ஹன்டி பேரின்பநாயகம்

இலங்கையின் விடுதலைக்காக முதல் முறையாக அமைப்பு ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசை ஆரம்பித்தவர்களில் பேரின்பநாயகமும் ஒருவர். ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இளைஞர் காங்கிரஸ் மூலம் முன்வைத்தார்

இரண்டு அதிகாரபூர்வ மொழிகளுடன் இலங்கை ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார். இருமுறை இதனால் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் படுதோல்வி அடைந்தார். முதலில் 1947 தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் உடுவில் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கிறித்தவக் குடும்பம் ஒன்றில் மானிப்பாயைச் சேர்ந்த சரவணமுத்து என்பவருக்குப் பிறந்த ஹண்டி பேரின்பநாயகம் சிறு வயதிலேயே கிறித்தவ மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். மானிப்பாய் மெமோரியல் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும்,பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் உயர்கல்வியையும் பயின்றார். 1924 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக இளங்கலைத் தேர்வில் தேறி பட்டம் பெற்றார்
யாழ்ப்பாணக் கல்லூரியில் 1944 மார்ச் வரை ஆங்கிலம், இலத்தீன் மொழி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிறிது காலம் வழக்குரைஞராக கொழும்பில் பணியாற்றினார்.
1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததை அடுத்து அவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 1949 முதல் 1960 வரை அதிபராகப் பணியாற்றினார்.
விளக்கமாக சொல்வதானால்
மாணவர் உள்ளங்களைக் கவர்ந்த நல்லாசிரியராகவும், நேர்மையான காந்தியவாதி யாகவும், முற்போக்குச் சிந்தனையாளராக வும், ஆளுமையும் அர்ப்பணிப்பும் நிறைந்த அதிபராகவும் சீர்திருத்தவாதியாக வும் விளங்கியவர் அமரர் ச. ஹன்டி பேரின்பநாயகம். தமிழர் பண்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த இவர் பண்பாட்டு விழுமியங்களுடன் நவீன வாழ்வியலுக்கு உகந்ததான கல்வி முறையை ஏற்படுத்து வதற்குப் பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பலரின் வேண்டு கோளுக்கு இணங்க கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அதிபராகப் பணியாற்றுவதற்காக வந்தார். 1949 முதல் 1960 வரையான காலப்பகுதியில் கல்லூரியின் அதிபர் பதவியை வகித்ததோடு இலங்கையில் அதன் பெருமையைத் துலங்கச் செய்தார். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் இடநெருக்கடியைத் தீர்ப்பதற்கு மாடிக்கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் உதயமானது.
தென்னிந்தியக் கலைஞர்களை இங்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று கிடைத்த நிதியைக் கொண்டும் கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்தார். இன்று கல்லூரிச் சமூகம் அவரால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்திற்கு ஹன்டி பேரின்பநாயகம் என்ற பெயரைச் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கல்வியானது மாணவர் மையக் கல்வியாகவும் அத்துடன் தொழிற் கல்வியுடன் அழகியற் கல்வியையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அவரது கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த தொழில்நுட்பப் பாடங்களான உலோகவேலை, மரவேலை, மட்பாண்டவேலை, விவசாயம், தையற்கலை ஆகியவற்றையும் அழகியற் பாடங்களான சித்திரம், சங்கீதம், நடனம் என்பவற்றையும் உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவர் சகல துறைகளிலும் பயன்பெற உதவினார்.
தனது அரசியல், சமூகச் செல்வாக்கு அனைத்தையும் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய ஆளுமைமிக்க அதிபராக ஹன்டி பேரின்பநாயகம் விளங்கினார். ஒன்றுபட்ட இலங்கையில் சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து வாழ்தல் என்ற இன ஐக்கியக் கொள்கையும் இன சமத்துவக் கோட்பாடும் கொண்ட தேசிய வாதியாக விளங்கிய பேரின்பநாயகம் அன்றைய அரசியல் தலைவர்களை கல்லூரி நிகழ்வுகளுக்கு அழைத்துவந்து இன ஐக்கியத்திற்காகப் பாடுபட்டார். என்.எம். பெரேரா, சேர். ஜோன் கொத்தலாவல, பிலிப் குணவர்தன, தகநாயக்கா, டாக்டர் ஜி.பி. மலல சேகர, வில்மட் பெரேரா, ஜே.ஆர். ஜெயவர்தன போன்றோர் இவரின் நண்பர்களாக விளங்கினர்.
1954 இல் இலங்கையின் பிரதமராக விளங்கிய சேர். ஜோன் கொத்தலாவல இங்கு அழைத்துவரப்பட்ட போது இதனை விரும்பாத சில சக்திகள் பாடசாலை கட்டடத்தின் ஓலைக் கூரை யைத் தீக்கிரையாக்கியமை குறிப்பிடத்தக் கது. சிங்களவர் தமிழ் மொழியையும் தமிழர் சிங்கள மொழியையும் கற்றல் வேண்டும் என்ற இன சமத்துவக் கொள்கையை செயற்படுத்த விரும்பிய ஹன்டி பேரின்பநாயகத்தின் தீர்க்க தரிசனமிக்க பார்வை இன்றுள்ள அரசியல் வாதிகளுக்குச் சிறந்த பாடமாகும்.
தனது கல்விப் பணியோடு சமூகப் பணிகளையும் ஆற்றி வந்தமை அவரது இன்னொரு பக்கமாகும். 1949 ஆம் ஆண்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராகப் பதவி வகித்து காந்திய கொள்கைகளை இலங்கையில் பரப்புவதற்குக் காரணமாயிருந்தார். 1927 ஆம் ஆண்டு காந்தி இலங்கைக்கு விஜயம் செய்த போது வரவேற்புக் குழுவிலும் முக்கிய பங்கு வகித்தவர் இவராவார். அது மட்டுமன்றி நேரு, ராஜாதி போன்றவர்களையும் இங்கு வரவழைப் பதற்கு மூலகாரணமாயிருந்தார்.
கொள்கைப் பிடிப்புள்ள காந்தியவாதியாக விளங்கிய அவர் சமுக சேவையையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். எளிய வாழ்வும் உயர்ந்த நினைவும் பரந்த உள்ளமும் ஆழ்ந்த அன்புமே அவர் பெற்றிருந்த வெற்றிக்கும் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணமாகும். இலங்கைக்கும் சிறப்பாக யாழ்ப்பாணத் திற்கும் காந்தியத்திற்கும் அமரர் ஹன்டி பேரின்பநாயகம் செய்திருக்கும் தொண்டு அளவிட முடியாதது. காந்தியம் உள்ளவரை அவரின் நினைவுகளும் இருந்து கொண்டே இருக்கும்.
Keine Fotobeschreibung verfügbar.

கருத்துகள்