விபுலானந்த அடிகள் இல்லை என்றால் பாரதியே இல்லை
%%%%%%%%%%%%%%%%%%%%
பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.
படித்தவர்கள், விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?
விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும். பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல, தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.
சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற, கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும், இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.
மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.
பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 ஆம் தேதி சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.
அடிகளார் இயற்பெயரான தம்பிப்பிள்ளை என்ற நாமத்தோடு பிறந்தார். அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்ட்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான 'மயில்வாகனன்' எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர்
இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.
கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1926 ஆம் ஆண்டிலிருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.
மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்
செட்டி நாட்டரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.
1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது.
சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.
முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.
இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது.
மதங்க சூளாமணி என்பது முத்தமிழில் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு என எழுந்த ஒரு நூலாகும். தமிழ்க் காப்பியங்களுள் முன்னணியில் வைத்து எண்ணத்தக்க சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தகவல்களையும், சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் காணும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு 1926 ஆம் ஆண்டில்,பதிப்பித்தவர் சுவாமிஜி தான்.
மதங்க சூளாமணி என்ற நூல் அவரது நாடக ஆராய்ச்சிக்கு தக்க எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நூல் உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டமைந்துள்ளது. முதலாவது இயலில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கூறும் நாடகத் தமிழ் பற்றிய கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இயலில் ஆங்கில ஆசிரியரான சேக்ஸ்பியரின் பன்னிரெண்டு நாடகங்களின் சிறப்பியல்புகள் விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் இயலில் நாடகம் பற்றிப் பலராலும் கூறப்பட்ட கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.
விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், கருநாடக இசையின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1936ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இவரது பேச்சொன்றில், பழந்தமிழருடைய யாழ்கள் பற்றி விளக்கியதுடன் அவற்றின் அமைப்பையும் படங்கள் மூலம் விளக்கினார். இவரது ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் பலரும் இவரது ஆய்வுகளை நூலாக வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தனர். எனினும், வெவ்வேறு காலகட்டங்களில் இவரது பணிகள் காரணமாக இந்த ஆய்வு தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் இமயமலைச் சாரலில் பிரபுத்த பாரதம் என்னும் ஆங்கில நூலுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதும் இந்த ஆய்வை நிறைவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது
யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.
விபுலானந்தர் ஒரு சிறந்த கவிஞர். அவர் இயற்றிய கவிதைகள் பல 'விபுலாநந்தக் கவிமலர்' என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. 'ஈசனுவக்கும் மலர்' என்பதே முதற் கவிதையாக அச்சிடப்பட்டுள்ளது. படிமம், அகவுருவங்கள், குறியீடுகள், வர்ணனைகள் நிறைந்த இக்கவிதையில் அவரது அருள் நிறைந்த உள்ளமும் தவநிலையும் வெளிப்படுகின்றன.
உதாரணமாக
வெள்ளை நிற மல்லிகையோ வேரெந்த மாமலரோ
வள்ள லடியினைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளை நிறப்பூவுமல்ல வேறேந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்னும் கவிதை வரிசைகளைக் குறிப்பிடலாம்.
இவருடைய கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர் போன்றவையும் சிறப்பான, கருத்தாளம் மிக்க கவிதைகளாக உள்ளன.
சுவாமி விபுலானந்தரின் பணிகளுள் அவரது மொழி பெயர்ப்பு பணியும் தனித்துவமானது. அடிகளாருடைய மொழி பெயர்ப்புத் தழுவல் மொழியாக்க வகையைச் சார்ந்ததாகும். இவ்வகையான மொழி பெயர்ப்புக்களிலே மொழி பெயர்ப்பாளரின் புலமை மிகுதியாக காணப்படும். இரவீந்திரநாத்தாகூர் எழுதிய கவிதைகளை பூஞ்சோலைக் காவலன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளார். மில்ற்றனின் 'சுவர்க்க நீக்கம்' என்னும் நெடும் பாடலின் பகுதிகளையும் தான் சொந்தமாகக் கவி புனைவது போல் மொழி பெயர்த்தள்ளார். 'ஆங்கில வாணி' என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த சுவாமி, ஆழ்வார் பாடல்கள், திருவிளையாடல் புராணத்தின் சில பகுதிகள் முதலியவற்றைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சுவாமி விபுலானந்தர் ஞானசம் பாஷனைகள், விவேகாநந்த ஞானோதயம், கருமயோகம், ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை போன்றவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
சுவாமி விபுலானந்தர் இலக்கியம் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது 'இலக்கியச் சுவை' என்ற கட்டுரை தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் அமைந்துள்ளது. இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி அவற்றை விளக்கி, அவற்றிற் காணப்படும் சுவைத்திறன்களை வெளிப்படுத்தி இக்கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.
'ஐயமும் அழகும்' என்னும் கட்டுரையில் ஐயத்தின் வழி அழகு பிறப்பதனை உணர்த்தவதற்கு ஆன்றோர் செய்தளித்த அழகிய செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக் காட்டுவோம் என்று கூறித்தமிழ் இலக்கியங்களிலிருந்து பல எடுத்துக்காட்டுக்களைக்; காட்டி விளக்கியுள்ளார்.
வண்ணமும் வடிவும், நிலவும் பொழிலும், கவியும் சால்பும் என்னும் கட்டுரைகளிலும் சுவைத்திறனுடைய செய்யுட்களைத் தமிழிலக்கியங்களிலிருந்த மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
'ஆங்கில வாணி' என்னும் கட்டுரையில் சேக்ஸ்பியர், மில்ற்றன், தெனிசன் போன்ற ஆங்கிலப் புலவர்களுடைய இலக்கிய ஆக்கங்களின் சிறப்புக்களை விளக்கிக் கூறியுள்ளார்.
'யவனபுரத்துக் கலைச் செல்வம்' என்னும் கட்டுரையிலே அடிகளார் கிரேக்க மொழி இலக்கியங்களிலே காணப்படும் சில பண்புகளை வடமொழியுடனும் தமிழ் மொழியுடனும் ஒப்பு நோக்கி எழுதியுள்ளார். இக்கட்டுரையானது அடிகளாரின் ஒப்பியலாய்வின் திறனையும் முனைப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
விபுலானந்தர் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். The origin and Growth of Tamil Literature சங்ககாலத்து தெய்வ வழிபாடு, தொல்காப்பியமும் சைவமதமும், யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலவர் சரித்திரம் போன்ற கட்டுரைகள் அத்தகைய வரிசையில் குறிப்பிடத்தக்கவை. உதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (The origin and Growth of Tamil Literature) என்ற கட்டுரை தமிழ் மக்களின் வரலாற்றுத் தொடக்கத்தைப் பற்றிக் கூறுவதுடன் அவர்களின் உலகப் பரம்பல், பண்பாடு அக்காலத்தில் ஏற்பட்ட கடல்கோள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தந்து, தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய முனைகின்றது
இவரது 'பாரதி பாடல்' என்னும் கட்டுரை பாரதியை நன்கு தெளிவாகப் புரிய வைத்தது
'சோழ மண்டலத் தமிழும் ஈழ மண்டலத்தமிழும்' என்னும் கட்டுரை இவரது மொழியியல் ஆய்வுகளில் முக்கியமானது. மட்டக்களப்பு வழக்கு மொழி, யாழ்ப்பாணத்து வழக்கு மொழியிலின்றும் வேறுபட்டது என்பதனை அவர் இக்கட்டுரையில் கூறியுள்ளார். 'மட்டக்களப்பு நான் பிறந்த நாடு, ஈழத்தின் கிழக்குப் பாகத்திலுள்ளது. அந்நாட்டு வழக்கு மொழி யாழ்ப்பாணத்து வழக்கு மொழியிலின்றும் வேறுபட்டது' என்னும் அவரது கூற்று மூலம் இதனை அறியலாம். இலங்கையிற் பேசப்படும் வழக்குத்தமிழில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை இக்கட்டுரை மூலம் அறியலாம்.
இவர் எழுதிய வசன நூல்கள் நடராஜ வடிவம், தில்லைத் திருநடனம் முதலிய வசனநூல்களில் இறைவனின் திருவருள் எவ்வாறு ஐந்தொழில்களையும் ஆற்றுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். உமாமகேஸ்சுவரம் என்னும் வசன நூல் இறைவன் மாதொரு பாகனாய் அமைந்துள்ள நுட்பத்தினை விளக்குகின்றது.
இவரின் தலைமையில் தலைமையில் கலைச் சொல்லாக்க கழகம் 1934 இல் அமைக்கப்பட்டது. இக்கழகத்தின் அயராத பணியினால் 'கலைச் சொற்கள்' என்னும் அகராதி நூல் 1938 இல் சென்னைத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. இது விபுலானந்தரின் அகராதி தமிழருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுவதாகவே உள்ளது.
இவர் புகழை இணுவையூர் புலவர் க சிற்றம்பலப் புலவர் சுவாமி விபுலானந்தர் நான்மணி மாலை யை இயற்றினார்
அந்த நூலில் இருந்து ஒரு பாடல்
செந்தமிழர் செய்த சிறந்த தவப்பயனால்
வந்துதித்த பண்டித மாமணியைச் – சிந்தித்தே
நாவலராய்ப் பாரதியாய் நானேந்திக் கூடலுறை
தேவருமாய்ப் பாடுவேன் தேர்ந்து.
உங்களுக்குத் தெரியுமா சுவாமி விபுலானந்தர் இணுவிலில் வாழ்ந்தார் என்று ?
தெரியாதா கேட்டு அறிந்து கொள்ளுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக