சானாவின் பாசறையில் மிளிர்ந்த

ராஜேஸ்வரி சண்முகம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாடசாலைகள் நாடகப்போட்டியில் கண்ணகி பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். "கண்ணகி" நாடகத்தைப் பார்த்த வானொலி நாடகத் தயாரிப்பாளர் சானா (சண்முகநாதன்) இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்
அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகளாக
மார்ச்சு 16, 1940 இல் பிறந்தவர் . இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர்
. ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.இராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2012, மார்ச்சு 23 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்
இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது மகன் சந்திரமோகன் ஒரு மெல்லிசைப் பாடகர். இளம் வயதிலேயே இறந்து விட்டார். சந்திரகாந்தன் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக உள்ளார். மகள் வசந்தி சண்முகம் வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறார்.
சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி. விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். 1952, டிசம்பர் 26 இல் வானொலிக் கலைஞராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி" தொடர் நாடகத்தில் பாண்டிமாதேவியாக நடித்தார். 1952 முதல் 1969 வரை வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, மற்றும் உரைச்சித்திரங்களில் நடித்து வந்தார். அசட்டு லட்சுமியாக இவர் நடித்த சி. சண்முகம் எழுதிய "நெஞ்சில் நிறைந்தவள்" நகைச்சுவை நாடகம் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாயின.இராஜேசுவரி சண்முகத்தின் நேர்காணல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
1969 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார்.
வானொலியில் இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி, கவிதைசெண்டு என பல சுவையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகளில் ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வந்தது இராஜேவரி சண்முகத்தின் தனிப்பாணியாகும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மூத்த செய்தி வாசிப்பாளராக ராஜேஸ்வரி பணியாற்றியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்பில் தனக்கென தனிச் சிறப்பை கொண்டிருந்த ராஜேஸ்வரி ஏனைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வல்லவர். தனது இறுதி காலம் மார்ச் 23, 2012 வரை செய்தி வாசிப்பாளராக இவர் சேவையாற்றினார்.
இலங்கை இயக்குனர் லெனின் மொராயஸ் இயக்கிய "நெஞ்சுக்குத் தெரியும்" தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாக நடித்தார் இராஜேசுவரி சண்முகம்
இலங்கையில் தயாரிக்கப்பட்ட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் ருக்மணி தேவிக்கும், குத்துவிளக்கு திரைப்படத்தில் சாந்திலேகாவுக்கும் பின்னணிக் குரல் வழ்ங்கினார்
சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்"
முருகையனின் ":விடியலை நோக்கி"
சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்"
சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு"
போன்ற மேடை நாடகங்களிலும் தன திறமையை பதித்திருக்கின்றார்
1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான அரசுத்தலைவர் விருது பெற்றார் .
1995 இல் டாக்டர் புரட்சித்தலைவி விருதுபெற்றார்.
காலாசார அமைச்சின் மூலம் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை மொழிவளர்ச்செல்வி பட்டமளித்துக் கௌரவித்தார்.
சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனா வாகீசகலாபமணி பட்டமளித்துக் கௌரவித்தார்.
அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் 'தொடர்பியல் வித்தகர்' என்ற பட்டமளித்துக் கௌரவித்தார்.
எட்டயபுரம் தென்பொதிகைத் தமிழ்சங்கம், 1995 சனவரி 29 இல் 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கௌரவித்தது.
சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.
சிந்தனை வட்டம் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தது.
போட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது மதுரக்குரலாலும்,மொழி வளத்தாலும் தமிழ் பூக்களை தட்டுவித்துள்ளார்.தென்னகத்திலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம்,இளையராஜா,சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம்.எஸ்.வசந்தகுமாரி, கே.ஜே.ஜேசுதாஸ், ஜமுனாராணி, கங்கைஅமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியா வாசுதேவன், டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டி பத்மினி, எஸ்.பி.முத்துராமன், எஸ்.வி.சேகர், கமல்ஹசன், மனோராமா, பி.சுசிலா, வாலி, ஸ்ரீகாந்த், ஜென்சி போன்ற பலரை(புகழ் பூத்த எத்தனையோ கலைஞர்களை) வானொலியூடாகப் பேட்டி கண்டுள்ளார்.
