கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள். சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள்

வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ஆனந்தகான அமுத மழையே
பொழிந்து மனம் தனை உருக வழி செய்த
வீணைக் கொடியுடைய வேந்தனே
யார் அவன் தான் தங்கத் தமிழன் இராவணன்
வால்மீகி ராமாயணத்தில்
ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.
யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.
கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .
ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை......
கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”
அதாவது சடாயு இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்
மேலும் ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே
அதாவது
“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.
ராவணன் – இரு ஆவணன்
ராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு.
பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் – அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். ராவணன் – மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் – தேவாந்தகன் ஆகியோர் ராவணனின் மகன்கள் ஆவார்.
ராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை ராவணனுக்கு தந்தார். ராமாயணத்தில் ராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக ராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராற்றல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.
இந்தியாவில் குறிப்பாக தமிழர்கள் ராவணனை பெரிதும் விரும்புகின்றனர். ராவணன் புகழை போற்றும் விதமாக அவருக்காக வழிபாடும் நடத்துகின்றனர். அப்படி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் ராவணன் சிலைகள் உள்ளன.
சிவபெருமானின் ஜோதிர்லிங்க கோயிலான பைஜ்நாத் கோயில் இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் ராவணனுடன் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. ராவணன் இங்கு சிவனை வணங்கினார் என்பது புராணக்கதை.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள பிஸ்ராக், ராவணனின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு முதலில் ராவணனின் தந்தை விஸ்ரவாசா பெயரிடப்பட்டது. பின்னர் இது பிஸ்ராக் என்று அறியப்பட்டது. ராவணனும் அவரது தந்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சிவலிங்க பூஜை செய்ததாக புராணக்கதைகள் உள்ளன.
ராவணனை இன்றளவும் ஆத்மார்த்தமாக வழிபடும் சந்ததியினர் உள்ளனர். தீவிர சிவ பக்தரான ராவணனை அவரது பக்தர்கள் உளமார்ந்து கொண்டாடுகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழர்கள் ராவணனை பெரிதும் விரும்புகின்றனர். ராவணன் புகழை போற்றும் விதமாக அவருக்காக வழிபாடும் நடத்துகின்றனர். அப்படி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் ராவணன் சிலைகள் உள்ளன.
நமக்கிருக்கும் இதிகாசங்களும், புராணங்களும், இலக்கியங்களும் உலகிலுள்ள பிற பகுதிகளில் கிடையாது. கண்மூடிதனமாக "அனைத்தும் கற்பனையே" என்று ஒரே வாக்கியத்தில் கூறுவதை விடுத்து, பகுத்து அறிய முற்பட்டோமேயானால், நம் முன்னோர்கள் பற்றி நமக்கு தெரியாத பல அரிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் ,
இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை.என்று சிங்களப் பதிவுகள் உண்டு
ஆனால் அனுராதையானவள் சிறை வைக்கப்பட்ட இடமே அனுராதை புரம். மலையாளத்தில் உள்ள கதை ஓன்று புத்தகம் ஞாபகமில்லை .எவன் அனுராதை புரத்தை புனிதபூமியாக கருதி ஆட்சி செய்கிறானோ அன்று தான் இலங்கையில் சமாதானம் நிலவும் .மீண்டும் பணக்கார நாடாக ஆகும் .ஆனால் எவன் இந்த புனித பூமியை அழிக்க நினைக்கிறானோ அவன் அழிந்து விடுவான் என்று .
கதைகள் அல்ல இது நிசமாகக் கூட இருக்கலாம் .
இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீற்றர் தொலைவான மலையில்தான் இந்த இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.
இராவணன் கயிலாய மலைமீது ஏற முற்பட அவன் உருண்டு விழுகிறான். அதன் அடையாளமாக இன்றும் கயிலாய மலையின் தென்திசை முகத்தில் நீளமான வெட்டுத் தழும்பு தெரியும். கோபத்தில் கயிலாய மலையை பெயர்த்துத் தூக்கிட, சிவன் சினம் கொண்டு தன் கட்டை விரலால் அதை அழுத்த, மலை இராவணனை அழுத்தி நசுக்கும்போது, தன் தவறை உணர்ந்து "சிவதாண்டவ" ஸ்தோத்திரம் பாடுகிறான்.
ஜடாடவீ கலஜ்ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலேவலப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்,
டமட் டமட் டமட் டமன் னினாதவட் டமர்வயம்
சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம்
இராவணனின் மனைவியான மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அச்சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என இருக்க இலங்கை வேந்தன் தனது குலகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்து யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் வேண்டுகோள் விடுத்து அதற்கு வழிமுறைகளையும் அவரிடம் கோரினான். அதற்கு சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..” என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒன்றாக அடைத்துவிட்டான் இராவணன்.
ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள். வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டு அது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார். சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால், தனது மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார். சனீஸ்வரன்- ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது. குளிகன் ( மாந்தன் எனவும் அழைப்பர் ) பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது. அதனால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்ட்டான்.
இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது. குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார். அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப் பட்டான். குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம். இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும். ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. ஆக..தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.
கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சோழபுரத்தில் கோயில் கொண்டுள்ள பைரவேசுவர சிவபெருமானை சனிபகவான் வழிபட்டு மாந்தனைப் படைத்ததாக அவ்வாலய தலபுராணம் சொல்கிறது. இத்தலம் 64 பைரவர்களும் ஒடுங்கும் தலமாகவும் நம்பப்படுகிறது.
இராவணன் இயற்றிய நூல்கள் ஓலை சுவடிகளாகவும், பிரதிகள் இல்லாமலும் இருந்தன. இவை யாழ் நூலகத்தில் தீக்கிரை யானது.ஆனால், சில முன்னமே அச்சிடப்பட்டு விட்டது. அவை தான் இப்பொழுதும் கிடைக்கின்றது.
தமிழ்ப் பெருமன்னன் இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்.
உடற்கூறு நூல்
மலை வாகடம்
மாதர் மருத்துவம்
இராவணன் – 12000
நாடி, எண்வகை பரிசோதனை நூல்
இராவணன் வைத்திய சிந்தாமணி
இராவணன் மருந்துகள் - 12000
இராவணன் நோய் நிதானம் - 72 000
இராவணன் – கியாழங்கள் – 7000
இராவணன் வாலை வாகடம் – 40000
இராவணன் வர்ம ஆதி நூல்
வர்ம திறவுகோல் நூல்கள்
யாழ்பாணம் – மூலிகை அகராதி
யாழ்பாணன் – பொது அகராதி
பெரிய மாட்டு வாகடம்
நச்சு மருத்துவம்
அகால மரண நூல்
உடல் தொழில் நூல்
தத்துவ விளக்க நூல்
இராவணன் பொது மருத்துவம்
இராவணன் சுகாதார மருத்துவம்
இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
இராவணன் அறுவை மருத்துவம் – 6000
இராவணன் பொருட்பண்பு நூல்
பாண்ட புதையல் முறைகள் – 600
இராவணன் வில்லை வாகடம்
இராவணன் மெழுகு வாகடம்
இவை தான் அவை
இவற்றில் சிலவற்றை பரராசசேகரம் என்னும் மருத்துவநூலும் கொண்டுள்ளது இந்த நூல் இணுவில் செல்லப்பா பரிகாரியிட்மும் இருந்தது .அது இப்போ எங்கே யாரிடம் இருக்கிறதோ?
சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தையகாலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது சிந்தாமணி மருத்துவம் தான். இந்த சிந்தாமணி மருத்துவம் இராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணனின் கதாபாத்திரமே நம்மில் பெரும்பாலானோரின் கண் முன் வந்து நிற்கும். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.
இப்போதும் வட இந்தியாவில் ராவண சம்ஹிதா என ராவணனின் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சில புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. இப்புத்தகத்தின் தமிழ்ப்பெயர் சிந்தாமணி மருத்துவம். ராவணன் நன்கு ஆராய்ந்து உருவாக்கியது தான் சிந்தாமணி மருத்துவம். இப்புத்தகத்தை அவர் முழுக்க முழுக்க தமிழில் எழுதி இருந்தார். வட சொல்லோ அல்லது சமஸ்கிருதமோ இல்லாமல்தான் எழுதியிருந்தார்.
இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்... வியக்க வைக்கும் தகவல்கள்!
ராவணன் கைப்பட எழுதியது:
சித்த மருத்துவத்தில் அக மருந்துக்கள் 32 மற்றும் புற மருந்துக்கள் 32 வகையறாக்கள்தான் உள்ளன. ஆனால் இராவணன் எழுதிய சிந்தாமணி மருத்துவத்தில் அக மருந்துவ முறைகள் 50ம், புற மருத்துவ முறைகள் 60க்கு மேற்பட்டதாகவும் இருந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோமாவில் உள்ள மனிதர்களை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் இதில் உள்ளது. முதலில் தமிழில் வெளியான மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள், பின்னரே சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, சிங்களம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்... வியக்க வைக்கும் தகவல்கள்!
விசேட சிகிச்சைகள்:
விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த முறையில் சிகிச்சைகள் இல்லை ஆனால் இராவணின் சிந்தாமணி மருத்துவதில் அதற்கும் தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களும் இவரின் மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.
இராவணின் சிந்தாமணி மருத்துவ முறையின் ஒரு சில பகுதிகள்தான் தற்போது பின்பற்றப்படும் சித்த மருத்துவ முறை. தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இன்றளவும் சில சிந்தாமணி வைத்தியச் சாலைகள் இயங்கி வருகின்றன என்பதுதான் மிகவும் ஆச்சரியமான செய்தி. பண்டையத் தமிழ் இலக்கியங்களையும், அவைதம் பெருமைகளையும், தமிழினத்தின் கலாச்சார நாகரீகக் குறியீடுகளையும் வெளிக்கொண்டுவர குரல் கொடுக்கும் யாவரும் ராவணன் இயற்றிய சிந்தாமணி மருத்துவ முறையை அழிய விடாமல் தடுக்கவும், இன்னும் நீண்ட நெடிய வரலாற்று காலங்களுக்கு இதை கொண்டு செல்லவும் குரலெழுப்ப வேண்டும்
மேலும்
கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தியானத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு முன் காட்சி தந்தார். நினக்கு வேண்டியவைகளைக் கேள் என்றார். அடியேன் வாழும் இலங்கையும் நானும் அபசயம் அடையா வண்ணம் அருள் புரிய வேண்டும் என்றனன். இவன் மொழிகேட்ட கருணை வள்ளல், அவன் கையில் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, இதனை அருமையுடன் ஆராதித்து வா. ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை வாஹனாதிகளில் ஏற்றாமலும், கீழே வையாமலும் எடுத்துச் செல் என்றார் இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று இலங்கையில் தாபித்தால் நீயும் அழிய மட்டாய், இலங்கையும் அழியாது என்றார். எங்கேனும் கீழே வைத்தால் லிங்கத்தை எடுக்க முடியாது அது அங்கேயே தாபிதமாகிவிடும் என்றும் கருணை வள்ளலான சிவ பெருமான் மொழிந்தார்.
உடனே ராவணன் அந்தச் சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தனன். இதைத் தேவர்கள் கண்டனர். நடு நடுங்கினர். இந்த ஆள் ஏற்கனவே நமக்குச் சொல்லொணாத் துய ரம் தருகின்றனன். இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எங்கனம் என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதைக் கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர்.
முழுமுதற் கடவுளான விநாயகனை வேண்டி வழி காணுவோம் என்று விரைந்தோடினர். அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப் பெருமான். பெருமானே! மகா துஷ்டனான ராவ ணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிட்டி செய்ய விரைந்து செல்லுகிறான. அவனைத் தடுத்து நிறுத்தி இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண் ணம் அருள்பாலிக்க வேண்டும் இதுவே எங்கள் விக்ஞாபனம் என்றனர்.
உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். நீ உடனே சென்று ராவணனின் உதரத்தில்புகுந்து சலக்கடுப்பு உண்டாக்ககடவை. யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் உதரத்தில் இருக்கவும் என்றார். வருணனும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண் ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய பார்ப்பனச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனைப் பின் தொடர்ந்தார்.
ராவணன், காலைக் கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான்.; யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு குளத்தையோ ஏரிக் கரையையோ நோக்கி ஓடலாமே என்று வெண்ணிச் சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான் முஞ்சிப் புல்லரைஞாணும், முன் கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார்.
பையா! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாகக் காணப்படுகிறாய். நான் சலமோசனம் செய்துவருங்காறு இச் சிவலிங்கத்தினை நீ வைத்திரு. ஸ்நான முதலிய சுசி (சுத்தம்) இலாதவர் இதைத் தொடப்படாது; தரையிலும் வைக்கப்படாது என்றனன்.
(இப்பொழுது பலர் சுசி என்று பெயர் வைக்கிறார்கள் )
பிள்ளையாரும், அதற்கென்ன, சிறப்பாக ச் செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக் கூடாது; நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை விளிப்பேன். அதற்குள் வராவிடில், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்றார்.
ராவணன் , இதோ ஒரு நொடியில் திரும்புவேன் என்று சொல்லி ஓடினன். ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்த குடைவில் நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை விளித்துவிட்டு சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார். அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன்இ டம் போய்ச் சேர்ந்தார்.
ராவணன் திரும்பி வந்தான் பிரம்மச்சாரி கையில் (விநாயகன்) சிவலிங்கம் இல்லாமை கண்டு திகைத்தான்; பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன் நானோ துர்பலனுள்ள சிறுவன்; நெடுநேரம் ஆகியும் நீர் வராததால் உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம் என்றான்.
கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாள ம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டதனை அறியான். அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான் இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே அழைக் கப்படுகிறது. சிவனுக்கு மகா பலநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.
திருக்கோணமலையை சிங்களவர் கோகர்ணம் என அழைப்பர்
தொடரும் Manikkavasagar Vaitialingam
பாகம் எட்டு நிறைந்தது

கருத்துகள்