இறந்தபின்பு ....
%%%%%%%%%%
பாகம் ஏழாவது பதிவு
தெய்வீக மகிமை பெற்றதே தர்பைப் புல்
தர்ப்பைப் புல் என்பது முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும் அந்த தர்பைப் புல்லின் அடிப் பகுதியில் பிரஹ்மாவும், நடுப்பகுதியில் திருமாலும் நுனியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் புராண ஐதீகம் உண்டு. இதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும். இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள் என்பது இதனாலும் வைக்கப்பட்டு உள்ள விதி முறை ஆகும். தர்பையில் காந்த சக்தி என்பதினால் அது அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்கவும் அதை பயன்படுத்துகின்றோம்.
இதன் மேன்மையை குறித்து மாபெரும் முனிவர்களான மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வியாசர், பரத்வாஜர், யாக்ஞவல்க்யர், ஆபஸ்தம்பர் போன்றவர்கள் நிறையவே கூறி உள்ளார்கள். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள். அந்த முனிவர்கள் தர்பைப் புல்லை சம ஸ்கிருத மொழியில் குசம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
முன் காலத்தில் கணவன் இறந்திருந்தால் நாலாம் நாள் இறந்தவரது மனைவியை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து கீழே நெல் தெளித்து அதன் மேல் நடந்து வர சொல்வார்கள்.
ஏன் என்பது எனது அறிவுக்கு எட்டவில்லை .ஆனாலும் கேரளாவில் சில இடங்களில் இருக்கிறது .தமிழ் நாட்டிலும் சில இடங்களில் இருக்கிறது .ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் நடைமுறையில் உள்ளதா ?என்பது தெரியாது .
பத்தாம் நாள் (தசாஹம்) கர்மாக்கள் :- நித்திய விதி, பங்காளி தர்ப்பணம் (குழி தர்ப்பணம்), ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடல் போன்றவை ஆகும்.
கர்த்தாக்கள் தினமும் செய்யும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் செய்யப்படும் நித்ய விதியை முதலில் செய்வார்கள்.அன்று 75 முறை திலோதகம் 30 முறை வாஸோதகம் செய்வார்கள்.
பத்தாம் நாள் சடங்கு அன்று இறந்தவரின் பங்காளிகள் வந்து பத்து தினங்களுக்கான குழி தர்ப்பணம் செய்ய வேண்டும். குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி, அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் கலந்து விடுவார்கள். கர்மா நடைபெறும் இடத்தில் குழி செய்து அதில் எள்ளும் தண்ணீரும் ஊற்றியதும் அவற்றின் ஜீவ அணுக்கள் பூமிக்குள் ஊடுருவி அதே பூமிக்குள் ஓடும் நதி, கடல், குளம், நீர் நிலை என அனைத்து நீரிலும் கலந்து விடுமாம். ஏன் என்றால் ..
இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை அவள் உடலுக்குள் (பூமிக்குள்) ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி தர்ப்பணம் செய்யலாம் என விதி அமைத்தார்கள்.
சஞ்சயனத்தில் இறந்தவரது சாம்பல் மற்றும் எலும்பு இரண்டுமே நதி மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டதும், அவற்றில் உள்ள பிரேத ஜீவ அணுக்கள் நீரின் மூலம் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து பயணித்தபடி இருக்கும். பங்காளிகளினால் விடப்பட்ட தர்பண நீரில் இருந்த ஜீவ அணுக்களும் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து விடும் என்பதால் பூமிக்குள் உள்ள நீரில் பயணித்துக் கொண்டு இறந்தவரது ஜீவனின் ஜீவ அணுக்கள் பங்காளிகளின் தர்பண நீரின் ஜீவ அணுக்களை ஸ்பரிசித்து தாக சாந்தி அடையும். அவை தாக சாந்தி அடையும்போது அந்த உணர்வுகள் வஸுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீவாத்மாவையும் சென்றடையும். இப்படியாக ஜீவாத்மா பங்காளிகளின் மூலம் தரப்பட்ட எள்ளின் நீரை ஆவாஹித்துக் கொண்டு தாக சாந்தி அடைகின்றன. அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது. அது மட்டும் அல்ல பூமிக்குள் உள்ள நீர் நிலைகளின் தண்ணீர் ஆவியாகி மேல் எழும்பும்போது அவைகளில் பயணிக்கும் தர்பண நீரின் உயிர் அணுக்கள், அடுத்த ஒரு வருட காலமும் இறந்தவராது ஜீவன் யமபுரியை நோக்கி பயணிக்கையில், அங்கெல்லாம் உள்ள வான் வெளியில் பரவி பயணித்துக் கொண்டு இறந்தவரது ஜீவனின் தாகத்தை தீர்க்கும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் மரணம் அடைந்தவரது ஜீவாத்மாவும் தான் தனி நபர் அல்ல, இறந்த பின்னரும் தனக்கு தன் குடும்பமும் தனது பங்காளிகளின் துணையும் உள்ளது என்ற மன தைரியத்தைப் பெறும். இது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இந்த சடங்கின் தாத்பர்யத்தில் உள்ள ஆழமான ஆன்மீக தத்துவம் ஆகும்.
உங்களின் கேள்வி எனக்கு புரிகிறது
ஒரு வீட்டின் தர்ப்பண நீர் ஜீவ அணுக்கள் ஆகாயத்தில் படர்ந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மாவின் தாகத்தை தீர்க்கும் என்ற கேள்வி எழலாம். வான் வெளியில் ஆயிர ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் இருந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மா குறிப்பிட்ட தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை கிரகித்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழலாம். உண்மை என்ன என்றால் இதுதான் தெய்வீகம் என்பது. காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட ஆயிர ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு ஜீவாத்மா அதன் குறிப்பிட்ட கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகளின் தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும், அவற்றால் மற்றவர்களுடைய தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாது . இதுவே விசித்திரமான தெய்வ நியதியாகும் . விளக்கமாக சொல்வதானால்
தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே உள்ள இடைப் பகுதியில் ஓடும் ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய ரேகைகள் என்பார்கள். பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும் தர்ப்பண நீரானது அவர்களது கைகளில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே ஓடிச் செல்லும்போது அந்த கைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம். அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்ற தெய்வ நியதி நியாயமாகவே உள்ளது.
தர்ப்பணம் என்பதை உதகதானம் என்றும் கூறுவார்கள்.
ஒருவர் இறந்த பின் ஒரு வருட காலத்திற்கு அதாவது முதல் வருட சிரார்த்தம் முடியும்வரை, தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
ஒரு வருடத்துக்குப் பின்னரும் எப்போது தர்ப்பணம் செய்தாலும் தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்துவிட்டு தர்ப்பணம் முடிந்த பின்னரே அவற்றை செய்ய வேண்டும்.
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு (96) நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை நாட்கள் 12, மஹாளய பட்ச நாட்கள் 16, வ்யதீபாத நாட்கள் 12, வைத்ருதி நாட்கள் 12, அஷ்டகா நாட்கள் 4, அன்வஷ்டகா நாட்கள் 4, பூர்வேத்யு நாட்கள் 4 என்பவை அடங்கும். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.இந்தியாவில்
திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம், அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
இலங்கையில் ஐந்து சிவத்தலங்கள் உண்டு அங்கும் செய்யலாம் முடியாதவர்கள் கீரிமலையில் செய்யலாம் .
பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி எ ன்பது சாதம், அடை, உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மாவாக உள்ள ஊன்றிய கல் முன்னால் கொட்டுவதாகும். இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம். 3 லிட்டர் அரிசியின் அன்னம், உப்பு போடாமல் செய்த 11 இட்லி 11 அடை, 11 அப்பம், 11 முறுக்கு, 11 வடை போன்றவற்றை கல் ஊன்றிய இடத்தின் அருகில் வைத்து படைப்பது .
ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு , தெற்கு நுனியாக துணியை பரப்பி தர்ப்பைகளையும் பரப்பி எள்ளும் நீரும் விட்டு மௌனமாக அன்னம் அப்பம் கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் எல்லாம் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும் நீரும் விட்டு குலம் தழைக்க வேண்டிக்கொள்வர். பாத்திரங்களை எள்நீரால் சுற்றி, அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிகிறது.
இறந்தவருக்கு மனைவி இருந்து அவர் உயிருடன் இருந்தால் அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப் புடவை வாங்கி அதை அவள் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை தோளில் புடவை சாத்துவது அல்லது புடவை போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட பட்டுப் புடவைகளை அணியாகக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம் அந்த புடவை. சமூகத்தில் விதவை எந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு புரிய வைக்கும் ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.
பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு நார் மடி புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின் மற்ற உறவினர்களும் போடுகின்றனர். எல்லா சுமங்கலிகளையும் வெளியே போகச் சொல்லி விட்டு பூவையும் தாலியையும் அகற்றி விடுவர் அல்லது நார் மாடி புடவையை அவள் மீது போட்ட பின்னர் இரவு நடு நிசிக்கு பின் தாலியை கழற்றி பால் கிண்ணத்தில் போடுவர்.
இப்பொழுது உடனேயே கழற்றிப் போடுகிறார்கள் இது ஆத்மாவை அவமதிக்கும் செயலாகும்
கணவரை இழந்த பெண்கள் பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு விதவையாகக் கருதப்பட்டதினால் அன்றைய தினம் அவர்கள் தாலியை எடுத்துவிட்டு தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளை புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையானப் பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் விதவை ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள்வரை ஆன்மீகத்தில் இருந்து கொண்டு பக்தி மார்கத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில் இந்த சடங்குமுறை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை மட்டும் அணிந்து கொள்வதில்லை, நகைகளையும் அணிகிறார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்தும் கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.
கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச்சொல்லி பிரார்தித்து, கண்களை மூடிக்கொண்டு ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும். கற்களை எடுத்தப் பின் கண்களை திறக்க வேண்டும். அவற்றை துணியில் வைத்து கையலம்பி, சகதி மண், தானியங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு போய் ஒரு குழியில் எல்லாவற்றையும் போட்டு அதன் மீது நெல்லையும் சிறிது பசுவின் சாணத்தையும் கொட்டிவிட்டு மூடுவர். இதே போல நதி கரையில் காரியங்களை செய்வர். பெரியோரை வலம் வந்து பிரார்த்தனை செய்த பின் தாடி மீசைகளை மழித்தப் பின் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.
வீட்டிற்கு வந்ததும் சாந்தி ஹோமம் செய்து முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள். அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை (உறவினருக்கு அப்பம் மற்றும் பொறி ஓதியிடுதல்) என்பதையும் செய்வார்கள். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.
பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஆத்மாவானது கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்சு ம சரீரம் எடுத்த அந்த ஆத்மாவானது யமதூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம். அந்த பயணத்துக்கு வழி வகுக்கும் நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும் சடங்கு செய்து அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
அதாவது இறந்த ஆன்மா பத்து நாள் அந்த வீட்டிலேயே இருக்கும்
பத்தாம் நாளன்று முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் உப்பில்லாத சாப்பாடு எனும் பெயரில் போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய் விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும் மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள்.
இறந்த 11வது நாளில் செய்வது ஏகோதிஷ்டம் (அதாவது ஒருவருக்கு என்பது பொருள்) என்று பெயர் பெறும். அன்று செய்யப்படும் கர்மாக்களை யஜ்யோபவீத தாரணம், புண்யாவசனம் , நவசிராத்தம் (நவசிரார்த சடங்கு என்பது என்பது ஒன்பது நாளுக்கும் சேர்த்து இறந்தவருக்காக செய்யும் ஒன்பது தானம் ஆகும்), வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், அவ்ருத்தாத்ய மாஸிகம் போன்றவை ஆகும். பொதுவாக மாசிகம் என்பது இறந்தவர் ஜீவனுக்கு செய்யும் நேர்த்திக் கடன் என்பதாகும். அது மட்டும் அல்ல இந்த சடங்கின் மூலம் இறந்தவரின் ஆன்மாவுக்கு பிசாசத்துவ நிவிர்த்தி கிடைக்கும். பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்றிடும் ஜீவாத்மா பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து யமலோகம் செல்லத் தயாராகி விடும்.
பத்தாம் நாள் பிரேத உடல் அகலுவதற்காக வ்ருஷ உத்ஸர்ஜனம் செய்யப்படுகிறது. அந்த சடங்கு என்ன என்றால் ஒரு காளை கன்றின் மீது சூலம் போல குறியிட வேண்டும். இந்த கர்மாவை எதற்கு செய்கின்றார்கள் என்றால் அந்த ஜீவாத்மா பிரேத (பிசாசு) ஜென்மமாக மாறக்கூடாது என்பதற்கே. இந்த சடங்கில் ஒரு காளையின் கன்றை தானமாக கொடுப்பார்கள்.விருசி பம் என்றால் காளை மாடு என்று அர்த்தம்.
பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு ஒத்தன் சாப்பாடு என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதையே உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள். மீதி இருந்தால் அதை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டுமாம். அவருக்கு தட்ஷணையும் உண்டு. அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செல்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.
12 ஆம் நாள் - அன்றைய தினம் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும். நீர்க் குடத்தைத் (உதக கும்பம்) தானமாக வழங்குவதே சோத கும்ப சிரார்த்தம் என்று கூறப்படுகின்றது. சோத கும்ப சிரார்த்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களுடைய ஆத்மாவின் தாகம் மட்டும் அல்ல அதன் பசியும் தீரும் என்பர்.
மேலும்
பதினோராம் நாள் வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஆத்மாவானது பன்னிரண்டாம் நாளன்று பித்ருக்களின் ரூபத்தை அடைந்து அவர்களுக்கு முன்னால் மரணம் அடைத்துவிட்ட பித்ருக்களுடன் ஒன்று சேர்வதான ஐதீகம். அன்றைய தினத்தன்று சவுண்டி பிராமணர் சாப்பாடு என்ற சடங்கும் நடைபெறும். அந்த சவுண்டி பிராமணருக்கு வீட்டினர் சமைத்த உணவைப் போடுவார்கள். ஆனால் அவர் போகும் போதும் அவரை எவரும் பார்க்கக் கூடாது
(பிராமணர்களில் வகைப்படுத்தல் ஆறுவகை இது பற்றிப் பின்னர் விரிவாக பதிவிடுகிறேன் )
ஸபிண்டீகரணம் என்பது தன்னுடைய குலத்திலுள்ள மூதாதையர்களுக்காக செய்யப்படுகின்ற பூஜையாகும். இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது ஸபிண்டீகரணம் எனும் சடங்கு ஆகும். மூதாதையர்களுக்காக பிண்டங்களை வைத்து, அதோடு கர்மா செய்யப்படும் இறந்தவருக்கான பிண்டத்தையும் வைத்து, இரண்டு பிண்டங்களையும் ஒன்றாக சேர்ப்பார்கள். இந்த ஸபிண்டீகரண சடங்கை செய்வதன் மூலம் இறந்தவர் தன்னுடைய பிரேத உருவத்தை விடுத்து தன்னுடைய மூதாதையர்களுடன் இணைந்து கொள்வார் என்பது ஐதீகம். இந்த சடங்கை மரணம் அடைந்தவரது 12வது தினத்திலோ, 15வது தினத்திலோ அல்லது ஆறாவது மாதத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவரை இறந்தவர் பிரேத ஜென்மத்துடன் இருப்பார். செய்து முடிக்கும் வரை இறந்தவருடைய பிள்ளைகள் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுதல் கூடாது. ஸபிண்டீகரணம் செய்து முடித்த பின்பே இறந்தவருடைய பிரேத ஜென்மமானது முழுவதுமாக நீங்கப்பெற்று பித்ருக்களின் உருவை அடையும். இந்த கர்மாவை செய்த பின் தாய், தந்தையரின் வம்சாவளியில் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
பிரேதத்துவம் பெற்ற ஆத்மாக்கள் உடனடியாக அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல. அந்த பிரேத ஆத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள தண்டனை மற்றும் பிரதிபலன்களை எதிர்பார்த்தவண்ணம் யமலோகத்தில் உள்ள யமராஜனிடம் சரணடைய பயணித்துக் கொண்டு இருப்பார்கள். அதன் பயணம் முடிவுற ஒரு வருட காலம் ஆகுமாம். ஆகவேதான் அந்த ஜீவன்கள் நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக பித்ரு ஆத்மாக்களுக்கு அந்த ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டிய பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்ய வேண்டி உள்ளது. (யாழ்ப்பாணத்தில் இது நடைமுறையில் உள்ளது )
இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது. ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக அந்த பாவம் எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்மதேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை
பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். இதை சோடசம் என்று கூறுவார்கள். சோடசம் என்றால் பதினாறு என்பது பொருள் ஆகும். இறந்தவரை நேரடியாக பித்ருவாக பாவித்து முதன்முதலாகச் செய்யப்படும் ஸ்ரார்தமான ஸோதகும்பம் எனப்படும் சடங்கையும் பன்னிரண்டாம் நாள் செய்து ஒரு பிராமணருக்கு போஜனம் செய்விப்பார்கள்.பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள். அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள்.
இறந்தவராது ஆத்மா யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் தாகம் இன்றி பசி இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும்படி செய்யவே சோத கும்பம் மற்றும் நான்கு ஊன மாஸ்யம், பன்னிரண்டு மாஸ்யம் எனும் சடங்குகளை செய்ய வேண்டும்.
ஒரு நாட்டில் உள்ள போக்குவரத்து சட்டங்கள் மாதிரி இதற்க்கு இன்னது என்று சிவ பூமியாகிய இலங்கையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன .ஆகையால்
தொடரும்
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக