நான் அசைந்தால் அசையும்
ஒரு நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார். எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.
நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்சென்று தன் நிலையைக் கூறினார்.
‘மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?’ என அந்த மகான் கேட்டார்.
மகான்அவர்களே, இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன் நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை கூட இல்லை, என்றார் மன்னர்.
“சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!”
எடுத்துக்கொள்ளுங்கள்!
‘அதன் பிறகு நீ என்ன செய்வாய்?’
‘நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!’
“மன்னா! எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான் எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.
மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.
ஓர் ஆண்டு சென்றது.
அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.
இப்போது மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப் புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.
உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.
மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!
நிம்மதி இல்லை என்றாயே?
‘அதுவும் கிடைத்துவிட்டது ‘
உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?
நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.
“இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?”
‘அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?’
மகான் புன்னகைத்தார்.
“மன்னா! முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும் உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு நிம்மதி போய்விட்டது.
இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது “நான்” உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.
எனவே “நான்” என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.
இனி இந்த வரிகளை நினைத்துப் பாருங்கள் .ஆண்டவனிடமும் ஆன்மாவிடமும் இறைவன் பேசுகிறான்
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
‘நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.
‘நம்மைத்தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.
ஞானம், பணிந்து பணிந்து வெற்றிமேல் வெற்றியாகப்பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.
"நான்", "எனது (என்னுடையது)" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல.
இந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் "அறிவு" தனை மறந்து, "நான்", "எனது" என உரிமை கொண்டாடி (அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல் ஆணவம் எனப்படுகிறது.
இது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும்.
இதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன
அரசிய லும் இப்படித்தான்
பெரிய கட்சி என்றோ ,உலகில் நான் தான் வல்லரசு என்றோ கருதக் கூடாது
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்
"என்ன புல்லே ..இந்தக் காற்றுக்கே இந்த ஆட்டம் போடுகிறாயே..புயல் அடித்தால் நீ தாங்குவாயா..!!" என்று தன் அருகில் முளைத்து கிடந்த நாணலை பார்த்து ஏளனமாய் கேட்டது தேக்கு மரம். அந்த கிராமத்தின் எல்லையில் வானை நோக்கி கோடிட்டது போல் நீண்டு வளர்ந்திருந்தது அந்த தேக்கு மரம். தான் அதிகம் வளர்ந்தவன் என்பதால் தன் அடியில் வளர்ந்து கிடந்த நாணலை பார்த்து நையாண்டி செய்தது தேக்கு மரம்.
எப்போதும் கேட்கும் ஏளனம் என்பதால் காற்றில் ஆடிக்கொண்டே அமைதியாய் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தது நாணல். வானில் கடந்து செல்லும் மேகங்கள் போல் காலம் மெல்ல கடந்து சென்றது.
என்றைக்கும் அல்லாமல் அன்றைக்கு ஏனோ பயங்கரமாக காற்று வீசியது.... ஆலமரம் கூட அடிவேருடன் ஆட்டம் காணும் அளவிற்கு புயல் காற்று வீசியது. சாதாரணக் காற்றை எதிர்த்து நின்ற தேக்கு மரம் புயல் காற்றை எதிர்த்து நிற்க முடியாமல் வேரோடு சாய்ந்தது.
காற்று வீசும் போதெல்லாம் ஆடியாடி தப்பித்த நாணல் இப்பொழுதும் ஆடிக்கொண்டே “அட முட்டாளே நிமிர்ந்து நின்று அடி வாங்குவது இ்பபடித்தான். ஆணவம் தருவது அழிவுதான்“ என்றது.
இந்த "நான்" இருக்கும் வரை மெய்ஞானம் பெற இயலாது. இந்த "நான்", "எனது" இருக்கும் வரை இன்பம் பெறுவதும் கடினமே.
ஆணவம் என்பது அறியாமை.
அறியாமை என்றால் அறிவு இல்லாமை அல்ல. அறிவு விளங்காமை.
அறிவு இல்லாமை எனக் கொண்டு ஆணவம் என்பது இல்லாத ஒரு பொருள் எனக் கருதுகின்றனர் சிலர்.
இல்லாத பொருள் எப்படி செயலாற்ற முடியும்?
எனவே அது ஒரு உள் பொருளே. என்றும் உள்ள பொருள்.
நம்மிடம் இயல்பாகவே உள்ள நம் அறிவை முழுமையாக செயல் இழக்க வைக்கிறது அல்லது அழிவை திரிபுபடுத்தி விபரீதமாக எண்ண வைக்கிறது. இதுவே ஆணவத்தின் தொழில்.
ஆணவம் பொருளால் ஒன்றே. எனினும் அதன் சக்திகள் பல. எனவே அது ஒரே நேரத்தில் அனைத்து உயிர்களிடத்தும் தொழில் படுகிறது.
ஆணவம் "நான்" , " எனது" என்ற வடிவில் வெளிப்படுவது.
நம்மிடம் ஆணவம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள "நான்" & " எனது" என்று நாம் செயல்படுகிறோமா?, எண்ணுகிறோமா! என்று சிந்தித்துப் பார்த்தால் ஆணவம் நம்மிடம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றியுடன்
Manikkavasagar Vaitialingam
கருத்துகள்
கருத்துரையிடுக