திரு.க.பாலேந்திரா

%%%%%%%%%%%%%%%%%%
திரு.க.பாலேந்திரா, அரியாலையூர். அமரர்கள் Dr.கனகரத்தினம் , சரோஜினி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். அவர் .யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மொறட்டுவ(Moratuwa University Sri Lanka), துரண்ணியம் (நோர்வே)(Trondheim Technical University,Norway) , மி;டில்செக்சு (இங்கிலாந்து)(Middlesex University England) ஆகிய பல்கலைக்;கழகங்களிலும் பயின்று பொறியியல் துறையில் (Msc)முதுமாணி பட்டம் பெற்றவர். இலங்கை மின்சார சபையிலும் , இலண்டனில பல நிறுவனங்களிலும் பொறியியலாளராக பணியாற்றியவர்;.
அரியாலையில்; சிறுவயதில் ஊற்றெடுத்த இவரது நாடக ஆர்வம் , இன்றுவரை மனைவி ஆனந்தராணியின் துணையுடன்50 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. இவர்களது ஒரே மகள் மானசியையும் மற்றைய சில புலம் பெயர் இளையவர்களையும் தமிழ் நாடகத்துறையில் ஈடுபட வைத்துள்ளனர்.மானசியின் நெறியாள்கையில் “அது” என்ற நாடகம் லண்டனில் 2018 இல் நிகழ்ந்தது.
பாலேந்திரா நெறிப்படுத்திய சுமார் எழுபது நாடகங்களில் எமது வாழ்வியலுடன் தொடர்பு கொண்ட மொழிபெயர்ப்பு நாடகங்களும் , சுதேசிய நாடகங்களும் அடங்கும். இவர் பலரது கூட்டுமுயற்சியியைநெறிப்படுத்தி; உலகின் பல நாடுகளிலும் சுமார் 1000 தடவைகள் இந்த நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
இலங்கையில் 1978ல் அவைக்காற்று கலைக்கழகம் எனும் நிறுவனத்தை ஸ்தாபித்தார். கண்ணாடி வார்ப்புகள் , யுகதர்மம், நட்சத்திரவாசி, மழை, பலி, ஒரு பாலைவீடு, நாற்காலிக்காரர்;, சம்பந்தம், துக்ளக், முகமில்லாத மனிதர்கள் போன்ற நாடகங்கள் இலங்கையில் பல பாகங்களில் 1978-1982 காலப்பகுதியில் 150 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு பிரபல்யம் பெற்றன. இவை இலங்கை வானொலியிலும் , தொலைக்காட்சியிலும் பெயர் பெற்றவை. கண்ணாடி வார்ப்புக்கள் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது தமிழ் நாடகமாக பல தடவை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இலங்கை வானொலி நாடக நடிகர் தேர்வுக்குழுவில் அங்கம் வகித்தவர்.
நாடகம் தொடர்பான இவரது செவ்விகள் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவருவதுண்டு.










இவர் 1983ம் ஆண்டு இலண்டனுக்கு புலம்பெயர்ந்து அங்கும் அவைக்காற்று கலைக்கழகத்தை நிறுவி மேற்படி நாடகங்களையும,; பிரத்தியேகக் காட்சி, பாடம் , மரணத்துள் வாழ்வு, சமூக விரோதி போன்ற நாடகங்களையும் இலண்டனில் பலதடவை மேடையேற்றினார்;. இவற்றில் சில பிரான்சு, நோர்வே, ஜேர்மனி; சுவிற்சலாந்து, நெதர்லாந்து, ஐரோப்பிய நாடுகளிலும் , கனடா, அவுஸ்த்திரேலியா மற்றும் இந்தியாவில் சென்னையிலும் மேடையேறி வரவேற்பு பெற்றுள்ளன.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சிறுவர்களுக்கு எமது கலைப்பாரம்பரியத்தை கையளிக்கும் பணியில் 25 வருடங்களுக்கு மேலாக சுமார் 200 சிறுவர்களுக்கும,; இளையோருக்கும் நாடக பயிற்சி வழங்கியதோடு பல சிறுவர் நாடகங்களையும் மேடையேற்றினார். வேடரை உச்சிய வெள்ளைப்புறாக்கள் ,தப்பி வந்த தாடி ஆடு நம்மைப்பிடித்த பிசாசுகள், அரசனின் புத்தாடை, மலைகளை அகற்றிய மூடக்கிழவன் , அயலார் தீர்ப்பு பரமார்த்த குருவும் சீடர்களும் ஒரு பயணத்தின் கதை ,,ஒற்றுமை, பாவி , சூறாவளி,பாடம் ,நெட்டை மரங்கள், படிக்க ஒரு பாடம் அமைதிப் பூங்கா போன்ற நாடகங்கள் இலண்டனில் பெயர் பெற்றவை. பேராசிரியர்கள் சி மௌனகுரு, சி சிவசேகரம் , மாவை நித்தியானந்தன் , குழந்தை ம சண்முகலிங்கம் ஜோன்சன் ராஜ்குமார் ஆகியோர் பிரதிகளை ஆக்கியுள்ளனர் .
லண்டன் இளையோர் கடந்த சில வருடங்களாக மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் .இவர்கள் பாலேந்திரா ஆனந்தராணியின் நாடகப் பள்ளியில் 6 வயது முதல் பயிற்றப் பட்டு , வந்தவர்கள்.இவர்களது பாவி, படிக்க ஒரு பாடம் , பாடம் , சூறாவளி , நெட்டை மரங்கள் புதிய பயணம் ஆகிய நாடகங்கள் லண்டனில் வெற்றி கண்டவை. இந்த நாடகப் பிரதிகளை இந்திரா பார்த்தசாரதி ,மாவை நித்தியானந்தன், பாலேந்திரா , பென்னேஸ்வரன் ஆகியோர் ஆக்கியுள்ளனர் .
லண்டனில் கடந்த 18 வருடங்களாக லண்டன் தமிழ் நாடகப் பள்ளி என்ற அமைப்பை உருவாக்கி சிறுவருக்கும் , இளையோருக்கும் நாடகப் பயிற்சி அளித்து வருகிறார்.பிரித்தானியாவின் முதலாவது தமிழ் நாடகப் பள்ளி இதுவாகும்.
இலங்கை வரும் ஒவ்வொரு தடவையும் நாடக அரங்கியல் ஆர்வம் கொண்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகம் இவரை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது வழமை. இவருடைய நாடகங்கள் குறித்து ;இலங்கை அரங்கியல் பாடத்திட்டத்தில் மாணவர்கள் பயில்கிறரர்கள்.
இலங்கை அவைக்காற்று கலைக் கழகம் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடகம் , இசை ,நடனம் போன்ற அவைக்கு ஆற்றும் கலைகள் அனைத்தையும் தொடர்ந்து ஆற்றுகை செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டது. முதல் வருடத்தில் ரசிகர் அவை தொடக்கி வைக்கப் பட்டு , ரசிகர் அவைக்கான ஐந்து நிகழ்ச்சிகளில், நாடகத்தோடு கானசாகரம் , நர்த்தன கோலம் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
தொடர்ந்து 1979-82 காலப் பகுதியில் " தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப் படுத்தும் " என்ற ரீதியில் க பாலேந்திராவின் இயக்கத்தில் அடுக்கடுக்காக இவர்களது நாடகங்கள் , யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் ,மற்றும் நாட்டின் பல் பாகங்களிலும் மேடையேறின.எமது வாழ்வியலுடன் தொடர்பு உள்ள சிறந்த பல பிறமொழி நாடகங்களையும் ,தமிழில் எழுதப்பட்ட நாடகங்களையும் இவர்கள் ஆற்றுகைப் படுத்தினார்கள். இவர்களது நாடக பிரதிகளை பாலேந்திராவே தெரிவு செய்தார். மொழிபெயர்ப்பில் நிர்மலா, ச வாசுதேவன், மல்லிகா , பாலேந்திரா,எம் எல் எம் மன்சூர் ஆகியோர் இலங்கையில் பணியாற்றினர் .லண்டனில் பேராசிரியர் சி சிவசேகரம் சில மொழிபெயர்ப்பு நாடகங்களையும் சிறுவர் நாடகங்களையும் எழுதினார்.இலங்கையில் இசை அமைப்பில் யாழ் கண்ணனும் , அரங்க அமைப்பில் சி குணசிங்கம் பெஞ்சமின், சி.ராஜ்குமார் போன்றவர்களும் பணியாற்றினர்.பாலேந்திராவின் தலைமையில் இன்றும் அதே ஊக்கத்துடனும் , விடாமுயற்சியுடனும் இன்றும் லண்டனில் தமிழ் அவைக்காற்று கலைக் கழகம், இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடப் பட வேண்டியது.
தான் பிறந்த ஊரான அரியாலையில் ஊற்றெடுத்த இவரது நாடக ஆர்வம் தொடர்ச்சியாக லண்டனிலும், மற்றும் இலங்கைத் தமிழர் வாழும் பல நாடுகளிலும் , இலங்கையிலும் நாடக ஆற்றுகைகள் , நாடக விழாக்கள் என்று உயிர்ப்புடன் தொடர்கிறது.
மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் 1973 இல் திரு சுஹேர் ஹமீத் அவர்களது இயக்கத்தில் மேடையேறிய "ஏணிப் படிகள் " நாடகம் மூலம் தீவிர நாடகத் துறையில் நடிகனாக பிரவேசித்தார். பின்னர் 1974 இல் நடிகர் ஒன்றியத்தின் திரு தாசீசியஸ் நெறிப்படுத்திய "கந்தன் கருணை" , மொரட்டுவ பல்கலை கழகத்தின் "பிச்சை வேண்டாம் " ஆகிய நாடகங்களில் நடித்தார். 1976இல் நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக இந்திரா பார்த்தசாரதியின் "மழை " நாடகத்தை நெறிப்படுத்தியதன் மூலம் பாலேந்திரா சிறந்த நெறியாளராக அறியப்பட்டார். கொழும்பில் லயனல் வென்ட் அரங்கத்தில் " மழை " 1976 இல் முதலில் மேடையேற்றப் பட்டது. இந்த நாடகம் பின்னர் உலகின் பல நாடுகளிலும் 2013 வரை 40 தடவைகள் மேடையேறியுள்ளது.
1974 இல் மொரட்டுவ பல்கலை கழகத்தில் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதையை தழுவி" இவர்களுக்கு வேடிக்கை " மற்றும் "கிரகங்கள் மாறுகின்றன", "தூரத்து இடிமுழக்கம்" போன்ற சுய ஆக்க நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்திலும் ,ராமகிருஷ்ணா மண்டபத்திலும் மேடையேற்றினார்..
தொடர்ந்து 1978 தொடக்கத்தில் திருமலைக் கவிஞர் தருமு சிவராமின் "நட்சத்திரவாஸி ", சார்வாகனின் சிறுகதையைத் தழுவி எழுதி "பலி " என்ற நாடகத்தையும் நெறிப்படுத்திய போது தீவிர நாடக உலகில் தனது பெயரை, நேர்த்தியான ஒரு நாடக நெறியாளனாக நிலை நிறுத்தினார். நட்சத்திரவாஸி " நாடகத்தில் இசை அமைப்பாளர் யாழ் எம் கண்ணன் முதன் முதலாக தீவிர நாடக உலகுக்கு வந்தார். திரு சி குணசிங்கம் மேடை அமைப்பு செய்தார். ஆனந்தராணி மழை ,நட்சத்திரவாஸி ஆகிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்...இந்த நாடகங்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்திலும், கொழும்பு கதிரேசன் மண்டபத்திலும் மேடையேறியன.
வித்தியோதய பல்கலை கழகத்து மாணவர்கள் அழைப்பின் பெயரில் "ஒரு யுகத்தின் விம்மல் " என்ற நாடகத்தை கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் மேடையேற்றிய போது பாலேந்திரா பலரது கவனத்தையும் ஈர்த்தார்.அந்த நாடகம் அப்போதைய தமிழ் அரசியல் சூழலை விமர்சித்தது. அமரர்கள் பேராசிரியர் சிவத்தம்பி , தமிழர் கூட்டணி தலைவர் திரு அமிர்தலிங்கம் ஆகியோரும் அன்று பார்வையாளர்களில் இருந்தனர்.
1980 இல் பாலேந்திரா இலங்கை வானொலி நடிகர் தேர்வு குழுவில் பேராசிரியர் சிவத்தம்பி, அப்போதைய பணிப்பாளர் திரு சி வி ராஜசுந்தரம் ஆகியோரோடு பணியாற்றியவர்.
1977 இல் இனக் கலவரத்தை தொடர்ந்து கொழும்பில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் இருந்த வேளையில் இவரது மிக புகழ் பெற்ற நாடகமான " கண்ணாடி வார்ப்புகள் " நாடகத்தின் ஆங்கில பிரதியை கண்டெடுத்து ,தனது சகோதரி மல்லிகாவுடன் சேர்ந்து மொழிபெயர்த்தார். இந்த நாடகத் தயாரிப்புக்கு தாய் பாத்திரத்திற்கு நடிகை தேடிய போது நிர்மலா நித்தியானந்தனை , கண்டு பிடித்தார்.. ஒத்திகை வேளையில் நிர்மலா நாடகப் பிரதியை செம்மைப் படுத்தினார். இந்த நாடகம் 1978 நடுப் பகுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் , யாழ் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்ற நிதிக்காக மேடையேற்றப் பட்டது.இந்த நிதியில் "ஆறு நாடகங்கள் " என்ற நூல் வெளியிடப் பட்டது .
இந்த நாடகம் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடிகர் ஒன்றியத்துக்காக மீண்டும் மேடையேறியது. " கண்ணாடி வார்ப்புகள் " நாடகத்தின் வெற்றியை தொடர்ந்து தான் இலங்கை அவைக்காற்று கலைக் கழகம் ஆரம்பிக்கப் பட்டது .தொடர்ந்து 1979-1982 கால பகுதியில் , இந்திரா பார்த்தசாரதியின் "பசி", ரஷ்ஷிய நாடகாசிரியர் அலெக்ஸி ஆர்புஸோவ் எழுதிய "புதிய உலகம் பழைய இருவர்" கார்சியா லோர்காவின் "ஒரு பாலை வீடு", அயனெஸ்கோவின் "இடைவெளி ".ந முத்துசாமியின் "நாற்காலிக்காரர் ", பேட்ரோல்ட் பிரேக்ட் இன் "யுகதர்மம் " , பாதல் சர்க்காரின் "முகமில்லாத மனிதர்கள் " , பெக்கெட்டின் "திக்கு தெரியாத காட்டில் " , ஜெயந்தனின் 'இயக்க விதி 3" , ந முத்துசாமியின் " சுவரொட்டிகள் " , அன்டன் செக்கோவின் " சம்பந்தம்" , மோகன் ராகேஷின் " அறையும் குறையும் " கிரிஷ் கர்நாட்டின் " துக்ளக் ", மற்றும் "மரபு:", "மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் " ஆகிய நாடகங்களை இலங்கையில் தயாரித்தார். இந்த நாடகங்கள் நூற்றுக்கு மேற்படட தடவைகள் மேடையேறின .இவற்றில் யதார்த்த நாடகங்கள் , மோடிமை நாடகங்கள் ,அபத்த நாடகங்கள் ,காவிய நாடகங்கள் , பரீட்ச்சார்த்த நாடகங்கள் என்று பலவகை நாடகங்களும் அடங்கும் .இவற்றில் பல நாடகங்கள் மொரட்டுவ பல்கலைக் கழக மாணவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தகுந்தது.இவை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு கலை சார்ந்த, மற்றும் நலன்புரி அமைப்புகளின் உதவியுடன், அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்ட தன்னார்வ தொண்டர் களின் உழைப்பை நம்பியே மேடையேறியன .
பாலேந்திரா அவர்கள் 1983 இல் லண்டன் சென்ற பின்னர் அங்கு 'தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தை நிறுவி முற்றிலும் வேறுபட்ட சூழலில் கடின உழைப்புடன் இடைவிடாமல் செயலாற்றுகிறார்.1983- 1989 காலப் பகுதியில் பெரும்பாலும் இலங்கையில் மேடையேற்றப் பட்ட நாடகங்களை மீள் தயாரிப்பாக தயாரித்து மேடையேற்றினார்.
1990 இல் இருந்து லண்டனில் பிறந்து ஆங்கில சூழலில் வாழும் தமிழ் சிறுவர்களுக்கு சிறுவர் நாடகங்களை தயாரிக்க தொடங்கினார்.2015 இல் இந்த சிறுவர் இளையோர் நாடகங்கள் ஆரம்பித்து 25 வருட நிறைவை கொண்டாடினர்.தொடர்ந்து வருடாவருடம் சுமார் 200 இளையவர்களை பாலேந்திராவும் ஆனந்தராணியும் பயிற்றுவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல புதிய நாடகங்களும் , மேடையேறின . ' எரிகின்ற எங்கள் தேசம் ,"பிரத்தியேக காட்சி " , பாரத தர்மம், தரிசனம், துன்பக் கேணியிலே , இரு துயரங்கள் ,ஐயா லெக்சன் கேக்கிறார் , போகிற வழிக்கு ஓன்று , ஆற்றைக் கடத்தல், எப்போ வருவாரோ , அவசரக்காரர்கள் , பெயர்வு, காத்திருப்பு, மரணத்துள் வாழ்வு , சமூக விரோதி , போன்ற பல நாடகங்கள் பெரியவர்களைக் கொண்டு பாலேந்திராவால் லண்டனில் நெறியாள்கை செய்து மேடையேற்றப்பட்டவை .மாவை நித்தியானந்தன், செழியன் , சி சிவசேகரம் , சேரன் அம்பை,மனோ மனுவேல் பிள்ளை, ச வாசுதேவன் ஆகியோர் புதிய நாடகப் பிரதிகளை ஆக்கியுள்ளனர். சி சிவசேகரம் இப்ஸனின் சமூக விரோதி , ஏரியல் டோர்மானின் மரணத்துள் வாழ்வு ஆகிய நாடகங்களை தழுவலாக்கம் செய்தார்.
1991இல் இருந்து வருடாந்தம் லண்டனில் ஒரு நாள் நாடக விழாக்களை நடத்தி வருகின்றார்..இந்த நாடக விழாக்களின் 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழா 2016ஜூலை 23 ஆம் திகதி லண்டனில் நான்கு நாடகங்களுடன் அரங்கு கண்டது. இது புகலிடங்களில் இவர்களது 60 வது நாடக விழா ஆகும்.
இந்த நாடக விழாவில் முற்றிலும் லண்டன் வாழ் தமிழ் சிறுவர் இளையோர் மேடையில் ஆற்றுகை செய்தனர்.இளையோர் கூட்டு முயற்சியில் தாமாகவே ஒரு நாடகத்தை எழுதி தயாரித்து மேடையேற்றினர். இது லண்டன் தமிழ் நாடக உலகில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.
இதை விட தமிழர் வாழும் பல நாடுகளில் முன்னோடி நாடக விழாக்களை நடத்தி வருகின்றார்.ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜேர்மனி ,சுவிஸ்,நெதர்லாந்து ,நோர்வே ஆகிய நாடுகளிலும் கனடா ,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் நாடக விழாக்களை நடத்தியுள்ளனர்.மேலும் 2010 இல் சென்னையிலும் ஒரு நாடக விழாவை நடத்தியுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து குழுவாக சென்று , இலங்கையில் , யாழ் வீரசிங்கம் மண்டபத்திலும், கொழும்பு தமிழ் சங்கத்திலும் மற்றும் மகாஜன கல்லூரி , அரியாலை ஆகிய இடங்களிலும் நாடக விழா நடத்தியுள்ளனர்.
2015இல் இலங்கையில் , மடடக்களப்பு அரங்க ஆய்வு கூட மாணவர்களை கொண்டு நெடடை மரங்கள் என்ற மேடை நிகழ்வை விபுலானந்த கலை கல்லூரியிலும் , பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும், யாழ் பல்கலை கழகத்திலும் பாலேந்திரா மேடையேற்றி உள்ளார்.யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தனது கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவில் இந்த நாடகத்தை மேடையேற்றி கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2018 இல்தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை புதிய நாடகங்களுடன் பெரு விழாவாக லண்டனிலும் பாரிஸ் நகரிலும் கொண்டாடினார்.
ஒவ்வொரு தடவையும் இலங்கை வரும் போது நாடக அரங்கியல் ஆர்வம் கொண்ட பாடசாலைகள், மற்றும் பல்கலைக் கழகங்கள் இவரை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது வழமை.
பாலேந்திரா சுமார் 70 நாடகங்களை நெறிப்படுத்தி , 1000 க்கு மேற் பட்ட தடவைகள் மேடையேற்றியுள்ளார்.கணிசமான மொழிபெயர்ப்பு , தழுவல் நாடகங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர் . இருந்தும் 70 நாடகங்களில் சுயமொழி நாடகங்களே அதிகம். இவரது காலத்துக்கு ஏற்ற நாடகத் தெரிவுகள் தான் இவரது வெற்றிக்கு காரணம்.பொறியியலாளராக இலங்கையிலும் , லண்டனிலும் தொழில் புரிந்து கொண்டு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் நாடகப் பணி ஆற்றியவர் பாலேந்திரா என்பது குறிப்பிட தகுந்தது.
இவரது துணைவி ஆனந்தராணி சுமார் 46 ஆண்டுகளாக உறுதுணையாக ,நடிகையாக,உதவி நெறியாளராக, நடன வடிவமைப்பாளாராக பல வகையிலும் துணை நிற்க , பல்வேறு கலைஞர்கள் காலத்துக்கு காலம் பங்காற்றுகிறார்கள். பாடகர் சத்தியமூர்த்தி , பா சத்தியேந்திரன் , மனோ மனுவல் பிள்ளை , ச வாசுதேவன் , ரமேஷ் கணேசலிங்கம் குமரகுரு விஜயகுமாரி பரமகுமரன் , தர்ஷினி சிவசுதன் , சிவசுதன், துஷி தனு சகோதரிகள் போன்ற பலர் பல வருடங்களுக்கு மேலாக பல துறைகளிலும் உழைத்து வருகின்றனர் .இன்று வரை தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் இயங்குவதற்கு அயராத உழைப்பும் தொண்டுள்ளம் கொண்ட ஆர்வலரது ஆதரவுமே பலமாகும்.
உலக தமிழ் நாடக வரலாற்றில் பாலேந்திராவிற்கு ஒரு தனியான இடம் உண்டு.
மேலும் இவர்பற்றிய தகவல்களை மேலும் எனது தேடலில் கிடைக்கும் பட்சத்தில் இணைத்துக் கொள்கிறேன் .
வாழும் பொழுதே கலைஞர்கள் கெள்ரவிக்கப்படல்வேண்டும் .என்பதே எனது நோக்கம்
ஆகையால் இணையத்தில் நடந்த ஒரு நாடக கருத்தரங்கில், ஈழத்து நாடகத்துறையில் இவரது வகிபாகம் என்ன? என்ற கேள்விக்கு இவர் அளித்த பதிலில் ஒரு பகுதியை தருகிறேன் .
அவரின் அந்தப் பதிலை வாசித்து மகிழுங்கள் .
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் தமிழ் நாடக வளர்ச்சியில் என்னுடைய பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளது என்று பார்ப்பதற்கு நான் இயங்கிய காலப்பகுதிகளை வசதிக்காக பின்வருமாறு வகுக்கலாம் என நினைக்கிறேன். இதில் பல நிகழ்வுகள் சமாந்திரமாக ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஓன்று தொடர்பு பட்டும் உள்ளன.
1.மொரட்டுவ பல்கலைக் கழக (கட்டுப்பெத்தை) காலம் (1972-1982)
2.நடிகர் ஒன்றியம் காலம், (1973-1980)
3. அவைக்காற்று கலைக் கழக காலம்.(1978-1982)
4. புலம் பெயர் காலம் (1982-இன்றுவரை )
இந்த சுமார் அரை நூற்றாண்டு காலப் பகுதியில் ,இடைவிடாமல் தமிழ் அரங்கத்துறையில் இயங்கியிருக்கிறேன். நீங்கள் கூறியது போல எனது நாடக செயற்பாடுகள் ,ஆற்றுகைகள் மூலம் ,ஓரிரு ஆண்டுகள் நீங்கலாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. சுமார் 70 காத்திரமான நாடகங்களை நெறிப்படுத்தி சுமார் ஆயிரம் மேடைகளை உலகில் பல பாகங்களிலும் நிகழ்த்தியிருக்கிறேன். இப்பொழுது பின்னோக்கி பார்க்க எனக்கே பிரமிப்பாக உள்ளது.பெரிய சவால்களை எல்லாம் முறியடித்தே முன்னே செல்லவேண்டியிருந்தது.கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகாது என்று நம்பி செயல்படுகிறேன்.நாடகம் ஒரு கூட்டு முயற்சி.என்னோடு கை கொடுத்து பயணித்தவர்கள் அனைவரும் எனது நன்றிக்குரியவர்கள்.
இனி மேற்கூறிய காலங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்
1.மொரட்டுவ பல்கலைக் கழக (கட்டுப்பெத்தை) காலம் (1972-1982)
அல்லது கொழும்பில் இளையவர்களுடன் பயணித்த காலம்.
எனது நாடகப் பின்னணி
எனது ஆரம்ப கால நாடக நடவடிக்கையில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று என்று நினைக்கிறேன். சிறு வயதில் என்னுடைய ஊரான அரியாலையில் நடைபெற்ற நாடகங்கள் படச்சட்ட நாடகங்களாகும். எமது ஊரில் சுதேசிய விழா 100வருடங்களாக நடைபெற்று வருகிறது.அந்த விழாக்களில் நல்ல நாடகங்களும் இடம்பெறும்.அவற்றை நிறையப் பார்த்திருக்கிறேன். பல மணித்தியாலங்கள் நடைபெறும் நாடகங்களாகவும் அவை இருந்தன. சிறுவயதில் நான் பார்த்த நாடகங்கள் கர்ணன் , மனோகரா , மந்திரி குமாரி போன்ற சரித்திர இதிகாச நாடகங்கள். கண்டி அரசன் மற்றும் வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா போன்ற இசை நாடகங்கள் போன்றவையும் வெளியூர்களில் இருந்து வந்து ஆற்றுகை செய்வார்கள்.. இவையெல்லாம் எனது ஊரில் நடந்தபோது நான் பார்த்தவை. ஊருக்கு வெளியில் போய் நாடகம் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வீட்டில் அனுமதி இல்லை .வளர்ந்த பின்னரே வெளியூர்களில் நாடகங்கள் பார்த்தேன்.இதைவிட சிறுவயதில் எங்கள் ஊரில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் சூரன் போர், வேட்டைத் திருவிழா போன்றவற்றையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.
நான் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன்.இளவயதில் இருந்தே எனக்கு தீவிர இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தது. ஆரம்பத்தில் கல்கி, குமுதம் என்று தொடங்கி பின்னர் தீபம் கணையாழி என வளர்ந்து பின்பு ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். கசடதபற போன்ற சிறு சஞ்சிகைகளும் , Enact போன்ற அரங்க சஞ்சிகைகளும் எனக்குக் கிடைத்தன. எனக்கு நாடகம், நவீன இலக்கியம் தொடர்பான தொடர்ந்த தேடல் இருந்தது.
எனக்கு ஆரம்பத்தில் திரைப்படத்தில்;தான் கூடிய ஆர்வம் இருந்தது. நான் பாடசாலையில் படிக்கிற காலங்களிலெல்லாம் நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். பாடசாலைக் காலத்தில் சுமார் 300 படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
எனது தீவிர தேடுதலுக்கு இந்த ஊர் நாடகங்கள் விடையாக இருக்கவில்லை. ஊரில் பார்த்த பல சரித்திர நாடகங்களில் பல காட்சிகள்(50-60) இருக்கும். காட்சிகளுக்கிடையில் இடைவெளி இருக்கும்.முன்புறம் தெருக் காட்சி, பின்னுக்கு அரண்மனை போன்ற பலவித திரைச்சீலைகள் மாறி மாறி வரும்.காட்சிகளுக்கிடையில் இடைவெளியில் திரைப்படப் பாடல்களையும் பாடுவார்கள்.நாடகங்களிலும் நாடகங்களுக்கிடையில் நகைச்சவை சம்பாஷணைகளும் நடைபெறும். இரண்டு ஒலி வாங்கிகளை வைத்து அதனை மையமாக வைத்து நாடகம் நிகழும்.
சிறு வயதில் நான் நாடகத்தில் ஈடுபடுவதற்கு எனது வீட்டில் பெரிய ஆதரவு இருக்கவில்லை. அந்த நேரங்களில் நாடகத்தில் நடிப்போர் மீது சமூகத்தின் பார்வை ஏளனமாகத்தான் இருந்தது. நாடகத்திற்கான ஆர்வமும் அங்கீகாரமும் எமது தலைமுறையினருக்கும் அதற்கு முந்திய தலைமுறையினருக்கும் இருக்கவில்லை. இது மிகவும் ஒரு துக்கமான விஷயம்.அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஊரில் ஒன்றிரண்டு சிறு பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.அவ்வளவு தான் .
என்னுடைய 19 ஆவது வயதில் ,1970இல் கொழும்பு சென்ற பின்னர் தான் எனது தீவிர நாடக முயற்சிகள் ஆரம்பமாகின.1970 இல் இருந்து 1982 இல் புலம் பெயரும் வரை எனது வாழ்க்கை கொழும்பை அண்டிய பகுதிகளில் தான் கழிந்தது.1971 இல் நடந்த ஜேவிபி கிளர்ச்சி காரணமாக எனது பல்கலைக் கழக பிரவேசம் தாமதமாகியது.அப்பொழுது தான் பல்கலைக் கழக பிரவேசத்துக்கு தரப்படுத்தல் ஆரம்பமாகியிருந்தது.தரப்படுதலுக்கூடாகத்தான் எனது பல்கலைக் கழக பிரவேசம் நிகழ்ந்தது.இதுவே இலங்கையில் தமிழர் அரசியலில் இளைஞர்களை ஈடுபட வைத்த முக்கிய காலம்.
1972 இல் இருந்து ,கட்டுப்பெத்தை அல்லது மொரட்டுவ பல்கலைக்கழகதிலேயே நான் பொறியியல் பயின்றேன்., இது ஒரு பொறியியல்துறை மற்றும் கட்டடக்கலை பயிலும் பல்கலைக்கழகம்,தமிழ்,கலைப்பகுதிகள் அங்கு இருக்கவில்லை. இங்குதான் எனது ஆரம்ப நாடக களம் இருந்தது. நாடகத்தில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத நடிகர்களையே நான் பெரும்பாலும் இணைத்து செயல்பட்டேன் .
கட்டுபெத்தை பல்கலைக்கழக கலைவிழா 1970 களில் கொழும்பில் மிகவும் பிரபலமாக இருந்தது. முதலில் சரஸ்வதி மண்டபத்தில் ஆரம்பித்து பின்னர் 1000 இருக்கைகள் கொண்ட வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடை பெற்றது .முதலில் 1972 இல் சரஸ்வதி மண்டபத்தில் “சாவின் சதி” என்ற நாடகத்தில் நடித்தேன். இலவசமாக நடைபெறும் இந்த கலைவிழாவிற்கு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் ஏராளமாக வந்து மண்டபத்தை நிரப்புவார்கள். இராமகிருஷ்ண மண்டபத்தில் சுஹேர் ஹமீத் நெறியாள்கையில் 1973ஆம் ஆண்டு நான் தயாரித்த ‘ஏணிப்படிகள்’ நாடகம் முதல் மேடையேற்றம் கண்டது. நவீன குறியீட்டு நாடகத்தை பார்வையாளர்கள் நன்கு ரசித்தார்கள். இந்த நாடகம் வெற்றி பெற்றது எனக்கு நவீன நாடகங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் 1974இல் ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’ ஆகிய நாடகங்களை நான் மொரட்டுவ தமிழ்ச் சங்க கலைவிழாவிற்காக நெறியாள்கை செய்தேன். 1975 இல் இந்திய நாடக ஆளுமை ந முத்துசாமியின் ,நாற்காலிக் காரர் நாடகத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் மொரட்டுவ மாணவர்களை பயிறுவித்து மேடையேறினேன்.
எப்போதும் கலைஞர்கள் சமகால அரசியல் நிகழ்வுகளோடு ஊடாடிக் கொண்டுதான் இருப்பார்கள். அப்படியான நோக்கில் நான் தொடர்ந்து நாடகத்துறையில் இயங்கி பேசப்படாத விடயங்களை எனது நாடகங்களில் உரத்துப் பேசியிருக்கிறேன்.1973 இல் தயாரித்த ஏணிப் படிகள் நாடகத்திலிருந்து அநேகமான எனது பல்கலைக் கழக நாடகங்கள் சமகால அரசியலையே பூடகமாக பேசின.இந்த நேரங்களில் தமிழ் அரசியல் சார்ந்த விடயங்களை மேடையில் நிகழ்த்திக் காட்டுவதற்கு ஒருவரும் இலங்கையில் பெரிதாக முன்வருவதில்லை. ஒருவிதமான பயம் அப்போதும் இருந்தது. ஏனென்றால் 1971 ஜேவிபி புரட்சிக்குப் பிறகு பல்கலைக்கழக நடவடிக்கைகளை அரசினர் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
1977 இல் ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற வார்த்தை இல்லாத நாடகத்தை நான் நெறிப்படுத்தினேன். முதன்முதலாக மாணவப் புரட்சி ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோது வீரசூரியா என்ற மாணவர் ஒருவர் அரச இயந்திரத்தால் சுடப்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தை வைத்து வார்த்தைகள் இல்லாமல் பார்வைக்குரிய விடயங்கள் ,ஆட்டம், அசைவுகள் எல்லாம் சேர்த்து இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. பூடகமாக கருத்து சொல்லப்பட்டபோதும் நாடகம் நன்றாக விளங்கி வரவேற்பைப்பெற்றது. இந்த நாடகம் நான் புலம் பெயர்ந்த பின்னர் நோர்வே நாட்டில் மூன்று முறை புதிய நடிகர்களுடன்1982-1983 இல் மேடையேற்றப்பட்ட்து.
சாமுவேல் பெக்கெட் எழுதி ஏ ஜெ கனகரத்னா மொழிபெயர்த்து “அலை “ சஞ்சிகையில் பிரசுரமான வார்த்தையிலா நாடகத்தை மொரட்டுவ பல்கலைக் கழக சார்பாக புதிய கதிரேசன் மண்டபத்தில் 1981 இல் மேடையேற்றினேன் .
பொதுவாக மொரட்டுவ காலம் என்று வகைப்படுத்தினாலும் ,
இதே காலப்பகுதியில் கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு மருத்துவக் கல்லூரி ,பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகிய இடங்களில் மாணவர்களைப் பயிறுவித்து,நான் எழுதிய “பலி” தகழி சங்கரப்பிள்ளையின் ‘மூன்று பண்டிதரும் காலம்சென்ற சிங்கமும்’ ,ந முத்துசாமியின் ‘சுவரொட்டிகள்’ ,ஞான ராஜசேகரனின் ‘மரபு’ ஆகிய நாடகங்களையும் மேடையேற்றியுள்ளேன்.
வித்தியோதய பல்கலைக் கழக மாணவர்களைப் பயிற்றுவித்து 1978 இல் மிக முக்கியமான ‘ஒரு யுகத்தின் விம்மல்’என்ற நாடகத்தைத் எழுதி தயாரித்தேன்.1970களில்கொழும்பில் தமிழ் சூழலில் இடதுசாரிக் கருத்துக்கள் தீவிர நாடகத்துறையில் ஓங்கியிருந்தது. தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. தேசிய இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசிய ஒரு நாடகமாக ‘ஒரு யுகத்தின் விம்மல்’நாடகத்தை நான் கூறுவேன். இந்த நாடகம் எமது ஆயுதப் போராட்டம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்ற கருத்தை பூடகமாகச் சொல்கிற நாடகமாக இருந்தது. அந்தப் பல்கலைக்கழக சார்பில் கதிரேசன் மண்டப மேடையிலேயே இது நிகழ்த்தப்பட்டது.
மொரட்டுவ பல்கலைக் கழக நிதி சேர்க்க கொழும்பில் நடந்த தீவிர நாடகங்கள்.
1974 இல் ‘ஏணிப்படிகள்’ நாடகத்தை உள்ளடக்கிய ‘குரல்கள்’ என்ற நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நடத்தினேன்.இது மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக வெற்றி கண்டதை தொடர்ந்து 1982 வரை பல முழு நீள நாடகங்கள் என்னுடைய நெறியாள்கையில் நிதி சேகரிக்க நுழைவு சீட்டு விற்பனை செய்து வெற்றிகரமாக நடைபெற்றன.நட்ஷத்திரவாசி(1978),பலி(1978) ,யுகதர்மம் (1979),நாற்காலிக் காரர்(1979),முகமில்லாத மனிதர்கள் (1981) துக்ளக்(1982) ஆகியன புதிய கதிரேசன் மண்டபத்தில் நடந்தன.காத்திரமான நாடகங்களை பெருந்தொகையான பார்வையாளர்களுக்கு கொண்டுசென்ற நாடகங்கள் இவை.
1975ஆம் ஆண்டு மொரட்டுவ –கட்டுபெத்தை பல்கலைக்கழகத்திற்கு தாசீசியஸை அழைத்து ‘பிச்சை வேண்டாம்’ என்ற முழு நீள ரஷ்ய மொழிபெயர்ப்பு நாடகத்தை அவரது நெறியாள்கையில் நிதி சேகரிக்க தயாரித்தேன்.இது புதிய கதிரேசன் மண்டபத்தில் மேடையேறியது.
2. நடிகர் ஒன்றியம் காலம், (1973-1980)
1973 இல் கொழும்பில் இயங்க ஆரம்பித்த நடிகர் ஒன்றியத்திலும் நான் இணைந்து கொண்டேன்.நடிகர் ஒன்றியம் நவீன நாடக வரலாற்றில் ஒரு முக்கிய அமைப்பாக இருந்தது. நடிகர் ஒன்றியத்தின் முதலாவது தயாரிப்பான ‘கந்தன் கருணை’யில் நடித்தேன்.
1975-1976 காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் ஒன்றிய ரசிகர் அவையை உருவாக்க நானும் , எனது கட்டுப்பெத்தை நண்பர்களும் பெரிதும் உழைத்தோம்..கூடுதலாக ரசிகர் அவையில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் பொறியியல் துறையை சேர்ந்தவர்கள்
1976 இல் ரசிகர் அவைக்காக பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை ‘ நாடகத்தை தயாரித்தேன்.இது கொழும்பில் பெயர்பெற்ற லயனல் வென்ட் அரங்கில் நடந்தது. இது திரும்பவும் அதே அரங்கில் ரசிகர் அவைக்காக அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க 1977இல் மேடையேறியது. இதுவே எனது முதல் முழு நீள வெற்றி நாடகம் ஆகும்.1976இல் இருந்து 2013 வரை 42 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் இந்த நாடகத்தை மேடையேற்றியுள்ளேன்.‘மழை’ நாடகம் இலங்கையில் மட்டும் 16 தடவைகள் மேடையேற்றப்பட்டது.
நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக எனது நெறியாள்கையில் டென்னஸி வில்லியம்ஸ் எழுதிய “கண்ணாடி வார்ப்புகள் (1979) லயனல் வென்ட் அரங்கில்மேடையேறியது.
தொடர்ந்து அலெக்ஸி ஆர்புசோவ் எழுதிய “புதிய உலகம் பழைய இருவர்”(1979) இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘பசி’(1979)
பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய யுகதர்மம் (1980) ந முத்துசாமி எழுதிய நாற்காலிக்காரர்(1980) ஆகிய நாடகங்கள் கொழும்பு லும்பினி அரங்கில் நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக மேடையேறின. நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக அதிக நாடகங்களை நானே செய்திருக்கிறேன்.
3. அவைக்காற்று கலைக் கழக காலம்.(1978-1982)
இந்தக் காலப் பகுதியில் எனது பல முக்கியமான நாடகங்கள் இலங்கையில் மேடையேறின .1973 இல் இருந்து1977 வரை கொழும்பில் தயாரிக்கப்பட்ட ஏணிப்படிகள்,பிச்சை வேண்டாம்,மழை ஆகிய நாடகங்களை யாழ் வீரசிங்கம் மண்டத்தில் மேடையேற்றினேன்.
1977இல் நடந்த இனக் கலவரம் தமிழர் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.சில காலம் கொழும்பில் நாடகம் செய்யும் சூழல் இருக்கவில்லை.
1978 இல் எந்த அமைப்பும் சாராது தனிப்பட்ட முறையில் நான் தயாரித்த எனக்கு மிகவும் பிடித்த “கண்ணாடி வார்ப்புகள் “நாடகம் யாழ்ப்பாணத்தில் முதல் மேடையேறியது. இதில் சேகரிக்கப் பட்ட நிதி யாழ் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்ற “ஆறு நாடகங்கள் “ நூல் வெளியீட்டுக்கு பயன்பட்டது
இந்த நாடகத்தின் வெற்றியை தொடர்ந்து 1978 இறுதியில் அவைக்காற்று கலைக் கழகத்தை ஆரம்பித்து நாடகம், “நர்தனக் கோலம் “நடனம், “கானசாகரம் “மெல்லிசை நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினேன்.யாழ்ப்பாணத்திலும் ஒரு ரசிகர் அவை உருவாக்கப்பட்டது.. அவைக்காற்று கலைக் கழகம் சமகாலத்தில் இயங்கிய நாடக அரங்க கல்லூரி போல யாழ்ப்பாணம் சார்ந்த அமைப்பு இல்லை. .கூடுதலான எமது மேடையேற்றங்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியேதான் நிகழ்ந்துள்ளன. .நான் கொழும்பிலேயே வசித்தமையால் கொழும்பிலும் , மற்றும் நாடளாவிய ரீதியில் நாடகங்களை ஒழுங்கு செய்து தொடர்ந்து மேடையேற்றினோம்
விபரங்களை தொடர்ந்த நாடக மேடையேற்றங்கள் என்ற பகுதியில் பார்க்கலாம்.
4. புலம் பெயர் காலம் (1982-இன்றுவரை )
என்னுடைய பெரும்பான்மையான காலம் புலம்பெயர் சூழலில் கழிந்துள்ளது.இதனை சுருக்கமாகவே இங்கு பகிர்கிறேன்.இலங்கையில் மேடையேறிய நாடகங்களின் மீள் தயாரிப்புகளையும் பல புதிய நாடகங்களையும் மிக சவாலான சூழலில் நெறிப்படுத்தி நடத்தியிருக்கிறே ன்.
1982- 1983 காலப்பகுதியில் நோர்வே நாட்டில் “துரண்ணியம் நகரில் ஈழத்தமிழர் சங்கம் உருவாக்கி அங்கு நடனம் “தூரத்து இடி முழக்கம் “
என்ற வார்த்தையில்லா நாடகத்தை அங்குள்ள மிக சிறிய தமிழர் குழுவை வைத்து தயாரித்து நோர்வே மக்களுக்கு சில தடவைகள் நடத்தினேன்.
1983 இல் லண்டனில் அவைக்காற்றுக் கலைக் கழகத்தை மீண்டும் உருவாக்கி செயல்பட ஆரம்பித்து இடைவிடாது தொடர்ந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறேன்.
1990ல் இருந்து லண்டனில் சிறுவர்களை பயிற்றுவித்து சிறுவர் நாடகங்களை தமிழர் வாழும் லண்டனின் பல பகுதிகளில் நிகழ்த்தி வருகிறேன்.
1991ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் வருடாந்த விழாக்களையும் மேலதிக விழாக்களையும் நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம் . லண்டனில் மட்டும் இதுவரை 60க்கும் மேற்பட்ட நாடக விழாக்கள் நடத்தியிருக்கிறேன்.
கடந்த 30 வருடங்களாக தமிழர் வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் முன்னோடி நாடக விழாக்களை நடத்தி வெற்றி கண்டிருக்கிறேன் .
லண்டன் நாடக விழாக்களை விட புலம்பெயர் தேசங்களில் 25க்கும் மேற்பட்ட நாடக விழாக்கள் நடத்தியிருக்கிறேன்.
எனது அரங்கின் நோக்கங்களும் நடைமுறைகளும்
என்னுடைய நீண்ட, சுமார் அரை நூற்றாண்டு தொடர்ந்த நாடகப் பயணத்திலே முக்கியமாக என்னுடைய நாடகப் பயணத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் பின்வருபவை துல்லியமாகத் தெரியும். ஈழத்து நவீன தமிழ் நாடகத்துறையில் எனது வகிபாகம் எவை என்பதை 14 சிறிய பிரிவுகளாக பார்க்கலாம்.
1. “தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்”
என்று இயங்கியமையால் , பல்லாயிரணக்கான ரசிகர்களை உலகெங்கும் நவீன தமிழ் நாடகங்கள் பால் ஈர்த்தமை ( 70 நாடகங்கள் -சுமார் ஆயிரம் மேடையேற்றங்கள் )
இலங்கையில் நான் மும்மரமாக இயங்கிய 1973-1982 காலப் பகுதியில் மட்டும் சுமார் 150 மேடையேற்றங்கள்.
எனக்கு முந்திய காலங்களில் பல நாடகங்கள் அதாவது தீவிர காத்திரமான நாடகங்கள் ஓரிரு மேடையேற்றங்களுடன் முடிந்துவிடுகின்ற ஒரு அவலமான சூழ்நிலைதான் இருந்தது. அதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. தொடர்ந்த மேடையேற்றங்கள் இருக்க வேண்டும் எனக் கருதி தொடர்ந்து முற்றிலும் வேறு தொழிலில் இருந்து கொண்டு அர்ப்பணிப்புடன்செயல்பட்டவன் நான்.
இலங்கையில் நடந்த எனது தொடர்ந்த நாடக மேடையேற்றங்களை முதலில் பார்க்கலாம். எனது பதிவில் உள்ளவை மட்டும்
உதாரணத்துக்கு இலங்கையில் ...
நட்ஷத்திரவாசி ,பலி (1978) நான்கு மேடையேற்றங்கள்
‘ஒரு யுகத்தின் விம்மல்’ (1978) இரண்டு மேடையேற்றங்கள்
‘கண்ணாடி வார்ப்புகள்’(1978-1982) பதினாறு மேடையேற்றங்கள்
‘பசி’ (1978-1980) ஆறு மேடையேற்றங்கள்
‘புதிய உலகம் பழைய இருவர்’(1978-1979)மூன்று மேடையேற்றங்கள்
‘ஒரு பாலை வீடு’(1979-1980)ஏழு மேடையேற்றங்கள்
இடைவெளி (1979) இரண்டு மேடையேற்றங்கள்
யுகதர்மம் (1979-1982) இருபத்தொன்பது மேடையேற்றங்கள்
முகமில்லாத மனிதர்கள் (1980-1982) எட்டு மேடையேற்றங்கள்
சுவரொட்டிகள் (1980) இரண்டு மேடையேற்றங்கள்
சம்பந்தம் (1980-1982) ஆறு மேடையேற்றங்கள்
அரையும் குறையும் (1981)நான்கு மேடையேற்றங்கள்
மரபு (1982) இரண்டு மேடையேற்றங்கள்
துக்ளக் (1982) ஐந்து மேடையேற்றங்கள்
சுமார் 150 தடவைகள் நான் நெறியாள்கை செய்த இந்த நவீன நாடகங்கள் இலங்கையிலே அந்தக் குறுகிய காலப் பகுதியிலே மேடையேற்றப்பட்டன.
இது முன்னொருபோதும் இலங்கையில் தீவிர தமிழ் நாடகத்துறையில் நிகழாத ஒரு முன்னோடியான விடயம்.
2.“ இளையவர்களே எமது எதிர்காலம்”
என்ற ரீதியில்,சிறுவர்களை இளையவர்களை ஈடுபடுத்தி தொடர்ந்து இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் இயங்கியமையால் பல இளையவர்களை உருவாக்கியிருக்கிறேன்
3. “பெண்களை தமிழ் நவீன நாடகத்தில் ஈடுபட வேண்டும் “
என்று அவர்களை ஊக்கப்படுத்தி ,பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளை அடக்கிய நாடகங்களை தொடர்ந்து தமிழுக்கு வழங்கியமை.1979 இல் முழுமையாக பெண்கள் பங்கு பற்றிய “ஒருபாலை வீடு” (1979) தொடங்கி பல நாடகங்கள்.1970 களில் பெண் பாத்திரங்களில் ஆண்களே நடித்து வந்தார்கள். அதிலும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பெண்களைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் அப்போது பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பெண்கள் பங்களிப்பு, பெண்கள் மேடையிலே நடிப்பதென்பது மிகவும் அரிதாக இருந்த வேளையில் பெண்களை நாடகத்துறையில் இணைப்பதில் என் பணி கூடுதலாக இருந்தது. நான் பெண்களோடு வளர்ந்தவன். என்னுடைய அம்மாவிற்கு ஆறு சகோதரிகள். எனக்கும் வீட்டில் இரண்டு சகோதரிகள். பெண்களின் பிரச்சினைகளைச் சொல்லுகின்ற நாடகங்களும் மேடையேற்றவேண்டும் என நான் நினைத்து செயல்பட்டேன்
4.”தமிழ் நாடகம் உலகத் தரத்துக்கு வர வேண்டும்”
என்ற நோக்கில் பல்வேறு பாணி நாடகங்களையும் , பல பிறமொழி நாடகங்களையும் தமிழுக்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியமை. பேர்டோல்ட் ப்ரெக்ட் முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது எனது ‘யுகதர்மம்’ (The Exception and the Rule) நாடகம் மூலமாகத்தான். 1979ஆம் ஆண்டு இந்த நாடகம் எனது நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டது.
பல்வேறு கருப்பொருட்களைக் கொண்ட நாடகங்கள், பல்வேறு பாணி நாடகங்களையும் நாங்கள் செய்து பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பாரதி சொன்னதுபோல நல்ல கலைச் செல்வங்களையெல்லாம் எங்கிருந்தாலும் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடும் உலக நாடகங்கள் பலவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி கண்டேன். நான் ஈழத்தமிழருக்கு அறிமுகப்படுத்திய வெளிநாட்டு நாடகாசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி,ந முத்துசாமி, அம்பை,ஜெயந்தன், ஏ எஸ் ஏ ராம் ,ஞான ராஜசேகரன் ,பாதல் சர்க்கார்,மோகன் ராகேஷ் ,கிரிஷ் கர்னாட்,ரென்னசிவில்லியம்ஸ் ,பெர்டோல்ட் ப்ரெக்ட் ,கார்சியா லோர்கா அயனெஸ்கோ,அலெக்ஸி ஆர்புசோவ் ,இப்சன்.ஹரால்ட் பின்டர் ,வஸ்லவ் ஹவேல் ,அன்டன் செக்கோவ் சாமுவேல் பெக்கெட் ,ஏரியல் டோவ்மான்,போன்றோர்.ஈழத்து நாடகாசியர்கள் மாவை நித்தியானந்தன்,மௌனகுரு,தர்மு சிவராம்,சேரன்,செழியன்,சிவசேகரம்,முருகையன்,வாசுதேவன்,குந்தவை, ஜோன்சன் ராஜ்குமார்
5 சுதந்திரமாக, வேறு அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் ,சுயாதீனமாக சமரசங்கள் இல்லாத, தீவிர நாடக முயற்சிகளை நாங்கள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்கியிருக்கிறேன்.
கலைஞர்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று நம்புவன் நான். என்னை யாரும் அதிகாரம் செய்ய விடுவதில்லை. அதனால் நான் எந்தப் பெரிய அமைப்பிலும், அரசியல் அமைப்புகளிலும் அங்கம் வகிக்கவில்லை அவர்களுடைய ஆதரவும் எனக்கு இருக்கவில்லை.சுயாதீனமாக இத்தனை வருடங்கள் தொடர்ந்து இயங்கி இருக்கிறேன் வேறு யாரையும் திருப்திப்படுத்துவதற்காகவோ அங்கீகாரத்துக்காகவோ நான் நாடகங்கள் செய்ததில்லை. எப்போதும் எனது நாடகத் தெரிவுகள் எனது மனதுக்குப் பிடித்த என்னுடைய தெரிவுகளாகவே இருக்கின்றன. நாடகத் தெரிவுகள் எங்களுடைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நாடகந்தான் கூடிய ஒரு சமூகப் பாங்கான கலை..
6. ஊடகங்களின் பங்கு
ஊடங்கங்களின் ஆதரவுடன்வுடன் நாடக இயக்கத்தை வளர்த்தெடுத்துள்ளேன். தனியே மேடையேற்றம் என்று மட்டுமல்லாது நாடக விமர்சனக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பத்திரிகைகள் , வானொலி, தொலைக் காட்சி ஆகிய ஊடகங்களையும் இணைத்து முன்னெடுத்திருக்கிறேன்.
இலங்கையில் எமது நாடக இயக்கம் போல வேறு எவரும் இப்படி இயங்கவில்லை.1979-1980ல் தினகரன் பத்திரிகையில் ‘மேடைப்பிரச்சினைகள்’ என்ற தொடர் கட்டுரையையும் எழுதியிருக்கிறேன்.
வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்களையும் ஈடுபடுத்தி நாடகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு சென்றேன். காட்சி ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வானொலி மிகப் பிரபல்யமாக இருந்தது.மழை’ நாடகம் இலங்கை வானொலியில் 1978இல் ஒலிபரப்பானது. மிகவும் பரந்த பார்வையாளர்களை அடையக்கூடியதாக இருந்தது.இதேமாதிரி ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகமும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 1982இல் தேசிய தொலைக்காட்சி ரூபவாகினி இலங்கையில் ஆரம்பித்தபோது நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பி. விக்னேஸ்வரன் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை தொலைக்காட்சிக்காக தயாரித்தார். இந்த நாடகம்தான் ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதலாவது தமிழ் நாடகமாகும்.
7.அடையாளம்
‘எமக்கான அடையாளத்தைத் தேடுவதும் ஒரு அகங்காரந்தான்’ என எமது ‘சூறாவளி நாடகத்தில் ஒரு வசனம் வரும். அந்த வகையில் புலம் பெயர் தேசங்களில் எமது அடையாளத்தை தேடும் முயற்சியில் சிறுவர்களை இணைத்து1990 இல் இருந்து 30 வருடங்களுக்கு மேலாக இயங்கியமை . லண்டனில் முதலாவதாக , 2003 இல் இருந்து தமிழ் நாடகப் பள்ளியமைத்து செயற்பட்டமை. இருபதுக்கு மேற்பட்ட சிறுவர் நாடகத் தயாரிப்புகள், சுமார் 200 தடவைகள் மேடையேறின .நிறைய நாடக நடவடிக்கைகள்,புலம்பெயர் தேசங்களில் நடத்துவது மிக மிகக் கடினம். கல்லிலே நார் உரிப்பது போலத்தான். லண்டன் போன்ற வாரோட்டமான நகரங்களில் இரண்டு பேரை நாடக ஒத்திகைக்கு ஒரு நேரத்தில் சேர்ப்பதென்பதே கஷ்டம். ஒருவர் 6 மணிக்குத்தான் வருவார். ஒருவர் 8 மணிக்குத்தான் வேலை முடிந்து வரலாம் என்பார். இரண்டு பேருக்கும் பொதுவான நேரம் கண்டுபிடிப்பது சரியான கஷ்டம். அந்த வகையில் நாங்கள் பெரியவர்களை விட இளையவர்களுடன் கூட பயணித்தோம். அதுவும் ஒரு முக்கியமான பணிதான். இளையவர்களை இணைக்கும்போது அவர்களின் பெற்றோரும் எம்முடன் இணைந்து எமது நாடக இயக்கம் செல்கிறது.
8. பொதுவான எனது நாடக கருப்பொருள்
1970 க்கு பின்னர் எமது நாடு பல வன்முறைகளைக் கண்டது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் , தனிமனித உறவிலும் குடும்ப அமைப்பிலும் ஆண் -பெண் உறவு முறையிலும் வன்முறை ஊடுருவிப் போயுள்ளது.எனது பல நாடகங்களில் இந்த உள்ளார்ந்த வன்முறை பல்வேறுபட்ட பரிமாணங்களில் கலாபூர்வமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு பல நாடகங்களை உதாரணங்களாகக் காட்டலாம். இவற்றுள் சித்திரவதை,காணாமல் ஆக்கப்படுத்தல் போன்றனவும் அடங்கும்.
பல்வேறு கருப்பொருட்களைக் கொண்ட நாடகங்கள், பல்வேறு பாணி நாடகங்களையும் நாங்கள் செய்து பார்க்க வேண்டும் என்று நான் விரும்பி செயல்பட்டேன் .
9. உலகில் தமிழர் வாழும் பல நாடுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ,நோர்வே நெதர்லாந்து, சுவிஸ் ,கனடா ,அவுஸ்திரேலியா , இந்தியா ஆகிய நாடுகளில் நாடக விழாக்களை நடத்தி வெற்றி கண்டமை.
10. 1978 இல் தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பை 40 வருடங்களுக்கு மேலாக இன்று வரை உயிர்ப்புடன் இயக்கி நாடக உலகில் வெற்றி கண்டமை.
11. எனது பொறியியல் கல்வி , அனுபவத்தை தமிழ் நாடகத்துறைக்கு பயன்படுத்தி திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை தொடர்ந்து செயலாற்றியமை.
12. நடிப்பு முறையும் செய்நேர்த்தியும்
நான் நடிகர்களைப் பயிற்றுவிக்கும்போது அவர்களுக்கான இயல்பான ஓட்டத்தோடு வசனங்களை, அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து, ஏற்ற இறக்கம், எங்கே இடைநிறுத்துவது, எப்படி முடிப்பது போன்றவற்றை விளக்கிக் கூறு பயிற்றுவிப்பேன். நான் ஒருபோதும் நடிகர்களுக்கு வசனத்தைப் பேசிக்காட்டுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயமான திறமை இருக்கும். அதை வெளிக்கொணர்வதற்கான பயிற்சி மட்டுமே நான் கொடுப்பது. அதனால் எனது நாடகங்களில் நடிகர்கள் ஒரே மாதிரி வசனம் பேசுவதில்லை.
ஒரே பாணியில் நடிப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். பார்வையாளர்களை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் எங்களுடைய அளிக்கை நேர்த்தியாக இருக்க வேண்டும்.
இலங்கையில் பல நாடகங்களை நான் பார்த்த வேளைகளில் ஒரே மாதிரியான நடிப்பு, அதாவது ஒரு தொனி ஒன்று இருக்கிறது. அது எப்படி வந்தது என்று தெரியவில்லை. வெளிநாட்டிலும்கூட நல்ல தீவிரமான தமிழ் நாடகங்களை மேடையேற்றும்போது வெட்டி வெட்டிப் பேசும் ஒரு பாங்கு இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். ஒரே மாதிரிப் பயிற்றுவித்ததால் வந்ததோ என்னவோ.
ஒரு கட்டுக்கோப்புடன் நடிகர்கள் மேடையில் இயங்கும் முக்கியமான அளிக்கையாக நாடகம் இருக்க வேண்டும். நவீன நாடகத்தை நேர்த்தியாகச் செய்யாவிட்டால் மலினமான சிரிப்புத்தோரண நாடகங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் .
நவீன நாடகத்தில் ஒவ்வொரு வினாடியும் நடிகர் எங்கு நிற்கிறார், எங்கு திரும்புகிறார், எங்கு பார்க்கிறார், எங்கு நகரவிருக்கிறார் என்பவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடகத்தின் தொனிப்பொருள் என்ன, நாடகப்பிரதியின் பின்னால் உள்ள அர்த்தம் என பல விடயங்கள் இதில் அடங்கியுள்ளது. இதற்காக நாங்கள் நடிகர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நான் நடிப்புப் பயிற்சி கொடுக்கின்றபோது நடிப்பைச் சொல்லிக்கொடுப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு இயல்பான தன்வெளிப்பாடு இருக்கும். அந்த வெளிப்பாட்டை நாங்கள் கொண்டுவர வேண்டும். அப்பொழுதான் அது தனித்துவமாக இருக்கும். மேடை நாடகத்தில் நடிப்பவரின் பங்கு அதிகம். சினிமாவில் அப்படியல்ல. சினிமாவில் நெறியாளரின் பங்கு கூடுதலாக இருக்கும். மேடை நாடக நடிகர்களை மனோரீதியில் தயார் படுத்த வேண்டும்.
13. நாடகத்திற்காக ஒரு ஊதியமோ அல்லது அரச உதவியோ இல்லாமல் தன்னார்வத் தொண்டர்களை மட்டுமே கொண்டு ஒரு நாடக இயக்கத்தை வளர்க்க வேண்டுமென்று நான் நினைத்தேன்.அப்படியே இன்று வரை செயலாற்றுகிறேன்.
14. நாடகத்தில் இசை , ஒளி
இசை. இசை நாடகத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. சில நாடகங்களில் மூட் மியூசிக் என்ற பின்னணி இசை. சில நாடகங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசைப் பகுதிகளைப் பாவித்திருக்கிறேன். முதன் முதலாக நேரடியான இசையை நான் பாவித்தது எனது ‘நட்சத்திரவாசி’ (1978)நாடகத்திற்குத்தான். அந்த நாடகத்தில் ஒரு அரூபமான இசை வரவேண்டும். ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஒரு இசை எதிரொலி போல வந்து பின்னர் குரல் உடைந்து பின்னர் கரகரப்பாக மாறி வரும். அதை ஸ்வரக்கோர்வையாக அமைக்க வேண்டும். இதற்கு யாரை அணுகலாம் என்று நான் யோசித்தேன். கர்நாடக சங்கீதத்தில் ஊறியவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கு சில எல்லைப்பாடுகள் உண்டு. பின்பு நான் கண்ணன் கோஷ்டி என்று அழைக்கபட்ட இசைக் குழுவின் இயக்குனர் யாழ். கண்ணன் அவர்களை அணுகினேன். அவர் அந்த நேரங்களில் சினிமாப் பாடல்கள், பக்திப் பாடல்களைத்தான் மேடையில் இசைத்துக்; கொண்டிருந்தார். அவரை நான் கேட்டபோது மிக உற்சாகமாக சம்மதித்தார். அவர் ‘நட்சத்திரவாசி’ நாடகத்தை வாசித்து கதையை உள்வாங்கி மிக அருமையாக இசையை அமைத்திருந்தார். அதைப் பதிவு செய்துதான் பயன்படுத்தினோம்.
அதன் பின்னர் நான் ‘யுகதர்மம்” (1979)நாடகத்தைத் தயாரித்தபோது இந்த நாடகத்திற்கு வாசுதேவன் எழுதிய பாடல்களை நான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்று கண்ணனிடம் கொடுத்து அவரைக் கொண்டு இசையமைதேன் . அந்தப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதற்கு பின்னரே பல நவீன நாடக நெறியாளர்களும் அவரை அணுகினர்.
நான் ஒளியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் ஒருவர். இது என்னுடைய பொறியியல் கல்வியினால் வந்தது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அது அப்படியல்ல. அதில் விஞ்ஞானம் சம்பந்தமான சில விடயங்கள் இருந்தாலும் ஒளியமைப்பு என்பது அழகியல் சார்ந்த விடயம். ஆங்கிலத்தில் சில நூல்களே இதுபற்றி இருந்தன . பிரிட்டிஷ் கவுன்சிலில் இருந்த ஒரு புத்தகத்தை வாசித்து, செய்து பார்த்துத்தான் நான் ஒளியமைப்பைக் கற்றுக் கொண்டேன். ஒலி, ஒளி, உடை, வர்ணங்கள், ஒப்பனை, மேடையில் நடிகர்களின் அசைவு என பல விடயங்கள் பற்றியும் அப்படியே.
இந்த 14 அம்சங்களில் முதலிரண்டும் நாடக இயக்கத்துக்கு மகுட வாக்கியங்களாக நான் பயன்படுத்தி வருபவை.
. “தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்”
.“ இளையவர்களே எமது எதிர்காலம்”
நான் ஆரம்ப காலத்தில் இருந்தே இன்று வரை இவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறேன். வருகிறேன்.ஈழத்து தமிழ் நாடகத்துறையில் முக்கியமான ஒரு உந்து சக்தியாக விளங்குகிறேன். இலங்கையில் தீவிர நாடகத்தைப் பரவலாக்குவதில் என்னுடைய பங்கு மிக முக்கியமானது என நினைக்கிறேன்.எனது செயல் பாடுகளைப் பின்னோக்கிப் பார்க்க எனக்கே இப்போது பிரமிப்பாக இருக்கிறது.
நீங்கள் கேட்ட வகிபாகம் என்ற அந்தக் கேள்விக்கு பதிலாக இவை அமையும் .
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
என்று அழகாகக் கூறி முடித்தார்
அன்பு சால் தமிழ் நெஞ்சங்களே இவரின் பணியை முடிந்தவரை தொகுத்து தந்திருக்கிறேன் .இன்னும் கிடைக்கும் பட்சத்தில் மேலும் இப்பதிவை மெருகேற்றுவேன்
இப்பதிவை மக்கள் மனதிற்கு கொண்டு செல்ல வேண்டிய கடைப்பாடு அவரின் காலத்தில் வாழும் உங்களுக்கு உண்டு..எனவே கூடியவரை இப்பதிவை எல்லோருக்கும் பகிருங்கள் .
இவரின் பணிகளே இவர் பேர் சொல்லும் ஆண் மகவுகள் ஆகும் .
நன்றியுடன்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்