இவர் காதலித்து மணம் முடித்த சண்முகம் பற்றி .......சிறிதாக கூறிவிடுகின்றேன்
சி. சண்முகம் இலங்கை வானொலிக் கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். இவர் வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர் ஆவார். யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் 1955 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய போது நாடகத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்கள் சானா சண்முகநாதன், மற்றும் பொன்மணி குலசிங்கம் ஆகியோர் ஆவர். 1956 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்து சிறு கைத்தொழில் திணைக்களத்தில் 22 ஆண்டுகளும், சுற்றுலா, கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இது இராஜேஸ்வரி சண்முகம் வழங்கிய "இரவின் மடியில்" நிகழ்ச்சி
“வானொலி விளம்பரத்துறையில் பீ.எச்.அப்துல் ஹமீதும், கே.எஸ்.ராஜாவும்கொடிகட்டிப்பறந்த காலத்தில் இவர்கள் இருவருக்கும் இணை கொடுக்கக் கூடியபெண்அறிவிப்பாளராக இராஜேஸ்வரி சண்முகம் மிளிர்ந்தார்.”
“1967ம் ஆண்டு பகுதி நேரஅறிவிப்பாளர் தேர்விலே நானும் திருமதி இராஜேஸ்வரி சண்முகமும், இன்னும்மூவரும் தெரிவாகி 6 மாதகால பயிற்சியும் ஒன்றாகவே பெற்றோம். 1969ன்இறுதியில் தான் சகோதரி இராஜேஸ்வரி அறிவிப்பாளராக இணைய முடிந்தது. அன்று முதல் எமது சேவைக்கு ஒரு புதுத் தெம்பு கிடைத்தது என்றால் அது வெறும்புகழ்ச்சியில்லை. காரணம் பெண் அறிவிப்பாளர்களில் நாடகத்துறையின் நல்லதேர்ச்சியுடன் விளங்கிய அவரால் எமது விளம்பரங்கள் புது மெருகு பெற்றன. நேயர் ஆக்கங்களில் பாத்திரப்படைப்புகளுக்கு உணர்ச்சி பொங்க அவரால் உயிர்கொடுக்க முடிந்தது. ஆண் அறிவிப்பாளர்களின் திறமைக்குக் களமாயிருந்த‘இசையும் கதையும்’ இவரது வருகைக்குப் பிறகு பெண்ணின் மன உணர்வுகளைவெளிப்படுத்தும் அற்புதமான கதைகளுக்குக் களமாக அமைந்தது.’பூவும்பொட்டும்’ பெருமை பெற வைத்த இவரது உழைப்பும் காலத்தால் மறக்கமுடியாதது.”
என்றார் அப்துல் ஹமீது அவர்கள்
“அனுபவம் வாய்ந்த இந்த ஒலிபரப்பாளர் செய்தி வாசிப்பாளராகவும் பலருடையகவனத்தைப் பெற்றவர். தெளிவான சரியான உச்சரிப்பு, பிறமொழிச் சொற்களைஉரிய சப்த நலனுடன் உச்சரித்தல், செய்தியின் பின்னணித் தகவல்களைப்பவ்வியமாகச் செய்தி ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் போன்ற பலஅத்தியாவசிய உறுதிப் பொருள்களைத் தம்வசமாக்கியதனால், இவர் செய்திவாசிப்பு
சிறப்பாகவே இருந்தது .
வசந்தத்தில் குயில் கூவுமாம்
இந்த வானொலிக் குயிலுக்கு
வருடமெல்லாம் வசந்தமாம் என்று!
வீசும் திசைகளை காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்….
வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று
மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
கிழக்கே இருந்து வருவது கொண்டல் காற்று
தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று
எங்களுக்கு தெற்கேயிருந்து வீசுகிற நீங்கள் தென்றலாகத்தானே இருக்க முடியும்.இது அர்த்தமுள்ள தென்றல்,ஆனந்தத் தென்றல்,பருவம் கடந்து வீசும் பைந்தமிழ் தென்றல்.
இப்படிக் கவிஞர் வைரமுத்து சென்னையிலிருந்து அனுப்பிய மடலில் போற்றி புகழ் பாடியுள்ளார்.
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. அன்னாரின் இழப்பு ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாதது.
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்