சுழிபுரம் சோழிய புரமா
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.
இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.
இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.
இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.
ராமர் கரையேறிய இடம்தான் திருவடி நிலைக்கடல் என ஒரு கதை இவ்வூர் மக்களால் திருவடிநிலைக் கடல் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான துறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை கொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு 'சுழிபுரம்' என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.
நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும், பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. 'பாராலயம்பதி' என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு 'காக்கைப் பிள்ளையார்' என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து 'காக்கைப் பிள்ளையார்' என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும். இந்த ஆலயங்களோடு பெரிய தம்பிரான் கோவில் , பத்திரகாளி கோவில் , கம்பனை அம்மன் கோவில் , அய்யனார் கோவில் போன்ற ஆலயங்களும் சைவநெறி தழைக்க துணையாயிருக்கின்றன.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. 80களுக்கு முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, சிங்கள மக்கள் அடிக்கடி பேருந்துகளில் வருவார்கள். வரும்போது அவர்கள் கித்துல் சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் பனங்கட்டி, புழுக்கொடியல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.
சுழிபுரத்திலே குடியிருப்பு என்ற பகுதியிலே அந்தணர்கள் தொன்மைதொட்டு வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும், புகலிட நாடுகளிலும் தமது பணிகளில் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
வட்டுக்கோட்டை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 11 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் பொன்னாலையில் இருந்து கிழக்கு நோக்கித் திரும்பும் யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி (AB21) ஊடறுத்துச் செல்கின்றது, இதைத்தவிர இவ்வூரை கொக்குவில்-வட்டுக்கோட்டை வீதி வழியாகவும் வந்தடையலாம். இவ்வூரைச்சூழ அராலி, மூளாய், சித்தங்கேணி போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இவ்வூரில் நடைபெற்றது ஒரு சிறப்பம்சம் ஆகும்.
வட்டுக்கோட்டை என்ற பெயரானது வட்டக் கோட்டை என்பதில் இருந்து மருவி வந்ததென்று ஒருசாராரும், மறுசாரார் வடுகக் கோட்டையில் இருந்து (வடுகர் என்னும் தென்னிந்தியர்களின் கோட்டை) வந்தது என்றும் வாதிடுகின்றனர்.
வட்டுக்கோட்டைத் தொகுதியிலே பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும்.
கனகரத்தினம் முதலியார் என்பவர் 1876 ஆம் ஆண்டில் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையை நிறுவினார். இப்பாடசாலைக்கு பின்னர் விக்ரோரியா கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. 1880 எனப் பொறிக்கப்பட்ட மணி இப்பாடசாலையில் இன்னும் உள்ளது
1892 இல் அரச உதவி பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. 1905 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ரிட்ஜ்வே மண்டபத்தை அப்போது பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக இருந்த சேர் என்றி பிளக் திறந்து வைத்தார். 1938 ஆம் ஆண்டில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
1946 ஆவணி 1 இல் இப்பாடசாலையை இலங்கை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948 இல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவும் 1951 இல் நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955 இல் குருகே மண்டபம் அமைக்கப்பட்டது
ஒரு விளையாட்டு மைதானம் பாடசாலைக்கென பெறப்பட்டு, துடுப்பாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான முதலாவது துடுப்பாட்டப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.
பாடசாலை சஞ்சிகை ஒன்றை 1898 இல் வெளியிட்ட ஒரு முன்னணி பாடசாலையும் இதுவே. 1905 இல் இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவிற்கு அப்போது இலங்கையின் ஆளுனராயிருந்து சேர் ஹென்றி பிளக்கும் அவரது துணைவியாரும் பிரதம விருந்தினர்களாய் வந்திருந்து பெருமை சேர்த்தார்கள், அன்றே புதிதாய் அமைக்கப்பட்ட றிட்ஜ்வே மண்டபம் சேர் ஹென்றி பிளக்கினால் திறந்து வைக்கப்பட்டது.
ஐரிஸ் நாட்டவரான வில்லோக்பை சிமோல் பாடசாலையின் முதலாவது அதிபராவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்களுடன் இணைந்து மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான பரீட்சையினை கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். 1938இல் HSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த அமிர்தலிங்கம் என்பார் 1945 இல் முதன்முதல் கல்லூரியின் கலைப்பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்.
1955இல் Gurugae மண்டபம் அமைக்கப்பட்ட பொழுது , பாடசாலை மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது. மைதானத்தின் ஒரு பக்கத்திற்கு சுற்றுமதிலும் அமைக்கப்பட்டது. 1962இல் பாலச்சந்திரன் எனும் மாணவர் பெரதெனிய பொறியில் பீடத்திற்கு தெரிவானார். இதே காலத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானின் சிலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்டது.
1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.
தொல்புரம் மற்றும் சோழியபுரம் என்று இரண்டு ஊர்கள் இருக்கின்றன. தொல்புரம் என்பது பழைய ஆசாரங்களை அனுட்டித்தவர்கள் இருந்ததினால் வந்த பெயர் என்றும், சோழியபுரம் என்பது இந்தியாவிலிருந்த சோழியர்கள் வந்திருந்ததனால் வந்த பெயர் என்றும் கூறுவர். சோழியர்புரம் சுழிபுரம் என மருவியதென சொல்லுகின்றார்கள். சுழிபுரம் முற்காலத்தில் செந்தமிழ்க் கல்விக்கும் சைவாசாரத்திற்கும் உறைவிடமாய் இருந்தது. இந்தச் சுழிபுரத்தில் உள்ளது பறாளாய் என்னும் இடம். பறாளாய் என்பது பறாளை என மருவியது.
திசைமழுவன் என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் இதற்கு சமீபத்திலுள்ளது என்பர். இந்த இடம் மழுவைக்காடு என்று சொல்லப்படும். இந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் விளங்கிய சம்பேசுரன் என்னும் சிவாலயம் இருந்த இடம் அழிந்து கிடப்பதை இப்போதும் காணலாம். இன்னும் இதற்கு சமீபத்தல் இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் திருவடி நிலை எனப் பெயர்பெற்ற ஒரு தலம் இப்போதம் வழிபடப்பெற்று வருகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்துக் கீரிமலையைப்போல மூர்த்தி தலம் தீர்த்த விசேடங்களை பெற்றது. இங்கேதான் பறாளை விநாயகர், முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை கிருஸ்ணன் கோவில் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வந்தன.
பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த மற்றொரு நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளாய் என்னுந் தலத்தில் ஏழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகைய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக் கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப்பள்ளியாகவும், இளைய பள்ளி சோழமண்டல பள்ளியாகவும் காட்சியளித்து, ஈழநாட்டுப்பெருமையையும் சோழநாட்டுப்பெருமையையும் முறையே பேசிக்கொள்ளுகின்றார்கள்.
இந்நூலிற் காப்புச் செய்யுள் வழக்கத்துக்கு மாறாகக் ‘கண்ணனே காப்பு” என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது.
தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்வா ழைங்கரன்மேற்
பல்வளஞ்சேர் பள்ளினிசை பாடவே – வில்வழங்கு
மையாழிக் கண்ணன் மலர்க்கண் வளர்ந்ததிருக்
கையாழிக் கண்ணனே காப்பு.
அதன்பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றன. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்தபள்ளியை வேண்டல், மூத்தபள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் ஆண்டைக்கு கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்தபள்ளி யிரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.
சின்னத்தம்பிப் புலவர் பேரில் இந்நூல் வழங்குவதைத்தவிர இதனை அவர் செய்தா ரென்பதற்கான சான்றெதுவும் நூலகத்தில்லை. பொதுவாக நூலாசிரியர் பெயர் நூற்பயனில் அல்லது நூலிறுதியில் காணப்படும். பள்ளுப் பிரபந்தங்களுக்கு நூற்பயன் சொல்வதில்லையாலும், நூலின் இறுதியிற் சில பாடல்கள் சிதைந்து போய்விட்டைமையும் இதற்கு காரணமாகலாம். தன் தந்தையின் சகபாடியும் தன் காலத்து வாழ்ந்தவருமான சந்திரசேகர மானா முதலியென்ற பிரபுவை இவர் இந்நூலின் 121ஆவது செய்யுளில் வாழ்த்தி யிருப்பது, சின்னத்தம்பிப் புலவர் இந்நூலைச் செய்திருக்கலாமென்ற கருத்துக்குச் சாதகமாயுள்ளது.
கீழே இப்பள்ளிலிருந்து சில பாடல்கள்
குத்துமுலைக் குவடுகுலுங் கத்தரள வடம்புரளக்
குமுதச்செவ் வாயின்வெள்ளி நகையரும்பத்
தத்துவரிக் கயலைவெருட்டிப் பத்திமணிக் குழையொடுமுட்டித்
தாரைமணிக் கண்களிரண்டுந் தாவடிசெல்லச்
சித்தியளித் திடுபுகழி புரநகருறையத்திமுகக் கணபதி பணபதிச்
சேடனுநாவா லசைக்கரிய சீரிசைபாடி
யெத்திசையும் புகழநிதிக் கோனள காபுரியென் றெவருமதிக்கு
மீழமண் டலப்பள்ளி தோற்றினாளே.
சின்னவிடை நூலிறுமிறு மெனச் சீறடியிற் சிலம்பு புலம்பச்
சிறியநுதற் பிறையணிவட்டச் சுட்டியிலங்கப்
பொன்னசலக் குசமதி னவமணி மின்னுதனக் கச்சுநெகிழப்
புனைந்தகருங் கொண்டையில்வண்டு புரண்டு நெருங்கச்
செந்நெல்வயற் சுழிபுர நகருறை கன்னமதத் திறையவர் பரிபுரச்
சேவடியைத் திக்குநோக்கித் தெண்டம்பண்ணிச்
சொன்னநிலத் துறுவசி யிவளென வன்னமெனப் பிடியென நிதிவளர்
சோழமண் டலப்பள்ளி தோற்றினாளே.
இப்பள்ளுப் பிரபந்தத்தை சபாபதி நாவலர் அவர்களுடைய மாணாக்கர் சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர் எட்டுப்பிரதிகளிலிருந்து ஆராய்ந்து 1889ம் வருடம் சென்னையில் சபாபதி நாவலிரின் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்கள்.
யார் இந்த சின்னத் தம்பிப் புலவர் ?
இப்புலவர் பெருந்தகையார் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நல்லூரிலிருந்தவரும், ஒல்லாந்த அரசினால் தேசவளமை என்னும் நூலைத் திருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் ஒருவராய் விளங்கியவரும், பெரும் பிரபுவுமாகிய வில்லவராய முதலியாருடைய அருந்தவப் புதல்வர். இவர் யாரிடத்தில் கல்வி கற்றனர் என்பது தெரியவரவில்லை. இவர் இளமையிலேயே பாடும் சாமர்த்தியம் உடையவர் என்றும், மாடுமேய்க்கும் பிள்ளைகளுடன் இவர் விளையாடிக்கொண்டு நிற்கும்போது, அவ்வழியாக வந்த புலவர் ஒருவர் இவரை நோக்கி ‘வில்லவராய முதலியார் வீடு எது?’ என்று வினாவியபோது, இவர் உடனே வாயிலிற் கொன்றைமரம் நிற்கும் வீடே அவர்வீடு என்பதைக் குறிப்பிட்டுப்,
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடை கொன்றை மரம்.
என்று ஒரு கவியினால் அப்புலவர் ஆச்சரியமுறுமாறு விடையிறுத்தா ரென்றும் முதியோர் சிலர் கூறுவர். அன்றியும் ஒரு நாள் இவர் தமது தந்தையார் ஒரு செய்யுளின் முதலடிகளிரண்டையும் பாடி, ஒரு ஏட்டிலெழுதி ஏனையீற்றடியிரண்டையும் செவ்வனே பாடி நிரப்பமுடியாது வைத்துவிட்டு அயலூர்க்குச் செல்ல, இவர் அவ்விரண்டடியையும் செவ்வனே பாடி நிரப்பி வைத்தாரென்றும், பின் தந்தையார் வந்து அவ்வேட்டையெடுத்து பார்த்தபோது தான் பாடிய செய்யுளின் ஈற்றடி இரண்டும் நிரப்பப்பட்டிருந்தல் கண்டு மகிழ்ந்து, அதனை நிரப்பி வைத்தவர் தம் புதல்வரே யென்றறிந்து, தம் சொற்படி பாடசாலைக்குச்செல்லாது விளையாட்டிற்குச் செல்லுதல் காரணமாக முன் இவர்பால் வைத்திருந்த வெறுப்பை நீக்கி, அன்றுதொட்டு இவரிடம் பேரன்புடையவராயினாரென்றும், இங்ஙனம் இவர் இளமையில் பாடத் தொடங்கியதற்குக் காரணம் இவர் பெற்றுக்கொண்ட சரஸ்வதி கடாட்சமே யென்றும் கூறுவர். இவர் புலமைக்குக் காரணம் யாதாயினும் ஆகுக. இவர் பாடுதலிலே மிகுந்த சாமர்த்தியமுடையவரெனபதில் தடையில்லை. இவர் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவரென்பது இவர் பாடிய பிரபந்தங்களால் நன்கு புலப்படுகின்றது. இவர் பாடிய பிரபந்தங்கள், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளைப் பள்ளு என்பன.
