வைராக்கியம்

என்றால் என்ன ?
$$$$$$$$$$$$$$$$$
ஒன்று, புராண வைராக்கியம்; மற்றொன்று, மயான வைராக்கியம். இவ்விரண்டையும் சிறிது பார்ப்போம். ஓரிடத்தில் கம்பராமாயணக் கதை நடக்கிறது. இராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிடுகிறாள் கைகேயி. 'கோசல நாட்டுச் செல்வம் எல்லாம் இனிப் பரதனுக்கே உரியது. இது மன்னவன் ஆணை' என்று பேசுகின்றாள். அது கேட்ட இராமன் அகமலர்ந்து கைகுவித்து,
"மன்னவன் பணியன் றாகில் நும்பணி மறுப்ப னோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ
என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்"
என்று காட்டை நோக்கிப் புறப்படுகிறான். இந்தப் பாட்டைக் கேட்கின்றான் ஒருவன். அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரு சொத்தைக் குறித்து நீதி மன்றத்தில் நெடுவழக்கு நடக்கின்றது. பாட்டைக் கேட்ட நிலையில், அவன் எண்ணுகின்றான்: "இராமனே உத்தமன் ; தான் வேறு, தம்பி வேறு என்ற எண்ணம் அற்றவன்; எவ்வளவு பெருந் தன்மையோடு பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமன்றோ என்று பேசுகின்றான். நான் மட்டும் என் தம்பியின் மீது ஏன் வழக்கை நடத்த வேண்டும்? அந்தச் சொத்தை என் தம்பி ஆண்டால் என்ன, நான் ஆண்டால் என்ன?'' என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றான்; பசி தீர உண்கின்றான்; உறங்குகின்றான்; உறக்கத்திலே வைராக்கியம் உலைந்து விடுகிறது. மறுநாட் காலையில் அவன் வக்கீல் வீட்டுக்குப் போகிறான். வழக்கு முறையாக நடக்கிறது. இதுதான் புராண வைராக்கியம்.
மற்றொரு வைராக்கியத்தைப் பார்ப்போம். ஒருவன் திடீர் என்று இறந்துவிடுகின்றான். உற்றார் உறவினர் எல்லோரும் வருகின்றார்கள்; கண்ணீர் சொரிகின் றார்கள். இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள். ஈமத்தில் ஏற்றுகின்றார்கள். நெருப்பை மூட்டுகின்றார்கள். அப்பொழுது ஒருவன் நினைக்கிறான். 'என்ன உலக வாழ்க்கை ! நேற்று இருந்தான், இன்று போய்விட்டான். எனக்கும் இப்படித் தானே ஆகும்! ஆதலால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்,
"கனியேனும் வறிய செங் காயேனும்
உதிர்சருகு கந்தமூ லங்களேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்பு
சித்து நான் கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற் கெண்ணினேன்
எண்ணமிது சாமிநீ அறியாததோ
சர்வபரி பூரண கண்டதத் துவமான
சச்சிதா னந்த சிவமே''
என்று அவன் பாடுகின்றான். மயானத்திலிருந்து திரும்பி வருகின்றான். மனத்தில் எழுந்த வைராக்கியம் மாயமாய்ப் பறந்து போகின்றது. இதுதான் மயான வைராக்கியம்.
மனத்திண்மையே வைராக்கியமாகும்; மனத்திண்மை யற்றவர்கள் ஒரு கொள்கையில் நிலைத்து நிற்க மாட்டார்கள். மன உறுதியுடையவர்கள் மலைபோல் உலையாது நிற்பார்கள். அவர், மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார். மனவுறுதி கொண்டு அறநெறியில் நிற்கும் மாந்தரை இவ்வுலகம் போற்றும். "அரிச்சந்திரன், வாய்மை என்னும் சத்திய நெறியில் வழுவாது நின்றான்; பலவகையான சோதனைக்கு உட்பட்டான்; பதியிழந்தான்; பாலனை இழந்தான்; படைத்த நிதி இழந்தான்; இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வற்றையும் இழந்து, ஈனத்தொழில் புரியும் காலத்தும் சத்தியத்தை விடாது பற்றி நின்றான்; தன்னைச் சோதித்த முனிவரை நோக்கி,
"பதியி ழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த
நிதியி ழந்தனம், இனிநமக் குளதென நினைக்கும்
கதியி ழக்கினும் கட்டுரை இழக்கிலேன்"
என்றான். அது கேட்ட முனிவன், "மதியிழந்து, வாயிழந்து, மானமும் இழந்து சென்றான்" என்று அரிச்சந்திரன் சரித்திரம் கூறுகிறது.
இனி மனிதர்க்குரிய குணங்களிற் சிறந்தது பொறுமை என்பர். 'உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினத்தைக் காத்துக்கொள்ளும் குணமே குணம்' என்றார் ஒரு கவிஞர். வெம்மை விளைப்பது கோபம்; செம்மை விளைவிப்பது பொறுமை. இத் தகைய பொறுமை மன உறுதியாலே வரும். பொறுமையின் தன்மையைத் தம் வாழ்க்கையிலே பொருந்தக் காட்டினார் ஏசுநாதர். தீயவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சீறினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறியுமிழ்ந்தார்கள்; முள்முடியைத் தலையிலே வைத்து அழுத்தினார்கள்; கையிலே நெடுஞ்சிலுவையைக் கொடுத்து வீதியின் வழியாக நடத்திச் சென்றார்கள். ஏசுநாதர் திருமுகம் சோர்ந்தது ; நாவுலர்ந்தது ; கண் குழிந்தது. இத்தகைய இளைத்த மேனியில் கயவர்கள் இருப்பாணியை அறைந்தார்கள். அப் பெருந் துயரத்தைப் பொறுத்தார் ஏசுநாதர்; சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர் மீது இரக்கமும் கொண்டார்; இறைவனை நோக்கி, 'எந்தையே! இவர் அறியாமல் செய்கின்றார்கள். இவர் பிழையை மன்னிக்க வேண்டும்' என்று பிரார்த்தித்தார். இத்தகைய இரும் பொறையையும், பெருங் கருணையையும் அழகாகப் பாடினார், கிறிஸ்தவக் கம்பர் என்று புகழப்படுகின்ற கிருஷ்ணபிள்ளை.
"தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்துஎந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர்பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்"
என்ற பாட்டில் தின்மை செய்தார்க்கும் நன்மை செய்த ஏசுநாதரை அருள் வள்ளல்' என்று கவிஞர் போற்றி யிருப்பது பொருத்த முடையதன்றோ?
அரிச்சந்திரனும் ஏசுநாதரும் அறநெறியிலே வைராக்கியம் பூண்டவர்கள். இதற்கு மாறாகத் தவறான வழியிலே தலைப்பட்டு, விடாக்கண்டராக நின்றாரும் உண்டு , கற்பின் செல்வியாகிய சீதையைக் கவர்ந்து சென்று சிறையில் வைத்தான் இராவணன். சீதையை மீட்பதற்காக இராமன் இலங்கையின் மீது படை யெடுத்தான்; பெரும் போர் மூண்டது. இராவணன் மைந்தனாகிய இந்திரசித்தன் இலங்கையில் நிகரற்ற வீரன். அவன் வென்று வருவான் என்று எண்ணி இறுமாந்திருந்தான் இராவணன் - போர்க்களத்தில் பகைவரது திறத்தை நன்றாகத் தெரிந்த இந்திரசித்தன் இராவணன் மாளிகையை அடைந்து, மன்னனைத் தொழுது, 'ஐயனே, இன்று நடந்த போரில் நான் அரிய பெரிய படைக்கலங்களையெல்லாம் விடுத்தேன். அவை பகைவர் மீது செல்லவில்லை. ஆதலால், போருக்கு அஞ்சி இங்கு வந்துவிட்டேன் என்று கருதிவிடலாகாது. உன்பால் வைத்த ஆசையால் ஒன்று சொல்லக் கருதி வந்தேன். சிறைப்படுத்திய சீதையை விட்டுவிட்டால், நாம் சீரும் சிறப்பும் சிதையாமல் வாழலாம். பகைவர் சீற்றம் தீர்வர். நம் நாட்டைவிட்டு நீங்குவர். பகையும் போரும் இன்றி நீ பண்புற்று வாழ்வாய். உன்பால் வைத்த அன்பினால் இதைச் சொன்னேன்' என்றான்.
