந்தரம்பிள்ளை பட்டப்பின்படிப்பாக ‘கல்வி டிப்ளோமா’ பட்டத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன் நீண்டகாலமாக ஆசிரியர் பணியும் ஆற்றியுள்ளார்.
இவரது முதலாவது சிறுகதை கடந்த -1950 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் ‘கையொப்பம்’ எனும் தலைப்பில் வெளியானது.
இவரின் சிறுகதைகள் இலங்கையில் வெளிவரும் தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
பல எண்ணிக்கையான சிறுகதைளை இவர் எழுதியிருந்தாலும் சிறுகதைத் துறையினை விட நாடகத்துறையிலேயே இவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது முதலாவது நாடகம் கடந்த1954 ஆம் ஆண்டு டிசம்பர்-31 இல் ‘இழந்த காதல்’ எனும் தலைப்பில் அராலி சரஸ்வதி வித்தியாசாலையில் அரங்கேற்றம் கண்டது. இந்த நாடகத்தின் நாடக ஆசிரியராகவும், கதாநாயகனாகவும் இவரே இருக்கி றார்.
கடந்த- 1959 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியேற்ற பின்னர் இவர் தனது சொந்த மண்ணான அராலியில் மேடை நாடகத் தொழிற்பாடுகளில் முழு மூச்சில் ஈடுபடலானார். இந்நிலையில் கடந்த 1954 இற்கும் 1974 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் இருபது நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.
இவரது முதலாவது வானொலி நாடகம் இலங்கை வானொலியில் “நானே ராஜா” எனும் தலைப்பில் கடந்த -1980 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் சுமார் 385 இற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
இவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று பின்னர் முழுநேர வாசிப்பையும் எழுத்தையும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்து வந்தார்.
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின் இழப்பு ஈழத்து நாடகத்துறைக்கு பேரிழப்பு என்றால் மிகையாகாது.
கெட்டிக்காரர்கள் - 1988
முதலாம்பிள்ளை - 1990
வீடு - 1997
யாழ்ப்பாணமா? கொழும்பா? - 1998
எங்கள் நாடு - 2002 (பரிசு பெற்ற வானொலி நாடகங்கள்)
மழைவெள்ளம் - 2003
இமயம் - 2004
என்னும் வானொலி நாடக நூல்களும்
நாடகம் எழுதுவது எப்படி? - 1997
வானொலி நாடகம் எழுதுவது எப்படி? - 2003
சிறுகதை எழுதுவது எப்படி? - 2005
யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள் - 1997
என்கிற இலக்கிய சம்பந்தமான நூல்களும்
விமர்சன நூல்களாக......
இலக்கியக் கட்டுரைகள் - 2000
'வீடற்றவன்' நாவலின் விளக்கமும், விமர்சனம் - 2001
இலக்கிய விமர்சனம் - 2002
பொருளோ பொருள் நாடகத்தின் விளக்கமும் விமர்சனம் - 2004
அக்கரைச் சீமையில் - 1994
ஒரு காதலின் கதை - 2001என்னும் நாவல்களும்
யாழ்ப்பாணம் - 1999 என்னும் சிறுகதை தொகுப்பும்
பொலிடோலே கதி - 1976
பணமோ பணம் - 1977
என்னும் மேடை நாடகங்களும்
இவரால் எழுதப்பட்டி ருக்கிறது
அதை விட இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 2000ஆம் ஆண்டு நடத்திய பவளவிழா இலக்கியப் போட்டிகளில் வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய ஒருங்கிணைப்பு செயல்திட்டப் பணியகம் ஆகியன ஒருங்கிணைந்து 1998 ஆம் ஆண்டு நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு
நோர்வே நாட்டுத் 'தமிழ் நாதம்' வானொலி நிலையம் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு
நோர்வே நாட்டிலுள்ள 'மொல்டே தமிழ் கலை கலாசார மன்றம்' அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
கனடா ரொறன்ரோ பெருநகர் - ஆசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவினால் அகில உலக ரீதியில் நடத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
இலங்கை வானொலி 1995ஆம் ஆண்டு நடத்திய நாடகம் எழுதும் போட்டியில் முதலாம் பரிசு.
வீரகேசரி பத்திரிகை 1997ஆம் ஆண்டு நடத்திய நாவல் எழுதும் போட்டியில் மூன்றாம் பரிசு.
அவுஸ்திரேலியாவில் உள்ள 'விக்ரோரியா இலங்கைத் தமிழர் சங்கம்’ நடத்திய இலக்கியப் போட்டிகளில் சிறு கதைக்கான முதலாம் பரிசு
முதலாம் பிள்ளை, எங்கள் நாடு, இமயம் நாடக நூல்களுக்கு வடக்கு,கிழக்கு மாகாண சபையின் பரிசுகள்.
1988ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
இமயம் நாடகநூலுக்கு - சாகித்தியப் பரிசு.
என்று விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்
இப்ப்டடியான கலைஞன் எண்பத்தாறு வயதில் தனது பூவுலகப் பயணத்தை நிறைவு கண்டார்





கருத்துகள்
கருத்துரையிடுக