மறைசையந்தாதி
இது வேதாரணியேசுவரர்மேற் பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி திரு. அ. சிவசம்புப் புலவர் அவர்களும், மதுரை மகாவித்துவான் சபாபதி முதலியாரவர்களு முரையெழுதியுள்ளார்கள்.
கல்வளையந்தாதி.
இது யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளையென்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுள்மீது பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து வல்லுவெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் சிறீ. வைத்திலிங்கம்பிள்ளையவர்கள் உரையெழுதியுள்ளார்கள்.
கரவை வேலன் கோவை.
இது யாழ்ப்பாணத்துக் கரவெட்டியிலிருந்து பிரபு திலகராகிய வேலாயுதம்பிள்ளை மேற் பாடப்பெற்றது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாக அளிக்கப்பட்டது என்பர். இதனுள் பல செய்யுட்கள் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளையவர்களால் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில காட்டுதும்.
மாசால மோமயி வாய்நோகு மோநும் மரபியலின்
ஆசார மோவிர தத்தடை வோதிரை யாடைசுற்றுந்
தேசா திபர்மெச்சும் வேலன் கரவைச் சிலம்பனையீர்
பேசா திருக்கும் வகையின்ன வாறென்று பேசிடுமே.
பூவென்ற மாலிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய
வாவென்ற வீரன் கரவையில் வேல மகிபதிமேற்
பாவென்ற வாணிப் பவளச்செவ் வாய்மடப் பாவையிவள்
ஏவென்ற காதள வோடிய பார்வை யிமைக்கின்றதே.
இக் கரவை வேலன் கோவை சிறந்த அரும்பதவுரையோடு, திரிபாஷா விற்பன்னரும், ஆரிய திராவிட சங்க ஸ்தாபகரும், வித்தியாதரிசியுமாகிய சிறீமாந்தி. சதாசிவ ஐயரவர்களால் இப்போது அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பறாளைப்பள்ளு.
இது யாழ்ப்பாணத்து பறாளாய் என்னுமிடத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகக் கடவுள் மீது பாடப்பெற்றது. இதன் கவிகள் மிகவுஞ் சுவையுள்ளன. சுவையுணரும்படி சில உதாரணங்கள்
பகுத்த வந்தணர் சாலைக டோறும்
பயிலும் வேதத் தொலிபண்ணை மீதிற்
றொகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு
சோழமண்ணடல நாடெங்க ணாடே
பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப்
பாடும் பாவலர்க் கீந்திட வென்றே
யெண்ணிப் பொன்முடிப் புக்கட்டி வைத்திடு
மீழமண்டல நாடெங்க ணாடே.
இப்பள்ளு, சுழிபுரம் ச. சிவப்பிரகாச பண்டிதரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இவர் சிறப்புப்பாயிர கவிகளும் பாடியுள்ளாரென்பது வரதபண்டிதர் பாடிய சிவராத்திரி புராணத்திற்கு அளித்த சிறப்புக்கவியால் அறியக்கிடக்கின்றது. அதனால் இருவரும் ஒரே காலத்திருந்திருக்கின்றார்கள் என்பதும் பெறப்படும்.
சிவராத்திரி புராண சிறப்புப்பாயிரக்கவி வருமாறு.
மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ்
சராசனமு மலையாக் கொண்ட
சித்தனுயர் சிவநிசிமான் மியமதனைச்
செந்தமிழாற் றெரித்தல் செய்தா
னத்தகைய பாரத்து வாசகோத்
திரனரங்க னருளு மைந்தன்
சத்தபுரி களிற்காசி நகர்வரத
பண்டிதன்முத் தமிழ்வல் லோனே.
வர ஆசனம் – மேலான ஆசனம், சராசனம் – வில்
மேலும் தொ ல் புரத்தை ஆண்ட நாகர் சாதியினரின் தலைவன் சித்திர ராஜனின் கதை பற்றி பிறிதொருமுறை நோக்குவோம்

கருத்துகள்
கருத்துரையிடுக