அம் மொழி கேட்ட இராவணன், சிந்தை கலங்கிச் சீற்றம் தலைக்கொண்டான். எதிரே நின்ற இந்திரசித்தை நோக்கி, 'பேதையே! நீ அறியாமற் பேசினாய். உன்னை நம்பி இருக்கின்றேன் என்று எண்ணினாயா? என் தோள்வலியை நம்பியே சீதையை எடுத்து வந்தேன். எடுத்து வந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் ஈனமன்றோ? மானமே உயிரினும் பெரிது; வீரப் புகழே வாழ்வினும் விரும்பத் தக்கது.
"வென்றிலன் என்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுதல் ஒருகா லத்தும் தவிருமோ, பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ”
என்று சினந்து பேசினான். அதுகேட்ட இந்திரசித்தன் குன்று முட்டிய குருவிபோல் மீண்டும் போர்க்களம் போந்தான்; அரும்போர் புரிந்து ஆவி துறந்தான். இறுதியில் இராவணனும் போர் புரிந்து மாண்டான்.
தமிழ்நாட்டில் வழங்கும் மற்றொரு சரித்திரமும் தவறான வைராக்கியத்தால் வரும் கேட்டைக் காட்டு கின்றது. சூரன் என்பவன் ஒரு பேரரசன் ! வீர மகேந்திரம் என்னும் நகரில் அரசு வீற்றிருந்தான்; வானவர் நாட்டின்மீது படையெடுத்து, இந்திரன் மகனாகிய சயந்தனையும் தேவரையும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. சூரன் மகனாகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான்; வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒரு நாளும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான்; சூரனிடம் சென்று, 'அரசே ! இன்று மாற்றார்மீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம்மாயப் படையும் பயனற்றுப் போயிற்று. நீ நெடுங்காலம் வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பது ஆசை. அவ்வாசையால் ஒன்று கூறுகின்றேன்; வானவரை நீ சிறையினின்றும் விட்டுவிட்டால் படையெடுத்து வந்த முருகன் நம் நாட்டைவிட்டு அகல்வான்; சீற்றம் தீர்வான். உன் அரசு நீடூழி வாழும் ' என்றான்.
அவ் வுரை கேட்ட சூரன் பொங்கி எழுந்தான், 'மைந்தா! என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டே னென்றால் என்னை யார் மதிப்பார்? இவ் வுலக வாழ்க்கை நிலையற்றதென்பதை நீ அறியாயோ? இளமையும் செல்வமும் வீரமும் இனைய பிறவும் அழிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால், என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனே யன்றி, வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழமாட்டேன்.
"இறந்திட வரினும் அல்லால் இடுக்கண்ஒன் றுறினும் தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை, சூரன்என் றொருபேர் பெற்றேன்”
என்று எரிந்து பேசினான். அது கேட்ட பானுகோபன் அமர்க்களம் போந்து, வீரப்போர் புரிந்து ஆவி துறந்தான். பின்னர்ச் சூரனும் போர் செய்து மாண்டான். அரக்கர் தலைவனாகிய இராவணனும், அசுரர் தலைவனாகிய சூரனும் தவறான வழியில் சென்றார்கள். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்றபடி விடாக்கண்டராய் நின்றார்கள்; வீழ்ந்து ஒழிந்தார்கள்.
இனி, மத வைராக்கியம் என்பது ஒன்றுண்டு. இவ் வுலகப் பொருள்களில் ஆசையற்று, கடவுளையே நினைந்து கசிந்து நிற்கும் நிலையே அது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இவ் வைராக்கியத்தின் தன்மையை விளக்கியருளினார்.
"கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இ ருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல் லால்எங்கள் உத்தமனே"
என்பது ஓர் அருமைத் திருவாசகம். இத் தகைய வைராக்கியத்தைத் தம் வாழ்க்கையிலே காட்டிய பக்தர் பலராவர். "ஸ்ரீவில்லிபுத்தூரில் கோதை என்னும் ஆண்டாள் தோன்றினாள். இளமையிலேயே அவள் பெருமாளிடம் பேரன்பு செலுத்தினாள்; அவர் திருமேனியைக் கண்டு காதலித்தாள்; அவர் திருநாமங் களைக் கேட்டுச் செவிகுளிர்ந்தாள்; அவர் திருப் புகழைப் பாடிப் பாடிப் பரவசமுற்றாள். அவள் மங்கைப் பருவமுற்ற போது பெற்றோர் மணம் பேசத் தொடங்கினார்கள். அதை யறிந்த மங்கை, 'மனிதன் எவனையும் நான் மணக்க மாட்டேன்; மணிவண்ண னாகிய பெருமாளையே மணப்பேன்' என்றாள். இந்த மனத் திண்மையைக் கண்டு யாவரும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். ஆயினும் அவளன்பின் திறத்தினை அறிந்த திருவரங்கப் பெருமாள் அவளை ஏற்றுப் பேரருள் இன்பமளித்தார்'' என்று குருபரம்பரை என்னும் வரலாறு கூறுகிறது.
இனி, சிவத் தொண்டர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசர் கொண்ட வைராக்கியத்தைச் சிறிது பார்ப்போம். தமிழ் நாட்டிலுள்ள சிவப்பதிகளை யெல்லாம் கண்டு வணங்கிய திருநாவுக்கரசர், கைலாச மலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தைக் காண ஆசைப்பட்டார். எழுபது வயதிற்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் வடதிசையை நோக்கி நடந்தார்; காசியை அடைந்து கங்கையையும் விசுவநாதரையும் கைதொழுதார்; வெள்ளி மாமலையை நோக்கி உள்ளம் மகிழ்ந்து நடந்தார்; இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நடந்து நடந்து, கால் இரண்டும் தேய்ந்தார்; கைகளால் நடக்கத் தொடங்கினார். கையும் தேய்ந்தார்; உடம்பினால் உருண்டு உருண்டு சென்றார்; உடம்பும் தேய்ந்தார்; நகர்வதற்கு முடியாமல் வழியிலே தங்கினார். அப்போது அவ் வழியாக முனிவர் ஒருவர் வந்தார்; திருநாவுக்கரசரைக் கண்டு இரக்கங் கொண்டு, 'நீர் இங்கே எதற்காக வந்தீர்?' என்றார். 'முனிவரே ! கைலாசநாதனைக் கண்டு கும்பிடும் காதலால் வந்தேன்' என்று திருநாவுக்கரசர் மறுமொழி தந்தார். அது கேட்ட முனிவர், 'கைலாச மலையாவது, நீர் காண்பதாவது; வானவரும் காணமுடியாத அம்மலையை மானுடராகிய நீரோ காணவல்லீர்? வந்த வழியே சென்று சொந்த ஊரைச் சேரும்' என்றார். முனிவர் சொன்ன சொற்களால் நாவுக்கரசர் சிறிதும் மனம் தளரவில்லை; தம் மனவுறுதியைத் திறமாக எடுத்துரைத்தார்.
"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண்ட ல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு ளேன்என மறுத்தார்”
முனிவராக வந்த சிவபெருமான் திருநாவுக்கரசரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து, 'கைலாசக் கோலத்தைக் காட்டியருளினார்' என்று பெரிய புராணம் கூறுகின்றது.
சமய வைராக்கியம் போலவே சமுதாய வைராக்கியமும் உண்டு. தாழ்ந்தோரை உயர்த்துவோம் என்றும், தாய்மொழிக்குத் தொண்டு செய்வோம் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும் உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர் களல்லரோ? இத் தகைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால் வருந்த மாட்டார்கள்; போற்றினால் மகிழவும் மாட்டார்கள். நயத்தினாலேனும் பயத்தினா லேனும் அவர் மன உறுதியை மாற்ற முடியாது. அவர்களே நினைத்ததை முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்" என்பது திருக்குறள்.
-----------------

கருத்துகள்