சானா சண்முகநாதன்
^^^^^^^^^^^^^^^^^^சானா
சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.
சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். "சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். தேவகி என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார்.
சானா என்று அழைக்கப்படும் எஸ். சண்முகநாதன் (சனவரி 11, 1911 - 1979) இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.
இவர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளாக 20 கேள்விகள், விவேகச் சக்கரம், மத்தாப்பு போன்றவற்றைத் தயாரித்தார்.
உரைநடைச் சித்திரங்கள் வரைவதில் வல்லவரான இவர், சென்னை அரசினர் கலைக்கல்லூரியில் சித்திரம் பயின்று (1940-1942) சித்திர தராதரப் பத்திரம் பெற்றார். இவர் 1939 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகையான ஈழகேசரியில் முதலில் ஓவியராகவும் பின்னர் உதவியாசிரியராகவும் பணியாற்றிய காலங்களில் ரேகைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் வரைந்தார். வாசகர்கள் இவரை யாழ்ப்பாணத்து மாலி என பெயரிட்டழைத்தனர்.
கலையரசு சொர்ணலிங்கத்தைத் தனது நாடகக் குருவாக குறிப்பிடுகின்ற இவர், 1938 இல் கலையரசுவினால் தயாரிக்கப்பட்ட வணிகபுரத்து வாணிகன் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா சென்று சுகுமார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த தேவதாஸி படத்தில் சிறு வேடமேற்று நடித்ததோடு இலங்கை வானொலித் தமிழ் நாடகத் தயாரிப்பாளராகவும் விளங்கினார். இலண்டனில் கந்தையா என்ற வானொலி நாடகத்தின் மூலம் பரவலான அறிமுகத்தையும் பெற்றார். இவர் தனது ஓவியங்கள் அனைத்தையும் சிலைட் ஆக வைத்திருந்தாரென்பதை அறியமுடிகின்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக