1940.05.09 இல் சம்மாந்துறையில் கருக்கொண்டு கல்முனைக்குடியில்
இருமணம் இணைந்தது முதல் இப்பிரதேசங்களின் கல்வி, சமய,
இலக்கிய வளர்ச்சிப் படிமங்களில் தன்னை நிலை நிறுத்திக்
கொண்டார். பதுளை கார்மேல் கொன்வண்ட், கல்முனை பற்றிமா;
சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலை அட்டாளைச்சேனை
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான,
பாவலர் பற்றிமாவின் தமிழாசான் கே. ஆர். அருளையாவின்
வழிகாட்டலில் கவியுலகில் அடிவைத்தார்.
பாணந்துறை தொட்டவத்தை கல்லூரி சம்மாந்துறை மகா
வித்தியாலயம், கொழும்பு சிலேவைலண்ட் ஸாகிறா கல்லூரி,
சம்மாந்துறை அல் -மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி,
கல்முனைக்குடி அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் என்பவற்றின்
ஆசிரிய பலத்தினூடாகப் பெற்ற உறவினாலும் பன்மொழி
ஆளுமையினாலும் பிரதேச மற்றும் தேசிய உள்ளடக்கம் மிக்க
கவிதைகளை வெளிப்படுத்தலானார்.
1960 களின் பின்னரான தென்கிழக்குப் பிரதேசக் கவிஞர்கள் வட்டத்துள்
ஒருவரான பாவலர் சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி,
அறவழிக் கீதம், முற்றத்துமல்லிகை, கவிதாஞ்சலி முதலியவைகளில்
தன் கவிதைகளைப் பதியவைத்தார். உயிர், ஊனக்கலை, அழகான
ஒரு சோடிக்கண்கள், பிரியதர்ஷினி, சட்டை இரணக்கோல், தங்கம்மா,
உறவு, சிரி சரி, துளசி, ஹலால் உள்ளிட்ட பல நூற்றுக் கணக்கான
கவிதைகளின் உற்பத்தியாளரானார்.
“நிதானி” என்ற புனைப் பெயருடன் சிலவற்றை எழுதிய காரியப்பர் கவியரங்கக் கவிதைகளில் கணீரென முழங்கி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர். 2002 இல் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பாவலர் தலைமையேற்ற கவியரங்கு களைகட்டியதைஅறிவீர்கள்
அழகான ஒரு சோடிக் கண்கள்.- அவை
அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்.
- பாவலர். பஸீல் காரியப்பர்.
பாவலர் பஸீல்காரியப்பர். எழுதிய~அழகான ஒரு சோடிக் கண்கள்| கவிதை பற்றி அறியாதார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போதுஅதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின்ää இசையமைப்பில்ää மெல்லிசை வித்தகர்
திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின்மதுரமான குரலில் ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.
இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு ~ஒரு சோடிக் கண்கள்| என்பதாகும். இது 1956ம் ஆண்டுஅவரதுமாணவப் பருவத்தில்முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புக்குப் பாடம் எடுத்த ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில்சக மாணவர்களினதும் மற்றும் சில ஆசிரியர்களினதும்குறும்புத்தனமானஇரசனைக்குள்ளானார்.
இதன் பிறகு 1966ல்பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போது தன்னுடன் மட்டக்களப்பு தொடக்கம் கொழும்பு வரை பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண் இறங்க எத்தனிக்கும் போது. தடுமாறியதையும்அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போது கண்களிரண்டும்இல்லாதிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம்அவருக்கு இந்த ~ஒரு சோடிக்கண்கள்| கவிதை ஞாபகத்தில் வர ரயிலில் அமர்ந்தபடியே பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்து
மறுபடியும்அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்து அதற்கு ~கண்ணூறு| என்று புதுத் தலைப்பிட்டு தினகரன் பத்திரிகைக்கு விடிந்ததும் அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது.
பல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில் உலவிவிட்டு பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில்
அறிவிப்;பாளர் பாடலைப் பாடியவர். எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர் புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம்
தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும் அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை. அப்பாடல்
இயற்றியவர் பெயர் தெரியாமலேயே
மேலும்சுமார் பத்து வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
பின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர் பீ.எச். அப்துல்ஹமீதுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்
பஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலாக
பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது. அப்துல் கமீது அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டார்
. சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி. இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை.?என்று அப்துல் ஹமீது கேட்டார்
. புன் சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார். ~எழுதியிருக்கிறேனே.. பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே.. எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்..!
அவர் சொல்லக் கேட்டதும் தன்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டார் ஹமீது . இன்ப அதிர்ச்சிஅல்லவா .
பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல்.
பேட்டி நடந்தது 1978ல். ப
ன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலே இலங்கையிலும் இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது.
எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே..ஏன் செய்யவில்லை..? என்று கேட்ட போது ~நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம்.. கவிஞன் காணாமல் போய்
கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய் இருப்பது ஒரு சுவையான அனுபவம். என்று தனக்குக் கிடைக்க வேண்டியநியாயமான புகழைக் கூட இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது..?
பேட்டி முடிந்ததும்பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்று ~அழகான ஒரு சோடிக் கண்கள்.| இசைத் தட்டை எடுத்து இயற்றியவர் என்ற இடத்தில் பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல்காரியப்பர் என்ற அவரது நாமத்தை தா னே எழுதி பக்குவப்படுத்தினார் ஹமீது .
அழகான ஒரு சோடிக் கண்கள்.- அவை
அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்.
புவியியல் கற்றிடும் வேளை- அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை
தங்குவதெங்கே மனமொரு பாலை.
தத்துவப் பாடம் நடக்கும்- அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.
வித்தையில் பித்துப் பிடிக்கும்.. நம்
வீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்
ஆட்சியியல் மறு பாடம்.-நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்.
ஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்.
தாய்மொழிப் பாடம் நடக்கும்- நரை
தாங்கிய கண்களோ மின்னலடிக்கும்
ஏய்..! என்றென்னைப் பிடிக்கும்- மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்.????
சமயப் பார்வை, சமூக விமர்சனம், ஆழமான மனிதாபிமானம்,
கிண்டல் தொனி, பிரதேச வழக்காளுகளும் மொழிப்பாய்ச்சலும்
அங்கத வெளிப்பாடு, சிறுகதைக்கான வடிவ முதலியன இவரது
கவிதைகளின் பண்புகளாக இழையோடின. இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கம், இலங்கை இலக்கிய பேரவை, கொழும்பு தமிழ்ச்
சங்கம் முதலியவைகளினால் நடத்தப்பட்ட போட்டிகளில் பாவலரின்
உயிர் தங்கத்தாத்தா தங்கம்மா என்பன தேசிய மட்டப் பரிசில்களைத்
தட்டிச் சென்றன.
1978 இல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் ‘
தங்கம்மா’ பரிசு பெற்ற கையோடு சம்மாந்துறை மக்கள் எடுத்த விழாவில்
புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை “கவிஞன் தோன்றிவிட்டான். பkல்
காரியப்பர் கண்டீர்” எனக் கூறி இன்று நிலைத்திருக்கும் ‘பாவலர்’ பட்டம்
வழங்கி கெளரவித்தமை அவரது எழுத்துக்குக் கிடைத்த உயர் மகுட
மென்றே கூறலாம்.
“நிதானி” என்ற புனைப் பெயருடன் சிலவற்றை எழுதிய காரியப்பர்
கவியரங்கக் கவிதைகளில் கணீரென முழங்கி பலரின் பாராட்டுத
ல்களைப் பெற்றவர். 2002 இல் இலங்கையில் நடைபெற்ற உலக
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பாவலர் தலைமையேற்ற
கவியரங்கு களைகட்டியதை இவ்விடத்தில் மீட்டிப் பார்க்க முடியும்.
கொழும்பு சிலேவைலண்ட் ஸாஹிறாக் கல்லூரியில் ஆங்கில
போதனா மொழியுடன் கற்பித்த 5 வருடத்துள் கிடைத்த பத்திரிகை
மற்றும் இலத்திரனியல் ஊடக அறிமுக உறவினூடாக சில்லையூர்
செல்வராஜனின் பங்களிப்பில் இலங்கையில் தயாரான ‘நிர்மலா’
திரைப்படத்திலும் காரியப்பர் தோன்றினார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் மிகவும் பிரபல்யமாகி 1966 தொடக்கம்
78 வரை பாடலாசிரியர் யாரென அறியப்படாமல் 12 ஆண்டுகள்
அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த “அழகான ஒரு
சோடிக் கண்களை” பீ.எச். அப்துல் ஹமீட்டுடனான செவ்வி ஒன்றின்
மூலமே அறிமுகப்படுத்திய ஆர்ப்பாட்டமில்லாத பாவலர், இன்றைய
தம்பட்டக்காரர்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
தொகுதிகள் எதுவுமே போடாமல் இருந்த பாவலரின் 66 கவிதைகளை
உள்ளடக்கிய “ஆத்மாவின் அலைகள்” கவிதை நூலை தென்கிழக்குப்
பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2001 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்து
பாவலரை மேன்மைப்படுத்தியதுடன் வரலாற்றுத்தடத்திலும் அவரை
நிலை நிறுத்தி வைக்கும் கைங்கரியத்தைச் செய்தது.
எழுபதுகளின் பிற்பகுதியும் எண்பதுகளின் முற்பகுதியும் செழுமை மிக்கதும் அறிவு பூர்வமானதும் இலக்கிய நயம் கொண்டதுமான நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை வாரி வழங்கி வந்தது. முத்தமிழும் பொங்க வானலையில் முழுச் சுவையையும் அள்ளி அள்ளி வழங்கியது.
அறிவுக்கும் சிந்தைக்கும் இனிய மெல்லிசைப் பாடல்களை நமது கவிஞர்கள் எழுதினார்கள். இன்றும் நினைத்து ஏங்க வைக்கும் அந்தப் பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் தனித் தனியே நிகழ்ச்சிகளாக ஒலி பரப்பி வந்தது.
இசையறிவாளரும் பாடகரும்; சிறந்த அறிவிப்பாளருமாக விளங்கிய எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள்தான் ‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ என்ற பாடலைப் பாடியவர். எழுதியவரின் பெயரற்ற ஒரு பத்திரிகைத் துண்டாக இந்தப் பாடல் கிடைத்ததாகவும் பாடலின் சிறப்புக் கண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப் பட்டதாகவும் பின்னர்தான் பாவலர் பஸீல் காரியப்பரின் பாடல் என்பது தெரிய வந்ததாகவும் ஒரு கதை நிலவி வந்தது. எவ்வாறாயினும் இது ஒரு அதி சிறந்த பாடல்.
அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங்காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனமொரு பாலை
ஆட்சியியல் மறு பாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய்மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்
‘ஏய்’ என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்
வித்தையில் பித்து பிடிக்கும் - நம்
வீட்டாரறிந்தால் கன்னந் தடிக்கும்!
மேலும்
நெல் வயலுக்குள்ளே
நெருங்கி வளர்ந்திருந்த
புல் பிடுங்கி விட்டுப்
போகின்ற பெண்ணாளின்
கன்னத்தில் வெள்ளிக்
காசுகள் போல் தேமல்
என்னுள் ஒரு வேதனையை
ஏன் எழுக என்றதுவோ
மருந்தொன்று அறிவேன் அம்
மறு நீங்கச் செய்திடலாம்
அறிந்ததனைச் சொல்லிவிட
ஆவல் மிகக் கொள்ளுகிறேன்
மெல்ல வழியில் இறங்கி
மெதுவாகச் சொல்லுகையில்
கொல்லென்று சிரித்தாள் பின்
குளுமையுடன் தலை நிமிர்ந்து
‘வருத்துவது எங்கள்
வயிறே முகத்தேமல்
உறுத்தவில்லை காக்கா’ என
ஒரு பதிலைச் சொல்லி விட்டாள்.
இந்தக் கவிதையின் பின்னணி வயற் பிரதேசம். கதாநாயகி புல்லுப் பிடுங்குபவள். அவளது வாழ்வின் வலியை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.
மேலும்
‘சட்டை’ என்று ஒரு கவிதை. தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இந்தக் கவிதையில். அப்போதும் கூட அந்தக் கவிதை சொல்லும் உரத்த செய்தி என்ன என்பதை அவதானியுங்கள்.
பட்டுத் துணி எடுத்துப் பல
வெட்டுக் கிறுக்குகளால் துளை
இட்டுத் தளிர் மேனி வெளிக்
கிட்டுத் தெரியவரும் சிறு
சட்டை அணிந்த பெண்கள்
சஞ்சரிக்கும் பூமியிலே
அட்டைக் கடி அழுத்தப் பன்
கட்டைத் தலை சுமக்கக் கை
எட்டி அதைப் பிடிக்க ஓ!
எரி வெயிலிற் செல்லுமிவள்
சட்டை இடுவலிடை அந்த
மொட்டுத் தெரிந்து விழி
பட்டுத் தெறித்ததனால் என்ன
பெட்டை இவள் என்றே
பிழையாக நினைக்காதீர்
உண்மையிலே இவளிடத்தில்
ஒழுங்கான சட்டை இல்லை
பன்பிடுங்கும் தொழிலால் இப்
பாவைபெறும் ஊதியத்தால்
இன்னும் ஒரு சட்டை தைக்க
இயலவில்லை
‘பாவலர்’ பட்டம் பஸீல் காரியப்பருக்கு புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்கம்மா’ கவிதைக்குப் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து ஊர் திரண்டு நடத்திய விழாவில் புலவர்மணி அவர்கள்,
“நமது செல்வமம்மா
நாட்டின் செல்வமம்மா
நமது பஸீல் காரியப்பர் என்றும்
“பாவலன் தோன்றி விட்டான்
பஸீல் காரியப்பர் கண்டீர்” என்றும் வாழ்த்தி ‘பாவலர் பட்டத்தை வழங்கியிருந்தார்.
பஸீல் காரியப்பருக்கு நட்பான வர்கள் சில்லையூர் செல்வராயனும் கமலினி செல்வராயனும் .
அப்பழுக்கில்லாத உன்னத நட்பு அது .
ஓ.. ஒரு பெண்ணாள்’ என்ற தலைப்பில் பாவலர் எழுதிய கவிதையை நாம் முதலில் பார்க்கலாம். இன ரீதியான பார்வையை அவர் என்ன வார்த்தைகள் கொண்டு எதிர் கொள்கிறார் என்பது அவதானிக்கப்பட வேண்டியது.
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ.. ஒரு பெண்ணாள் நின்றாள்
வாடிய முகமும் தோளில்
வளர்த்திய சேயுமாய்ச் சற்று
ஆடிய போதிலெல்லாம்
அடுத்தவர்க்கு அணைப்பேயாகி
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ... ஒரு பெண்ணாள் நின்றாள்
ஆசனத்தில் இருந்த அன்பர்
அடுத்திருந் தவரைப் பார்த்துப்
பேசினார் ‘உங்கள் இனப்
பெண்தானே எழுந்து சற்று
இடம்தனைக் கொடுங்கள்’ என்றே
இரங்கினார் பஸ்ஸ_க்குள்ளே
அடைபட்ட பெண்ணில் அவர்
அனுதாபம் பெருகி நின்றார்
தாய்! ஒரு சேயினோடு
தவிப்பதில் பேதம் காணும்
நாயுனை என்ன என்பேன்
நாமெல்லாம் மனிதரல்லோ!
மனித மகத்துவம் பேசும் இந்தக் கவிதையில் எந்த இனத்தைச் சார்ந்தவன் அவ்வாறு சொன்னான், எந்த இனப் பெண்ணாள் சேயொடு நின்றாள் என்பதற்கான எந்தக் குறியீடும் கிடையாது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
இன்னொரு கவிதை
துறை நீலாவணையிலிருந்து
ஒரு துளசிச் செடி கொண்டு வந்தேன்
வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈரமண்ணோடு
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி
அதனுள் வைத்தேன்
அம்மண்கள் கலந்தன
மனிதரைப் பழித்தன
துளசியின் இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன.
இந்தக் கவிதை என்ன சொல்கிறது. தமிழர்கள் வாழும் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்படும் துளசிச் செடி முஸ்லிம்கள் வாழும் மண்ணில் செழித்து வளர்கிறது. ஒரு மண் இன்னொரு மண்ணை ஏற்றுக் கொள்கிறது. ஒரு மண்ணின் பயிர் இன்னொரு மண்ணை ஏற்றுக் கொள்கிறது. கேடுகெட்ட மனிதர்களாகிய நாம்தான் ஒற்றுமைப்படாமல் பிரிந்து கிடக்கிறோம் என்பதைத்தான் அழகுற எடுத்துச் சொல்கிறது.
பாவலர் ஒரு சின்னப் பெண்ணைப் பார்க்கிறார்.
அவளைச் செல்லமாகச் ‘சிறுக்கி’ என்று அழைக்கிறார்.
சிறுக்கி தான் கவிதைத்தலைப்பு
முக்காட்டுத் தொங்கலோடு
முன் உசப்பில் கை இருத்தி
சொக்குகளில் மேயும்
சுடர்விழியைப் பாதி செய்து
வக்கா வரம்பில்
வடிவெடுத்து நடப்பது போல்
சேலை சிக்கி நடைபயிலும் சிறுக்கி
என் மூத்த மகன்
உன்னை விரும்புவதாய்
ஒரு வார்த்தை சொன்னால் நான்
இன்றே உன் வீடு வந்து
இணக்கத்தைக் கேட்டிடுவேன்.
இக்கவிதையில் மனிதப் பண்பான செயலை படித்தவர்கள் மட்டுமே உணர முடியும்
ஒருதமிழ் முஸ்லிம் தனது ஜனாஸாவை ஏன் மண்ணுக்குள் விதைக்கிறான்
அதற்க்குக் கூட பாவலரின் விளக்கத்தைப் பார்ப்போம்
காட்டுங்கள் என் சிரிப்பை
%%%%%%%%%%
என்கிற அவரின் கவிதை
பறந்து விட எந்தன் உயிர்
பழுதான யந்திரத்தை
கழுவுங்கள் கபனிடுங்கள்
காடடுங்கள் என் சிரிப்பை
தொட்டிலிடை வைத்திடுங்கள்
தோழமையாய் ஆட்டிடுங்கள்
வெட்டி வைத்த மணவறையுள்
வைத்திடுங்கள்
மீசான் கட்டைகளை நாட்டுங்கள்
கபுர் மண்ணைக் கூட்டிடுங்கள்
மண்மகளைக் கட்டிக் கலந்து
கனிந்து அயர்ந்து உறங்குகையில்
விட்டு விலகாத விதி பெறுவோம்
வியர்த்தும் போவோம்: காதல்
ஒட்டுறவால் சங்கமித்து நான்
அவளாகிப் போவேன்
பட்டந்தருவார்கள் எனக்கு
மண் என்று
ஒரு கட்டாந்தரையைக் காட்டி
அப்பொழுது அம்மண்ணை
வெட்டி எடுத்து விருந்திடுங்கள்
பயிர்களுக்கு
கண்ணடி மண் நெற்தாயின்
காலடியைச் சேர்ந்திடுமா
சின்னி விரல் மண்ணினை ஓர்
சிறு குரக்கன் ஏற்றிடுமா
என் உடம்பின் எல்லா
இழையங்களும் மனிதர்
உண்ணும் பயிர் செழிக்க
உதவிடுங்கள்: நன்றி சொல்வேன்
எந்த மனிதனுக்கு அந்த
உணவு என்று எனைக் கேட்டால்
நொந்து நலிவோரின்
நோவினைகள் மாய்க்க எழும்
அந்த மனிதனுக்கே
அணுவேனும் உதவி செய்ய
எந்தன் உடல் மண்ணை
எருவாக ஆக்கிடுங்கள்
எவ்வளவு உன்னதமான செய்தி இது
Manikkavasagar Vaitialingam
கருத்துகள்
கருத்துரையிடுக