வானொலியும் தமிழனின் அர்ப்பணிப்பும் தமிழை அட்சர சுத்தியுடன் வளர்த்தது இலங்கை வானொலியே
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
"ரேடியோ சிலோன்" என்ற வார்த்தையை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க முடியாதுதான். இப்போது அது S.L.B.C. என்றே சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. ஆனால் ஒரு காலத்தில் "ரேடியோ சிலோன்" என்ற வார்த்தை தென்னாசியாவிலேயே பிரபலமாக இருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் அதனை "சிலோன் ரேடியோ" என்று அழைத்தார்கள்.
"ரேடியோ சிலோன்" இன் தமிழ்ச்சேவையை காலையில் கேட்டே நாளொன்று புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்கள் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சியில் இனிமையான உள்நாட்டுப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நாட்கள் நினைவை விட்டு நீங்காதவை. காலை வேளையைப் போலவே, இரவுகளிலும் தனது நேயர்களை இனிமையான பாடல்கள் மூலம் தாலாட்டியது "ரேடியோ சிலோன்".
விளக்கமாகக் கூறுவதானால் 1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது
ரேடியோ சிலோனின் கதைஅதிகாரபூர்வமாக 1925 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தொடங்குகின்றது.
1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப நிலையில் "கொழும்பு ரேடியோ" என்று அழைக்கப்பட்டது. Edward Harper என்பவர் 1921 ஆம் ஆண்டில் தந்தித்திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளராக இருந்தார். அவரே கொழும்பு ரேடியோவின் பரீட்சார்த்த ஒலிபரப்பை முன்னெடுத்தார். இந்தப் பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
சிலோன் தந்தி அலுவலகத்திலிருந்து கிராமபோன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட இசை, அந்த அலுவலகப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்மீட்டர் மூலம் ஒலிபரப்பப்பட்டது. இந்த ட்ரான்ஸ்மீட்டரின் உருவாக்கத்தின் பின்னாலும் சுவாரசியமான கதை இருக்கின்றது. ஜேர்மனியின் நீர்மூழ்கிக்கப்பலொன்றை பிரித்தானியா கைப்பற்றிய போது, அதிலிருந்து பெறப்பட்ட ஒலிபரப்புக் கருவியை மேம்படுத்தியே, இந்த ட்ரான்ஸ்மீட்டர் சிலோன் தந்தி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டது.
"கொழும்பு ரேடியோ" 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்றதும் இன்றும் பி.பி.சி. என்று அனைவராலும் அழைக்கப்படுவதுமான பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் "கொழும்பு ரேடியோ" தொடங்கப்பட்டது. அப்போது ஆசியாவிலேயே முதலாவது வானொலி நிலையமாக இது விளங்கியது. அதனை விட முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் உலகிலேயே இரண்டாவது பழமையான வானொலி இதுதான்.
இந்தியாவை விட இது தான் முதல் வானொலி
இரண்டாவது உலகப் போர்க்காலத்தில் அமெரிக்கக் கூட்டணிப் படைகள் வசம் இந்த ஒலிபரப்புப்பணிகள் ஒலி பரப்புச் செய்தது . Radio Seac என்ற பெயரில் அது வழங்கப்பட்டது. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட, David Jacobs மற்றும் Desmond Carrington ஆகிய இரு அறிவிப்பாளர்கள் Radio Seac ல் பணியாற்றினார்கள். தென்கிழக்காசியாவில் அப்போதி இருந்த அமெரிக்கக் கூட்டணிப் படைகளுக்காகவே அந்த நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் முடிவின் பின்னர் Desmond Carrington பிபிசியில் இணைந்து கொண்டார். போரின் பின்னர், Radio Seac ஆனது இலங்கையை ஆண்ட அப்போதைய ஆட்சியாளர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே பிரசித்தி பெற்ற "ரேடியோ சிலோன்" என்ற பெயரை அந்த வானொலிச் சேவை பெற்றது.
1949 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இலங்கையில் "ரேடியோ சிலோன்" புது வடிவம் கொண்டது. அப்போதைய அரசாங்கம் வானொலி ஒலிபரப்புக்காக தனியான திணைக்களம் ஒன்றையும் அமைத்தது. 1966 ஆம் ஆண்டில், இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிலோன் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி, 1967 ஆம் ஆண்டில் அந்தத் திணைக்களம் கூட்டுத்தாபனம் ஆக்கப்பட்டது.
கடந்த ஒரு நூற்றாண்டில் முழு உலகமுமே தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொண்டது. சடுதியாக ஏற்பட்ட பல தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்க முடியாத பல அமைப்புகளும் நிறுவனங்களும், களம் விட்டு அகன்றன. ஆனால், SLBC ஆக மாறிய ரேடியோ சிலோன் நவீன மாற்றங்களை உள்வாங்கத் தயங்கவில்லை. Medium Wave என்று சொல்லப்படுகின்ற அலைகளில் இயங்கிவந்த அந்த வானொலிச் சேவை, FM அலைவரிசைக்குத் தாவ வேண்டிய கட்டாயம் எண்பதுகளிலேயே உணரப்பட்டது. அதற்கமைய முன்னெடுக்கபட்ட செயற்பாடுகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் உதவியும் கிடைத்தது. 1993 ஆம் ஆண்டில் FM அலைவரிசைக்கு மாறிய SLBC தனக்குள் புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் உள்ளெடுத்துக் கொண்டது.
1995 ஆம் ஆண்டில், நாடளாவிய FM அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் SLBC இன் இயங்குதளம் விரிவாக்கப்பட்டது. இலங்கையின் அனைத்துக் கிராமங்களும் நகரங்களையும் அதனால் முழுமையாக எட்ட முடிந்தது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது வானொலிச் சேவையை முன்னெடுத்த SLBC, சிங்கள தேசிய சேவை, தமிழ்த் தேசிய சேவை உள்ளிட்ட பல சேவைகளை இன்றும் வழங்கி வருகின்றது. 90 களின் இறுதிப்பகுதியில் பல தனியார் வானொலிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் காரணமாக, SLBC தனது தனித்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத்தொடங்கியது. எனினும், இன்றும் தனது தனிப்பட்ட பாணியைத் தொடர்ந்தும் பேணி வரும் SLBCக்கென, தனிப்பட்ட நேயர் கூட்டமொன்று இந்தத் தலைமுறையிலும் இருப்பது குறிப்பிட வேண்டியதொரு விடயமாகும்.
பலர் பலவிதமாகக் கூறினாலும்
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா,அப்துல் ஹமீது இன்னும் பலர் என்று வரிசைப்படுத்தலாம் .
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் க் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920களில் முப்பதுகளில் இருந்த இசைத்தட்டுகள் கூட அவர்களது சேமிப்பில் இருந்தன. மிகக் குறைந்த அளவில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு அதுவும் மேல்தட்டு மக்களுக்காக கர்நாடக சங்கீதம் என்று போய்க்கொண்டிருந்தால் அகில இந்திய வானொலியால் மக்கள் செல்வாக்கு பெற முடியவில்லை
இலங்கை வானொலியில் கல்விச் சேவையிலும், தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணியாளராகவும் என நீண்ட காலம் பணியாற்றிய ஞானம் இரத்தினம் ’கிரீன் லைட்’ என்று தமது அக்கால வானொலி அனுபவ நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்
வானலைகளில் தனக்கு ஒரு ரசிகப் பேரரசை, வெறித்தனமான சாம்ராஜ்யத்தை இலங்கை வானொலி நிலையம் கைப்பற்றியிருந்ததற்கு அவர்களின் ஒப்பற்ற பணியும், ஈடுபாடும் நிகழ்ச்சியில் வழங்கிய புதுமைகளும், அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரது தனித்துவமும் காரணங்கள் என்று சொல்லலாம்
வெளிநாடுகளில் இருப்பவர்க்கே இந்தப் பதிவு .கட்டுரை நீளுவதால் வேறு ஒரு பதிவில் நயம்பட உரைக்கிறேன்
நிறைவாக
'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .'என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும். அது மட்டுமல்ல 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ?' என்ற அந்த நையாண்டிப் பாடலும், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்' என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் ’மாம்பூவே சிறு மைனாவே’ என்ற சந்திரபோஸ் இசையமைத்த ’மச்சானை பார்த்தீங்களா’ படப்பாடல் ஓராண்டு தாண்டியும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள்,சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.
அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'என் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.
'இசையமைப்பாளர்' என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சில நேரம் ’மரண அறிவித்தல்’ வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.
அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது. சில கிராமங்களில் மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. ஆனாலும் வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று முதலில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்
எங்கும் வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .
உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.
வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.
இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .
'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.
அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அதுமட்டுமல்ல அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.
இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.
அனைவரையும் காதல்லித்தோம் .எம் ஜி ஆர் சிவாஜியை விட இலங்கை வானொலி அறிவிப்பாளர்களே
அக்காலத்தில் எமது கதாநாயகர்கள்
இலங்கையில் யுத்தம் இல்லாது இருந்து ...சிங்களக் குரோதம் இல்லாது இருந்திருந்தால் .இலங்கை வானொலி இன்னும் மெருகேறியிருக்கும் .தொலைகாட்சிகள் மூலம் தமிழ் வளர்ந்து இருக்கும் .
1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது.
அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில்
'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார்.
அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தினர்.
தேசிய சேவையில் கணீரென ஒலிக்கும் செந்தில்மணி மயில்வாகனம், வர்த்தக சேவையில் ஒலிக்கும் மயில்வாகனன் ஆகியோரின் குரல்களுக்கு ஒரு தனித்துவமான பிரபலம் நிலவியது.
அவர்கள் காலத்திலும் சரி, அவர்கள் காலத்துக்குப் பின் வந்த காலப் பகுதியிலும் சரி, அவர்களுடன் பணியாற்றிய அவர்களுக்குப் பின் பணியாற்றிய இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கெனத் தனிப்பாணி கொண்டவர்களாகவும் ஒவ்வொருவரும் மக்கள் மனதில் உயர்வான இடத்தை வகித்தவர்களாகவும் தாம் சார்ந்த துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி மேலும் மேலும் தமது திறமையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் இலங்கை வானொலியின் பெருமையை உச்ச நிலைக்கு உயர்த்தியவர்களாகவும் விளங்கினர்.
அந்நாட்களில் இலங்கை வானொலியே அனைவராலும் விரும்பிக் கேட்கும் வானொலியாக விளங்கியமைக்கு அவர்களின் அர்ப்பணிப்பான பணியே காரணம் என்றால் மிகையாகாது.
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக