திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டனவா ?

%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இரு இணைந்தமனங்க ளால் மட்டுமே
திருமணத்தில் சொர்க்கமாக்க முடியும்
புரிதல் அற்ற உறவுகள்...
தடுமாறும் மனங்கள் ....
தடுக்கி விழ செய்யும்
துரோகிகள் ........
பொறுப்பற்ற சமூகம் ...
இவற்றோடு .
சுயநலமான சொந்தங்கள் ...
அன்பு என்ற முகமூடிக்குள்
ஆயிரம் பந்தங்கள் .....
இவை யாவும்
விளங்கி கொள்ளும்
தருணம்
மனம்..........வெறுமை அடையும்
தனிமையை தேடி பயணிக்கும்
மனித மனம் எவ்வளவு புனிதமானதோ அதை விடப் புதிர்களால் நிரம்பியது. அதற்கென்று உருவங்கள் ஏதும் கிடையாது. ஆனால் அது உருவாக்கும் வடிவங்களோ எண்ணற்றவை. மனித மனத்தின் சிந்தனைகளுக்கென்று ஏதும் தனித்த கொள்கைகள் கிடையாது. வானில் திரியும் மேகங்கள் போல அவை நிமிடத்துக்கொரு தோற்றம் காட்டும்.
யாரும் யாரையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் மனித மனம் மாறுதலுக்குரியது. இன்று அதிக விருப்பாயிருக்கும் ஒன்று, நாளை அதீத வெறுப்பாகும். இன்று பிடிக்காத ஒன்று மறுநாள் பிரியத்துக்குரியதாக மாறும். இது இயற்கையின் நியதி. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை இயன்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். யார் மீதும் குற்றம் குறைகளை மட்டுமே காணக் கூடாது.
திருமணங்களில் மணமக்களை வாழ்த்தும் போது, “ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு வாழுங்கள்..”, என்று வாழ்த்தப்பழ குங்கள் .
சண்டையும், சச்சரவுமின்றி வாழ்க்கை அமையாது. மூன்று மணி நேரத் திரைப்படத்திற்கே வில்லன்கள் தேவைப்படும்போது நீண்ட நெடிய இந்த வாழ்க்கை சிலபல துரோகங்கள், அவமானங்கள், சோதனைகள் என்று தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
அதுதான் வாழ்வியலின் சுவாரஸ்யமும் கூட. தடைகள் இருந்தால் தான் அதைத் தாண்டும் எண்ணம் வரும். சோதனைகள் இருந்தால் தான் அதைச் சாதனையாக்கும் வேகம் வரும்.
ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு‌ தனி உலகம் தான். ஒவ்வொரு மனிதரும் நிறம், அங்கம், தலைமுடி என்றெல்லாம் வேறுபட்டிருப்பது போல ஒவ்வொருவருக்கும் சிந்தனைகள் நிச்சயம் வேறுபட்டுத் தான் இருக்கும். சக மனிதர்கள் மீதான நம்முடைய எண்ண வெளிப்பாடுகள் தான் நம்மை மனித உயிர்ப்போடு இயங்கச் செய்கின்றன.
ஒருவர் தனது கருத்துக்களை அடுத்தவரிடம் வெளிப்படுத்தலாம். ஆனால் அவர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. எந்தவொரு கருத்து குறித்தும் ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நடக்க வேண்டும். கருத்துக்களோடு தான் மோத வேண்டும். கருத்தைச் சொன்னவர்களோடு மோதக் கூடாது. இதுவும் ஒருவிதமான ஆக்கிரமிப்பு தான். ஒரே விதமான எண்ண ஓட்டங்கள் உள்ளவர்கள் அரிது. அதைப் புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
உறவோ, நட்போ யாராக இருந்தாலும் அந்த உறவில் நேர்மையாக இருக்க வேண்டும். பொய்மைகளாலும், தவறான நம்பிக்கையாலும் கட்டப்பட்ட ஒரு உறவு அவற்றாலேயே விரைவில் வீழ்ந்து விடும். ஒரே தண்ணீரை ஊற்றி வளர்த்தாலும் வேப்பமரமும், மாமரமும் வெவ்வேறு சுவையுடைய காய்களைத்தான் தருகின்றன. அதுபோல ஒரே குடும்பத்தில் இருந்தாலும் எல்லோரது எண்ணங்களும் ஒன்றுபோல் இருக்காது.
புரிந்து கொள்வது வேறு; புரிய வைப்பது வேறு என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தான் மனதில் நினைப்பதை சொல்லாமலே அடுத்தவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட முட்டாள்தனம் வேறு ஏது? மனம் விட்டுப் பேசும் எத்தகைய உறவுகளிலும் இத்தகைய சிக்கல்கள் எழாது. அடுத்தவரின் விருப்பு,வெறுப்புகளையும் மதிக்கப் பழக வேண்டும். எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்த நயமான, எதிர்தர்ப்பைப் புண்படுத்தாத வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாம் சொல்லும் கருத்துகளை அடுத்தவருக்குப் புரிய வைக்க முயல வேண்டுமே தவிர அவர்களிடம் திணிக்கக் கூடாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கேற்ப புரிதலின் அருமை பிரிதலில் தான் தெரியும். அவசரப்பட்டு எந்த ஒரு உறவையும் வெட்டி விடக்கூடாது. மனித மனங்களின் மாற்றங்களை உணர்ந்து அடுத்தவர் தெளிவு பெற போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இருக்கின்ற ஒரு வாழ்க்கையை
இனிமையாக
வாழ வேண்டும்.
நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது பெரிய வீட்டிலோ, ஆடம்பரமான காரிலோ, பெருத்த வங்கிக் கணக்கிலோ இல்லை. நமக்கு ஒரு துன்பம் என்றவுடன் துடிக்கும் ஒரு உயிரையாவது சம்பாதித்து வைத்திருப்பவரே செல்வந்தர். இதரர் எத்துனை பணம் படைத்தவராயினும் ஏழையே.
அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.
எண்ணங்கள் தான் நமக்குத் தோழமையும், விரோதமும். நம்மை வாழ வைப்பதும், அழிப்பதும் நம்முடைய அகச் சிந்தனைகளே. இதைப் புரிந்து கொண்டு வாழப் பழக வேண்டும். அப்போது இந்த உலகமெங்கும் அழகிய பூக்கள் பூக்கும் நந்தவனமாக மட்டுமே காட்சியளிக்கும்.
இதற்காக ஒரு கதையை உங்களுடன் பகிர்கின்றேன்
கணவனும்,கணவரின் நண்பரும் சாப்பிட அமர்கிறார்கள்.
அடுப்படியில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது?
என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள். மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள்.
வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில்,
கணவன் சொன்னான் ‘எனக்குப்போதும்.
நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது…?’
என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது!
அந்த நேரத்தில் இவளோ ‘அண்ணா உங்களுக்கு…?
’ என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க,
‘போதும்… போதும்… நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன்.
இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா…’என்று கூறி எழுந்தான்
அந்த விருந்தாளி நண்பன்.
கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது ‘மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு’என்று கணவன் சொல்ல,
தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே,
தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!
ஆம் இரு மனங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன .அதனால் திரு மனங்கள் சொர்க்கமாக மணம் வீசுவதால் ..ஒரு சில மனங்கள் சொர்க்கமாகி விடுகின்றன
திரு மனங்கள் சொர்க்கத்தில் இணைக்கப்பட்டவை
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்