எது சரி ? எது பிழை ?என்பது என் நோக்கமல்ல
உங்களிற்கான தேடல் இது .தவறான செய்திகளைக் கேட்டு நடக்காமல் சிந்தையில் தெளிவு கொள்ளவே ,இந்தப் பதிவை தருகிறேன்
யாழ்ப்பாணம் முழுவதும் நாவலர் கலாசாரம், கநதபுராண கலாசாரம் நிறைந்த இடமாகும். இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் ஆகமவிதிப்படி
பூஜைகள் நடைபெறும் சைவக் கோவில்களேயாகும். ஆனால் பொன்னாலை
வரதராஜப் பெருமாள், வல்லிபுர ஆழ்வார், யாழ்நகரில் உள்ள பெருமாள் கோவில் , தற்பொழு இணிவிலில் புதிதாக அமைக்கப்பட்ட இணுவில் திருப்பதி கோவில் யாவும் விஷ்ணு கோவில்களே ஆகும். விஷ்ணு கோவிலாக இருந்தாலும் வைஷ்ண பட்டாச்சாரியார்கள் இங்கு பூஜை
ஆற்றுவதில்லை. இங்கு பூஜை ஆற்றுகிறவர்கள் யாவருமே சிவப் பிராமணர்களே என்பது நோக்கத்தக்கதாகும்
இணிவிலில் திருப்பதி என்னும் பெயரில்
விஷ்ணுவுக்கு பெரியதொரு கோவில் அமைக்கப் பட்டிருக்கிறது. இங்கு
விநாயகர் தொடக்கம் விஷ்ணுவரை மிகவும் பிரமாண்டமான சிலா விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இக்கோவிலில்
ஆண்டாள் நாச்சியாரிக்கும் ஒரு சன்னிதானம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு செல்லும் அடியவர்கள் ஆண்டாள் நாச்சியாரையும் வணங்கியே
செல்லுகிறார்கள்.
விஷ்ணு ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியார் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வழிபடச் செல்லும் அடியார்களுக்கு சரியான விளக்கம் இல்லாத
காரணத்தால் விஷ்ணு கோவில் செல்பவர்கள் ஆண்டாள் பற்றிக் கவனம்
செலுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்
விஷ்ணு கோவில்களில்
காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலை மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும்.
பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும்.
அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாளை தரிசிக்கும் நேரம் மௌனமாக பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை கண்களால் கண்டு ரசித்து மனதுக்குள் தியானித்து பெருமாளுக்கு செய்யும் ஆரத்தியை கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும்.
கொடிமரம் தாண்டிய பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்த கூடாது.
கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரை மட்டுமே கொண்டு செல்லலாம். தீபாராதனை முடிந்த பின்னர் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் வாங்கிக்கொண்டு சந்நிதியை நிதானமாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் வெளியேறவும்.
இதை கோவில்களில் சொல்லிக் கொடுங்கள் .
ஈழத்தில் பல பாகங்களிலும் விஷ்ணு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பூஜைகளை ஆற்றுகின்றவர்கள் பெரும்பாலும் சிவப்பிராமணர்
களே என்பது இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஈழத்தில் சைவமே நிறைந்து காணப்படுகிறது. வைஷ்ணவம் என்னும் பெயர் படித்தவர்கள் மட்டத்தில் தெரிந்தளவு பாமர்களிடம் சென்றடையவில்லை என்றுதான் கொள்ளவேண்டி இருக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் இந்தியாவில் இருப்பது போன்று இலங்கையில் இல்லை என்பது மனங்கொள்
ளத்தக்கதாகும். வடகலை, தென்கலை, நாமம் இடுதல், என்றால் பெரும்பா
லான ஈழத்தவர்களுக்கு விளங்குமா என்பது ஐயமேயாகும். இந்த நிலையில்
வைஷ்ணவ அடியவாராய் விளங்கும் ஆண்டாள் நாச்சியார் பற்றியும் அநேகம்
பேர் அக்கறை காட்டும் நிலையிலும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.மணிவாசகப் பெருமானை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடிஆண்டாளை அறிந்திருப்பவர் மிகவும் குறைவாகவே
காணப்படுகிறார்கள்.
இலங்கையில் இருக்கும் சைவக் கோவில்கள்
பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங்கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும்.
காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நடை பெரும்
யாழ்ப்பாணத்தில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எங்கும் இல்லை. வல்லிபுரமாழ்வாரை பாடும்போது அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் சிவவிஷ்ணு என்றே குறிப்பிடுவார். பொதுவில் திருமால் ஆலயங்களில் மூலமூர்த்தி நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, கிடந்த கோலத்திலோ காணப்படும். ஆனால் வல்லிபுரத்திலோ சுதர்சனமே மூலமுர்த்தியாயுள்ளது.
வல்லிபுரக் கோவிலில் திருமண்ணும் திருநீறும் வழங்கப்படுகிறது.
விஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சிவனும் விஷ்ணுவும் இங்கு பிரித்துப்
பார்க்கும் விதத்தில் வழிபாடு அமையவில்லை.
ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் அமுதத் தமிழ். அவரின் பக்தி அளவிடமுடியாத
பக்தி. ஈழத்தில் சைவத்தின் உச்சத்தால் வைஷ்ணவ அடியரான ஆண்டாள் நாச்சியாரை சாதாரண மக்கள் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை . இதை தமிழ் அறிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
பிராமணர்கள் திருவெம்பாவை .திருப்பாவை பற்றி தெளிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் .
சிவனின் ஐந்து திரு முகங்களும் பல முறைகளில் பக்தியை சொல்லுகின்றன .
இலங்கையில் திருகோணமலையில் என்று வானளாவிய சிவனும் அவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அக்கினிக் குழம்பும் கக்குவதாக சிலை அமைக்கப் படுகிறதோ அன்று தான் இலங்கையில் சீதா பிராட்டி இட்ட சாபம் நீங்கும் .அமைதி நிலவும் இதைக் குள க் கோ ட்ட மன்னனின் கல் வெ ட்டினை ஆதாரமாகக் கொள்ளலாம்
இலங்கை என்பது திருமகளின் இலங்கு கை என்பது பொருள் .இலங்கை அவளின் கை வடிவில் இருப்பது சான்று .குபேரன் வாழ்ந்த தீவு இது . இதை சிவபக்தனான இராவணன் பாது காத்தான்.
சிவபக்தனான இராவணன் வழிபட்ட வாழ்ந்த பூமி இது .சிவா பூமி இது .
இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம். சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றது. குறிப்பாக கோகிலவு சந்தேசம் பொன்னாலையில் இருக்கின்ற வரதராஜப்பெருமாளையும், வல்லிபுரம் ஆழ்வாரைப்பற்றியும் பாடியுள்ளது.
ஈழத்திருக்கும் வைணவ ஆலயங்களெல்லாம் சைவமுறைப்படி திருநீறு சந்தனம் வழங்க காண்கிறோம் வல்லிபுரம் ஆழ்வார் திருத்தலத்தில் மட்டும் இன்னமும் சிறப்பாய் வைணவ பாரம்பரியமாய் நாமம் வழங்கும் வழக்கம் இன்னமும் உண்டு.
இந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன.
விஷ்ணு ஆலயங்களில் சிவப்பிராமணர்களும், சைவர்களும்
இருந்தாலும் மார்கழியில் அங்கெல்லாம் ஆண்டாள் நாச்சியாரின் வடிவங் கொண்ட சிலை உள்வீதியில் பக்தியுடன் வலம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்க
நாதர் முன்னே வைக்கப்பட்டு திருப்பாவை இன்றளவும் காலைப் பூஜையின்
பொழுது பாடப்பட்டு வருகிறது
வைஷ்ணவம் என்பது சமயபாடப் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு இலங்கையில்
இருக்கிறதே அல்லாமல் சைவம் போன்று மக்களால் கடைப்பிடிக்கும் அளவுக்கு இல்லை.
திருமுறைகளும், நாயன்மார்களும் அறியப்பட்டளவுக்கு ஆழ்வார்களும் அவர்களது பாசுரங்களும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்றுதான்
கருதவேண்டி இருக்கிறது.அதற்குக் காரணம் ஈழத்தில் சைவம் பெற்ற முக்கியத்துவமே எனலாம்.அறுபத்து மூன்று நாயன்மார் பெற்ற முக்கியத்துவத்தை பன்னிரு ஆழ்வர்களும் ஈழத்துப் பெரும்பாலான மக்களிடம்
பெற்றிருக்கிறார்களா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. பெரிய
புராணம் கோலோச்சிய அளவுக்கு, கந்தபுராணம் போற்றப்படும் அளவுக்கு
வைஷ்ணவ ஆழ்வார்களும் அவர்களது திருப்பாசுரங்களும் அறியப்பட்டி
ருப்பது மிகவும் குறைவென்றே கொள்ள வேண்டி இருக்கிறது.
சொற்பொழிவாற்றுகின்ற பெரியவர்கள்கூட சைவ இலக்கி
யங்களையும், சைவ மேன்மைகளையும் எடுத்துச் சொல்லுவார்களே
அன்றி வைஷ்ண சம்பிரதாயங்களையோ அல்லது வைஷ்ணவ ஆழ்வார்களையோ பற்றியோ சொல்லுவது மிகவும் அரிது .
நாயன்மார்களைப் போற்றும் முகமாக குருபூசைத்தினம் என்று அமைத்து
கோவில்களிலும், பாடசாலைகளிலும், சிறப்பான பூஜை வழிபாடு செய்யும் அளவு வைஷ்ணவ ஆழ்வார்களுக்கோ குறிப்பாக ஆண்டாள் நாச்சியாருக்கு ஈழத்தில் செய்யப்படுவது அரிதென்றே சொல்லலாம்.
வைணவ மரபில் பாஞ்சராத்திரம், வைகானசம் என்னும் இரண்டு ஆகமங்கள் தெனிந்தியாவில் வழக்கில் உள்ளன.
ஈழத்து வைணவ ஆலயங்களில் சிவனுடைய நவந்தரு பேத வடிவங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படிகின்ற மஹாவிஷ்ணு ஆலயங்களில் தொன்று தொட்டு சிவாகம மரபுப்படியே பூசைகள், திருவிழாக்கள் நடைபெறுவது வழமை. இதற்கான பத்ததி கையெழுத்துப்பிரதியாக ஈழத்துச் சிவாச்சாரியார்களிடம் இன்றளவும் வழக்கில் உள்ளது.
ஆகமங்களிலும் கூட ஆங்காங்கே மரபுக்குப் புறம்பான தெய்வங்களின் பிரதிட்டைகள் பற்றியும், வழிபாடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவாகம மரபில் உள்ள சிவாச்சாரியார்கள் ஏனைய மரபின் மூர்த்தங்களையும், ஆலயங்களையும் தாபிப்பதிலும், கிரியைகள் செய்வதிலும் அதிகாரம் உள்ளவர்கள் என்றும் சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளதாக பலர் கூறுகிறார்கள் .இது எந்த அளவுக்கு உண்மை ? என்பது தெரியவில்லை .
சிவாச்சாரியார்களை குறை கூறுவதை விடுத்து ,ஆலயங்களை வியாபாரமாகுவதை தவிர்த்து ,பயிற்றப்பட்ட பூசகர்களை சம்பளத்துக்கு பிடிப்பதையும் விடுத்து என்று தான் சமயம் மீ ண்டு வருமோ ? தெரியாது பலர் தவிக்கிறார்கள் .
அந்தணர் என்போர் அறவோர் .பிராம்மணர்கள் அல்ல
(இது பற்றி பின்னர் விளக்கம் தருகிறேன் )
கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும். இவற்றைப் பற்றிய விபரங்களையோ குறிப்புகளையோ ஆகமங்களில் காணமுடியாது.
ஆனால் பிராம்மணர்கள் இவற்றை பற்றி தாங்கள் தான் முன்னோடிகள் போல கூறுவது தவறு .
பால் செம்பு எடுப்பவர்கள் தலையில் வைத்து பின்னாடி நடப்பது கூட தவறு இது பற்றி பல விளக்கமின்மை காணப்படுகிறது .முன்னோக்கி நடப்பது முறை இது பற்றி பிறிதொரு சமயம் நோக்குவோம் .
சைவத்தின் அகப்புறச்சமயங்கள் ஆறினுள் சக்தியை முதலாகக் கொண்ட வாமமும் ஒன்று.
மச்சம், மாமிசம், மது, மாது என்பவற்றுடன் வழிபடும் முறைகளைக் கூறுகின்ற சாக்த ஆகமங்களை வாம தந்திரங்கள் என்று அழைகின்றார்கள்.
இதே விதமான வழிபாட்டு முறைகளுடன் பைரவரை முதலாகக் கொண்ட மார்க்கம் பைரவம். பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்ட சிவன் பைரவ சன்னியாசி வடிவிலேயே வந்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது.
அதாவது மாமிசம் படைக்கும் வழக்கம் அன்று முதல் கண்ணப்ப நாயனார் காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது .இது சக்தியை வழிபாடும் சாக்த சமயங்களில் அனுமதிக்கப் பட்டுள்ளது .மடை வைக்கும் முறை
இதுவே .
இன்னொரு அகச்சமயம் மாவிரதம். இவர்கள் அணியும் பஞ்சவடி என்னும்பூணூல் தலைமுடியினால் ஆனது. மானக்கஞ்சாறரின் மகளின் திருமண மேடையில் வந்து அவளுடைய கூந்தலை தனது பூணூலுக்காகக் கேட்ட சிவன் வந்தது ஒரு மாவிரதி வடிவத்தில் ஆகும்.
தலைமயிரை பூணூல் ஆக்கியமுறை இங்குதான் ஆரம்பிக்கிறது .
விளக்கமாக சொல்வதானால் ..பெரிய புராணம் சொல்வதைப் பார்ப்போம்
வந்தணைந்த மாவிரத ,முனிவரைக்கண் டெதிரெழுந்து
சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார்
எந்தைபிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன்
என்று ருகியஅன் பொடுபணிந்தார். என்கிறது பெரிய புராணம் .
தலைமயிரினால் ஆன பஞ்சவடி என்னும்பூணூல் அணியும் மாவிரதிகள், கபாலத்தைக் கையில் ஏந்தி அதில் பிச்சை ஏற்கும் கபாலிகள், உடலெங்கணும் நீறு பூசித் திரிகின்ற பாசுபதர் முதலானோரைத் தேவாரங்களிலும் பாடியுள்ளதைக் கீழே அப்பரின் தேவாரங்களை ஆதாரமாகக் கொள்ளலாம் .
1. அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4 : 20: 03)
2.
நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4: 64: 04)
3. உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 90: 05)
பக்தி என்பது ஞானத்திற்கான முதல் படி ஆகும். ஒருவனை ஞானத்தில் கொண்டு சேர்க்காத பக்தி பயனற்ற பக்தி என்றுதான் கூற வேண்டும்.
ஒருவனது ‘பக்தி’ சகுண பக்தியாக இருக்கும் பொழுது, அதாவது, உருவங்களை வழிபடுகின்ற பொழுது, அவனிடம் இறைவன் வேறு, நான் வேறு என்ற இருமைகளுடன் கூடிய ‘துவைத புத்தி’ என்பது இருக்கத்தான் செய்யும்.
வயது போய் தளர்வு அடைந்த மனிதனுக்கு ..
‘பக்தி’ நாளடைவில் இறைவன் மட்டுமே இருக்கிறான் என்ற நிர்குண பக்தியாக (உருவமற்ற நிலை) மாறும் பொழுது, பக்தனுக்கும், பகவானுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து, அங்கு ஏகத்துவம் (ஒன்றே) உண்டாகி விடுகின்றது.
பக்தி மார்க்கத்தில் பக்தனும், பகவானும் என இருவரும் இருப்பது உண்மைதான். ஆனால், ஆழமான பக்தியின் வெளிப்பாடு, அந்த பக்தனையும், பகவானையும் உள்ளத்தால் ஒருங்கிணைத்து விடுகிறது.
நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் நம்மை எப்படி வாழ வைக்கும். அத்தகைய வாழ்க்கை என்பது என்ன?, அவ்வாறு வாழும் முறை யாது?, அதனால் நமக்கு நிகழும் பலன்கள் யாது?,
என்று சிந்திக்க வைக்கிறது நமது முதுமை .
இது தான் கோவில்களில் முதியவர்கள் வருகிறார்கள் .
எமது சமயங்கள்
தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரியாக நாம் நம் வாழ்க்கையில் பின் பற்றினோமானால்,
நம் வாழ்க்கை முறை மிகச்சீரும் சிறப்புமாக அமைந்து, அனைத்து மேன்மைகளும் பொருந்திய ஆற்றலும், அமைதியும் அமைந்து
நம்மை ‘ஜீவன்முக்தன்’ என்ற உன்னத நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. புரிந்து நடவுங்கள் .
தமிழின் அழகான சுவையும் உருக்கமும் பக்தி இலக்கியங்களில் அழகாக பிரதிபலிக்கும், தமிழ் இறைவனுக்கான மொழி இறைவன் தன்னை பாட தானே உருவாக்கிய மொழி என்பது அதன் பக்தி இலக்கியங்களில்தான் தெரியும்.
மணிவாசகரின் திருவாசகத்தை வாசியுங்கள் பக்தி தானாக வரும் .வைணவ நூல்கள் வாசியுங்கள் .
அங்கெ தமிழ் கொஞ்சி விளையாடுகிறது
பக்தி என்பது மார்க்கம் .நல்வழிப்படுத்த அதுவே சிறப்பாக மையும்



கருத்துகள்
கருத்துரையிடுக